புலிப்பார்வையும் புலிப்போர்வையும்

புலிப்பார்வை 





முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்விற்கு பின்னர் அதனை மூலமாக்கி தமிழ்நாட்டில் எழுந்த பல்வேறு தமிழியக்கங்களின் போராட்டங்கள் மற்றும் அரசியல் அணுகுமுறைகள்  எவ்வாறு பலவீனமானதாக இருக்கிறதோ அதைவிடப் பலவீனமானதாக இருக்கிறது தமிழ்த் திரைப்பட உலகம்.

தமிழ்நாட்டில் தமிழீழ மக்களின் கண்ணீரும் அவர்களின் பெருந்துயரும் மிகப் பெரும் சந்தையாக விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டிருக்கும் அவலச் சூழலில் உணர்வு கொந்தளித்து மனிதாபிமானம் பெருக்கெடுத்து கலைப் படைப்பின் ஊடாக பணத்தைப் பார்த்து விடத் துடிக்கும் மனித அழுகுரல் தின்னும் இவர்களை எதிர்த்து தான் ஆகவேண்டும்.

தமிழ்த் திரையுலகத்தில் தமிழீழ மக்களை முன்வைத்து வெளியான திரைப்படங்கள் ஒன்று திரைமொழிக்கு அப்பாற்பட்டு உணர்வு சார்ந்து ஒரு நாடகத்தன்மையில் எடுக்கப்பட்டிருக்கும் இல்லாது போனால் தமிழீழ விடுதலையை,அதற்காக போராடிய விடுதலை அமைப்பை கொச்சைப்படுத்தி,தவறாக சித்தரித்து எடுக்கப்படும்.

எனக்குத் தெரிந்து புன்னகை மன்னன் திரைப்படத்தில் சிங்களப் பெண்ணாக வரும் ரேவதியை கொலை செய்வதற்காக தமிழீழத் தமிழ் பேசுகின்ற இளைஞர்களை கூலிப்படையாக சித்தரித்து இருந்த பாலச்சந்தர் தொட்டு எமது தாய்மொழியை அதன் பேசும் அழகை பெண் உறுப்பை சிதைத்து பலாத்காரம் செய்யும் சிங்களக் காடையனுக்கு எந்தளவிலும் குறையாமல் தமிழினத்தின் மீதான வன்மம் அனைத்தோடும் என்  மொழியையும் போராட்ட வாழ்வியலையும் சிதைக்க முனைந்த தெனாலி கமல்ஹாசன், கன்னத்தில் முத்தமிட்டால் மணிரத்தினம், இனம் சந்தோஸ் சிவன் என நீளும் இப்பட்டியலில் புலிப்பார்வை பிரவீன்காந்தி என்பவரும் இணைந்து கொள்கிறார்.

இப்பொழுது தான் இனமான இயக்குனர்கள் என மேடைகள் தோறும் முழங்கி புரட்சி செய்கிறவர்களை தேடவேண்டிய பெரும் பணி சாமானிய தமிழனிடம் வருகிறது, ஆம் தமிழ்த் திரையுலகில் திரைப்படங்கள் ஊடாக எமது வலியையும் அறத்தையும் சொல்லத் தெரியாதவர்கள் இனமான இயக்குனர்களாக நாளும் பெருகி வருவது மட்டும் தான் இப்படியான காந்திகளுக்கு பெரும் ஊக்கமருந்து என்பதை இனியேனும் எமக்கு எதிரான எல்லாப் படங்களுக்கும் தடா கோரும் இனமானச் செந்தமிழ் இயக்குனர்கள் விளங்கிக் கொண்டு உருப்படியாய் ஏதேனும் செய்யவேண்டும்.

சனல் -4 வெளியிட்ட இனப்படுகொலைக் காணொளிப்பதிவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய இசைப்பிரியாவினது இறுதி நிமிடங்கள் எவ்வாறு சிங்களக் காடையர்களால் சிதைக்கப்பட்டது என்பதைக் காண நேர்ந்ததோ அது போலவே தம்பி பாலச்சந்திரனின் இறுதி நிமிடங்களும் அவன் வாயில் கடித்த மலிபன் பிஸ்கட்டுகளோடு குருதியில் உறைந்து போனது.

இசைப்பிரியா எனும் பெயர் இனப்படுகொலைக் களத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட என் அக்காக்கள் ஒவ்வொருவரின் பெயர் போல படுகொலைக்களத்தில் கொல்லப்பட்ட ஒவ்வொரு தமிழ்க் குழந்தைக்குமான அடையாளம் பாலச்சந்திரன் எனும் பெயர் மட்டுமே.

பாலச்சந்திரனின் இறுதி நிமிடம் எவ்வாறு இருந்திருக்கும் என எவர் அறிவார் ? ஒரு குழந்தயை கொல்லுகிற துவக்கின் குழல் எவ்வாறு தோட்டாக்களை வெளியில் தள்ளியிருக்கும்? முதல் சூட்டில் அவன் முத்தமிட்ட அந்த மண் கொப்பளித்த அவனது ரத்தத்தில் எவ்வாறு நிறமாறியிருக்கும்? சூட்டை சிரித்தபடி நிகழ்த்திய சிங்களப்  படையினனின் மனைவிக்கு இது பேறுகாலமாக இருந்திருக்குமோ? என எதைச் சொல்லி எங்கு போய்ச் சாபமிடுவது எம் சபிக்கப்பட்ட இவ் வாழ்வை.


புலிப்போர்வை 


பாலச்சந்திரனை போராளியாகவும், அவன் காடுகளில் பயிற்சி பெற்றவனாகவும் ஏன் நவீன ஆயுதங்களை கையாளுபவனாகவும் காட்டும் புலிப்பார்வை எனும் திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சிகள் பாலச்சந்திரனை கொன்ற ஆயுதங்களுக்கு விருதுகள் வழங்க தயாராகி நிற்கிறது என்பது தான் உண்மை.

பாலச்சந்திரனை கொன்ற சிறீலங்கா அரசு அவனை பயிற்சி பெற்ற ஒரு விடுதலைப் புலிகள் உறுப்பினர் என்று முத்திரை குத்தியதற்கு அமைவாக அதற்கு பலம் சேர்க்கின்ற வகையில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

புலிப்பார்வை படத்தை தயாரித்த வேந்தர் மூவீஸ் நிறுவனத்தின் தலைவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீது கொண்டுள்ள வன்மத்தை நேற்று தோழர் Hari Haran தனது முகநூலில் பதிவிட்டதும் பார்த்தேன்.

உண்மையிலும் எங்கள் அழுகுரல்கள் மண் முழுதும் பெருக்கெடுத்த குருதிகள் நிரம்பிய எமது வாழ்வை உங்களால் ஒரு மயிரளவும் படமெடுத்துக் காட்டி விட முடியாது .பாலச்சந்திரனை ஆயுதம் ஏந்தியவனாக சித்தரிக்கும் நீங்கள் உங்கள் அறமற்ற கரங்களில் கிடக்கும்  இன்னுமே காயாத குழந்தை இரத்தத்தின் கறைகளை உங்கள் நாட்டின் காசியில் கொண்டு போய் கழுவுங்கள்.

காந்திகளே நீங்கள் அமைதிப்படை என்று பெயர் வைத்து ஆயுதத்தோடு முற்றங்கள் ஏறி எங்கள் அம்மாக்களை பலாத்காரம் செய்தவர்கள் ஆதலால் சொல்கிறோம் உம்மை எமக்குத் தெரியும் இன்னும் இன்னும் ஆழமாய் புலிப்பார்வையையும் புலிப்போர்வையையும் நன்றாக கண்டு உணந்தவர்கள் நாம் .

-அகரமுதல்வன்
26.07.2014

Comments

  1. பெரும் ஊடகன்,எதையும் ஊடுருவ உதவ முடியும்ம்.பாவி மக்கா என்ன செய்ய?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்