சம்பந்தரும் சமஷ்டியும் வாக்குகளும்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியிருக்கும் பிரதான தமிழ் கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு,தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவை தமது பிரச்சார நடவடிக்கையாக மற்றக் கட்சியினருக்கு துரோகி பட்டம் வழங்குவதையும் தனது கட்சியினருக்கு போராளி பட்டம் வழங்குவதையும் முன் எடுப்பது அரசியல் கேளிக்கையாகவும் மலினச் செயலாகவும் தான் பார்க்க முடிகிறது. இனப்படுகொலைக்கு உள்ளாகியிருக்கும் மக்களின் வாழ்வாதார பிரச்சனை தொடர்பாக, இளம் தலைமுறையின் எதிர்காலம் தொடர்பாக அவர்கள் எதையும் பேசியது கிடையாது. தங்களையும் தமது கட்சியையும் கடந்த கால செயற்பாடுகளின் மூலம் புனிதப்படுத்த முயலுவதில் தான் அவர்கள் கவனம் திரும்பியிருக்கிறது. 

புலிகள் இயக்கம் உருவாக்கிய கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கிற ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு மக்களின் முன்னே நிமிர்ந்து நின்று பேசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமஸ்டியை தீர்வாக முன்வைத்து இருக்கிறது. அடுத்த ஆண்டில் இந்தத் தீர்வு பெற்றுத்தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரு தேசம் ஒரு நாடு என்கிற கொள்கையை முன் வைத்து தனது பாரம்பரிய அரசியல் அடையாளத்தோடு மக்கள் முன்னே தோன்றுகிறது. களத்தில் மக்கள் எப்போதும் போல கேட்பவர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.

பொதுவாக தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான பொதுப்புத்தி பற்று அல்லது புலிகளின் அங்கீகரிப்பு போன்ற தகுதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எறியாமல் விழும் மாங்காய் என்று தான் சொல்லவேண்டும். அவர்களும் அதனை தமது பிரச்சார மேடைகளில் இயக்கத்தின் தளபதிகளின் பெயர்களையும் சிரேஸ்ட பொறுப்பாளர்களின் பெயர்களையும் சொல்லி வேட்டி கட்டி நிற்கும் வரிப்புலிகள் நாங்கள் என்கிற பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். மேடைகளில் பேசும் தோரணையிலும் எழுச்சியான சொற்களிலும் அவர்கள் வாக்குகளை எண்ணிக்கொண்டு தான் இருக்கிறார்கள். போலியான அரசியல்வாதிகளின் அத்தனை முகாந்திரங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருப்பது மக்களுக்கு தெரியாமல் இல்லை.

மற்றைய கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தத் தேர்தலில் களமிறங்கி இருப்பதானது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தளவில் அரசியல் இடர்பாடு தான். தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்து வலியுறுத்தி வரும் தமிழீழப் பிரச்சனையை சர்வேதச ரீதியிலாக முன் எடுப்ப்பு, தேசிய உரிமையை நிலை நாட்டல் போன்றவை ஒரு நீண்ட கால செயற்பாட்டின் அடிப்படையில் சாத்தியமாக்கும் தீர்மானங்கள் போன்றவை அவர்களின் விடாப்பிடியான அரசியல் நிலைப்பாடாக அமைந்திருக்கிறது என்றாலும் இவர்கள் மக்கள் மத்தியில் இத்தனை எடுத்துரைத்து இருக்கிறார்களா என்றால் அது இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

த.தே.கூட்டமைப்புக்கும் த.தே.முன்னணிக்கும் இடையிலான தெருச் சண்டையைப் போல தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் அமைந்து இருக்கிறது. தமிழீழ விடுதலைக்காக உலகம் வியக்கும் ஒரு போராட்டத்தை நிகழ்த்திய மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி ஆறு ஆண்டுகள் முடிவடைந்திருக்கும் சூழலில் மிஞ்சிப் போயிருக்கும் மக்களை முன் வைத்து நடாத்தப்படும் அரசியல் செயற்பாடுகளில் மக்கள் பிரச்சனை இரண்டாம் இடத்தில இருப்பது எவ்வளவு அரசியல் கோரம். 

மக்களை வாக்கு இயந்திரங்களாக மட்டுமே பார்க்கிற அரசியல் மீண்டும் தமிழீழ தாயகத்தில் உருவாகி விட்டது என்பதன் எதிர்வினையாகத் தான் வடமாகாண முதலமைச்சர்  தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட மாட்டேன் என பகிரங்க அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இனப்படுகொலைக்கு பின்பான கால கட்டத்தில் உருப்படியான அரசியல் முன் எடுக்கப்பட்டதென்றால் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் இனப்படுகொலைத் தீர்மானத்தை சொல்லுவது  தான் ஆறுதல் அளிக்கும். விக்கினேஸ்வரனின் தேர்தல் பிரச்சார பகிஸ்கரிப்பு குழப்பம் நிறைந்ததாக இருந்தாலும் அவர் அதற்கு அளித்த விளக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறைகளின் அந்தரங்கங்களை காட்டுவதாக அமைந்து இருக்கிறது.(பிரித்தானிய உரை)

இதன் பின்னணியில் நாம் ஒன்றை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உணர்வும் வேட்டி கட்டிய புலி வேசமும் தேர்தல் காலங்களில் மட்டும் தான் பின்னர் அது நாடாளுமன்றம் செல்லும் போது கொழும்பின் பின்னேர மழையில் கரைந்து விடும்.

சமஸ்டிக்கும், இரு தேசம் ஒரு நாடு என்கிற நிலைப்பாடுகளுக்கு இடையில் வித்தியாசங்கள் நிறைய இருக்கிறது. தேசிய இன ரீதியாக மொழியளவில் தன்னை முன் நிறுத்தும் இரு தேசம் ஒரு நாடு என்பதை விடவும் சமஸ்டி மோசமானது தான். அதிலும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் என்பது சிறப்பு இடம் பிடிக்கிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஸ்டி கேட்கிற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது பிரச்சார மேடைகளில் ஒரு தேசிய இனவிடுதலையின் மாபெரும் இயக்கத்தையும் அதன் தியாகங்களையும் சொல்லி வாக்கு கேட்கும் அநாகரீகத்தை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்தத் தேர்தலில் எமக்கு ஒரு தீர்வும் இல்லை என்றாலும் வெற்றியடைய வேண்டியவர்களின் குரல்கள் மிக அவசியமானது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழீழப் பிரச்னையை கையாளப் போவதாக சொல்லும் விதம் நம்பிக்கையானது தான் என்றாலும் அவர்கள் பேசுகிற உலக அரசியலின் தெளிவை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.சுமந்திரன் போன்றவர்களுக்கு ஊடகங்களை ஒருங்கிணைத்து பதில் சொல்லும் செயற்பாடுகளை கைவிட்டு ஒரு ஆயிரம் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களோடு கஜேந்திரகுமார் கலந்துரையாடல் ஒன்றை செய்திருக்கலாம். அது தான் ஆரோக்கியமானது. மாறி மாறி பதிலும் அறிக்கைகளும் விடுகிற தின அரசியல் சலிப்புத்தரக்கூடியது மட்டுமல்ல கரைந்து விடக்கூடிய அபாயத்தையும் ஏற்படுத்தி விடும். 

மாணவர்கள் மத்தியில் மக்கள் மத்தியில் இருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவுபடுத்துமாக இருந்தால் சுமந்திரன்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள். தமிழீழத் தாயகம் என்பது 32 வருடங்களில் பேச்சைக் குறைத்து செயற்பாட்டை முன் எடுத்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அரசியலில் பேசுவது சுலபமானது என்றாலும் செயற்படுவது தான் அசலானதும் ஆயுளானதும் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.

அரசியல் களத்தில் விருப்பங்களை விட யதார்த்தம் தான் வெற்றி கொள்கிறது. இந்தத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவு என்பது குறித்த கட்சியே எதிர்பார்க்காத அளவுக்கு இருந்தாலும் களத்தில் அவர்கள் மக்களை ஒன்று திரட்டுவதில் பலவீனமானவர்களாகவே இருக்கிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தளவில் அவர்களின் கூட்டங்களில் சேரும் மக்கள் எண்ணிக்கை அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்து கொண்டு தான் இருக்கிறது.இந்த காட்சியை வைத்துக் கொண்டு  மக்கள் கூட்டமைப்பின் கூட்டங்களை புறக்கணிக்கிறார்கள் என்று உடனடியான முடிவுக்கு வரமுடியாது. கூட்டமைப்பு பேச்சாளர்களால் பேசப்படுவதை மனப்பாடமாக சொல்லும் அளவுக்கு மக்கள் மத்தியில் அவர்கள் ஐந்தாறு ஆண்டுகள் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் ஒரு சிங்களருக்கு எதிராக வாக்கிடும் பணி தமிழர்களிடம் இல்லாமல் போயிருக்கிறது. இப்போது விரல்கள் ஒரு செறிவான பாதையை வாக்குகளால் தீர்மானிக்கப்போகிறது. யார் மக்களின் பசியில் அழுகையில் கூட நிற்கிறானோ அவனுக்குத் தான் மக்கள் வாக்களிப்பார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு வென்றால் சமஸ்டி       தமிழ் தேசிய முன்னணி வென்றால் இரு தேசம் ஒரு நாடு ஆக மொத்தத்தில் சமஷ்டியின் கடந்த கால வரலாறுகள் எமக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றங்களை தந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதன் ஊடாக தமிழ் மக்கள் சம்பந்தர்களை நிராகரிப்பது தவிர்க்க இயலாதது. வாக்களிப்பில் ஒரு மாற்றம் இருக்குமாக இருந்தால் அது ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டியை எதிர்க்கும் அளவிற்கு தான் இருக்கவேண்டும். இல்லாது போனால் இந்தத் தேர்தலும் தமிழர்களின் வாக்குகளும் கடலில் போடப்பட்ட இன்னொரு பெருங்காயம் தான்.      

Comments

Post a Comment

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்