நமது வாழ்வின் மீது விதியின் சேட்டைகள் தொடர்கிறது

எனது  பூட்டி  நேற்றைக்கு தாயகத்தின் யாழ்ப்பாணத்தில் காலமாகிவிட்டாள். ஒரு உயிரின் வாழ்வின் பேறு அவன் தாயகத்தில் உயிர் பிரிவது. நினைவிருக்கும் காலம் தொட்டு பூட்டப்பிள்ளைகளான நாங்கள் அவளை பூ அம்மம்மா என்று தான் கூப்பிடுவோம். தினமும் நெற்றி நிறைந்த வீபூதியோடு பூக்கன்றுகளுக்கே நோகாதபடி பூக்களை ஆயும் அவளின் முகம் தான் எனக்கெல்லாம் விடிகாலையாக இருக்கிறது.

பூ அம்மம்மாவின் நிறைந்த சிரிப்பு எங்கள் குடும்பமே வணங்குகிற அம்மனைத் தான் பிரதிபலிக்கும். அவள் பாசமானவள். தேசத்தின் மாவீரனாகவும், போராளியாகவும் தனது  இரு பிள்ளைகளை விடுதலைப் போரில் பங்களிக்கச் செய்தவள். நான் முதன்முறையாக ஒரு மாவீரர் துயிலுமில்லத்திற்குள் இவளோடு இவளுக்குத் துணையாகத் தான் சென்றிருக்கிறேன். தனது மகனானவனின் நடுகல்லின் முன் நின்று நெஞ்சில் கைவைத்து கண்களில் நீர் சொரிய அழுத பூ அம்மம்மாவின் நனைந்து கிடந்த கண்கள் இன்று மூடிக்கிடக்கிறது. நமது வாழ்வின் மீது விதியின் சேட்டைகள் தொடர்கிறது. 

எத்தனையோ தொன்மம் நிறைந்த கதைகளை இரவு நெடுக சொல்லிக்கொண்டிருக்கும் அவளின் அந்த வெற்றிலை வாய் எனக்குள் துயரத்தை இன்னும் இன்னும் சிவக்கச் செய்கிறது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் களத்தின் வாழ்வுக்கு பிறகு சாவுகள் சலிப்பானது. ஆனால் சாவுகளுக்கும் தன்மைகள் இருக்கிறது. நேற்றைக்கு இறந்துபோனவள் எனது மூதாதை. அவள் சந்தித்த துயரம், சந்தித்த அனுபவம், சந்தித்த வாழ்க்கை, சந்தித்த போராட்ட கால வாழ்வு என்பது அளப்பெரியது. 

எப்போதும் பூ அம்மம்மாவைக் கண்டால் எனக்கு மனதளவில் ஒரு மரியாதையும் பயமும் பாசமும் இருக்கும். நான் கதைப்பதை ரசித்தபடி கேட்டுக்கொண்டிருபாள். தனது வெத்திலைப் பெட்டியிலிருந்து எல்லாவற்றையும் எடுத்து தருவாள். அவளின் கைகளிருக்கும் பாக்குவெட்டியால் கொட்டைப் பாக்கை சீவுகிற போது உள்ளங்கையில் விழுகிற சீவலைப் போல அவள் உதிர்ந்துவிட்டாள். எங்கள் குடும்பம் மீது அவளுக்கு இருந்த அன்பென்பது சொல்லியடங்காத பரப்பைக் கொண்டது. நாம் இனப்படுகொலைக் களத்தில் இருந்து மீண்டு யாழ்ப்பாணம் சென்ற பொழுது அவள் எம்மை அரவணைத்துக் கொண்ட கரங்களில் இருந்த ஏக்கம் இப்போதும் என்னைச் சுட்டுக்கொண்டிருக்கிறது. 

அவளின் வதனம் ஒரு அலங்காரமான அம்மன் சிலையை ஒத்துத் தான் எப்போதும் இருக்கும். நான் இன்று பார்க்கிற பூ அம்மம்மாவை இதற்கு முன் என்றும் பார்க்கவில்லை. அவளின் முகம் ஒரு மழை காலம் மேகம் போல கும்மிருட்டலோடு பேழைக்குள் கிடக்கிறது. அவள் வைக்கும் விபூதி குறியல்ல இப்போது அவள் நெற்றியில் கிடப்பது. அவள் எப்போதும் உடுத்தும் நூல் சீலையோடு வெற்றிலை போட்ட படி “வாடா, வந்து சாப்பிடு”  என்று என்னை அழைக்கும் அந்த அழைப்பில் நிகழும் ஒரு பசியாறல் இனி நிகழ வாய்ப்பில்லை. 


பூ அம்மம்மாவின் ஈமக் கிரியையில் நின்று பந்தம் பிடிக்க வேண்டிய  பேத்தியான எனது தாயையும் பூட்டனான என்னையும் புலம்பெயர்தல்  வாழ்வு தட்டிக்கழித்துவிட்டது. தமிழீழர்களாகிய நாம் வாழ்வதைப் போல நினைத்து வாழவேண்டிய துரதிஸ்டசாலிகள். அவளின் கைகளால் ஆக்கப்பட்ட மண்சட்டிக் குழம்பைப் போல ஆற அமர இருந்து சாப்பிடுவதற்கு இந்த வாழ்க்கை ருசியானது கிடையாது. அவள் கடைசியாக ஒரு மாதங்களுக்கு முன்னர் என்னோடு கதைத்தாள். அவளின் குரலில் கம்பீரம் நகர்ந்திருந்தது. கொஞ்சம் அவளே நடுங்குவதைப் போல உணர்ந்தேன். அந்த உரையாடலோடு நான் இனிமேல் அவளோடு பேச முடியாது என்று நினைத்திருக்கவில்லை. 


பூ அம்மம்மாவின் வீட்டுக்கு வெளியே நிற்கும் பூமரக் கன்றுகளில் இன்றைக்கு பூத்த பூக்கள் எல்லாமே அவளுக்கு மாலையாக போகிறது. இந்த  வாழ்க்கை எனக்கு மரணத்தை விட சலிப்பை தருகிறது. ஆனாலும் வாழவேண்டியிருக்கிறது. காலமாகிப் போய்விட்ட பூட்டிக்கும் எனக்கும் ஒரு கனவிருக்கிறது. அது இறந்து போன பூட்டியின் பிள்ளையின் கனவும் தான், ஒரு தேசத்தின் கனவும் தான். அதுவொரு தேசக் கனவு.   


Comments

  1. அனுதாபங்கள்!! கனவு மெய்ப்படட்டும்

    ReplyDelete
  2. அனுதாபங்கள்!! கனவு மெய்ப்படட்டும்

    ReplyDelete
  3. அம்மம்மாவின் மரணம் எபோதும் பல நினைவுகளைக் கிளறியபடியே இருக்கும். ஒவ்வொரு தமிழீழவரின் கனவும் இதுதான். கனவு மெய்ப்பட வேண்டும் என்பதே எம் ஆசையும் அகரமுதல்வன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்