திணிப்பு பற்றிய கேள்வியும் விளக்கமும்


நன்றேது? தீதேது? ஆளுமைகளுடனான உரையாடல்" என்கின்ற நூலில் ஆளுமைகளுடன் உரையாடல் மேற்கொள்ளும் அகரமுதல்வன் வலிந்து மூன்று விடயங்களை திணிப்பதாக எண்ணத் தோன்றுகிறது.
1
 ஈழ விவகாரத்தை பிராந்திய பிரச்சினை என்று சொல்வது.
 2
இந்தியா ஈழ மக்களுக்கு தீர்வு வழங்க ஒரு வாய்ப்பு வராதா என்று தவம் இருப்பது போன்று பேசுவது.
3
ஜெயமோகன் தான் இலக்கிய கொம்பு என்பது போல மூன்று ஆளுமைகளுடனும் அவரின் உளறல் பற்றியே கேள்வி எழுப்புதல்.

இவைகளுக்கு அப்பால்அ கரமுதல்வனுக்கும், மோக்லி பதிப்பகத்துக்கும் தமிழ்ச் சமூகம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறது. உரையாடல் என்கிற சற்று மறந்தே போன ஒன்றை சரியான, அவசியமான காலத்தில் நிகழ்த்தியிருக்கிறார்கள். இது தொடர வேண்டிய ஒரு முக்கியமான அணுகுமுறையாகும். வேறு வேறு கோணத்தில் பயணிக்கும் குணா கவியழகன், பத்திநாதன் போன்றோரின் உரையாடல்கள் புதிய வெளிகளை உருவாக்கும் தன்மையுடையவை.உணர்ச்சி பூர்வமான அரசியலையே பழகிக்கொண்ட தமிழ் சமூகத்தில் இவ்வுரையாடல்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
இதுவே எனது விமர்சனமும் கூட
நன்றி
வாசு முருகவேல் 



அன்பின் வாசு முருகவேலுக்கு!

எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமாரின் மோக்லி பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் எனது நன்றேது? தீதேது? நேர்காணல் தொகுப்புக் குறித்து முகநூலில் எழுதியது மட்டுமல்லாமல் எனக்கும் அனுப்பியிருக்கிறீர்கள். நூலைப் படித்துவிட்டு அதுகுறித்து எழுதியமைக்கு நன்றிகள். இந்த நூலில் சிலரிடம் கேட்கப்படும் கேள்விகளில் நான் மூன்று விடயங்களை திணிப்பதாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள். உண்மையில் உங்களிடமிருந்து இந்தக் கேள்வி வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை.மேலும் இந்த நூலின் பின் அட்டையில் அகரமுதல்வன் திருநீற்றோடு தோன்றியிருப்பது அசூசையாக இருக்கிறது என்று தான் முதல்விமர்சனம் வருமென்று எதிர்பார்த்தேன், இன்னும் காணவில்லை.

உங்கள் பார்வையில் நான் திணிக்க முயலும் முதல் கருத்து.
ஈழ விவகாரத்தை பிராந்திய பிரச்சினை என்று சொல்வது. இந்தக் கருத்தை நான் திணிக்கமுயலவில்லை. நான் இந்த நூலில் இது திணிக்கப்படாததால் அது பொய்யாகவும் ஆகிவிடமுடியாது. ஈழப்பிரச்சனை என்பது பிராந்திய சிக்கல்களுக்குள்ளும் இருக்கிறது. அதனை பிராந்திய சிக்கல்களிலிருந்து தான் சர்வதேச நோக்குநிலையாளர்கள் அணுகிறார்கள். 
அரசியலில் நாம் விரும்புவது என்பது வேறு , யதார்த்தம் என்பது வேறு. நான் ஈழப்பிரச்சனையை பிராந்திய சிக்கல் என்று திணிப்பதாக நீங்கள் குறிப்பிடுவது மிக நகைச்சுவைத் தன்மையானது. ஈழப்பிரச்சனையானது இந்துசமுத்திர பிராந்திய சிக்கல்களுக்குள் தான் அதிக இன்னல்களை எதிர்கொண்டது. 
பல்வேறு பிராந்திய மற்றும் உலக வல்லரசுகளின் கடல் ஆளுகைச்சிக்கல்கள் நிறைந்த அரசியல் பேரங்களுக்கான   சமரசங்களை புலிகளின் தலைமை ஏற்றுக்கொள்ளாத சம்பவங்களின் அடிப்படையில் நீங்கள் அதனை உணர்ந்துகொள்ளலாம். 
பிராந்திய சிக்கலில் மட்டும் ஈழப்பிரச்சனை இல்லை என்று சொல்லலாமே தவிர அது இப்போது சர்வதேச சிக்கல் மட்டுமே என்று சொல்லிவிடமுடியாது. கிழக்கில் தான் சூரியன் உதிக்கும் என்று சொல்வதை நீங்கள் எப்படி திணிப்பென்று அழைக்கலாம். அது தான் பேருண்மை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் பார்வையில் நான் திணிக்க முயலும் இரண்டாவது கருத்து.
இந்தியா ஈழ மக்களுக்கு தீர்வு வழங்க ஒரு வாய்ப்பு வராதா என்று தவம் இருப்பது போன்று பேசுவது.

இந்தக்கேள்விக்கான பதிலுக்கும் முன்னைய பதிலுக்கும் நிரம்பவே தொடர்பிருக்கின்றது. நான் அதிகமாக எதிர்கொள்ளும் விமர்சனமும் இதுதான். நானோ ஈழஅரசியலோ இந்தியாவிடம் தீர்வுக்கான தவமிருக்கவில்லை. மாறாக அரசியலை அதன் உள் அர்த்தத்தில் புரிந்துகொள்ளவேண்டும். 
இதற்கான பதிலை நான் எழுதுகிற போதே என்னை “இந்துத்துவவாதி” என்றோ “இந்திய சார்புநிலையாளர்” என்றோ ஏன் இன்னும் நூறுமடங்கு மேலே சென்று இந்திய உளவு நிறுவனத்திடம் கூலி வாங்குபவன் என்றோ பேசுவதற்கு கூட்டம் சேர்க்கப்பட்டுவிடும். அதற்காக நான் அஞ்சுபவன் கிடையாது. 
இந்தியாவை நோக்கி தவம் இருந்து ஈழஅரசியலில் தீர்வை பெற்றுவிட முடியுமென நான் ஒரு நாளும் எழுதியவனோ பேசியவனோ கிடையாது. ஆனால் இந்தியா என்கிற நாட்டிற்கு ஈழத்தமிழர்கள் அரசியல் ரீதியாக எவ்வளவு முக்கியத்துவமானவர்கள் என்பதைப் பற்றி நான் பேசியிருக்கிறேன். எழுதியுமிருக்கிறேன். 
இந்தப் பிராந்தியத்தில் புவிசார் ரீதியாக இந்தியா எதிர்நோக்கியுள்ள பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்காலத்தில் இந்தியா எதிர்நோக்கவுள்ள பிரச்சனைகளையும் இந்திய கொள்கைவகுப்பாளர்கள் சரியாக இனம்கண்டார்கள் என்றால் ஈழப்பிரச்சனை பற்றிய அவர்களின் நிலைப்பாடுகளில் மாற்றம் வரும் என்று தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறேன். இந்தப் பிராந்தியத்தின் இந்தியாவிற்கான நேச சக்தியாக பல்வேறு அடையாளங்களோடு ஈழத்தமிழர்கள் இருந்துவருகின்றமையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். 
ஈழத்திற்கு இந்தியா அவசியமில்லை. இந்தியாவிற்கு ஈழமொரு அரசியல் அவசியம். அரசியலில் ஆசைகளை விட அவசியமானது யதார்த்தம்.


உங்கள் பார்வையில் நான் திணிக்க முயலும் மூன்றாவது கருத்து.
ஜெயமோகன் தான் இலக்கிய கொம்பு என்பது போல மூன்று ஆளுமைகளுடனும் அவரின் உளறல் பற்றியே கேள்வி எழுப்புதல்.

எழுத்தாளர் ஜெயமோகனை நான் இலக்கியகொம்பு போல் எண்ணுவதைப் போல பல ஆளுமைகளிடம் அவர் குறித்த கேள்விகளை கேட்டிருப்பதாக குறைபட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நான் அவரைக் இலக்கியக் கொம்பனாக எண்ணியது கிடையாது. ஆனால் அவரின் பெருமளவிலான இலக்கியப்பிரதிகளை வாசித்திருக்கிறேன். இப்போது வாசிப்பிலிருப்பது கூட “பின் தொடரும் நிழலின் குரல்”என்கிற அவரின் நாவல்தான். நான் நன்றேது? தீதேது? என்கிற இந்த  நூலில் நேர்காணல் செய்திருக்கிற நான்கு பேரிடமாவது ஜெயமோகன் குறித்த கேள்விகளை கேட்டிருக்கிறேன். ஆனால் கேள்விகள் வெவ்வேறு விதமானவை. 

எழுத்தாளர் தமிழ்நதியை ஜெயமோகன் பலவிடங்களில் அவதூறாக பேசியிருக்கிறார். அதனைப் பேசுவதற்கு அவருக்கான தளங்களை தமிழகத்தின் வெகுஜன இதழ்களிலிருந்து இணைய இதழ்கள் வரை உதவின. ஆனால் அதற்கான எதிர்வினையை தமிழ்நதி தன்முகநூலில் மட்டுமே எழுதியிருந்தார். ஒரு நூலாக கொண்டுவரவிருக்கும் நேர்காணலில் நான் தமிழ்நதியின் எதிர்வினையை பதிலாக்க வேண்டுமென்று எண்ணினேன். இப்போது நீங்கள் படித்தது நான் கேள்வி கேட்டதனால் அன்றியே தவிர வேறு எதனால். தமிழ்நதியின் நேர்காணலின் தலைப்பே ஜெயமோகனுக்கான எதிர்வினையின்றி வேறென்ன. நம் நம்பிக்கையின் மீதும் இலட்சியத்தின் மீதும் காறிஉமிழ ஊடகங்கள் நிறைந்துவிட்டதற்கான எதிர்வினையே இந்த நேர்காணல் தொகுப்பு. 
அப்படியானால் நான் ஜெயமோகனையும், ஒண்டிப்புலி சர்பத் கவிதையையும் பதிவிடாமல் தாண்டிப்போகவே முடியாதல்லவா? அந்த அநியாயங்களை கேள்விகளாக எழுப்புவதன் மூலம் தான் நமது நீதியை நாம் வெளிக்கொணரமுடியும். குணா கவியழகன் ஈழப் போரிலக்கியத்தின் அனல்துடிப்பு. அவரின் மூன்று நாவல்களும் வெவ்வேறு வகையிலான போராளிகளின் வாழ்க்கையைப் பேசுவது. ஈழ இலக்கியத்தின் தவிர்க்கமுடியாத  மூன்று நாவல்களை இதுவரைக்கும் எழுதியிருக்கும் குணா கவியழகனின் எழுத்துக்கள் பற்றி ஜெயமோகன் எழுதியதை நீங்கள் அறிவீர்கள். ஜெயமோகன் குணா கவியழகனின் எழுத்தை தட்டை என்று சொன்னார். 
ஜெயமோகனின் இந்தத் தீர்ப்பு எனக்கோ அல்லது குணா கவியழகனுக்கோ கவலையைத் தரவில்லை. மாறாக மகிழ்ச்சியைத் தான் தந்திருக்கிறது. இன்றைக்கு குணா கவியழகன் எனது நேர்காணலில் தான் பதில் அளித்திருக்கிறார். அது ஜெயமோகனுக்கான பதில் இல்லை. ஜெயமோகன் போன்ற பலருக்கான பதில். நாம் பேசக்கூட நாம் தான் மேடையமைக்க வேண்டும் வாசு. நாம் எம்மைப்பற்றி மட்டுமல்ல எதிரிகளைப் பற்றியும் கதைப்போம்.உரையாடுவோம் நமக்கு என்னும் தெளிவு பிறக்கும்

மேலும் ஈழப்படைப்புக்களும், ஈழப்படைப்பாளிகளும் தொடர்ந்து தமிழ் இலக்கிய உலகம் என்கிற இடத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் எனும் கோபம் எனக்கு நிறையவே உள்ளது. உதாரணத்திற்கு பாருங்கள். நடந்து கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் “தமிழர் பூமி” எழுத்தாளர் தீபச்செல்வனின் கட்டுரைத்தொகுப்பு வெளியாகியிருக்கிறது. அந்த நூல் தமிழர்களின் நிலங்கள் இதுவரைக்கும் எவ்வளவு பறிபோயுள்ளன என்பதனை குறித்து விபராமாக பேசுகின்ற செய்திகளை இதற்கு முன் வேறெந்த நூலும் பேசியது கிடையாது. ஆனால் அதனை இன்னும் தான் எந்தவொரு தமிழக பத்திரிகையும் சுட்டிக்காட்டவில்லை. இனி நானும் நீங்களும் தானே அதைப்பற்றி பதிவிட வேண்டும்.
எனக்கு யாரும் கொம்பன் கிடையாது, ஏனெனில் எனக்கு கூர்மையான கொம்பிருக்கிறது. அதற்கு பெயர் அறம் வெல்லும் அஞ்சற்க.

நன்றி.



Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்