கானகி - சிறுகதை



கானகி என்னைப் பத்து மணிக்கெல்லாம் வவுனியா நீதிமன்றத்துக்கு வரச் சொன்னவள். இப்ப அரை மணித்தியாலம் பிந்திட்டுது. நேற்று இரவு பொலிஸ்காரியிட்ட நிமிசத்துக்கு ஐம்பது ரூபாய் குடுத்து போனில கதைக்கும் போதே பிந்தாமல் வரச் சொன்னவள். நீதிமன்றத்தில விடுதலையான பிறகும் தேவையில்லாமல் நிற்க கூடாது. நான் இன்னும் பத்து நிமிசத்தில வந்திடுவன், மன்னிச்சுக் கொள்ளும் கானகி. என்னோட தாமதம் உமக்குத் தெரியும் தானே. ஆனால் நான் இண்டைக்கும் கொஞ்சம் முந்தியே வந்து நின்றிருக்கலாம். நீர் என்னைக் கோபிக்க மாட்டீர், ஆனாலும் எனக்கே என் மேல கோபம் வருது. பிள்ளையள் யாரோடையாவது அம்மாக்களோட நில்லும். நான் வந்திடுவன். வவுனியா பஸ் ஸ்டாண்டுக்கு வந்து இப்ப தான் இறங்கிறன். இரண்டு நாளாய் பெய்த மழைத் தண்ணி தேங்கி நிற்குது. பொய்க்காலை வைச்சிட்டு தூக்கமுடியாமல் சேறு. கால் புதையுது. வாழ்வும் தான். கானகி நடந்து வந்து கொண்டிருக்கிறன். மழை துமிக்கத் தொடங்குது நீர் வெளியால நிண்டால் உள்ள போய் நில்லும் நனையவேண்டாம். நான் இரண்டு நிமிடத்தில் வந்திடுவன்.

ரோட்டில ஆர்மிக்காரர் மாதிரி நீதிமன்றத்தில எக்கச்சக்கமான சனம். மகிந்த தேர்தலில சரத்பொன்சேகாவை வெல்ல வேணுமெண்டு இண்டைக்கு விடுகிற பிள்ளையளோட எண்ணிக்கையும் கூடத் தான். எண்பது பேரை விடுகிறான். நிக்கிற தாய் தகப்பன் பிள்ளையளை கொஞ்சி அழுகிற காட்சி தான். நீதி தேவதை கண்ணை மூடிக் கட்டிக் கிடக்கு,பராவாயில்லை. அநீதி அழச் செய்த பாவப்பட்டவர்களாய் பிள்ளையளும் அம்மாக்களும் அழுதுகொண்டார்கள். “அது தான் நான் வந்திட்டன் தானே அம்மா ஏன் அழுகிறியள் என்று தன்னோட தாயோட அழுகையை நிப்பாட்டுது”. கானகியை நான் இன்னும் காணவில்லை. சனத்துக்குள்ள தேடிப்பார்க்கிறன். அவளைக் காணவில்லை. அவளை நான் தான் கூட்டிக்கொண்டு போகவேணும். நான் பொய்க்காலை தாண்டித்  தாண்டி நடந்து தேடுறன், கானகியைக் காணவில்லை.

கானகி என்னைப் பார்த்துக் கொண்டிருந்து கோபப்பட்டு எங்கேயேனும் போய் தனிய நிக்கிறாளா? நீதிமன்றத்தில் உளவுத்துறையிட்ட எல்லாம் என்னோட கையொப்பமும் விலாசமும் தான் குடுக்கவேணும். மழைத்தூறல் மொத்தமாய் விழத் தொடங்குது. கானகியை அதில நிக்கிற பிள்ளையளிட்ட கேட்டன்.

இப்ப அதில நிண்டவா அண்ணா என்று சொல்லிக்கொண்டு அந்தப்பிள்ளை போய்ட்டுது, கானகிக்கு நீங்கள் யார் என்று என்னைக் கேட்டால்  நான் என்ன சொல்லமுடியும். அந்தக் கேள்விக்கு வாய்ப்பே இல்லை. நான் கானகியைக் கண்டுவிட்டேன். அவளும் தன்னுடைய யானைக் கண்களால் என்னைப் பார்த்து அங்கேயே நிற்குமாறு சொல்லிவிட்டாள். நான் அப்படியே நின்றுவிட்டேன். அவளின் கண்களும் கதையும் ஒரு கட்டளை தான். கைகளில் இரண்டு படிவங்களை வைத்திருந்தாள். எனக்கருகில் வந்து உள்ளங்கையில் அழுத்தி ஏன் இவ்வளவு நேரமாய் வந்தனியள் நிலான் என்று சிரித்துக்கொண்டே கேட்டாள். நான் என்னத்தைச் சொல்லுவன் என்ர பொய்க்காலைப் போலவே நின்றிட்டேன். வாங்கோ என்னைப் பொறுப்பெடுக்கிற கையெழுத்து போடவேணும் என்றாள். அவளை நான் பொறுப்பெடுக்கிறேன் என்பது பொய். என்னைக் கானகி பொறுப்பெடுக்க நான் கையொப்பம் போடுகிறேன். ஆர்மிக்காரன் கை தந்து கானகியைப் பார்த்துச் சிரித்தான். அந்தச் சிரிப்புக்கு என்னை பதிலுக்கு சிரிக்க வேண்டும் என்று யானைக் கண் சொன்னது. அவளைப் தடுப்பில பார்க்கப் போகிற நேரமெல்லாம் உங்கட இயக்கப் பார்வையும் நடையும் கதைக்கும் விதமும் மாறவில்லை அது ஆபத்து அதை மாத்துங்கோ என்று சொல்லுவாள் கானகி.

தன்னோட தோழிகளுக்கு எல்லாம் சொல்லிட்டு வந்த கானகியும் நானும் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தோம். நானும் கானகியும் மழையும் நடக்கத்தொடங்கினோம். எனது கையைப் பற்றி பிடித்த அவளின் கையை நான் பற்றிப் பிடித்தேன். அய்தாக  மழைத்துளிகள் பெய்துகொண்டிருக்க நானும் கானகியுமும் நெருக்கமாய் நடந்தோம்.

ஏன் நிலான் எங்களுக்கான விடுதலை இது தானோ என்றாள்.

என்னோட கால் மட்டுமில்ல எங்கட எல்லாற்ற காலும் பொய்க்கால் என்று உமக்குத் தெரியுமென்று நினைக்கிறன் வீட்ட போய் கதைப்பம் கானகி என்று சுருக்கமாய் சொன்னேன். ஏன் இப்பிடி பயப்பிடுகிறியள் என்று அவள் என்னை நக்கலாய் கேட்டிருக்க வேண்டும். அவள் என்னுடயை கைகளை பிடித்தபடியே நடந்து கொண்டிருந்தாள். இடையிடை தனது வலக்கையின் அஞ்சு விரல்களால் என் உள்ளங்கைக்கு ஜீவிதம் மீட்டாள். நேராக ஒரு சாப்பாட்டுக் கடைக்கே நடந்து போனோம்.

எனக்கொரு தேத்தண்ணி காணும் நிலான், சாப்பிட எதுவும் வேண்டாம், மழைத்துளி நனைத்த தனது தலைமுடியை துடைத்தபடி சொன்னாள். ஏதாவது சாப்பிடும். கடைக்கு வந்தனாங்கள் சாப்பிடாமல் போறது சரியில்லை, கடைக்காரன் வேற என்ன நினைப்பான் என்றேன். தனது முடியில் கிடந்த மழைத்துளிகளை விரல்களில் கொழுவி மடித்து எனது  முகத்தில் தெளித்து வேண்டாமடா செல்லக் கோபமாய் சொன்னாள். மேசையில் வைக்கப்பட்ட தேத்தண்ணியில் இருந்து ஆவி மேலெழுந்து அலைந்தபடியிருக்க சரியடி என்று சொன்னேன். கானகியால் மவுனம் கவரப்பட்டிருந்தது. மவுனத்தின் குளிர்மையை தேத்தண்ணி குடித்து சமப்படுத்திக் கொண்டேன். கானகியும் நானும் கடையை விட்டு வெளியில் வந்து பேருந்து நிலையத்தின் கட்டில் போய் இருந்தோம். அவளுக்கு பிடித்த ரம்புட்டான் பழத்தை போய் வாங்கிக்கொண்டு வந்தேன். வீட்ட போய் சாப்பிடுவோம் என்று சொன்னேன். ஒரு குழந்தை விருப்பமின்மையில் தலையாட்டுவதைப் போல கானகியும் செய்தாள். மழை சாடையாக துமிக்கிறது. வடிய மறுத்து நிலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் மேலே பருக்கள் தோன்றுவது போல மழைத்துளி விழுகிறது.

ஒரு குடை வாங்குவமே கானகி

ஏன் நிலான், மழை இப்ப ஒத்துவராதோ

இல்லை,உமக்கு மழையில சும்மா நனைஞ்சால காய்ச்சல் வரும் ஏற்கனவே  நீதிமன்றத்தில இருந்து நடந்த வரும் போதே நனைஞ்சிட்டீர்.

மழை தான், காய்ச்சல் தான். பூமி குளிரும் போது எனது உடம்பு சுடுகிறது அவ்வளவு தான் நிலான் என்றாள் கானகி.

சரி விடும், நீர் சொன்ன மாதிரி மழை தான், காய்ச்சல் தான் உமக்கு வந்தால் நான் பார்ப்பன் தானே என்னடா என்று சொன்னேன். கானகி வடிவின் அகராதியை நீர் போட்டு துடைப்பதைப் போல தனது சொண்டை எச்சிலால் நனைத்தாள். அவளுக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் தான் நெருப்புக் காய்ச்சல் வந்தது. நான் இரண்டு தடவைப் போய் பார்த்தனான். கடைசியாய் பார்க்கப்போகும் போது சந்திப்புக் கொட்டிலுக்கு அவளால் நடந்து வரமுடியவில்லை என்று இரண்டு பிள்ளையள் தான் தோளில போட்டு தூக்கிக் கொண்டு வந்தவே. கானகி உயிரோடு இருப்பதுவே கானல் என்று நம்புமளவுக்கு இருந்தாள். நான் வாங்கிக் கொண்டு போன இரண்டு பணிசையும் மெரிண்டா சோடாவையும் கதிரையில் வைத்துவிட்டு கானகியின் நெற்றியில் புறங்கையை வைத்து தொட்டுப் பார்த்தேன். கானகி கதிரையில் சாய்ந்து தலையை சரித்துக் கொண்டிருந்தாள். தன்னால் இருக்க முடியவில்லை என்றும் என்னைப் போகச்சொல்லியும் சொன்னாள். நான் கானகியைக் கூட்டிக்கொண்டு வந்த பிள்ளைகளிடம் கவனமாய் பாருங்கோ என்று கண் கலங்கிவிட்டேன். அண்ணா நாங்கள் பாப்பம் நீங்கள் கவலைப்படாதேங்கோ, 

அவளுக்கு மாறிடும் என்று நம்பிக்கையான வார்த்தைகளை அவர்கள் சொன்னார்கள். துயரத்தின் மேனியில் நம்பிக்கை சுயமானது. கானகி ஒரு படுக்கை விரிப்பால் போர்த்தியபடி அவர்களின் தோள்களில் தொங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பிய அந்தக் காட்சியின் நிழல் என்னை இன்றைக்கு வரை பீடித்திருக்கிறது. கானகியின் யானைக் கண்கள் அந்தக் காய்ச்சலில் தான் உலர்ந்து போனது. அவளின் சொண்டு வெடித்து இரத்தம் கசிகிறது. வறண்ட காட்டில் பூக்க வலுவற்ற செடியைப் போல யாழ்ப்பாண பேரூந்தில் ஏறியிருந்து மழையைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.


கிளிநொச்சி வருகிற பொழுது அவள் நல்ல நித்திரை. முறிகண்டியில் கூட அவளை நான் எழுப்பவில்லை. அவளுக்கு பிடிச்ச முறிகண்டி கச்சானை ஐம்பது ரூபாய்க்கு வாங்கினேன். மடியில் கிடந்த அவளுக்கு நித்திரை குழம்பாமல் காசை எடுத்துக் கொடுத்தேன். இயக்கச்சி தாண்டி பேருந்து போய்க் கொண்டிருக்கும் போது தான் எழும்பி தண்ணீ கேட்டு குடித்து வெளியில் பார்த்து பளைக்கு வந்திட்டமா என்று கேட்டாள். கிளிநொச்சியில என்னை எழுப்பி இருக்கலாமே நிலான் என்றாள். நானும் நித்திரை. இப்ப தான் கொஞ்சம் முதல் முழிச்சனான் என்று ஒரு மாதிரி சமாளித்துவிட்டேன். நிலான் பொய் சொல்லுகிறியள் என்று கானகி என் கன்னத்தை பிடித்துக் கிள்ளினாள். நான் ஓம் என்று ஒப்புக்கொண்டேன்.


தடுப்பில் இருந்து வெளியால் வந்தவுடன் தாய் தகப்பனைப் பார்ப்பது போல எல்லாப் போராளிகளும் கிளிநொச்சியை பார்க்க விரும்பும் உணர்வில் மீட்டமுடியாத ஆழமிக்க முதுசம் தோன்றிவிட்டது.
நீங்கள் வேணுமெண்டு தான் என்னை கிளிநொச்சியில எழுப்பவில்லை,

இல்லை கானகி நீர் சரியான நித்திரை அது தான் ...

சரியான நித்திரை என்றால் கிளிநொச்சியை பார்க்காமல் வந்திடலாமோ நிலான்.

அது சரி தான். அடுத்த தடவை போகும் போது உறுதியாய் பாப்பம்.
இதெல்லாம் மகிந்த செய்கிறதை விட மோசமான நடவடிக்கைகள். கிளிநொச்சியை பார்க்காமல் அதைக் கடந்து வந்ததே எனக்கு ஏதோ நெருடலாய் இருக்கு நிலான். நீங்கள் எழுப்பாதது பிழை. நான் முழிச்சு இருந்திருந்தால் கிளிநொச்சியில இறங்கி கொஞ்ச நேரம் இருந்திட்டு அடுத்த பேருந்தில போகலாம் என்று சொல்லியிருப்பன். நாங்கள் பளையில இறங்கி கிளிநொச்சிக்கு பேருந்து எடுப்பம். இந்த முடிவில ஏதாவது மாற்றங்கள் இருக்கா நிலான்.

இல்லை,
 ஒரு வார்த்தையில் தான் பதில் சொன்னேன். கானகி குறிபார்ப்பதைப் போல கண்களை சுருக்கி “நன்றி” என்று ஒரு வார்தையில் என்னைச் சுட்டாள். நான் சிரித்தேன். அவளும் சிரித்தாள் ஆனால் கோபம் இருந்தது. சில புத்தகங்களுக்கு பின்னால் குறிப்புகளுக்காக என்று விடப்பட்டிருக்கும் வெற்றுத்தாள்கள் போல அவளின் கோபம் பூரணமாய் விரவிக்கிடந்தது. அதில் எந்த உருக்களும் இல்லை. பேருந்து பளையில் நின்றது. சண்டைக்கு இறங்கும் வேகத்தோடு பேருந்தை விட்டு கீழே இறங்கி எனக்காக படிக்கட்டின் முன்னே நின்றாள். பேருந்து எங்களை விட்டு நகர்ந்தவுடன் கைகளைப் பிடித்து வீதியின் வலது பக்கம் கூட்டிச் செல்கிறாள். நிற்கும் கிளிநொச்சி பேரூந்தில் ஏறி பயணிக்கத் தொடங்குகிறோம். இனியொரு நித்திரை இல்லையென கானகி எனது கைகளைப் பிடித்துக் கொண்டு எல்லாவற்றையும் வெறித்துப் பார்க்கிறாள். வெறித்துப் பார்க்குமளவுக்கு தாயகம் அவள் கண்களில் உதிர்ந்து கொண்டே இருந்தது. பார்வையில் மட்டுமா வெறித்தல் தெறித்துவீழும். வீதிகளில் அபத்தங்கள் நடமாடுகின்றதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

தென்னை மரங்கள் மொட்டையாக நிலைத்து நிற்பதை காணும் அவளின் கண்கள் நிரம்பக் கானகிகளையும் நிலான்களையும் குருதி வழிய நடமாடவிட்டிருந்தது காலம் .அவள் என்னோடு எதுவும் கதைக்கவில்லை. பக்கத்தில் அமர்ந்திருக்கும் எனது கையை மட்டும் இறுகப்பற்றியிருக்கிறாள். ஆனையிறவு கடக்கும் பேருந்தின் சத்தத்தோடு அந்த வெளியில் கலக்கும் கானகியின் கண்ணீரும் தேம்பலும் காற்றின் பெருவிரலை தொலை தூரமாய் அரித்தது. அநீதியின் சாட்சியாய் வெற்றிச் சின்னங்கள் புத்தனோடு எழும்பியிருந்தது. உப்பளக்காற்றில் சிங்கள வைலாப் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது. துயரம் பெருக்கும் ஒரு பயணத்தை கண்கள் வெறிக்க செய்துக் கொண்டிருக்கும் கானகியின் மூச்சு தோல்வியின் தொங்கும் முகத்தில் பதிகிறது. நிறமிழந்த வானத்தில் அலைந்து திரியும் எஞ்சிய காலத்தின் கணந்தோறும் போராளிகளை எதிர்பார்க்கின்ற கடல் நாரைகளை பிசு பிசுக்கும் தன் கண்களை மூடிக் கும்பிட்டாள். பேருந்து கிளிநொச்சியை வந்தடைந்தது. கந்தக நெடி வீசும் நிமிர்ந்த கண்ணியத்தோடு பேருந்தில் இருந்து இறங்கி கடந்து சென்ற காலங்களில் நின்று கொண்டாள். சீழ் நிரம்பி உடையும் குதிக்கால் புண்ணின் வலியொன்றில் துடிக்கும் நிறை மாதக்கர்ப்பிணி போல உடல் நடுங்கி அழும் கானகியின் கண்ணீர், கனவுகளின் நிலத்தில் ரத்தநாளங்களைப் போல விழுகிறது. கனவின் உரத்த இலையுதிர்காலம் படுகளக் காயங்களில் இலையானைப் பறக்க விடுகிறது.

நிலான் எங்கட கிளிநொச்சி. . . நிலான் எங்கட கிளிநொச்சி என்று பெருமூச்சு எறிந்து அழுதாள். நான் அவளை குண்டின் புகை போல மூடிக்கொள்கிறேன். கானகி அழவேண்டாம். உங்களால ஏலாமல் இருக்கு. இப்ப அழுதால் கிளிநொச்சியை எங்களிட்ட தந்திடுவாங்களோ? அழவேண்டாம் கானகி என்று அவளை சமாதானப்படுத்தினேன். துயரம் நுழைந்து வெளியேற முடியாத  வலியின் பாழ்நிலமாய் அழுதுகொண்டே யாழ்ப்பாண பேருந்தில் நானும் கானகியும் ஏறினோம். எம்மைப் பின் தொடர்ந்து சூலகம் கருகாத கனவு உருமாற்றி வந்துகொண்டிருக்கிறது. தாகத்தின் நிரந்தரமான காலருகே நானும் கானகியும் கதைத்துக் கொண்டிருக்கும் போது கனவை் இன்னும் மோப்பம் பிடித்து வேட்கையோடு பாயப்பழகுகிறது எங்கட  கிளிநொச்சி.

Comments

  1. \\நான் அவளை குண்டின் புகை போல மூடிக்கொள்கிறேன். \\ அகரன்.. உன் எழுத்தில் அற்புதங்கள் சேர்ந்து கொண்டே போகின்றன...

    - நந்தன் ஶ்ரீதரன்

    ReplyDelete
  2. தாய் தகப்பனைப் பார்ப்பது போல எல்லாப் போராளிகளும் கிளிநொச்சியை பார்க்க விரும்பும் உணர்வில் ...............

    ReplyDelete
  3. பொய்க்கால் சேற்றில் அழுத்திக்கிடந்தது போல உங்கள் எழுத்தில் புதைந்துவிடச் செய்து விடுகிறீர்.

    ReplyDelete
  4. பொய்க்கால் சேற்றில் அழுத்திக்கிடந்தது போல உங்கள் எழுத்தில் புதைந்துவிடச் செய்து விடுகிறீர்.

    ReplyDelete
  5. தூக்கி சுமந்த அன்னையை போல மண்ணையும் நேசிக்கும் மனம், வேறு எந்த இனத்திற்கும் வாய்த்திருக்கவே இல்லை. அருமை சகோதரரே..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்