சிங்கள நீதி எமக்கு வேண்டாம்,சர்வதேச நீதியே எமக்கு வேண்டும்.


ஜனவரி 8ஆம் தேதி புரட்சி என்றும் அதனைப் பாதுகாக்குமாறும் மக்களிடம்
தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியாலும் சிறிசேனாவாலும் தமிழ்த் தேசிய
கூட்டமைப்பாலும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

ஜனவரி 8ஆம் தேதி புரட்சி என்பது ஈழத்தமிழர்களின் வாக்குக்களினால்
ஏற்படுத்தப்பட்ட புரட்சியாகும். இராஜபக்ஷாவை ஆட்சியில் இருந்து அகற்றிய
புரட்சியாகும். ராஜபக்ச தலைமையில் சிங்கள அரசு புரிந்த
இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் மக்களின் வாக்குக்களால் உருவான
புரட்சியாகும்.

பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் அளிக்கக்கூடிய வாக்குக்களால் ராஜபக்ச
அரசாங்கம் அமைக்க முடியாத நிலை உருவாகும் என்ற உளவியல் பின்னணியில ;
தான் தேர்தலே நிகழ்ந்தது. இந்த பின்னணியில்தான் பொதுத் தேர்தலில்
ராஜபக்ச  பெரும்பான்மை பெறமுடியாது தோல்வி அடைந்தார். அத்துடன் தமிழ்
மக்களின் வாக்குக்களால்  ராஜபக்சவிற்கு  பெரும்பான்மை கிடைக்காத
நிலையில் தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆசனங்களைக் கொண்டு ரணில்
அரசாங்கம் அமைத்திட முடியும் என்ற நிலையிற்தான் இராஜபக்ஷ விலகிச்
செல்லவும் ஐ.தே.கவுடன் சிறிசேன தேசிய அரசாங்கம் அமைக்கவும் முடிந்தது.
எனவே இன்றைய புதிய அரசாங்கம் அமைவதற்கு தமிழ் மக்கள் அளித்த
வாக்குககளே அடிப்படை காரணமாகும்.

சர்வதேச விசாரணை கோரி ஏற்கனவே வடமாகாணசபை ஒருமனதாக தீர்மானம்
நிறைவேற்றி உள்ளதையும் பொதுத் தேர்தலின் போது சர்வதேச விசாரணைதான்
தமது நிலைப்பாடு என்று தேர்தல் வாக்குறுதி அளித்ததையும் கருத்தில் கொண்டு
தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவது மூலம் தமது சாத்வீக போராட்டத்தை
ஆரம்பிக்க வேண்டும். கூடவே வடமாகாண சபையும் தமது பதவியில் இருந்து
விலகிச் செல்வதன் மூலம்  தமது எதிர்ப்பை முன்வைக்க வேண்டும்.

3000 அமெரிக்கர்கள் பின்லேடனால் கொல்லப்பட்டதற்காக ஆப்கானிஸ்தான் மீது
ஒரு பெரும் போரை தொடுத்த அமெரிக்கா ஆப்கானிஸ்தான் அரசை
நிர்மூலமாக்கிய பின்பு இறுதியில பாகிஸ்தானுக்குள் அதன் வான் தரை
இறைமைகளை மீறி உள் நுழைந்து பில்லேடனை வேட்டையாடியது.
அவ்வாறு வேட்டையாடியதும் Justice has been done என்று அமெரிக்க ஜனாதிபதி
ஒபாமா அதை பெருமையுடன் உலகிற்கு அறிவித்தார்.

ஓபாமா பதவிக்கு வந்து ஆறு மாதத்திற்குள்  உலகப் பேரரசான அமெரிக்காவின்
கண்முன் ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் சிங்கள
இராணுத்தால் படுகொலை செய்யப்பட்டனர். 2008ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் ஜனநாயக கட்சிக்கும ஒபாமாவுக்கும் நம்பிக்கையுடன் பேராதரவு அளித்தனர்.

ஒபாமா நிர்வாகத்திடம் இருந்து தமிழ் மக்கள் நீதியை எதிர்ப்பார்தனர்.  ஆனால் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் படுகொலை  செய்யப்படுவதை ஒபாமா நிர்வாகம் தடுத்து நிறுத்த தவறியது.  இதன் பின்பு நீதியின் பெயரால் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை  அமெரிக்கா ஐநா சபையில் முன் வைத்தது. தமிழ் மக்கள் அமெரிக்காவையும் ஒபாமா நிர்வாகத்தையும் நம்பினர்.

இப்பின்னணியில் அமெரிக்கா முன்வைத்த ஆட்சிமாற்ற கோரிக்கைக்காக
சிறிசேனாவுக்கும் ரணிலுக்கும் வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர்.
ரணிலும் சிறசேனாவும் இனப்படுகொலை சிங்கள அரசின் தலைவர்கள்தான்.
ஆனாலும் அமெரிக்காவை நம்பியே தமிழ்மக்கள் தேர்தலில் பங்கெடுத்தனர்.
இப்போது தனக்கு சாதகமான சீன எதிர்ப்பு ரணில் விக்ரமசிங்க பதவியில்
இருக்கும் நிலையில் அமெரிக்கா ரணிலைப் பாதுகாப்பதற்காக தமிழ் மக்களின்
முதுகில் குத்திவிட்டது. கொல்லப்பட்ட 3000 அமெரிக்கர்களுக்காக பில்லேடனை
வேட்டையாடிய அமெரிக்கா,ஆப்கான் அரசை நிர்மூலமாக்கிய அமெரிக்கா உலகப்
பேரரசாக ஜனநாயகத்தின் பிறப்பிடமாக , நீதியின் காவலனாக தன்னை
பிரகடனப்படுத்தும் அமெரிக்கா ஈழத்தமிழ் விடயத்தில் நீதியின் பெயரால் சர்வதேச
விசாரணையை மட்டுமே முன்வைக்க வேண்டும் இதுவே தமிழ் மக்களிடம்
தேர்தலுக்கு முன் அமெரிக்காவின் வாக்குறுதியாக இருந்தது. இதன்
அடிப்படையிற்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் வாக்குறுதியை
முன்வைத்தது.

எனவே ஜனநாயக வழியில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வடக்கு-கிழக்கு மகாணசபைகளுக்கான பதவிகளில்
இருந்தும் நாடாளுமன்ற பதவிகளில் இருந்தும் விலகிக் கொள்ள வேண்டும்.
சர்வதேச விசாரணை கோரி ஜனநாயக வழியிலும் சாத்வீக வழியிலும் தமிழ்த்
தேசிய கூட்டமைப்பு போராடவேண்டும். இதற்காக அனைத்து பொதுமக்களும் தமிழ்த் தேசிய முன்னணியும் களத்தில் இறங்கி போராட வேண்டும்.

தேர்தலோடு அரசியல் முடிவடைந்து விடுவதில்லை
என்பதை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதுதான் போராட்டம்
அல்ல என்பதை கருத்தில் கொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தன் தேர்தல்
கால கோரிக்கையின் அடிப்படையிற் சர்வதேச விசாரணை கோரி நேரடி சாத்வீக
போராட்டத்தில் ஈடுபடவேண்டும். இரு பிரதான தமிழ் கட்சிகளும் மேற்படி சர்வதேச
விசாரணை என்ற ஒரே கோரிக்கையை முன்வைத்தனர் என்ற உண்மையை
கருத்தில் கொண்டு இருபிரிவினரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.

இலங்கை சுதந்திரம் அடைந்திலிருந்து இன்றுவரை அதாவது 65 ஆண்டுகளுக்கும்
மேலாக தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைகளைப் புரிந்து
வந்த இருபெரும் சிங்கள கட்சிகளின் அரசாங்கங்களையும் தமிழ் மக்கள்
ஒருபோதும் நம்பமாட்டார்கள். இதுவிடயத்தில் இருசிங்கள கட்சிகளின்
அரசாங்கங்களும் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதி மற்றும் நிவாரணம ;
வழங்கியது கிடையாது. தற்போது சர்வதேச விசாரணையில் இருந்து சிங்கள
அரசை பாதுகாப்பதற்காகத்தான் ரணில் விக்ரமசிங்க உள்நாட்டு விசாரணை என்ற
நாடகம் ஆடுகிறாரே தவிர அவரோ அவரது கட்சியோ ஒருபோதும் நீதியை
நிலைநாட்டியது கிடையாது. சிங்கள நீதி எமக்கு வேண்டாம். சர்வதேச நீதியே
எமக்கு வேண்டும். தமிழ் மக்களை வகைதொகை இன்றி இனப்படுகொலை புரிந்த
இராணுவத் தளபதி பொன்சேகாவுக்கு ஃபீல்டு மார்ஷல் பட்டம் வழங்கி பாராட்டிய
ரணில் விக்ரமசிங்கசிறிசேன அரசாங்கத்திடம் இருந்து எவ்வாறு நீதியை
எதிர்ப்பார்க்க முடியும். சிங்களத் தலைவர்கள் அனைவரும  கட்சிவேறுபாடின்றி
இனப்படுகொலையாளர்கள்தான்.




Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்