தீயெனப் பெய்யும் இரத்தக் குறிப்புகளில் கருகும் வாசக இமைகள் - கணேசகுமாரன்



இப்பொழுது கவிதைகளை வாசிப்பதை நிறுத்திவிட்டு அனைவரும் படுகொலைகள் குறித்துக் கவலைப்படுவோம். வலி உணர்த்தியாய் செயல்படும் அகரமுதல்வனின் கவிதைகளை நாம் எந்த அளவுக்கு உள்வாங்கிக் கொள்ளப்போகிறோம். வெறும் பார்வையாளராய் இருந்து நாம் உணர்ந்த வலி பங்கு கொண்டவனின் வலியில் அணுவளவு கூட இருக்காது என்னும்போது நாம் கவிதைகளை வாசிப்பதை நிறுத்திவிட்டு படுகொலைகள் குறித்து கவலைப்படுவோம். நம்மால் முடிந்தது அது மட்டுமே. இன்னொன்றும் செய்யலாம். பரவலாக விதைக்கப்பட்ட அகரமுதல்வனின் துக்கத்தின் அடியாழத்திலிருந்து அவன் கையைப் பற்றிக்கொள்ளுதல் மட்டுமே.

கண்களற்றவனுக்கு நல்ல பிரம்பும் நாடற்றவனுக்கு நல்ல துவக்கும் முக்கியம். இல்லையென்றானபின் இவன் கொலை செய்யப்பட்டான். முதலில் நிர்வாணப்படுத்துதலில்...பின் ஆசன வாயிலில் கம்பிகள் நுழைத்து...பின் வாயில் சிறுநீர் கழித்து...இறுதியில் அவன் விடுதலை செய்யப்பட்டான். ஆனால் பிழைக்கவில்லை. சமூகத்தில் பலரும் பலவிதத்தில் கொலை செய்யப்படுகிறார்கள். அதிலும் கவிஞர்கள் கொலை செய்யப்பட காரணமே தேவையில்லை. தொகுப்பு முழுவதும் அகரமுதல்வன் கொலை செய்யப்படும் விதங்கள் எவ்விதத்திலும் கற்பனை செய்து பார்க்க முடியாத கொடூரம் கொண்டவை.

உடம்பின் சகல துவாரங்களிலிருந்தும் உள் நுழைந்து வெளியேறுகிறது கொலை செய்யும் கூர்மைக்கருவிகள். கடவுளால் கைவிடப்பட்ட தேசத்து மக்களுக்கு நவதுவாரங்கள் தேவையில்லை. கருணைகொண்டு ஒற்றை துவாரத்தோடு நிறுத்தியிருக்கலாம். உயிர் போகும் வழி ஒன்றாயிருக்கட்டுமே...கொலைப்படுகளத்தில் இருக்கும் கையறு மனநிலைக்காரனின் சலிப்புற்ற மனம் என்ன எண்ணும். அகரமுதல்வன் கூறுகிறான். '' கோபமூட்டும் அல்லது வருத்தப்படுமளவுக்கு குளறுபடிகளோடு சலிப்பூட்டியது மனிதம்''. என்ன செய்ய முடியும் நண்பா. இவ்வுலகின் கடைசி மனிதனும் உன்னைக் கைவிடும்போது எனது கண்களின் கடலில் ஒதுங்கிய கரை நீ.

ஞாபகங்கள் பெரும் சாபம். // விநோத சித்திரவதைகளையும் வலிகளையும் தாழ்ப்பாளிட்டு மூடிக்கொள்ளும் அகதியின் ஆன்மாவென தனித்திருக்க அனுமதியுங்கள்// கெஞ்சுகிறான் கவிஞன்.
தனித்திருக்கவிட்டு நகர்ந்தால் விரையும் வெள்ளை சாரட்டு வண்டிகளால் கிழிக்கப்பட்ட பிரபஞ்ச சருமத்தில் தையலிடுகிறது தனிமை. இதற்காகவா நீ தனிமை வேண்டினாய். வலி...வலி...வலி யென வரிகள் கடக்க வாசிப்பவன் தீண்டும் கண்ணிவெடிகளுக்கு நடுவே சாரலாய் தழுவுகிறது

// நீ படைத்த எனது கடலில் ஒரு சூனிய வெளியில் மாயமாகும் தனித்த பிரக்ஞை என்னை மூடிக்கொள்ள மீட்கும் கடவுளென உன் முத்தம்// மறுதலிக்கப்பட்ட முத்தத்துக்கு நடுவில் ஒரு முத்தமே கடவுளாகிறது.
அகரமுதல்வனின் கன்னத்திலும் அதுவே என் அடையாளமாகிறது. அவனின் கூற்றுப்படியே இது அரங்கேறுகிறது. //காதலின் ரேகைகள் உதடுகளில் புலம் பெயர முத்த நிவாரணங்கள் கேட்கிறது யாருமற்ற அகதியின் கவிதை//.

இனி என் முறையென தயாராகி கொலைக்களத்தில் நிற்கும் ஒருவனின் குருதிக் கவிச்சிக்காற்றில் நாம் மலரின் நறுமணத்தை நாட முடியாது. ஆறுதல் கூற முடியாவிட்டாலும் துக்கத்தைக் கிளறாமல் இருக்கலாமல்லவா...
ஆனாலும் உன் நசிந்த ஆயிரம் கனாக்களில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். லோஜி இளவரசியை மீண்டும் பார்த்தாயா நீ?

Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்