Posts

Showing posts from August, 2014

மழையுடன் பேசும் மழை

Image
பகிர்வுத் தானியின் வலது கரையில் நனைந்தபடி  மழையின் முத்தங்களை சேகரிக்கும் எனதருகே விரல் சூப்பித் தூங்கும் ஒரு குழந்தை  தாயின் மடியைத் தடவுகிறது  பூத்துக்கொண்டிருக்கும் அதிசய நறுமணத்தின்  குடா முழுதும் வானிலையாய்  குழந்தையின் கால்கள் அசைய  இன்னுமின்னும் சூல் கொள்கிறது வானம்  ஆடைகள் ஒட்டிய மேனியில்  நீர் வழிந்தோட குளிர்ந்த படி  வண்ணப்பூச்சுகள் கரைந்த கவலையில்  வழியால் நடந்தவர்க்கு  சில்லறைகள் யாசிப்பவனுக்கு  குடை மறந்தவர்க்கு  தொழுநோயாளிக்கு  கோபமூட்டிய  தூக்கம் பறித்த  இந்த மழையே தான்  வஞ்சகமற்ற  அதிசயத்தின் கனவுக்குள்  கைபிடித்துச் செல்கிறது  பார்வையற்ற இக் குழந்தையை இதற்காயினும் வேண்டும் பெரும் மழை. -அகரமுதல்வன்  08.08.2014 

வசந்த வேரின் பாடல்

Image
கிளுவம் வேலிகளில் தாவும் அணில்கள் தூக்கிச் சுமந்து சிலிர்த்த மாலையில்  அரூபமாய்க் கரைகிறது கணுக்காலின் மச்சம் எனக்குப் பிடித்த  உன் பச்சை நிறப் பாவடையில்  தண்ணீர் தெறிக்க பூக்கிறது  உனக்குப் பிடித்த எல்லாப் பூவும்  குசினிக் கூரை வழியே புகை எழும்ப  ஊத்தி வரும்  மாலை நேரத் தேத்தண்ணீர்  கடலென சூழ்ந்து ருசியை சிருஸ்டிக்கிறது  வண்ணங்கள் துளிர்த்து அறை நிறைக்க முத்தங்கள் பச்சோந்தியென அசையும்  மாயக்கணங்கள் தளும்பி நனைகிறது  உன் கண் சிமிட்டும்  அதிசயித்தின் போரை  பித்து முற்றி தீண்டிப் பார்க்கும்  முற்றத்து தூசியின் வேட்கை மர்மமானது  நிலவைச் சரித்த வானத்தின் கரங்களில் இறுகிய இந் நிமிடம்  நீ நடந்து செல்வதைப் போல  நடனமாடுவதைப் போல  முறைச்சுப் பார்ப்பதைப் போல  சிரிப்பதைப் போல  எனைத்தவிர  எவருக்கு வாய்க்கும் இவ்வுலகு  - அகரமுதல்வன்  06.08.2014

சபையேறும் சத்தியம்

Image
வலிமையிழந்து வரும் வலியின் களத்தில்  நெருப்பாற்றின் துளியாய் மாறுகிறது  உயரமான என்னுடல் சாம்பல்  இன்றிரவு பிறந்த புத்துயிர்ப்பின் அச்சில்  காலம் வியக்கும் சாட்சியாக  கவிதை இறங்கி மூச்சிழுக்கிறது  கம்பீரமாய் குரல் வீசி  துயரம் தாவி நிற்கும்  காற்றின் பெருவிரலில்  காயப்படுகிறது நெய்தல் பண் இருளதிர்ந்து  நிழல் கனன்று  விழுங்கிச் செரிக்கும் அவலத்தின் துரு  என்னை மூடிய புதைகுழியின் மண்மேடு முனை மழுங்கா ஊசிகளை  என் ஆணுறுப்பில் புதைக்க முனைந்த  பெரேராவின் கைகளில்      தாமரைப் பூக்கள் மலரத்தான் செய்கிறது  இப்போதெனது அவலமெல்லாம்  புத்தனுக்கு ஞானம் பிறந்ததை  கண்டவன் எவன் ? -அகரமுதல்வன்  29.07.2014

நீ எரித்த வனம்

Image
உனக்கொரு  கடிதம் எழுதவேண்டுமெனக் கனக்கும்  இதயத்தின் கிழக்கு  தாமரைகளை மலரச் செய்வதில்  பிடிப்பற்று இருக்கிறது  காற்றெங்கும் வாள் வீசும்  உன் பிரியத்தின் மிஞ்சியிருக்கும் விழிகளை   உன்னிடமே திருப்பியனுப்பும்  வல்லமையின்னும் வாய்க்கவில்லை  கசியப்போகும் இருளின் நடுவில்  யாசகம் கேட்கும் மூச்சின் நாசிகளுக்கு  ஆற்றுக்கிடைக்கையில் காத்துக்கிடக்கும்  நீர்ப்பாம்பென கணங்கள் நெளிய  ஆயிரம் தலைகள் கொண்ட ஞாபக விடம் என்னை கொத்துகிறது  உனக்குத் தெரியுமா லோஜி  இதற்கு முன்னர்  எழுதிய கடிதங்களையெல்லாம்  எவரும் புகுந்து வரமுடியாத பெருவனத்தில்  என்னை நீ எரித்தது போல நானும் எரித்து விளையாடியது இனியேனும் வனங்களில்  புகை எழும்பாதபடிக்கு உனக்கொரு கடிதம் எழுதவேண்டும்  -அகரமுதல்வன்  28.07.2014