சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்


“முகத்திற்கு ஓங்கி அடிவயிற்றில் குத்தும்” தமது கூர்மையான ராஜதந்திரத்தை புத்தர் ஞானம் பெற்ற பெளர்ணமி தினத்திலும்                   சிங்கள ஆட்சியாளர்கள் நடத்தியிருக்கிறார்கள். சர்வதேச             பெளத்த வெசாக் தினநிகழ்விற்கான இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தின் மூலம் சிங்கள                       ஆட்சியாளர்கள் வடிவமைத்த காட்சிகள் ஒவ்வொன்றும்  அரசியலர்த்தங்கள் கொண்டவை. இந்திய வம்சாவழியைச்     சேர்ந்த மலையகத் தமிழர்கள் மத்தியில் மோடியை உரையாற்ற வைப்பதனூடாக இலங்கை- இந்திய உறவென்னும்             அரூபத்திற்கு தங்க முலாம் பூசியிருக்கிறது மைத்திரிபால                   சிறிசேன அரசு.



முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்ந்த மாதத்தில் இலங்கைக்கு  சென்ற இந்தியாவின் பிரதமர் அந்த வரலாற்று துயரம் குறித்த சிறுசொல்லைக்கூட எங்கும் உதிர்க்க்கவில்லை. காலம் காலமாக       இந்திய எதிர்ப்புவாதத்தின் பேரால் சிங்களர்களால் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் உரிமைப்பிரச்சனையை தற்போதைய இந்திய அரசும் பொருட்படுத்தவில்லை என்பதையா மோடியின் இந்த மவுனம் உணர்த்துகிறது? ஈழத்தமிழரின் வலியையும் வேதனையும்             புரிந்துகொள்ளும் பக்குவம் இன்னும் இந்திய ஆட்சியாளர்களிடம் வரவில்லையோ என்கிற ஐயம் எழுகிறது.

புவியியல் ரீதியாக கேந்திரமுக்கியம் கொண்ட  ஈழத்தமிழர்களை தீண்டத்தகாத ஒரு இனமாகவே இந்தியப் பெருநாடு பார்க்குமாகவிருந்தால் இந்தியாவிற்கு தெற்கிலும் சீன மாகாணம் தோன்றும்.
சீனாவில் நடக்கவிருந்த பட்டுப்பாதை கூட்டத்தொடரை இந்தியா நிராகரித்திருந்த சூழலில் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ரணில் விக்கிரமசிங்கவிற்கு முதல் இருக்கை வழங்கப்பட்டிருக்கிறது. மோடியை இலங்கைக்கு அழைத்து அடுத்த நாளே சீனாவோடு கைகுலுக்கினார் ரணில்.

சிறிமாவோ பண்டாரநாயக்காவின் காலத்திலிருந்தே இற்றைவரைக்கும் சீனாவோடு சிங்களத் தலைவர்களுக்கிருக்கும் இரத்தோட்டமான உறவு ஆழமானது. அவ்வுறவின் நிமித்தம் பெறும் இந்தியாவின் கோபத்தை காட்சிமயமாக்கும் வைபவ அரசியலில் காணமல்செய்து விடுவதில் சிங்களர்கள் வல்லவர்கள். அதுவே மோடியின் வெசாக் பயணத்தில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மக்களிடமிருக்கும் இலங்கை           மீதான எதிர்ப்பையும் மிகலாவகமாக தோற்கடித்து விடுகிற இந்த             வித்தை அவர்களின் அரசியல் கலாச்சாரத்தின் நீட்சி. கூடவே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா திரும்பிவிடக்  கூடாதென்கிற பதற்றம். ஆகமொத்தத்தில் இந்தியாவை                   அணைப்பது போல் அணைத்துக் கொண்டே சீனாவை                         முத்தமிடும் சிந்திக்கவியலாத நகர்வு.

நல்லிணக்க அரசு என்கிற சோடனையின் கீழே தமிழர்களின் தாயகமான வடக்கு,கிழக்கில் சைவ வழிபாட்டுத்தலங்களை இடித்தழிக்கும் அநீதியும், ஆக்கிரமிப்புக் குடியேற்றங்களும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இவ்வேளையில் தமிழ்தலைவர்களுடனான மோடியின் சந்திப்பு முதன்மையோ முக்கியத்துவமோ பெறவில்லை. சர்வதேச பிரச்சனையின் ஓரம்சமாக மாறியிருக்கும் ஈழத்தமிழ் அரசியலை இந்து சமுத்திர பிராந்தியத்தின் பிரதானமான இந்திய நாடு தவிர்த்தோடவே முடியாது.  இப்பிராந்தியத்தில் தனது நேச சக்தியான ஈழத்தமிழ் மக்களின் நீதிக்காக செயல்படவேண்டிய கட்டாயத்தை காலமுருவாக்கியிருக்கிறது.

புத்தன் போதித்த அமைதியும் சமாதானமும் வெறிகொண்டவர்கள் கையினால் குத்திக்கிழிக்கப்பட்ட இலங்கைத் தீவின் சிங்கள பெளத்த பிக்குகள் வெறும் மதத்தலைவர்கள் அல்ல, இலங்கை அரசை நிர்வகிப்பவர்கள்.

தமிழர்கள் மீதான அனைத்து வன்முறைகளையும் சட்டரீதியாக நெறிப்படுத்துபவர்கள். இந்திய ஆதிக்கத்தின் நீட்சியாகவும் இந்துக்களாகவும் ஈழத்தமிழர்களை            உருக்காட்டி  அவர்களைக் கொல்லுவது சொர்க்கத்திற்கு செல்லும் வழியென்று சிங்களர்களுக்கு போதிப்பவர்கள். பவுத்தமரபின் படி மன்னனுக்கு எழுந்துநிற்காத புத்தபிக்குகளை மோடி சிரத்தையோடு வணங்கினார்.

இந்தியாவை வெறுத்தொதுக்கும் வரலாற்றின் கசப்புகளோடு ஒரு இந்தியத்தலைவரை சிங்கள பிக்குகள் எதிர்கொண்டார்கள். தமிழ் மக்களோ அவர் தமது பிரச்சனை தொடர்பாக என்ன கூறவிருக்கிறார் என எதிர்பார்த்தார்கள். அதுவும் வெறுங்கனவாய் கலைந்தது.
இந்நிகழ்வு வரைக்கும் ஈழமக்களின் கையில் இந்தியா தருகிற பரிசுக்கு நிரந்தமான பெயருண்டு.ஏமாற்றம். 

Comments

Popular posts from this blog

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்