போரிலக்கியமும் பேரிலக்கியமும் நமதே








அகநாழிகை நூல் நிலையத்தில் நேற்று நடந்த என்னுடைய அறம் வெல்லும் அஞ்சற்க கவிதை நூலிற்கான அறிமுகக் கூட்டத்தில் கவிஞர் தி.பரமேசுவரி ,விமர்சகர் கடங்கநேரியான் ,கவிஞர் மனுசி பாரதி, கவிஞர் வேல்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசியமை குறிப்பிடத்தக்கது.

முதலாவதாக கவிஞர் வேல்கண்ணன் பேசியமர்ந்ததற்கு பின்னர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய யாவரும்.காம் சகோதரர் ஜீவகரிகாலன் நிகழ்ச்சியில் நடந்த காரசார விவாதத்தின் முதல் புள்ளியை தொட்டு தொடக்கி வைத்த விதம் மிகச் சிறந்தவிதமாக இருந்தது.

தமிழீழ மண்ணைச் சேர்ந்த எனது கவிதைகளின் கீழேயே வந்து இலங்கைக் கவிதைகள் ரொம்ப பின்னோக்கி இருக்கிறது என கூறும் தமிழ் இலக்கியக் கவிதைப் பரப்பின் சமகால மன்னர்களுக்கும்,பவுத்தம் என்பது ஒரு மார்க்கம் என கூறுகிற ஆவணப்பட இயக்குனர்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளை விமர்சித்தே தங்கள் காலத்தை ஒட்டி விடலாம் என நினைக்கும் அறமற்ற மாந்தர்களுக்கும் நேற்றைய நிகழ்வு நெற்றிப் பொட்டில் குறிபார்த்து சுட்டிருக்கிறது.

கவிஞர் மனுசிபாரதி அவர்கள் என்னுடைய கவிதைகள் குறித்து ஆற்றிய உரையில் இருந்து கவிதைகள் பிறரிடம் ஆற்றிய எதிர்வினையை தெரிந்துகொள்ள முடிந்தது என்பது தான் உண்மை.அதற்கு பின்னர் உரையாற்றிய விமர்சகர் கடங்கநேரியான் வழமை போல மனிதாபிமான முகமூடிகளை அணிந்து திரியும் பிணந்தின்னிகள் குறித்து காட்டமாக தனது பதிவை தொடர்ந்தார்.

மேலும் என்னுடைய தொகுப்பில் இருந்த பதாதைகளில் சாகும் புரட்சி எனும் தலைப்பிலான கவிதை பேசுகிற தமிழ்தேசியவாதிகளின் பிழைப்புவாதம் குறித்து பேசுவதை தவிர்க்கலாமென்றும் ஓரினம் அழிக்கப்பட்டதற்கு பின்னர் இவ்வாறு பிழைப்புவாதிகள் வரத் தான் செய்வார்கள் எனவும் அவர்கள் பேசிக்கொண்டேனும் இருக்கட்டுமே என கூறி விமர்சகர் தனது உரையை நிறைவு செய்த -கையோடு கவிஞர் தி. பரமேசுவரி அவர்கள் ஆற்றிய உரை உறையச் செய்தது.

கையாலாகத்தனத்தோடு கண்ணீர் மட்டுமே விட முடிந்த ஒட்டுமொத்த தொப்புள்கொடி உறவின் உரையாகத் தான் அது இருந்தது. எனக்கு சகோதரர்களான அப்துல் ரவூப் தொடக்கி முத்துக்குமார் வரை என் கண்கள் முன்னே வந்து போனதை நான் மட்டும் தான் அறிவேன் சகோதரர்களே. . .

தி.பரமேசுவரி அவர்கள் ஆற்றிய உரை என் கவிதைகளுக்கானதென்பதை தாண்டி அது தமிழ்நாட்டு தமிழ்மக்களின் ஒட்டுமொத்த மனச்சாட்சியாகத்தான் இருந்தது. எம் மண் விடுதலையின்,தமிழ் தேசியத்தின் அவசியத்தை உணர்ந்தவர்களின் ஒத்துழைப்பை  பிரகடனப்படுத்திய அவர்களின் உரை மட்டுமே அவர் பொசுங்கி பொசுங்கி மேடையில் அழுத கண்ணீரைத் தாண்டி  வந்து நம்பிக்கை தந்தது.


சகோதரர்களே ! நான் இதைக் எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கணத்திலும் காசா நிலமெங்கும் பாலஸ்தீன அழுகுரல்கள் நிரம்பிக் கொண்டே இருக்கிறது, ஏன் ஈழத்தில் உங்கள் ஊடகங்கள் சொல்ல மறுக்கிற வகையில் தமிழ் இனத்தைச் சேர்ந்த ஒரு உயிர் கொல்லப்படுகிறது,இங்கிருந்து எழுவது ஒப்பாரிகள் மட்டுமானது தான் 
வீழும் அந்தக் கணத்திலும் எழுவதை நினைத்து மடிக்கிற ஒவ்வொரு தமிழன் அணுவிலும் ஏன் அடக்கபடுகிற எல்லா  ஆன்மாவிடம் இருந்து மட்டும் தான் போரிலக்கியமும் பேரிலக்கியமும் பீறிட்டுக் கிளம்பும்.

இரத்தவெளியில் நின்று அழும் எங்களின் கேவலில்  அழகியல் தேடும் உங்களின் இலக்கியம் எந்தவகை என்று வரலாறுகள் தீர்மானம் சொல்லுமே தவிர எங்கள் இலக்கியங்கள் வரலாறு தான் என்பதை எவர் மறுக்க முடியும் ?

இவையெல்லாவற்றுக்கும்  இப்பொழுதும் என்னிடம் ஒன்று தான் சொல்ல மிஞ்சி இருக்கிறது அறம் வெல்லும் அஞ்சற்க.

-அகரமுதல்வன் 
21.07.2014 

Comments

  1. அறம் வெல்லும் காலத்தை நோக்கி காத்திருக்கிறேன் தோழா!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்