தொப்புள்கொடிகளே! உம்மில் அடைக்கலமான எம்மைக் கொல்வீரோ ?








பதாகைகளில் சாகும் புரட்சி

துயரங்களை மொழிபெயர்த்து முழங்கிக்
கொண்டிருந்தது வானம்
அந்த முழக்கத்திலிருந்து முனை மழுங்காமல்
மலையொன்றில் வீழ்கிற சபிக்கப்பட்ட வாழ்வின்
ஏக்கம்
என்னுடையது மட்டுமன்றி
எல்லோருடையதும்

ஊஞ்சலாடிய முற்றங்களில் முட்கம்பிகள் முளைக்க
அகதியெனும் பெயரோடு தொப்ப்புள் கொடி மண்ணில்
போலீஸ் பதிவுகளை நிரப்பிக் கொண்டிருக்கிற
எனது விரலேறிப் பாய்கிறது அவமானத்தில் பூனை

முகவரிகள் தேடிச் செல்லும் நாடற்றவர்களின் நாட்கள்
வீடற்று அலைவதில் அபூர்வமில்லை
கேரளத்திலிருந்து வந்தவன் மலையாளி
ஆந்திராவிலிருந்து வந்தவன் தெலுங்கன்
இப்படியாக
வேறு மொழி பேசுகின்ற அனைவரும் மொழியின்
பெயரால் அழைக்கப்பட
நாங்கள் அகதிகளென தூற்றப்படுகிறோம்

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடுவோம்
அவர்கள் எமது தொப்புள் கொடிகளென
சுயநலங்களோடு ஒலிவாங்கியில் நடக்கும் புரட்சி
இரவைக் கிழித்து எனது இருள்மைக்குள் வீழ்கிறது

அதிகாரப் பிரிவுகள் எங்களை நோகடித்து
பயங்கரவாதிகளென வன்மம் தீர்க்கிறார்கள்

பதாகைகளில் தொங்கும் எமக்கான தேசபிதாவை
கொள்வனவு அரசியலில் விளம்பரப் பொருளாக்கி
நாடற்ற மக்களின் துயர் பாடி
வீடு வாங்கிக் கொண்டிருக்கின்றனர்
பதாகை புரட்சியாளர்கள்

மானுடத்தை கொலை செய்த ஆசிய கிட்லரை
பார்க்கிலும்
இவர்கள் அருவருக்கத்தக்கவர்கள்

வலைகளற்ற திருட்டுச் சிலந்தியென
தரையில் நடந்து கொண்டிருக்கிற நான்
வீழ்ந்தொழுகும் மின்னல் கீற்றுகளின் வெளிச்சத்தில்
எனக்கான இடம் இங்கு இல்லையென்பதில்
தெளிவாகிறேன்.

(அறம் வெல்லும் அஞ்சற்க தொகுப்பிலிருந்து)



சொந்த நிலத்தில் வீழும் எறிகணைக்குள்ளாலும், பீரங்கிகளின் வெறிகொண்ட தாக்குதல்களுக்குள்ளாலும்,கனரக துவக்குகளின் சன்னங்களுக்குள்ளாலும் உயிர் தப்பி தாய் நிலத்தை கடலின் தண்ணீருக்குள் பிரிந்து தமிழ்நாடு நோக்கி வந்த தமிழீழத்தவர்கள் இந்த நாட்டை சகோதரத்தின் வீடு என்று தான் நம்பினார்கள். தனுஷ்கோடிக் கரையிலையோ, கோடியக் கரையிலையோ தமது தோணிகள் கரையைக் கண்ட போதில் சாவுகள் தூரம் சென்றுவிட்டதென நம்பினார்கள். 

சாவு தூரச் சென்ற மனிதர்களை சாகடிக்கவேண்டும் என்று இந்த நிலத்தின் அதிகார அலகுகள் முடிவெடுத்து வரிசைகளில் விட்டு அவர்களின் பெயர்களை பதிந்து இந்த நிலத்தின் மனிதர்களே வாழமுடியாமல் ஒதுக்கிவைத்திருந்த பகுதிகளில் மிக நெருக்கமாக 10 X 10 அடியில் கொட்டில்கள் அடித்து வைத்து மக்களை அடைத்தனர். தமிழீழத்தின் மாட்டுப் பட்டிகளில் ஒரு மாட்டின் கட்டைக்கும் இன்னொரு மாட்டின் கட்டைக்குமே எனக்குத் தெரிய மூன்று அடிகள் இடைவெளி இருக்கும். 10 X 10 அடியில் அடைத்து வைப்பது என்பதனை அவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என அதிகாரங்களும், அதிகாரங்களுக்கும் அநீதிகளுக்கும் காவடி தூக்குகிற ஊடகங்களும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருகிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக முகாம் சிறுமி ஒருத்தி விறகுக்கு சென்ற இடத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் எப்படி மூடி மறைக்கப்பட்டது என்றோ அல்லது அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்றோ எவருக்கும் தெரியாது. முகாம்களில் வசிக்கிற தமிழீழ மக்கள் எவ்வாறான சிக்கல்களை சந்திக்கிறார்கள் என்பதையெல்லாம் மானுடப் போராளிகளாய் தங்களைக் காட்டிக் கொள்ளும் தமிழ்நாட்டின் அறிவுஜீவி முகமூடி அணிந்திருக்கும் அ.மார்க்ஸ் போன்ற NGO தொண்டர்கள் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. தனது சொந்த நிலத்தில் மானுடத்திற்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு எதிராக இயங்கமுடியாத ஒருவனால் பிறிதொரு தேச அவலம் குறித்து கவலைப்படவே முடியாது. 


தொடர்ந்து தமிழீழ மக்களுக்கு விடுதலை கிடைக்கவேண்டும் என தமிழகத்தில் போராடி வருகிற தமிழீழ ஆதரவு இயக்கங்கள் தமிழ்நாட்டின் முகாம்களில் தமிழீழ மக்கள் படும் இன்னல்களை எதிர்த்து அதற்கான தீர்வை பெறுவதற்கு தானே போராடவேண்டும். தனது பேரக்குழந்தையின் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு சென்று திரும்பிய உங்கள் தொப்புள் கொடி ஒருவனை ஒரு அதிகாரி அவன் மரணம் வரை திட்டியிருக்கிறார். 

அநீதிக்காக எரியூட்டப்பட்ட மதுரை மண்ணிலிருந்து சில மைல்கள் தூரத்தில் உங்கள் தொப்புள் கொடியான  தமிழீழத்தவன் மின்சாரக் கம்பிகளில் தொங்கி கருகி இறந்து போய்விட்ட காட்சிகள் ஒளிபரப்பாகிய பொழுது பங்களாதேசுக்கு எதிரான மட்டைப்பந்து போட்டியில் இந்தியா வென்று கொண்டிருந்தது. நடிகர் கலாபவன் மணி இறந்திருந்தார். கன்னையா குமாரின் உரை தமிழ் மொழி பெயர்ப்போடு வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. 

அவர் மின்கம்பிகளில் கால்களை எட்டி வைத்து தன்னை தற்கொலை செய்து கொண்டதை நேரடியாக பதிவு செய்த தொலைக்காட்சி உட்பட எல்லா இணையத்தளங்களும் இலங்கை அகதி ,அல்லது இலங்கைத் தமிழர் என்று தான் செய்திகளில் உச்சரித்தது. தமிழீழ மக்களை எந்த வழிகளில் எல்லாம் கொல்ல முடியுமோ அந்த வழிகளில் எல்லாம் கொல்லுகிற யுக்திகளில் எம்மை இலங்கைத் தமிழர் என்று அழைப்பது ஒரு யுக்தி. 

நாம் இலங்கையர்கள் அல்ல, ஈழத்தவர்கள் தமிழீழத்தவர்கள்.  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிறகு உலகில் நடந்த மாற்றங்களில் எம்மை ஈழ மக்கள் என்று ஜெர்மன் தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியதை நான் ஒரு முன்னேற்றமாக பார்க்கிறேன். ஜெர்மன் தீர்ப்பாயம் உச்சரிக்கும் ஈழம் எனும் சொல்லை தமிழ்நாட்டின் ஊடகங்கள் உச்சரிக்க மறுக்கின்றன. நாம் இலங்கை எனும் தேசத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்ட அழிக்கப்படும் தமிழீழத் தேசத்தை சேர்ந்தவர்கள். பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் கீழ் இருந்த இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை இவர் பிரித்தானியர் என்று சொன்னால் எவ்வளவு அபத்தமோ அப்படித்தான் இதுவும். 

மின்கம்பத்தில் கருகிய எனது சகோதரனின் சொல்லமுடியாத விரக்தி அவனைத் தவிர வேறு எவராலும் உணரமுடியாதது. அவன் ஆன்மாவின் மானம் அவனைத் தற்கொலைக்கு உந்திவிட்டது. அப்துல் ரவூப்,முத்துக்குமார் எனும் மானுடர்களின் இந்த நிலத்தில் அவர்கள் யாருக்காக எரிந்தார்களோ அந்த மண்ணைச் சேர்ந்தவர்களே எரிந்து போகிற அவலம் நீளத்தொடங்கிவிட்டது. தமிழீழர்களாகிய நாம் இன்னும் எத்தனை சவங்களை இந்த பூமியின் சருமங்களில் விடுதலைக்காக ஒப்படைக்க வேண்டும் என்று தெரியவில்லை.             

Comments

  1. தொப்புள்கொடிகளே! உம்மில் அடைக்கலமான எம்மைக் கொல்வீரோ ?= வேதனையுடன் எனது பக்கத்தில் பகிர்கிறேன் - Akaramuthalvan akaran

    ReplyDelete
  2. தொலைக்காட்சியில் அந்த காட்சியைக் கண்ட போது நெஞ்சை பதறவைத்தது ,இனிமேலும் ,இம்மாதிரிக் கொடுமைகள் தொடரக் கூடாது !

    ReplyDelete
  3. மானுடத்தை கொலை செய்த ஆசிய கிட்லரை
    பார்க்கிலும்
    இவர்கள் அருவருக்கத்தக்கவர்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்