அகதியின் அவசரக் கட்டளை



பலஸ்தீன தோழனே! 
என்னைக் கொல்லத் துடித்த டாங்கிகள்
ஊர்வலம் வரத் தொடங்கியிருக்கின்றன 
உனது ஊரிலும் 

சடலங்களின் இடிபாடுகளை
நீ கடக்கும் கணங்கள்
வருத்தத்தில் சூளும் இருள் மண்டலத்தை
அனுபவித்த துயரம்
இப்போதென்னை மீண்டும்
சுற்றி வளைக்கிறது

ஓலத்தின் எதிரொலிப்பை
குருதியின் கண்ணீரை
ஆய்வு செய்யும் இவ்வுலகிடம்
புதைகுழியைத் தவிர
உனக்குத் தர ஏதுமில்லை

மரணத்தின் சகதியில் பிணப் புழுக்கள்
ஆனந்தமாய் பெருக்கெடுக்க
இரக்கமற்ற பாழ்வெளியில்
உனது தேசத்தை உறிஞ்சப் போகிறது
வெடிகுண்டுகள்

தோழனே
இங்கிருந்து கரங்களை தருவிக்கிறேன்
நீ பதுங்கு குழிகளை அதி வேகமாக
தயார் செய்
ஒரு போதும்
குழந்தைகளை கைவிடாதே

முடிந்தால் குண்டுகள் பட்டு துடிக்காமல்
போர்க்குதிரை ஏறி முன்னோக்கி களம் வீழ்க

ஆட்லறிகள்
பொஸ்பரசு
கிளாஸ்டர்
இவை யாவும் தாண்டி
என் குரலும் உனக்கு கேட்குமாயின்
இனியேனும்
மரணத்தால் உப்பிப் போன
என் தமிழீழத்தையும் திரும்பிப் பார்

எம்மிருவர்
காயங்களில் ஒத்திருக்கும்
கொல்பவனின் அடையாளம் .


-அகரமுதல்வன்
13.07.2014

Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்