நல்மொழிக்கு அச்சமில்லை – நாஞ்சில் நாடன்








கடந்த ஆறுமாதங்களில், ஈழத் தமிழ்ப்படைப்புக்களில் ஏறத்தாழ 2500 பக்கங்கள் வாசித்தேன். யாவுமே பெரும்பாலும் இனஅழிப்பு நயவஞ்சகத்தின் பிற்பாடு எழுதப்பெற்றவை. நான் வாசித்த ஒழுங்கில் குறிப்பிட வேண்டுமானால் ஷோபாசக்தியின் கண்டிவீரன், முப்பது நிறச் சொல், Box கதைப்புத்தகம். மெலிஞ்சிமுத்தனின் பிரண்டையாறு. கருணாகரனின் வேட்டைத்தோப்பு. தமிழ்க்கவியின் ஊழிக்காலம். சயந்தனின் ஆதிரை. குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு,விடமேறிய கனவு,அப்பால் ஒருநிலம். தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில். தமிழ்நதியின் பார்த்தீனியம். செல்வம் அருளானந்தத்தின் எழுதித் தீரா பக்கங்கள். அகரமுதல்வனின் இரண்டாம் லெப்ரினன்ட்.

இவற்றுள் பெரும்பான்மையான நூல்களை வாசிக்க துயரம் தாங்கும் மனம் வேண்டும். வலிக்காமலும் கண்ணீர் சிந்தாமலும் அவற்றை வாசிக்க இயலாது. புத்தக வாசிப்பு என்பது எப்போதுமே சுகானுபவம் அல்ல. பாதத்தில் கீறிப் புகுந்த உடைந்த குப்பிச் சில்லு போல, நொம்பலமும் இரத்தக்கசிவும் சுருக் சுருக் என்ற குத்துதலும் வேதனையும் வீக்கமும் உணர்த்துவது. மேலே குறிப்பிட்ட நூல்கள் பற்றிய கருத்துரைக்கு நான் ஈண்டு முனையவில்லை.

அறிவுஜீவிகள் என்று தம்மைக் கருதிக்கொண்டிருப்போர்,ஊதியத்துக்கு உழைப்பவர்,சமகால இந்த ஈழப் படைப்புக்களினுள்ளும் சாதி,வர்க்கம், இனம், மதம் என நுண்அரசியல் தேடுவார்கள். ஒரு மார்க்சிய செயல்பாட்டாளர் சயந்தனின் “ஆதிரை” நூல்பற்றி எழுதிய கட்டுரையில் கேட்டிருந்தார். தனி ஈழம் கிடைத்திருந்தாலும் அது யாழ்ப்பாணத்து வெள்ளாளர் அரசாங்கமாகத்தானே இருந்திருக்கும் என்று. ஆங்கிலத்தில் அமையப்போகும் தமிழீழத்தின் அரசியல் அமைப்பு பற்றி 800 பக்கங்களில் வெளியிடப்பட்ட புத்தகத்தின் தலைப்பபைக் கூட இவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள்.

தாம் சார்ந்திருக்கும் அரசியல் இயக்கத்தின் பார்ப்பனத்தலைமையின் கீழ் பல்லாண்டு பல்லாண்டு தொண்டர் அடிப்பொடியாகச் செயல்பட்டு நிற்பதை வசதியாக மறந்தே இதனைப் பேசுகிறார்கள். 

அவலம், மானுடஅவலம், தமிழின அவலம் அலைக்கழிக்கிறது நம்மை. அந்த அவலங்களுக்கான மூலாதாரச் சக்கரங்கள் எவையென நாம் அறிவோம். அவற்றை ஆராய்வது எமது நோக்கமல்ல. பகையாலும் பழியாலும் சதியாலும் எரிந்தபின் காரணங்களைக் கண்டடைவது எவரைத் தேற்ற அல்லது ஆற்ற? உலகத் தொழிலாளர்களுக்காக ஒன்று படுகிறவர்கள், சொந்தச்சகோதரர்கள் துன்பத்தில் வீழ்தல் கண்டும் சிந்தை இரங்காரடி, கிளியே! வாய்ச்சொல்லில் வீரரடி!

வஞ்சனைப்பால் சோறு உண்ட இந்தியத் தமிழினம், திக்கும் திசையும் அறியாமல் திகைத்து நிற்கிறது. திரைப்பட நடிகர்களின் குசுக்குடித்து அலைகிறது.

மதுரையில் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இருநாள் இலக்கிய முகாம் ஒன்றின் இறுதி அமர்வான கலந்துரையாடலுக்கு நான் தலைமை தாங்க நேர்ந்தது. ஈழத்தில் தமிழன் எனும் ஒற்றைக்காரணத்துக்காக நடந்து கொண்டிருந்த கொலைவெறியாட்டத்துக்கு எதிராகத் தமிழ்படைப்பாளியின் எதிர்வினை என்ன என்று கேட்டேன். முன்னணிப் படைப்பாளி ஒருவர் சொன்னார், இரண்டாம் உலகமகாயுத்தம் முடிந்த 50ஆண்டுகள் ஆனபின்பே  அது குறித்துப் படைப்புகள் வந்தன என்று. அதற்கு மாற்றுக்குரல் கொடுத்த ஈழப்படைப்பாளி தமிழ்நதியை முற்போக்கு தோழர் ஒருவர் மூர்க்கமாக மறுத்தார் பண்பாடற்று. சிலியிலும் அல்ஜீரியாவிலும் எத்தியோப்பியாவிலும் பஞ்சம் வந்தால் மட்டுமே இங்கு கண்டன ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் நடத்துவார்கள் போலும். தமிழன் செத்தால் என்ன, கொடுந்துயரில் வீழ்ந்தால் என்ன? இதைப் பேசப்புகுந்தால், மொழி அரசியலாகிவிடும்.

மேற்சொன்ன நூல்களை சேர்ந்தாற்போல வாசிக்கும் போது எனக்கு ஒன்று புலனாகியது. அவர்கள் துயரத்தை அவர்களே படைப்பாக்கிக் கொள்வார்கள் என்பதும்,நமது முற்போக்கு கரிசனங்கள் வேண்டாம் என்பதும். புலிகளுக்கு ஆதரவா,எதிர்ப்பா, ஈழத்துக்கு ஆதரவா எதிர்ப்பா எனும் கேள்விகளைத் தாண்டி, தமிழனுக்கு எதிராக இழைக்கப்பட்ட  என்ற ஒற்றைக்குறிக்கோளுடன் அவலங்கள் இன்று கனத்த படைப்புக்களாகி வருகின்றன. 

இந்த மனநிலையுடன் தான் ஈழத் தமிழரின் ஒவ்வொரு படைப்பாளியையும் கவனிக்கிறேன். அது பிரான்ஸ், ஜெர்மெனி,சுவிட்சர்லாந்து,இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா அல்லது இந்தியா என்று எங்கிருந்து எழுதப்பட்டால் என்ன? மொழியின் பெயரால், சித்திரவதைக்கு ஆட்படுத்தப்பட்ட ஒரு இனத்தின் வலி சுமந்த எழுத்துக்கள் அவை.

தம்பி அகரமுதல்வன் எனக்கு அறிமுகமாகி ஆறேழு மாதங்களே இருக்கும். இரண்டாம் லெப்ரினன்ட் என்ற அவர் முதல் சிறுகதைத்தொகுப்பு அன்றியும் நான்கு கவிதைத்தொகுப்புகள் அவர் கணக்கில். ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் பண்ணைக்கு ஒருவன் எனப் போந்திருக்கிறார். தமிழ்நதியின் நாவல் பார்த்தீனியம் வெளியீட்டு விழாவிற்கு போயிருந்தபோது  இரண்டு நாட்கள் அவருடன் வித்தாசமாக அமர்ந்து பேச நேர்ந்தது. நேசமும் துடிப்பும் தீவிரமும் கொண்ட இளைஞன். 

“முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு” என்ற இந்தத்தொகுப்பின் பத்துக் கதைகளையும் வாசிக்கும் போது தோன்றியது. மொழிக்குள் இத்தனை போராளிகள் செயல்படும்போது, உம்மை எவரால் வெல்ல முடியும் தமிழா என்று! 
அவரது ஒரு கவிதையில் 
“இப்பொழுது கவிதைகளை வாசிப்பதை 
நிறுத்திவிட்டு அனைவரும் 
படுகொலைகள் குறித்து கவலைப்படுவோம்”
என்கிறார்.இந்தக் கதைகள் பெரும்பான்மையானவை போர், அழிவு, கொடுங்கொலைகள், வதை எனப் பேசுகின்றன. நடந்த துயரங்களின் இரத்த சாட்சியங்கள். Sworn statements

அறிவுஜீவிகள் சிலர் இந்தத்தொகுப்பின் தலைப்பை மாத்திரம் பார்த்துவிட்டு வரலாற்றுப் பிழைகளை ஆராயப்போவார்கள். சிலர் இதன் உருவம் எதனைச் சுட்டுகிறது என விஞ்ஞானமாக விரித்துப் பொருள் கூறுவார்கள். எந்தப் படைப்பையும் புரிந்துகொள்வதற்கு அறிவுமட்டும் போதாது. கலையுணர்வும் வேண்டும். கலையுணர்வு என்பது காசுக்கு எட்டு என விற்கப்படுவதும் அல்ல.

எழுத்துத் தொழில் மேதைகள் விளம்புவது போல, போர் முடிந்து இரண்டு தலைமுறையினர் சாம்பலும் கரைக்கப்பட்ட பின்பு, நிலவொளியில் சுருட்டுப்பிடித்துக் கொண்டும், விஸ்கி கோப்பையைக் கையில் வைத்துக்கொண்டும் நினைவுச் சரடு திரிப்பது செளகரியமான இலக்கியம். அழுகிச் சொட்டும் புண்ணும் அறுபட்ட முலைகளும் குறிகளும் ஈ மொய்க்க வலியில் துடித்துக்கிடப்பதைச் சொல்வது இன்றைய ஈழத்து இலக்கியம். பேருந்து நிலையத்தின் மூத்திர வாடைக்கு மூக்கைப்பொத்துகிற  கூட்டம் வாசித்துப்பார்த்தல் தான் உணர்வார்கள் ஈழப்படைப்பாளியின் சோகத்தை, வலியை, அமில அரிப்பை, நச்சுப்பட்டதன் மரணத்தை. குளிர்பதன அரங்குகளில் அமர்ந்து உலகத்திரைப்படங்கள் பார்த்து இலக்கிய மாதஇதழ்களில் மாய்ந்து மாய்ந்து எழுதுவதைப் போன்றதன்று அவர் அனுபவங்கள்.

அகரமுதல்வனின் இந்தக் கதைகள் அவரது வலிகளை நமக்கும் பெயர்க்கின்றன. “பட்டனன் என்றபோது எளிதினில் படுகிலேன் யான்” என்பதைப் போல,Die Hard Spocies இளையதாக வந்த இந்த எழுத்தாளனும். இந்தியத் தொன் மரபின் புனித சமூகம், மாவீரனின் மகனின் பிள்ளைக்கறி சமைத்து உண்டதையும் வேடிக்கை பார்த்தது. ஈழத்தமிழனுக்குத் தானே அதன் நொம்பலம் அர்த்தமாகும்.

இந்தக் கதைகளை வாசிக்கும் போது, உண்மைத் தீ பொசுக்கும் வாடையில் மூக்கு சுருங்குவதை உணரலாம். “திருவளர் ஞானசம்பந்தன்” கதையில் ஒரு உரையாடல்.

“ஜீவிதா நாம் தமிழ்மொழி பேசக்கூடிய அகதி இனமா?

“இல்லை நந்திதா, நாம் தமிழ்மொழி பேசுவதால் அகதி இனம்”

இகுதோர் சான்று. “கிழவி” என்றோர் கதை. இந்தக் கதையின் நுட்பம் உணரவே படைப்பாற்றால் வேண்டும். “பறி கொடுக்கப்பட்ட வாழ்வின் வாய்க்குள் அரிசி சொரிந்து கொண்டே இருந்தது”என்றெழுதும் ஆற்றல் உடைய அகரமுதல்வனுக்கு சொல்ல என்னிடம் ஏதுமில்லை. “நிலமதி” என்றோர் சிறுகதை மற்றுமோர் எடுத்துக்காட்டு.

பத்துக்கதைகளின் சுருக்கம் எழுதி டிரெய்லர் ஓட்டுவது என் முன்னுரைப்பின் இலக்கணம் அல்ல. வாசகனே ஒரு சகபடைப்பாளி தான். அந்த நிலையில் நின்று அவன் வாசித்துப் பார்ப்பான் “தேடியலையும் நள்ளிரவு” போன்ற கதைகளை. “மரண வீட்டின் விடிகாலையைப் போல சித்தி களைத்துப்போயிருந்தாள்” என்று அந்தக் கதையின் தொடக்கவரிகளை அகரமுதல்வனால் எழுதமுடிகிறது. “எக்கச்சக்கமான மிதிவெடிகளுக்குள் மாட்டிக் கொண்ட மேய்ச்சல் மாட்டைப் போல என்ற உவமை அர்த்தமாக, மிதிவெடி என்றால் என்னவென்று பொருளாக வேண்டும். அதுபொருளாக ஈழத்துப் போர் பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.

அகரமுதல்வனே சொல்வதைப் போல “வாழ்வின் முற்றத்தில் அசலான கொடூரம் பந்தல் போட்டு நிரந்தரமாய் நிலைக்கின்ற” அனுபவம் பாடுபொருளாகும் போது  எங்கிருந்து நாம் கதை சுவாரசியமும் நளினங்களும் நறுக்குகளும் எதிர்பார்ப்பது? அவை காணாமல்தான் போய்விடுகின்றன.

மிஞ்சிப்போனால் 25வயதிருக்கும் இந்த இளம் எழுத்தாளனுக்கு அதற்குள் இத்தனை அனுபவங்கள், பாதசாரியின் தலைப்பை இரவல் வாங்கினால் “மீனுக்குள் கடல்”

புண்ணில் இருந்து தெறிக்கும் புழுவைப்போல அவெருத்து ஒதுக்கும் பெரும்பாலான இந்தியத் தமிழ்மனம், ஈழப்பிரச்சனையை. அகரமுதல்வன் காட்சிப்படுத்தும் ஈழத்தமிழரின் வாழ்க்கை, நம்மையே புண்ணாகவும் புழுவாகவும் உணரவைப்பது.

கலித்தொகையின் குறிஞ்சிக் கலிப் பாடலில் கபிலர் சொன்னார்.

“செய்ததன் பயம் பற்று விடாது,
நயம் பற்று விடின் இல்லை நசை இயோர் திறத்தே” என்று. விரும்பியர் வருந்தும்படி நாம் செய்த கொடுமைக்கு மாற்றாக உதவி செய்யாமல் விட்டு விட்டால், நாம் செய்த தீங்கினால் ஏற்படும் கேடு நம்மைப் பற்றாமல் விடாது என்பது பொருள். இந்தக் கதைகள் பேசும் சம்பவங்களை எண்ணுங்கால், அச்சம் தோன்றுகிறது.

அகரமுதல்வனுக்கு ஒன்று சொல்வேன். “காலம் இருக்குது தம்பி, இன்னும் கனக்கக் கதைக்க!”




Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்