இந்த மண் எங்களின் சொந்த மண்

இந்தமண் எங்களின் சொந்தமண் 
இந்தமண் எங்களின் சொந்தமண் 
நீர்வளம் உண்டு நிலவளம் உண்டு
நிம்மதி ஒன்றுதான் இல்லை.

- புதுவை இரத்தினதுரை 






புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின் மிகவுறுதியான பங்களிப்புக்கள் மரியாதைக்குரியவை. அயராத உழைப்பும் ஓய்வற்ற வாழ்க்கைக்குள்ளும் இருந்து கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெருமளவிலான புலம்பெயர்ந்த மக்கள் தமது ஆதரவை வழங்கி வந்தவர்கள் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. 

களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது வீழ்ச்சியைக் கண்டதோடு களத்தில் வாழ்ந்த மக்கள்  மாபெரும் இனப்படுகொலைக்கு உள்ளாகிய 2009க்கு பிறகு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அரசியல், அல்லது அவர்களின் விடுதலைக்கான உழைப்பு என்பது என்னவாகி உருமாற்றம் அடைந்துவிட்டது என்பது தான் கவலைக்குரியது. 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை களத்தில் இருந்து உயிர் தப்பிய மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்ட அதே நேரம் இறுதி வரை போர்க்களத்தில் எதிரியோடு சமராடிய போராளிகள் தடுப்புமுகாம் என அழைக்கப்படும் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு முற்றாக வாழ்வு சிதைக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் நெருங்கி வரும் சூழலில் ஒப்பீட்டளவில் அவர்களை விட பொருண்மிய ரீதியாக வாழும் புலம்பெயர் மக்களில் எத்தனை பேர் தாயகத்தில் வாழும் தமது இரத்த உறவுகளுக்கேனும் உதவி செய்திருக்கிறார்கள் என்பதை நினைத்து பாரக்கவேண்டும். 

தாயகத்தில் ஒரு நேர சோற்றுக்கு அல்லல் படும் எமது மக்கள் மீண்டும் மீண்டும் யுத்தத்தின் பாரக்கல்லை சுமந்து திரிய புலம்பெயர்ந்து வாழும் மக்கள் நவீன மின் விளக்குகளின் கீழே நின்று விசில் அடித்து ஒரு இயக்கப்பாடலுக்கு கை தட்டி அந்த இடத்தையே ஒரு களியாட்ட நிலையமாக மாற்றும் இந்த வாழ்க்கை எவ்வளவு கேவலமானது. அண்மையில் சுவிஸ் நாட்டில் நிகழ்ந்த ஒரு இன்னிசை நிகழ்ச்சியில் ஒரேயொரு இயக்கப் பாடல் பாடப்படுகிறது. 

அந்த நிகழ்வில் அதற்கு முன்பாக எல்லாமே திரையிசைப் பாடல்கள் தான் பாடப்பட்டிருக்கிறது. ஒரு மாசாலவை குழம்பின் மேல் தூவுவது போல இந்தப் பாடல் இசைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாடல் இசைக்கப்படவிருப்பதாக மேடையில் அறிவிக்கப்பட்ட பொழுது எழுந்த கரகோஷமும் விசில் சத்தங்களும் அருவருப்பானவை. நாளாந்தம் தாயகத்தில் காணாமல் போகும் பிள்ளைகளை தேடியலையும் பெற்றோர்களின் அழுகுரலை, களத்தில் நின்று தாய் மண்ணின் விடுதலைக்காக போராடிய போராளிகளின் இன்றைய அவல நிலைகளின் துயரக்குரலை மறந்து போன அநீதியான சத்தம். புலம்பெயர் வாழ் மக்கள் முழுதுமே இப்படித் தான் வாழ்கிறார்கள் என்று சொல்லுவது முறையற்றது. ஆனால் இப்படி வாழ்பவர்களும் புலம்பெயர் தமிழர்கள் தான் என்பது அவமானம். 




“இந்த மண் எங்களின் சொந்த மண்” என்று தொடங்கும் இந்தப் பாடல் தமிழீழ மக்களாகிய எமது தலைமுறையின் போராட்ட எழுச்சிப்பாடல். இந்தப்பாடலை பாடிய பாடகரான S.G சாந்தன் என்கிற பெயரை அறியாதவர்கள் பெருமளவில் இருக்கமுடியாது. இப்போது அவர் தாயகத்தில் எவ்வாறான வாழ்வாதரச் சிக்கல்களை எதிர்கொண்டு இருக்கிறார் என விசில் அடித்து கைகளைத் தட்டிய எத்தனை பேர் அறிந்திருப்பர். அவர் வதைமுகாமில் தனது மகனோடு அடைக்கப்பட்டிருக்கும் போது யாரேனும் உதவி இருக்கிறார்களா? எமது தாயகத்தின் விடுதலைப் போராட்டப் பாடல்களை யாரும் பாடலாம். அதில் பிழையில்லை. ஆனால் அதற்கு ஒரு வண்ணம் தீட்டப்படுவது கீழ்மையானது. கொட்டும் குருதிக்குள்ளும் வடியும் கண்ணீருக்குள்ளும் தோன்றிய பாடலை ஒரு விடுதலைப் போராட்ட காலத்தில் தாக்கம் செலுத்திய பாடலை Airtel Super Singer புகழ் திவாகர் பாடுகிறார் என்பதில் என்ன மேன்மை பெற்றார்கள் அந்த நிகழ்ச்சியில் குழுமி நின்ற புலம்பெயர் தமிழர்கள். ஏன் அதனை தமிழீழ மக்களின் விடியலின் விளிம்பைப் போல விளம்பரப்படுத்துகிறார்கள்.

அதனை காணொளியாக பதிவேற்றம் செய்து சமூக வலைத்தளங்களில் பரவவிட்டு எந்தவகையில் மனத் திருப்தி கொள்கிறார்கள் அவர்கள். அவர்கள் இந்தப் பாடலை பரவவிடும் சமூக வலைத்தளங்களில் எத்தனை போராளிகளின் துயரத்தை அவர்களே சொல்லி உதவி செய்யுங்கள் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு இதில் கூடி நின்று கைகளைத் தட்டி விசில் அடித்த எத்தனை பேர் உதவி இருக்கிறார்கள். நாம் ஏன் இன்னும் இப்படி எமது இரத்தக்கறைகளுக்கு வண்ணம் தீட்டுகிறோம். தாயகத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட அடக்குமுறைக்கு எதிராக இப்போதும் களமாடும் எமது மக்களை ஏன் கைவிட்டோம் என்று யோசிக்கவேண்டும். இயக்கப் பாடலை Airtel Super Singer புகழ் திவாகர் பாடி அதனைக் கேட்டு நீங்கள் எமது துயரை வென்றுவிடலாம் விடுதலை அடைந்து விடலாம் என நம்பினீர்கள் என்றால் சுய இன்பம் செய்தால் பிள்ளைப் பெறலாம் என நம்புவது போலாகிவிடும்.      

Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்