கடந்தகாலங்களில் தான் வாழ்ந்திருக்கிறேன் - கவிஞர் யுகபாரதி


நேர்கண்டவர் -அகரமுதல்வன் 

நகரம் பட்டினி போட்ட உங்கள் கடந்தகாலத்தினை நடைவண்டி நாட்கள்எனும் புத்தகத்தின் மூலம் அறியமுடிந்தது. அதுமட்டும்மல்ல கிராமத்திலிருந்து வந்தவர்களை நகரம் பழிவாங்கிய காட்சியாக எனக்குப்பட்டது. வாழ்க்கையின் அலைக்கழிப்பில் இருந்து தத்துவங்கள் தோன்றுவதாக நம்புகிறீர்களா?

வாழ்க்கை என்பதே அனுபவங்களின் தொகுப்பு என்பதை நம்புகிறேன். அனுபவம் என்றாலே நல்ல அனுபவம், கெட்ட அனுபவம் என இருக்கும். நாம் வைத்திருக்க கூடிய லட்சியங்களுக்கு எதிர்மாறாக சம்பவங்கள்  நிகழ்ந்தால் அது கெட்டஅனுபவம். ஆனால் நல்லஅனுபவங்களை நோக்கி நாம் நகர்வதற்கே கெட்டஅனுபவங்களே தேவையுமாக இருக்கிறது.  வாழ்வின் தார்ப்பரியம் இது தான் என்பதை புரிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். அப்போது அதனை புரிந்துகொண்டேயாகவேண்டும். அது தத்துவத்தை தருகிறதா? இல்லையா? என்பது அவசியமற்றது. ஆனால் அனுபவங்கள் சுவாரஸ்யம் நிறைந்தவையாகவே இருக்கிறது. கிராமத்தில் இருந்து நகரம் நோக்கி வருகிற பொழுது எந்தப் பின்னணியும் இருக்கவில்லை. அதுமட்டுமல்ல தங்குவதற்கு இடமும் உண்பதற்கு  உணவும் பேசுவதற்கு நண்பர்களும் இல்லாமல் நகரத்தில் அலைந்தேன். இந்த மூன்றும் இப்போது கிடைத்துவிட்டது அதற்கு முன்னாள் அனுபவங்களே காரணம். நடைவண்டி நாட்களை நான் எழுதுவதற்கு முன் எனது ஒப்பாரிகளை நான் எழுதிவிடக்கூடாது என தீர்மானித்தேன். தத்துவங்களும் தத்துவ விசாரணைகளும் அதிலிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.



கண்ணதாசனின் வனவாசத்தை நான் படித்திருக்கிறேன். அந்தச் சாயல் கூட நடைவண்டி நாட்களில் இருக்கிறது. கண்ணதாசனுக்கு வனவாசம் போல உங்கள் வாழ்வின் சிறுதுண்டாய் நடைவண்டி நாட்களை எடுத்துக்கொள்ளலாமா?

இல்லை.அப்படிச் சொல்லவே முடியாது. கண்ணதாசனிடம் இருந்த அனுபவங்கள் பரந்துபட்டவை. வனவாசத்தில் முழுக்க முழுக்க இரண்டு மனிதர்களுக்கான அரசியல் சொல்லப்பட்டிருந்தாலும் அது நாற்பது ஆண்டுகால அரசியலை பதிந்திருக்கிறது.             எனது புத்தகத்தில் அப்படியான அரசியல் அனுபவங்களை கறாராகவே நீக்கியிருந்தேன். கண்ணதாசனின் உயர்வான புத்தகமாக வனவாசத்தை நான் கருதுகிறேன். ஒரு மனிதன் தன்னுடைய அழுக்குகளை எல்லாம் சொல்லிவிடும் சந்தர்ப்பத்தை ஒரு புத்தகத்தில் ஏற்படுத்தியிருக்கிறார். ஆனால் எந்த இடத்திலும் நான் செய்த தவறுகளையும் துரோகங்களையும் நடைவண்டி நாட்களில் பதிவுசெய்யவில்லையே!

வனவாசத்தின் கூறுகள் உங்கள் நூலில் இருக்கிறது தானே?


நீங்கள் சொல்வது ஓரளவு சரி. வனவாசத்தின் கூறுகள் ஒரு பகுதியாய்  இருக்கிறது.ஒரு மனிதன் தன்னை வெகுஜன மனிதனாக நிலைநிறுத்திக் கொள்வதற்கான தேடல்கள் எனது புத்தகத்திலும் இருக்கிறது. நான் எனது தகிடுதத்தங்களை எல்லாம் இந்த நூலில் சொல்லவில்லை. வனவாசம் போல் எழுதுவதற்கான சூழலும் அனுபவங்களும் எனக்கில்லை. ஏனெனில் அப்போதிருந்த  அரசியல் களம் இப்போதில்லை.



பிரேம்குமாரிலிருந்து யுகபாரதி மனப்பத்தாயத்திலிருந்து முனியாண்டி விலாஸ் இதுவொரு மலைப்பான கவிதைப் பயணம். உங்கள் ஒவ்வொரு கவிதைத் தொகுப்புக்கும் ஒரு தனித்தமொழி தோன்றி விடுகிறதே, எப்படி?

நான் மொழியின் தீவிரமான காதலன் இல்லை. மொழியால் வசீகரித்துவிடவேண்டும்  என்றோ தனித்துவமாய் வகைப்படுத்திவிட வேண்டுமென்றோ நான் எந்தக்காலத்திலும் ஆட்படவில்லை. அதன் காரணம் வேறொன்றுமில்லை. எனது கவிதைகள் உலகப்பொதுத்தன்மை வாய்ந்த விசயங்களை நோக்கி பயணிக்கவேயில்லை.                    அதற்கு மாறாக வட்டார அடையாளங்களை கொண்டு இருக்கின்றது. என்னுடைய முதல் தொகுப்பான  மனப்பத்தாயம், பஞ்சாரம், நொண்டிக்காவடி,தெப்பக்கட்டை என இவையாவுமே வட்டாரத்தன்மையிலானவை. இங்கு என்னுடைய தாய் மொழி உயர்ந்தது என்பதை உணர்ந்தேனே தவிர கவிதை மொழியை தனித்தன்மையாக கையாளவேண்டும் என்கிற கவனத்தை நான் ஆரம்பகாலங்களில் இருந்து கொள்ளவேயில்லை.                      அதன் விபரீதம் எனது கவிதை இயக்கத்தில் தேக்கத்தைக் கொண்டுவந்தது. ஆனாலும் தொடர்ச்சியான வாசிப்புக்கள், உட்பொருட்களின் புதிய தேர்வுகளின் மூலம் அவற்றை தாண்டியிருக்கிறேன். முனியாண்டி விலாஸ்க்கு பின்னர் வெளிவரவிருக்கும் அடுத்த தொகுப்பை வாசித்துப்பார்க்கையில் நான் மீண்டும் தொடக்ககாலத்திற்கு சென்று விட்டதாக உணர்கிறேன். உலகத்தன்மையான கவிதைகள் மீது எனக்கு உடன்பாடு கிடையாது. ஏனென்றால் பொதுஅடையாளத்திற்கு வரக்கூடிய ஒரு மனிதன்  சுயத்தை இழக்கிறான் என்பது எனது கருத்து. ஒரு கவிதையோ படைப்பாளியோ  சுயத்தை இழந்துவிடக்கூடாது. அந்த வகையில் இனி வரவிருக்கும் தொகுப்பில் நான் மொழிக்குள் இருக்கும் அரசியலை மிகத் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன்.


நீங்கள் சென்னையில் பட்டினியாகக்கிடந்த அம்பேத்கர் மாணவர் விடுதி, அதன் கீழே உள்ள ராகவேந்திரா கலியாண மண்டபம். பட்டினியாக இருந்த காலங்களில் அந்த மண்டபத்தில் இருந்து ஒலிக்கும் மயக்கமா கலக்கமாபாடல். இப்போது பாடலாசிரியனாய் மகிழூந்தில் அந்த வழியாக போகிற போது அந்தப் பாடல் கேட்கிறதா? யுகபாரதியின் பாடல் கேட்கிறதா?

அதுவொரு அற்புதமான அனுபவம். அதனை நினைவுவைத்து நீங்கள் கேட்பதே மகிழ்ச்சியளிக்கிறது. ரொம்ப ஆச்சரியமாகவும் இருக்கிறது. எனது பெற்றோரின் திருமணத்திற்கு பிறகு அப்பா ஒரு வானொலியை அம்மாவுக்கு பரிசளித்திருக்கிறார்.       அப்பா வேலைக்கு சென்றால் வீட்டில் தனிய இருக்கிற அம்மா வானொலியில் பாடல்கள் கேட்பாளாம். அப்பாவுக்கும் அது சந்தோசத்தை தந்திருக்கிறது. ஆனால் அப்பாவின் தாயாருக்கு அதுபிடிக்கவில்லை. இது குடும்பம் நடத்தும் வீடா? கூத்தியா வீடா என்று வானொலியை எடுத்து உடைத்திருக்கிறார். இந்தக் கதையை அழுதழுது சொன்ன அம்மாவின் கண்ணீர் எனக்கு நினைவிருக்கிறது. இற்றைக்கு 25ஆண்டுகள் கழித்து அந்தவானொலியில் வரக்கூடிய பாடல் எனது பாடலாக இருக்கிறது. வீட்டில் பாடல் கேட்கமுடியாத தாய் தனது மகனை பாடலாசிரியனாய் ஆக்கியிருக்கிறாள். நான் ஆச்சரியப்படுகிறேன். அது போல தான் அம்பேத்கர் விடுதியும் ராகவேந்திரா கலியாண மண்டபமும் கடக்கிற போதெல்லாம் கண்கள் கலங்கும். அந்த அழுகை நின்றுபோனால் நான் பாட்டு எழுதுவதை நிறுத்திவிடுவேன்.

அம்பேத்கர் மாணவர் விடுதியில் நீங்கள் தங்கியிருக்கிற போது நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திர கலியாண மண்டபம் என்று உரையாடும் காலம். பின்னர் ரஜினிகாந்த்தின் படத்திற்கே பாடல் எழுதியது. அந்தத் தருணம் உங்கள் எண்ணம் எப்படியிருந்தது?


தமிழ்த் திரையுலகின் உச்சபட்சமான எல்லை ரஜினிகாந்துக்கு பாட்டு எழுதுவதாக நம்பப்படுகிறது. அதுமட்டுமல்ல அவருக்கு பாடல் எழுதினால் தான் பாடலாசிரியராகவே அங்கீகரிக்கப்படுவீர்கள் எனும் சூழல் இன்றுவரை நிலவுகிறது. சந்திரமுகிப் பாடல் வாய்ப்பை நேரடியாக ரஜினியோ, பி.வாசுவோ அழைத்து தரவில்லை. நான் வாழ்வில் மறக்கவேகூடாத பெயர்களில் ஒரு பெயர் வித்யாசாகர். எனது வாழ்வில் அவர் ஒரு சகோதரன் அல்லது தந்தைக்கு நிகரானவர்.அவரை நான் போற்றுகிறேன். எனது வீட்டில் மிகப்பெரும் இசைஞானிகளின் புகைப்படங்களை வைத்திருக்கவில்லை. வித்யாசாகரின் புகைப்படத்தைத் தான் வைத்திருக்கிறேன். “காதல் பிசாசே என்கிற பாடலுக்கு பின்னர் எனக்கு வந்த நூறுபாடல்களையும் அவரே வழங்கியிருந்தார். சந்திரமுகி படத்திற்கு அவர் ஒப்பந்தமாகி அமைத்த முதல் மெட்டை எனக்கு வழங்கி நீ தான் எழுதவேண்டும் என்று சொன்னவர் வித்யாசாகர். ஆக அந்தப் பெருமைகள் யாவும் அவரைத்தான் சேரும்.


சென்னையின் மேன்ஷன் வாழ்க்கை தொடர்பாய் உங்களால் ஒரு நாவலே எழுதமுடியும் என்று நினைக்கிறேன். இப்படியான வாழ்க்கை தெரிந்திருந்தால் தான் வாழ்வதற்கும் வசிப்பதற்குமான வேறுபாட்டை அறிந்துகொள்ள முடியுமென உங்கள் நூலில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். சொல்லுங்கள் வசிப்பதற்கும் வாழ்வதற்கும் வேறுபாடு என்ன?

இப்போது வசிக்கிறேன். கடந்தகாலங்களில் தான் வாழ்ந்திருக்கிறேன். வாழ்க்கை எதுவென்று புரியாதபோது இருக்கும் அற்புதமான தருணங்கள் இனிமேலும் வாய்க்காது. இப்போது நினைத்தால் ஒரு பொருளை வாங்கிவிட முடிகிறது. நினைத்தால் எங்கேயும் போய்விடமுடிகிறது. நினைத்தால் ஒருவரோடு தொடர்பு கொள்ளமுடிகிறது. இவை மூன்றும் தான் வாழ்க்கையின் பிரதானம். நினைத்தால் ஒரு பொருள் வாங்கமுடியாது என்கிற கட்டத்தில் இருப்பவர்கள் ஏழைகள். நினைத்தால் ஒருவரிடம் பழகமுடியாது என்றிருப்பவர்கள் அறிவிலிகள். நினைத்தால் ஓரிடத்திற்கு போகமுடியாது என்கிறவர்கள் அகதிகள். நான் சொன்ன மூவரும் தான் இந்த சமூகத்தில் திரும்பத் திரும்பச்சுழல்கிறார்கள். இந்த மூன்றும் தெரியவேண்டும் என்றால் மேன்ஷன் வாழ்க்கை  வாழத்தான் வேண்டும். இவை யாவும் தெரிந்தபின்னரும் நான் வசிக்கிறேனே தவிர வாழவில்லை என்றே தோன்றுகிறது. வாழ்வது என்பது பேருண்மைகளை தெரிந்து கொள்ளவதல்ல, தெரியாமல் இருப்பது தான். பேருண்மைகளை தெரிந்துவிட்டால் வாழவேமுடியாது.



ஹபிபுல்லா சாலை அறிவுமதி எனும் சொல்லாடல் உங்களைப் போன்ற பல பாடலாசிரியர்களுக்கு ஒரு சரணாலயம் போன்றது. அறிவுமதியின் ஹபிபுல்லா சாலை அலுவலகம் உங்கள் வாழ்வில் எவ்வளவு உறுதுணையாக இருந்திருக்கிறது?

ஒரு சகோதரனாக அறிவுமதியின் அன்பும் அரவணைப்பும் ஆச்சரியத்துக்குரியது. அவர்   பரந்த தன்மையும் தாய்மையுள்ளமும் இயல்பிலேயே கொண்டிருந்தார். கொண்டிருக்கிறார். கொண்டுமிருப்பார். ஆனால் எனக்கான பாடல் வாய்ப்பு அறிவுமதி அண்ணனால் நேர்ந்தது என்று சொல்லமுடியாது என்றாலும் அதற்கான தருணங்களை உருவாக்கிக்கொண்டிருந்தார். அவரிடம் இருக்கும் நல்லகுணங்களில் ஒன்று எப்போதும் எழுதத்தூண்டிக் கொண்டேயிருப்பார். அத்தோடு ஹபிபுல்லா சாலையின் அந்த வீட்டில் நிறைய அரசியல்கள் நடந்தன. அறிவுமதி அன்பானவர் அவருக்கு அது தெரியாது. நான் அறிவுமதி அண்ணனைப் பார்ப்பதற்கு ஆறுமாதங்கள் முயற்சித்தேன். அவரோடு கூட இருந்தவர்கள் அண்ணனைப் பார்க்ககூட அனுமதிக்கமாட்டார்கள். அன்றைக்கு திரையில் புகழ்பெற்ற இயக்குநர்கள் தான் வாயில்காவலனாக இருந்தார்கள். பின்னர் அவர்களின் படங்களுக்கும் நான் பாட்டு எழுதியிருக்கிறேன். ஏன் அவர்கள் அப்படிச் செய்தார்கள் என்று எனக்கு இன்றுவரையும் தெரியாது. ஹபிபுல்லா சாலையின் அண்ணனின் வீட்டை எல்லோரும் வேடந்தாங்கல் என்பார்கள்.நான் அப்படிச் சொல்லமாட்டேன். அது அன்னை வீடு.

மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலில் இருந்து நீயாவது கரையேறி விடு என்று உங்களை தஞ்சாவூரில் இருந்து வழியனுப்பிய அம்மாவின் வரிகளை படித்த போது மெய்சிலிர்த்தேன். தனது காதுத் தோட்டை விற்று ஐயாயிரம் ரூபாயைத் தந்து  அனுப்பிய தாயின் ஆசிர்வாதம் பலித்துவிட்டது என்று நினைக்கிறேன். இப்படியான உச்சத்தை அடைவதற்கு நிறைய இன்னல்கள் இருக்குமல்லவா?


அந்தக் காலத்தில் ஒவ்வொரு நாளும் இன்னல்கள் நிரம்பியவை தான். ஊரில் இருந்து அம்மா தந்துவிட்ட ஐயாயிரம் ரூபாய் காசு பதினைந்து நாட்களில் தீர்ந்து போயிருந்தது. இதில் பெரிய சோகம் என்னவென்றால் மறுபடியும் ஊருக்குப்போனால் மீண்டும் காசு கொடுத்தனுப்ப காதுத் தோடு கிடையாது. கைவளையல் கிடையாது. தாலிக்கயிறு கிடையாது.அப்படி இருக்கும் பட்சத்தில் நான் ஊருக்கு திரும்புவதை விரும்பவில்லை. என்னுடைய முதல் ஐந்து பாடல்கள் முடிந்து ஆறாவது பாடல் வருகிற பொழுது ஒரு லட்சம் ரூபாயை ஊதியமாக பெற்று வங்கியில்சென்று பத்துரூபாய் தாள்களாக மாற்றினேன். அதன் பின்னர் ஊருக்குச் சென்று அம்மாவின் சேலை முந்தானையை விரித்து பிடித்து அதற்குள் நிறைத்தேன். அது அம்மாவிற்கு சந்தோசம். நான் ஏன் அப்படி நடந்து கொண்டேன் என்று இன்றுவரை யோசிக்கிறேன். அம்மாவின் சந்தோசம் என்னை திருப்தி படுத்தியது. வறுமையும் அதுசார்ந்த ஏக்கமும் கொண்ட ஒரு வாழ்விலிருந்து நான் மீண்டிருக்கிறேன்.


கணையாழியின் காலம் உங்கள் வாழ்வில் பொற்காலம் என்று நீங்கள் நிறைய இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ஆனால் கணையாழி வாசலுக்கும் கோடம்பாக்க வாசலுக்கும் பொருளளவிலே நிறையத் தூரமிருக்கிறது.எப்படி இரண்டையும் ஒரே நேரத்தில் கையாண்டீர்கள்?

நான் என்னை முழுமையாக கரைத்துக்கொண்டு எழுத்துக்குள் விழுந்தவன் கிடையாது.எழுத்துக்குள் வீழ்ந்துவிடவே கூடாது என்கிற முயற்சியிலேயே இருந்தவன். ஒட்டுதல் என்பது எனக்கு எழுத்தோடு இருந்தது கிடையாது வாழ்க்கையோடு தான் இருந்தது. இந்த வாழ்க்கைக்காக எழுத்தை நான் கச்சாப்பொருளாக பயன்படுத்தி இருக்கிறேன் என குற்றம்சாட்டினால் கூட நான் ஏற்றுக்கொள்வேன்.சிற்றிதழில் எழுதக்கூடியவனின் மனநிலை, வெகுஜன பத்திரிக்கையில் எழுதுபவனின் மனநிலை, திரைப்படத்திற்கு எழுதுபவனின் மனநிலையென  எல்லாம் அறிந்திருந்தேன். தீவிர இலக்கியப்பத்திரிக்கையான கணையாழியில் நான் பணிபுரிந்திருந்தாலும் வெகுஜன எழுத்துக்கள் மீது பெரிய கருத்துமுரண்பாடுகள் கொண்டதில்லை. நான் திரைப்பாடல் எழுதத்தொடங்கிய காலகட்டத்தில் எனக்கு அதில் பிரச்சனையில்லை. அதற்கான காரணம் எனது வாசிப்பு   என்று நினைக்கிறேன்.              

ஈழ இனப்படுகொலை சார்ந்து தமிழகத்தின் பெரும்பாலான எழுத்தாளர்கள் அல்லது அறிவுஜீவிகள் மத்தியில் நிலவுகிற கள்ளமவுனம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


இந்தக் கள்ளமவுனம் மிகவும் அபாயகரமானது. அருவருப்பானது. கடந்துபோக முடியாதது. தமிழகத்தில் ஈழ விடுதலை தொடர்பாக பேசியவர்கள், பேசிக்கொண்டிருப்பவர்கள், பேசப்போகிறவர்கள் எல்லோருக்கும் பின்னால் ஒரு குழுமனப்பான்மையும் சூழ்ச்சியும் இருக்கிறது. இந்தக் குழுமனப்பான்மைக்கு அங்கிருந்த போராளிகளும் காரணம் இங்குள்ள அரசியல் வாதிகளும் காரணம். கட்சிக்கு ஆள்சேர்ப்பது போல போராளிகளுக்கும் ஆட்சேர்த்த மோசமான வரலாறு நம்முடையது.எந்த அரசியலை முன்வைத்தாலும் அதற்கு பின்னால் உள்ள ஆதாயம் என்ன என்பது குறித்து தான் இங்கு ஆராயப்படுவதே தமிழகத்தின் அரசியல் புரிதல். எனக்குத் தெரிய கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தன்கொள்கை சார்ந்த இயக்கத்தோடு எழுத்தாளர்கள் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.            ஆனால் இப்போது அது கிடையாது. படைப்பாளிகள் தம் அரசியலை கரைத்துவிட்டார்கள். ஈழப்பிரச்சனைக்கு மட்டுமா அவர்களின் கள்ள மவுனம் காவிரிப்பிரச்சனைக்கு கூட அது தான். அந்தக் கள்ளமவுனம் என்பது படைப்பாளிகளின் அரசியல் போதாமைதான். அப்படியானவர்களிடம்  அதனை எதிர்பார்க்கமுடியாது

உங்களுடைய முதல்கவிதையே ஈழம்பற்றியது தான். உங்களுக்கு மிகப்பெரும் ஈழப்படைப்பாளியான எஸ்.பொவுடன் உறவு இருந்தது.  அவரோடு பணியாற்றிய காலம் எவ்வாறானது?

எஸ்.பொவை எல்லோரும் பார்ப்பது போல எழுத்தாளராய் மட்டும் என்னால் பார்க்கமுடியாது. அவர் எனக்குப் பெரியதந்தை போன்றவர். என்னை வாஞ்சையாக அரவணைத்து பலநாட்கள் காலை சிற்றுண்டி கூட வாங்கித் தந்தது அவர் தான். அதனால் இந்த உடலை அவர் தந்தது என்று கூடச்சொல்லலாம். அப்படியான வறுமைச்சூழலில் நானிருக்கும் போது என்னை வளர்த்தெடுத்தவர் அவர்.  அவரோடான எழுத்துப்பயணம் இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கும் அனுபவம்.கையில் நிறைய சிகரெட் புகைந்துகொண்டேயிருக்கும் ஒரு சிகரெட் அணைவதற்கு உள்ளாகவே அடுத்தசிகரெட்டை அணைந்து கொண்டிருக்கும் சிகரெட்டில் பற்றவைத்துக் கொண்டு வரலாற்றில் வாழ்தலை சொல்லிக்கொண்டேயிருப்பார்.அப்படித்தான் வரலாற்றில் வாழ்தல் எழுதப்பட்டது.நான்காயிரம் பக்கங்கள் வரலாற்றில் வாழ்தலை எஸ்.பொ சொல்லச்சொல்ல எழுதுகிற போது என்னுடைய சுட்டுவிரலும் நடுவிரலும் ரத்தம் சிந்துமளவுக்கு எழுதினேன். அதனை ரொம்ப பெருமையானதாக கருதுகிறேன். ஈழமண்ணுக்காய் ரத்தம் சிந்த வேண்டும் என்று ஆசைப்பட்டவன் நான்.அதுமுடியாதபோது எழுதி எழுதி என் கையில் ரத்தம் வந்தது. அதனை எஸ்.பொ எனும் தனிமனிதனுக்காய் மட்டும் செய்தது என்று நான் எண்ணவில்லை. ஈழமக்களுக்காக செய்தது என்றே கருதுகிறேன். வரலாற்றில் வாழ்தலில் எழுதபட்ட ஒவ்வொரு அத்தியாயங்களுக்கு பின்னர் எனக்கும் அவருக்கும் நீண்ட விவாதங்கள் நடக்கும். அவருடனான அனுபவங்களை எழுதினாலே வரலாற்றில் வாழ்தல் போல நானும் ஒன்றை எழுதிவிட முடியும். அவர் ஒரு ஆச்சரியமான படைப்பாளி. அவரின் தனித்தன்மை என்றால் நான்காயிரம் பக்கங்களையும் பேனா பிடிக்காமல் சொல்லிக்கொண்டேயிருந்தார். ஒரு நாள் அதனைக் கேட்டேன். உண்மையைச் சொல்வதற்கு எதற்கு யோசிக்கவேண்டும் என்று கேட்டார். அவர் சத்தியமானவர்.

நீங்கள் அழுவதைப் போல நடிக்கலாம். வியர்ப்பதைப் போல வேடமுடியாது இது உங்கள் கவிதைகளில் எனக்கு பிடித்தமான வரிகள். இந்தக் கவிதை எழுதிய தருணம் நினைவிருக்கிறதா?

ஒரு கவியரங்கத்திற்காய் இந்த வரிகளை எழுதினேன். எனக்குத் தரப்பட்ட தலைப்பு வியர்வைத்துளி. அப்போது எழுதிய கவிதைவரிகள் தான் இவை. இரவு முழுக்க தொடரூந்தில் பயணம் செய்து கவியரங்கம் நிகழும் சேலத்திற்கு செல்லும் வரை அந்தக் கவிதைகள் என்னோடு இல்லை. அங்கு சென்றதன் பின்னர் கவியரங்கத்திற்கு முன்னால் எழுதிய கவிதை. நீங்கள் நினைவு வைத்திருப்பதைப் போல அந்தக் கவிதை எழுதப்பட்ட  காலத்தில் பல்வேறு பத்திரிகையில் மீண்டும் மீண்டும் பிரசுரம் செய்யப்பட்டது. எஸ்.பொ சொன்னதைப் போல உண்மை சொல்ல யோசிக்கத்தேவையில்லை. அது யோசிக்காமல் எழுதிய கவிதை.

என்.டி ராஜ்குமார் கவிதைகளுக்கு பிறகு உங்கள் கவிதைகளில் தான்   அதிக நிலத்தொன்மைகள் இருப்பதாக எனது புரிதல். அப்படியான கவிதையான ராகுகால காளிக்கு மட்டுமே தஞ்சைப் பிரகாஷ்  அவர்கள் கட்டுரை எழுதியிருந்தார். தஞ்சைப் பிரகாசோடு  உங்களுக்கிருந்த நட்பு குறித்து சொல்லுங்களேன்?

என்.டி ராஜ்குமாரின் தெறி குறித்து முதலில் குறிப்பிடவிரும்புகிறேன். தமிழில் போதியளவுக்கு என்.டி ராஜ்குமார் அவர்கள் கொண்டாடப்படவில்லை எனும் வருத்தம் எனக்குண்டு. இயல்பிலேயே மாந்தீரிகக் குடும்பப் பின்னணி கொண்டவர் என்றாலும் மந்திர உச்சாடனங்களை கவிதைக்குள் எப்படிச் சாத்தியப்படுத்தினார் எனும் ஆச்சரியம் எனக்கிருக்கிறது. “தெறி வந்த காலத்திலேயே அதனைப்படித்து விட்டு கட்டுரை எழுதியதாக எனக்கு நினைவிலுண்டு. அந்தத் தொகுப்புக்கு பின்னால் தெறிமாதிரியான தொகுப்பை அவர்கொண்டுவரவில்லை. அதற்கான காரணம் அவர் கொண்டாடப்படாமல் போனவுடனேயே அவரின் சொற்கள் எங்கேயோ சுருங்கிப்போய்விட்டதாக எனக்குத் தோன்றுகிறது. ஒரு நல்லபடைப்பாளனுக்கு தான் கொண்டாடப்படவில்லையோ என்கிற எண்ணம் வரும்கட்டத்தில் அவன் எழுத்து அவனைவிட்டு போய்விடும். கொண்டாடப்படுவதற்கு எழுதப்படுவதல்ல எழுத்து என்றாலும் ஒரு படைப்பாளன் அப்படி எண்ணுகிற போது எழுத்து அவனிடமிருந்து போய்விடுகிறது. இப்பிடி போகாமல் இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பவர் தான் தஞ்சைப் பிராகஷ்.            அவர் நிறைய எழுதியவர் கிடையாது. ஆனால் நிறையப் படைப்பாளிகளோடு தொடர்பில் இருந்தவர்..நா.சுவையும், தி.ஜானகிராமனையும், வேலாராமமூர்த்தியையும், எஸ்.பொவையும் என தான் வாசித்தவர்களை எனக்கு அறிமுகப்படுத்திக் கொண்டேயிருப்பார்.  அகன்ற நெற்றி சாயலில் ஓஷோ போல இருக்கும் அவர் மார்க்ஸ்சையும், பெரியாரையும், அம்பேத்கரையும் வட்டமடித்து பேசிக்கொண்டிருப்பார். அங்கீகாரத்திற்காய் எழுதவேண்டாம் என சொல்லிக்கொண்டேயிருப்பார். அவரை நான் பத்தாயிரம் தடவைகள் சந்தித்திருக்கிறேன் என்றால் பத்தாயிரம் அற்புதங்களை அவர் தந்திருக்கிறார் என்பேன். நீங்கள் குறிப்பிடும் அந்தக் கட்டுரை தஞ்சைப் பிரகாஷ் அவர்கள் மருத்துவமனையில் படுத்தபடுக்கையாக கிடந்து கொண்டு சொல்லச் சொல்ல எழுதப்பட்டது. அதனை கவிஞர் இளம்பிறை அவர்கள் தான் எழுதினார். ஒரு முக்கியமான மறக்கமுடியாத கட்டுரையது.

தமிழ்திரையுலகில் எல்லாத்துறைகளிலும் கடுமையான போட்டியும் உள்ளக குழுவாத அரசியல்களும் உண்டு. ஆயிரம் பாடல்களுக்கும் மேலாக எழுதிவிட்டீர்கள். நீங்கள் நினைத்ததை திரைப்பாடல்களில் சாத்தியப்படுத்தமுடிந்ததா?

நினைத்தால் தானே சாத்தியப்படுத்த முடியும். நான் எதுவும் நினைக்கவில்லை. ஆனால் திரைப்பாடல் மொழியை எனது லாவகத்து மாற்றிக்கொள்ள வேண்டுமென்று விரும்பினேன். அதனை நோக்கித் தான் நான் முதல்பாடலில் இருந்து பயணித்தேன். நான் செய்முறை ரீதியாக பாடல்களை அணுகியிருக்கிறேன் என நினைக்கிறேன். நான் ஒருவனே நினைத்து எழுதியது பாடல்களாய் வருவது கிடையாது. இது எல்லாப்பாடலாசிரியர்களுக்கும் பொதுவானது தான். இயக்குநரிலிருந்து, தயாரிப்பாளர், இசையமைப்பாளர், உதவி இயக்குநர்கள் வரை ஒரு பாடலுக்கான மதிப்பீடுகள் நடக்கிறது. இயக்குநர்களின் ரசனை மட்டம் தான் ஒவ்வொரு பாடல்களும்.  

யுகபாரதியின் பாடல்கள் தான் இன்றைய இளையதலைமுறையினரை வசீகரித்து இருக்கின்றன. ஆனால் உங்கள் பாடல்களில் வருகிற சொற்கள் பொதுவான தமிழ்ச் சொற்கள் அல்ல. ஊரின் வழக்கு மொழிகளும் கிராமத்து திண்ணைச் சொற்களும் பாடல்களில் நிரம்பிக்கிடக்கின்றன  என்றாலும் எல்லோரையும் கவர்ந்து விடுகிறதே?

நான் எனது மொழியை எங்கும் இழக்கவில்லை. 25 ஆண்டுகால நகரவாழ்வில் எனது கிராமத்து மொழியை நான் பாதுகாத்து  வைத்திருக்கிறேன் எனும் பெருமை எனக்கிருக்கிறது. மிகநுட்பமாகவும் சரியாகவும் சொல்லியிருக்கிறீர்கள் எனது வழக்குச்சொற்களையும் மக்களின் பேச்சு மொழியையும் நான் பாடல்களில் பயன்படுத்துகிறேன். ஒரு தீவிரமான தன்மை கொண்ட கருப்பொருளை எந்த இயக்குநரும் நான் எழுதிய ஆயிரம்பாடல்களில் சொல்லவேயில்லை. கடுமையான அரசியலை, வறட்சியைப் பற்றி எழுதும் வாய்ப்புக்கூட அமையவில்லை. சுற்றிச் சுற்றி ஆணும் பெண்ணும் காதலிப்பதற்கு தான் பாடல் கேட்கப்படுகிறது. அதற்கு நான் வித்தியாசமாகத் தான் சொல்லவேண்டிய கட்டாயமும் இருக்கிறது. காதலைக் கூட எத்தனை தடவை சொன்னாலும் புதியதாக சொல்லவேண்டும் என்பதற்காய் நான் வழக்குமொழிகளை பயன்படுத்துகிறேன். அதனை பாடல்களில் கட்டமைக்கிறேன். அது ஏனைய பாடலாசிரியர்களுக்கும் இல்லாத தனித்தன்மையாக என்னிடம் பார்க்கப்படுகிறது.

உங்கள் பாடல்களில் ஆச்சரியம் அளிக்கும்வகையில் ஈழச்சொல்லாடல்கள்  கூட வருகிறதே?

எப்.எஸ் நடராஜன் அவர்களின் ஈழத்து நாட்டார்பாடல்களை என்னளவுக்கு வாசித்திருப்பவர்கள் யாரும் கிடையாது. தமிழில் வெளிவந்த பெரும்பாலான நாட்டார் பாடல்களை நான் வாசித்திருக்கிறேன். அவைகளை மனப்பாடமாக கூடச்சொல்ல முடியும். இயல்பிலேயே நான் பாடல்களுக்கு தயாரான காலத்தில் அந்த வகையுக்திகளை உள்வாங்கிக்கொண்டேன். அதனை நீங்கள் கையாடல் என்றும் எடுத்துக்கொள்ளலாம் கையாளல் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.


யுகபாரதி, டி. இமான் கூட்டணியின் திரையிசைக் காலகட்டம் என்று தற்காலத்தை அழைக்கலாமா?

ஒரு பாடலாசிரியனுக்கு ஒரு இசையமைப்பாளன் இணையாக கிடைப்பது ரொம்பப் பெரிய விஷயம். இந்தப் பிரச்சனை இன்றைக்கு நேற்றையது கிடையாது. பாபநாசம் சிவன் காலத்திலிருந்தே இருக்கிறது. ஒரு கவிஞன் பாடலாசிரியனாய் மாறுகிறவேளையில் ஒரு தனித்துவமான சரியான இசையமைப்பாளரின் துணை அவசியமாகிறது.அப்படியான துணை இல்லாமல் திரைப்பாடலில் பயணிக்கவே முடியாது. இமானோடு சேர்ந்து பாடல்கள் எழுதுவதற்கு முன்னமே எண்ணூறு பாடல்களை எழுதியிருந்த போதிலும்,நான் பாடலாசிரியனாய் தனித்து அறியப்படவேயில்லை. இமானோடு குறுகிய காலத்தில் முந்நூறு பாடல்கள் எழுதியிருக்கிறேன் என்றால் அது சென்றடையும் வீச்சும் அதீதமாய் இருக்கின்றது. அதற்கான காரணமாக நான் நினைப்பது நீங்கள் சொல்லும் காலகட்ட நம்பிக்கைதான். அதனை வைத்துதான் இசையமைப்பாளர்களும், பாடலாசிரியர்களும் பார்க்கப்படுகிறார்கள். இமானுடனான எனது பயணம் நெகிழத்தக்கது, ஆத்மார்த்தமானது.

வைரமுத்துவின் காலகட்டம் தமிழ்த் திரைப்பாடல் வரலாற்றில் அசாத்தியமானது. உங்களைப் பாதித்த வைரமுத்து குறித்துச் சொல்லுங்கள்?


வைரமுத்து என்னைப் பாதிக்கவில்லை. பாதித்த என்ற சொல்லாடல் பொருத்தமற்றது. அவர் தாக்கம் செலுத்தினார். தாக்கம் செலுத்தினால் தான் எதிர்கொள்ள முடியுமல்லவா. வைரமுத்துவின் அர்பணிப்பும், சாத்தியங்களும், வெற்றிகளும், உழைப்பும் இப்போது எழுதுகிற யாருக்கும் வாய்க்காதது. ஏனெனில் வைரமுத்து எழுதத்தொடங்கிய காலகட்டத்தில் வைரமுத்துவை விடவும் அதிகத் தமிழ் தெரிந்தவர்கள் இருந்தார்கள். அவரை விடவும் ஆற்றல் உள்ளவர்கள் இருந்தார்கள். இதனை நான் சொல்வதாக எடுத்துக்கொள்ளவேண்டாம் வைரமுத்துவே சொல்லுவார். அவர் எழுதவந்த காலத்தில் கண்ணதாசனும்,புலமைப்பித்தனும், கு.மா பாலசுப்பிரமணியமும், வாலியும் இருந்தார்கள். எங்கள் காலத்தில் வைரமுத்து மட்டும் தான் இருக்கிறார். வைரமுத்து எங்களுக்கு எல்லாம் பெரிய ஆதர்சம் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது. ஆனால் அந்த ஆதர்சத்தை அப்படியே உள்வாங்கிக்கொள்ள முடியாத சூழலில் நாங்கள் வளர்க்கப்பட்டோம். அவரின் தமிழ், திரைப்பாடல்களில் இலக்கியத்தன்மை  திணிக்கப்பட்டது என்றே எனக்கு கருத்திருக்கிறது.                                       எளிய சொற்களில் கிடந்த தமிழ்ப்பாடலை இலக்கியத்தன்மைக்கு மாற்றும் முயற்சியே வைரமுத்து அவர்களில் முப்பதாண்டு கால திரைப்பாடல் வரலாறு. மெட்டில் கிடைக்கும்  சிறுசந்தத்தில் கூட ஒரு இலக்கிய சொல்லை எழுதிவிடவேண்டுமென அவர் யோசித்துக்கொண்டேயிருக்கிறார். இதை எவராலும் மறுக்கமுடியாது அப்படி இலக்கியப் பாட்டை எழுதினாலும் கிடைக்கும் சொற்ப சந்ததத்தில் புழங்கு தமிழை எழுதவேண்டுமென நான் முயற்சிப்பேன். அதற்கு காரணம் வைரமுத்துவைப் போல எழுதுபவனாக நான் ஆகிவிடக் கூடாது என்கிற விழிப்புத்தான். வைரமுத்துவிடம் இருந்து எதனை நான் எடுத்துக்கொள்ள முடியும் என்றால் பாடல்களில் அவர் செயற்படுத்தும் அணுகுமுறைகளைத் தான் சொல்வேன். வைரமுத்து என்னைத் தாக்கும் போது கண்ணதாசன் எனும் எளிமையான ஆயுதம் என்னை பாதுகாத்துவிடுகிறது.

நா.முத்துக்குமாரின் ஆரம்பகால பாடல்கள் புதிய தன்மையிலானவை. ஜென் தத்துவங்கள் நிரம்பியவை. அவரின் இழப்பு மிகத்துயரமான மாபெரும் இழப்பு. உங்களுக்குத் தெரிந்த அவரின் தனித்துவம் ?

தொண்ணூறுகளுக்குப் பிறகு வந்த இளம் கவிஞர்களில் தீவிர வாசிப்பும் அதே தன்மையோடு பாடல்களை அணுக வேண்டும் என்கிற சிந்தனையும் அவரிடமிருந்தது. நான் அவரைப் பார்க்கும் போதெல்லாம் பாடல் பாடலாய் இருந்தால் போதுமென்பேன். பாடல்களை கவிதையாக்க வேண்டுமென்று தொடர்ச்சியாக இயங்கியவர் அவர். எனக்கு அந்த எண்ணத்தில் முரண்பாடு உண்டு. பாடல் என்பது தனித்தகலை. அது பாடலாகவே இருக்கவேண்டும் என்று அவரோடு விவாதிப்பேன். ஆனால் முத்துவின் பலமும் பாடல்களில் நிறைந்திருக்கும் கவிதை தான். தொடர்ச்சியாக வாசிக்கும் பழக்கமுடையவர். ஒலிப்பதிவு கூடத்தில் இலக்கிய பத்திரிகையை கையில் வைத்திருப்பவர். இயல்பில் நிலையாமை தத்துவத்தை கொண்டிருந்த முத்துவின் ஆனந்த யாழை பாடலை அவனால் மட்டும் தான் எழுதமுடியும். முத்துவின் இழப்பு தாங்கிக்கொள்ள முடியாத துயரம். அவன் இன்னும் நிதானமாக எழுதி இன்னும் நிதானமாக வாழ்ந்திருக்கலாம். மரணத்தைக் கூட அவன் வேகமாக அடைந்துவிட்டான்.

யுகபாரதியின் தனித்துவம் தான் என்ன ?

ஒரு எளியமனிதனால் திரையிசைப்பாடல்களை எழுதிவிட முடியும் எனும் சூழலை உருவாக்கியிருக்கிறேன்பாடலை எளிமையாக்கியிருக்கிறேன்கொண்டாட்டத்திற்கான பாடல்களை எழுதிக்கொண்டேயிருக்கிறேன்


(நன்றேது? தீதேது? தொகுப்பிலிருந்து)



Comments

  1. அண்ணை உங்க தீவாளி சிறுகதை என்னை நிலைக்கொழிய வைத்துவிட்டது. என்னால் அதை மனதில் ஒரு பதைபதைப்போடு வெறுப்போடு நிம்மதியற்று தான் படிக்க முடிந்தது. அந்த ஆசுபத்திரி...
    சகட்டு மேனிக்கு சுடப்பட்ட சன்னங்கள்.. அவற்றை கக்கும் துவக்கிகளின் ஒலி இன்னமும் என் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.
    சந்திராவின் பாவாடைக்குள் கைவிட்டு சோதிக்கும் சீக்கிய இந்திய ஆர்மிக்காரன்..
    அந்த பிள்ளைபேறு வார்டு...
    ஏழு பேரின் உயிரை காவு வாங்கிய எட்டாவது வார்டு...
    மழையாய்பொழிந்த குண்டுகள்..
    கட்டிலுக்கடியில் ஒண்டிக் கொண்டு பதறிய உயிர்கள்...
    அந்த எக்சு ரே அறை..
    இரக்கமே அற்று இண்டாம் நாள் குழந்தை என்று கூட பாராது சன்னத்திற்கு இரையாக்கப்பட்ட இந்திரா... சந்திரா...
    புரியாத இந்தி பேசிய ஆர்மிக்காரனால் வன்புணரபட்ட தமக்கை...
    என ஒவ்வொரு காட்சியும்
    இந்திய அமைதி படையின் கொடும்போக்கும் வெறித்தனமும் என் மனதை விட்டு அகலா
    என்னை வருத்துககன்றன.
    என் வாழ்வில் போரில் சிக்கிய ஆளாக என்னே இந்த கதை எண்ண வைத்தது என்பதே உண்மை. இக்கதையை என்றும் என் வாழ்வில் மறக்க மாட்டேன்.
    அந்த சீக்கிய இந்தி பேசிய இந்திய ஆராமிகாகாரன்களையும்..
    கூடவே இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்களையும் என்றும் மறக்க மாட்டேன.

    ReplyDelete
  2. மிக சிறப்பு..

    ReplyDelete
  3. அருமையிலும் அருமை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்