நாடாளுமன்ற தேர்தலில் தமிழீழர்களின் வாக்குகளும் விமோசனமும்

தமிழீழர்களின் கடந்த கால வரலாறும் நிகழ்கால வாழ்வும் அரசியலால் தான் விதிக்கப்பட்டிருக்கிறது. இனப்பிரச்சனையும் விடுதலைப் போராட்டமும் இனப்படுகொலையும் என்ற மூன்று சக்கரங்களுக்குள் சுழன்றபடியிருக்கும் மக்களின் துயரம் அந்நிய நாடுகளினதும் வல்லரசுகளினதும் நோக்கு நிலையில் இருந்து தமிழ் கட்சிகளால் கையாளப்படுவது தான் அதி சோகம். 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பின்பான தற்காலத்தில் தாயகத்தில் உள்ள மக்களிற்கான அரசியல் கட்சியாக தம்மை முதன்மைப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களின் நோக்கு நிலையில் இருந்து செயற்பட்டிருந்தால் நடந்து முடிந்த சனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கு ஆதரவான ஒரு முடிவை எடுத்திருந்திருக்க முடியாது. தேர்தலை பகிஸ்கரிப்பு செய்யாவிடினும் ஆதரவு என்ற நிலைப்பாட்டிற்கு போயிருக்கவேண்டிய தேவை மக்களின் நோக்கு நிலையில் இருந்து முடிவு செய்யப்பட்ட ஒன்று அல்ல. 

பொதுப்புத்தியில் இவ்வளவு மக்களைக் கொன்றொழித்த மகிந்தவை தோற்கடிக்கவேண்டும் என்ற உணர்வு மேலோங்கி இருந்தாலும் அது அரசியல் ரீதியாக ராஜதந்திர ரீதியாக மிகத் தவறானது. 

சர்வதேச ரீதியான பிரச்சனையின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழீழர்களின் பிரச்சனையை தமக்கு லாபமாக கையாளும் வெளிநாடுகளின் உத்திகளை புரிந்துகொண்டால் மட்டுமே பாதிக்கப்பட்ட ஒரு தேசிய இனத்திற்கு விமோசனம் அளிக்கும் வகையில் அரசியலை கொண்டு நடத்தலாம். ஆனால் நடப்பது வேறாக இருக்கிறது.

மைத்திரியை வெற்றிகொள்ளச் செய்த தமிழ் மக்களின்  வாக்குகள் அவர்களின் விமோசனத்துக்கு உதவாமல் இருந்ததை விட இன்னும் அதலபாதளத்திற்குள் அவர்களையே கொண்டு சேர்த்துவிட்டது. சிங்கள இனவாத ராஜதந்திரத்தின் மாபெரும் வெற்றிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உழைத்தது என்றால் மிகையில்லை. யாரை நாம் தோற்கடிக்க வேண்டும் என்பதை விட யாரை வெற்றி கொள்ளச் செய்ய வேண்டும் என்ற இக்கட்டான அரசியல் நுட்பத்தின் அச்சாணியில் தமிழீழர்களின் அரசியல் சுற்றிக்கொண்டிருப்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

மைத்திரி அரசு பதவிக்கு வந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே தமிழீழ இனப்படுகொலைக்கு படைத்தளபதியாக இருந்த சரத்பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பட்டத்தை வழங்கி கவுரவித்தது. அந்நிய நாட்டிற்கு எதிரான யுத்தத்தை வென்ற ஒருவருக்கு வழங்கும் இந்த பட்டத்தை ஒரே மக்கள் ஒரே தேசம் என சொல்லும் சிங்கள அதிகாரம் வழங்கியதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறு கண்டனத்தைக் கூட தெரிவிக்கவில்லை.

கட்சிகளும் ஆட்சிகளும் மாற்றம் அடைந்தாலும் சிங்கள இனமானது தமிழர்கள் மேல் மாபெரும் பகைமனப்பாங்கை கொண்டுள்ளமை இதன் வழியாக மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. போர்குற்றம் குறித்த சுதந்திர விசாரணைக்கு அனுமதி மறுக்கப்பட்டது, மார்ச் மாதம் மனித ஐ.நாவின் மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்படவிருந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஒத்திவைத்தமை போன்ற செயற்பாடுகள் யாவும் இன்றைய அரசியலில் தமிழர்களுக்கு எதிரானது அன்று வேறொன்றுமில்லை. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஒத்திவைத்த நிகழ்வுக்கு அரசாங்கத்தை விட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன் நின்றது அவமானகரமானது.

இப்போது களத்தில் சூடு பிடித்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் களமிறங்கியிருக்கிறது. இரு கட்சிகளும் மக்களுக்கான தீர்வாக சொல்லியிருப்பவை ஒன்றும் புதிய சிந்தனையில் தோன்றியது கிடையாது. எல்லாமே பேசப்பட்டு கேட்கப்பட்டு சிங்கள ஆட்சிகளால் நிரகாரிக்கப்பட்டவை என்பது மக்களுக்கு நினைவிலுண்டு. வரலாற்றுக்கு தன்னியல்பில் மறக்கும் பண்பு கிடையாது அது மீண்டும் மீண்டும் தன்னை மக்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். இப்போது வரலாற்றின் தொடக்கத்தில் இருந்து பயணிக்கவேண்டியவர்களாக தமிழீழ மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.


எமது இனப்பிரச்சினைக்கான தீர்வாக, ஒன்று பட்ட இலங்கைக்குள்ளே எம்மை நாமே ஆளக்கூடிய சமஷ்டி அரசியல் அமைப்பு முறையிலான அரசியல் தீர்வை 2016 ஆம் ஆண்டளவில் பெற்றுக்கொள்ள முடியும்என்று கூறியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கருத்தானது மிகவும் அபத்தம் நிறைந்த கூற்று என்றாலும் தமிழர்களுக்கான சமஷ்டியை சிங்கள தேசம் ஏற்றுக்கொள்ளாது என்பது நிதர்சனம். ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருந்து கொண்டு எம்மை நாமே ஆளும் சமஸ்டியை அவர் எப்படி எதிர்பார்க்கிறார் என்கிற எளிய கேள்விக்கு அவரிடம் பதில் இருக்குமா? 

இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்னரே சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஈழத் தமிழர்கள் பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் சுயநிர்ணய உரிமையை கொண்டவர்கள்என்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தைக் கொண்டு வந்த காலத்தில் தமிழ் தலைவர்கள் கூட தனி நாடு கோராமல் தான் இருந்தார்கள். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இந்தக் காலத்தில் தானே உதயமானது.

அதில் ஜி,ஜி பொன்னம்பலம் தலைவராக இருந்தார் என்றால் உறுப்பினராக தந்தை செல்வாவும் இருந்தார். இதன் ஊடாக தனி நாட்டுக் கோரிக்கையை முதலில் வலியுறுத்தியது சிங்களர்கள் தான் ஒழிய தமிழர்கள் அல்ல. தமிழர்களுக்கு சமஸ்டி முறை அரசாங்கம் வேண்டுமென்று 1962ல் எஸ்.டபிள்யூ பண்டாரநாயக்கா தான் தெரிவித்தாரே அன்றி தமிழ்த் தலைவர்கள் அல்ல.  

 ஆனால் இந்தக் கருத்துக்களுக்கு எதிர்மாறாகத் தான் தமிழர்கள் நடாத்தப்பட்டார்கள். வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழீழம் தான் ஒரே தீர்வு என்று கொண்டு வருமளவுக்கு அடக்குமுறையும் இனவாதமும் தமிழ் மக்களை காவு வாங்கியதை சம்பந்தன் அறியாதவரல்ல. சிங்கள கூட்டு மனப்பான்மை தமிழர்களுக்கு எதிரானதாக பலம் பெற்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இந்த நூற்றாண்டையே உலுக்கியிருக்கும் சூழலில் ஒன்று பட்ட இலங்கைக்குள் சமஸ்டியை கேட்குமளவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களிற்கு விரோதமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. 

எம்மைக் கொன்றவர்களின் கொடியையும் கொடி வணக்கப் பாடலையும் அவர்களின் தேசத்தையும் மக்கள் அங்கீகாரம் செய்யவேண்டும் என சம்பந்தன் எதிர்பார்க்கிறாரோ தெரியவில்லை. புலிகளால் நிராகரிக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஆனந்தசங்கரியும் அரசியலில் இருந்து மக்களால் தூக்கியெறியப்பட்டதைப் போன்று இவர்களும் மக்களால் தூக்கி எறியப்படவேண்டும்.  


இந்தத் தேர்லில் மற்றைய கட்சியான தமிழ் தேசிய முன்னணி தனது தேர்தல் அறிக்கையில் தமிழர்களுக்கான தனித் தேசம் என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியுள்ளது. இது நேரடியாக தமிழீழத்திற்கான மக்கள் ஆணையைக் கோருகிற அளவுக்கு இல்லாவிடினும் சமஸ்டியை விட மேலானது தான். இந்தத் தேர்தலில் மக்களின் வாக்குகள் அரசியல் ஆதிக்கம் செலுத்தும்படியாக மாறப்போகிறது.


சிறிலங்காவின் ஆட்சியாளர்களின் எடுத்த எடுப்புக்கெல்லாம் ஆடும் ஒரு கட்சியாக புலிகள் வடிவமைத்த அரசியல் கட்சி மாறியிருப்பது கவலைக்குரியது. புலிகள் அமைப்பு இராணுவ ரீதியாக வீழ்ச்சி அடைந்ததன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்த நிலைப்பாடுகளும் அந்த அமைப்பிலுள்ள தனி நபர்களின் அரசியல் செயற்பாடுகளும் மக்களுக்கு துயரம் தருவனவாகவே அமைந்திருக்கிறது.


அரசியலை யதார்த்தத்தோடு ஒப்பு நோக்கும், சர்வதேச கண்ணோட்டத்தோடு கையாளும் அளவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பால் ஈடு கொடுக்கக் முடியவில்லை. 1997ம் ஆண்டுகளில் மேடைகளில் முழங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி போலவே இனப்படுகொலைக்கு பின்பான இன்றைய காலத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேடையில் முழங்கிக்கொண்டிருக்கிறது.


இருபது ஆசனங்கள் வெறுமென நாடாளுமன்றத்தை நிரப்பும் ஆசனங்களாக மாறிவிடக்கூடாது. கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி எமது வாக்குகளை வாங்கிக் கொண்டு நூறு நாட்கள் என்கிற அறிவிப்பில் தாம் ஏமாற்றப்பட்டதை மக்களாகிய நாம் மறந்துவிடக் கூடாது.

தமிழ் மக்களின் விமோசனதுக்கும் தீர்வுக்கும் இந்தத் தேர்தலில் எதுமில்லை என்றாலும் இந்தத் தேர்தலில் ஒரு விமோசனத்தை மக்கள் அடைய முடியும்.அது மக்களின் வாக்களிப்பில் இருந்து தான்  தொடங்கப்படும்.

இத்தகையதொரு பின்னணியில் இந்தத் தேர்தலில் நாம் செலுத்தும் வாக்குகள் கண்டிப்பாக மக்களை  தவறாக வழிநடத்துபவர்களுக்கு அமைவாக இருந்துவிடக் கூடாது. வாக்களிப்பது ஜனநாயக முறை என்றாலும் ஒவ்வொரு வாக்கும் ஆயுதம் என்பதை தமிழீழ மக்கள் உணர்ந்து செயற்படவேண்டும்.
  


Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்