தலைகீழ்

வணக்கம்! அகரமுதல்வன். உங்கள் மீது எனக்கு எள்ளளவு இருந்தமரியாதையும் நேற்றோடு காலியாகிவிட்டது. நீங்கள் லக்ஷ்மி சரவணக்குமார் என்பவரோடு எழுத்தாளர் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல் பிரதியை தலைகீழாக பிடித்தபடி வெளியிட்ட போட்டோவை லக்ஷ்மி சரவணக்குமாரின் fbயில் பார்க்க நேர்ந்தது. ஜெயமோகன் மீது உங்களிருவருக்கும் இருந்த அரசியல் ரீதியான காழ்ப்புணர்வை இவ்வாறு வெளிப்படுத்தி உங்களுக்கே அவமானத்தை ஏற்படுத்தி விட்டீர்கள். நீங்கள் இருவரும் ஜெயமோகனின் ஒரு எழுத்தையும் ஒன்றும் செய்துவிடமுடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

ஆன்றோ ராஜ்

கன்னியாகுமரி. 


மரம் அமைதியைத்தான் விரும்புகிறது ஆனால் காற்று அதை அனுமதிப்பதில்லை –மாவோ

ஆன்றோ நீங்கள் என் மீதுகொண்டிருந்த எள்ளளவு மரியாதை காலியாகியது குறித்து எனக்கு எந்தக்கவலையும் இல்லை. எள்ளுக் காலியாகும் காலத்தில் எள்ளளவு மரியாதையும் காலியாகும் என்பது யதார்த்தம். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலை எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் தலைகீழாய் வெளியிட நான் பெற்றுக்கொண்ட புகைப்படத்தை நீங்கள் பார்த்ததும் இந்தப் பதிவை எனக்கு எழுதி மின்னஞ்சல் செய்திருக்கிறீர்கள்.

ஜெயமோகன் மீது எனக்கோ அல்லது சகோதரர் லக்ஷ்மி சரவணக்குமாருக்கோ அரசியல் ரீதியான காழ்ப்புணர்வு என்றும் இருந்தது கிடையாது. அவர் எப்போதும் எமது அரசியல் நம்பிக்கைக்கும், எம் அரசியலுக்கு எதிராகவும் தொடர்ந்து செயற்பட்டு வருகிறவர் என்கிற வகையில் ஜெயமோகன் என்பவர் என்னளவில் எனக்கு மிக நேரிடையான அரசியல் எதிரி. இந்தவிடத்தில் லக்ஷ்மி சரவணக்குமார் தனது “யானை” சிறுகதை நூலை உங்கள் ஆசானுக்குத் தான் சமர்பித்திருந்தார். நாம் ஏன் ஜெயமோகன் மீது காழ்புணர்வு கொள்ளவேண்டும். அப்படிக் காழ்ப்புணர்வு இருந்தால் அவரின் நூலை ஏன் தலைகீழாய் வெளியிடவேண்டும். 

இவ்வளவு காலமும் ஜெயமோகன் எழுதிய காழ்புணர்வு எழுத்துக்களில் எத்தனை எழுத்தாளர்களின் நூலை தலைகீழாக வெளியிட்டார்? காழ்ப்புணர்வுக்கு பெயர் பெற்றவர் யாரென்று கேட்டால் ஒரு புதிய வாசகன் கூட ஜெயமோகன் என்று தான் சொல்லுவான். இந்த இடத்தில் இதனை ரத்தினச்சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் நாயைப் பயம் காட்ட மனிதன் வவ், வவ் என்று சொல்லத் தேவையில்லை என்றே சொல்லிமுடிக்கலாம். 



நாம் காழ்ப்புணர்வு கொண்டு இந்த வேலையை செய்திருக்கிறோம் என்று ஜெயமோகன் கூட நம்பமாட்டார். அவர் ஈழப் போராட்டம் குறித்து எழுதிய பொய்க்கதைகளை நீங்கள் படித்துவிட்டு காழ்ப்புணர்வு என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். ஒரு விடுதலைப் போராட்டத்தின் அடிப்படைத் தன்மைகள் பற்றி அறியாமல் அவரெழுதியதை நாவலென்று படித்துவிட்டு தொங்கிக்கொண்டிருக்கும் உங்களைப் போன்ற வாசகர்களைப் போல என்னால் இருந்துவிட முடியாது. 
மேலும் உங்கள் பதிவின் கடைசி வரி
“நீங்கள் இருவரும் ஜெயமோகனின் ஒரு எழுத்தையும் ஒன்றும் செய்துவிடமுடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.”

இப்படி இருப்பதை நினைத்து சிரித்தழுதேன். உண்மையில் அது எம் விருப்பமோ வாழ்வின் லட்சியமோ இல்லை. நாம் அவரின் எழுத்துகளை என்ன செய்வதற்கு முயற்சிக்கிறோம் என்று எப்போதாவது பொதுவெளியில் சொன்னோமா?  நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். ஜெயமோகனின் எழுத்துக்களை அவராலுமே ஒன்றும் செய்துவிட முடியாதுள்ள நிலையில் நாம் இருவரும் அவரின் எழுத்துக்களை  என்ன செய்யமுடியும்.?

தைப்பொங்கல் தின நல்வாழ்த்துகள் ஆன்றோ.

அகரமுதல்வன் 
01.14.2017




Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்