மகிந்தவின் அதிகாரத் தோல்வி தமிழர்களின் அரசியல் பின்னடைவு – அகரமுதல்வன்

தமிழீழர்கள் மீதான இனப்படுகொலைக்கு பிறகான காலத்தில் கொழும்பில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு அரசியல்,அதிகார மாற்றங்களால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழ் மக்களுக்கு எந்தவொரு அனுகூலங்களும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. ஜனவரி 8ம் திகதி நடந்த அதிபர் தேர்தலில் மகிந்த அடைந்த தோல்வியானது நேரடியான பகைவுணர்வில் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருந்தாலும் அது அரசியல் ரீதியான பாதகமான முடிவாக மாறிவிட்டது. அரசியல் என்பது பல்வேறு சுழியோடித்தனங்கள் கொண்ட கூர்மையான நடவடிக்கை என்பதை தமிழர் தலைவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். நடந்த அதிபர் தேர்தலில் தமது ஆதரவை மைத்திரி அணிக்கு தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் வாக்குகளால் மைத்திரியை வெற்றியடையச் செய்தது. எந்தவொரு சிங்களரை கொழும்பு அரசியலில் வெற்றியடையச் செய்வதன் மூலமாயும் தமிழர்களுக்கு தீர்வு வந்திடப்போவதில்லை என்பதை தமிழ் தலைவர்கள் கடந்த கால வரலாறுகளின் வழி பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.

மகிந்த அதிபராக நீடிப்பதன் ஊடாக சர்வதேச ரீதியில் தமிழர்கள் பக்கம் இருந்த ஆதரவையும் நீதி கோரும் தீர்மானங்களையும் மிக லாவகமாக நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கலாம் என்ற போதிலும் அதிபர் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு அதனை எல்லாம் நிர்மூலம் செய்துவிட்டது. யானை தனது கையினால் தனக்கே மண் அள்ளிப் போட்டது போன்ற ஒரு செயலை மகிந்தவை தோற்கடித்ததன் மூலம் தமிழர்கள் தமது வாக்குகளினால் செய்து முடித்துவிட்டார்கள்.

ஈழப் பிரச்சனையில் உலக நாடுகளின் அணுகுமுறைகளில் இனப்படுகொலைக்கு பின்பான காலங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஆறுதலாக இருந்த போதும் அதனை சரிவரக் கையாளும் ஒரு தலைமை தமிழர்களிடம் இல்லாமல் இருப்பது இனிவரும் தமிழர்களின் அரசியலில் பல்வேறு அபாயங்களை ஏற்படுத்தி விடும். மகிந்த எனும் நேரடியான எதிரியை அதிகாரத்தில் இருந்து நீக்கிவிடவேண்டும் என்று தமிழ்க் கட்சியால் எடுக்கப்பட்ட தீர்மானமான முடிவு இன்றைக்கு ஐ.நாவினால் கொண்டுவரப்படவிருந்த போர்குற்ற தீர்மானத்தை கிட்டத்தட்ட இல்லாமல் செய்துவிட்டது. மைத்திரி அரசு உள்ளக விசாரணையை வலியுறுத்துவதோடு அதற்கான கால வரையறையை தெரிவிக்காமல் இழுத்தடிக்கப்போகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த மைத்திரி ஆட்சியின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் தமிழர்களை இனப்படுகொலை செய்த சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்சல் என்கிற ஒரு அதியுயர்ந்த பட்டத்தை வழங்கியதோடு மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் பொன்சேகா மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளின் வழக்குகளும் நீக்கம் செய்யப்பட்டது தான் ஆதாரமாக உள்ளது. சிறிலங்காவின் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க பிரதமராகுவதன் மூலம் தமிழர்களுக்கு ஒரு அமைதியான வாழ்வும் தீர்வும் கிடைத்துவிடுமென பொதுவான பேச்சுக்கள் உலவத்தொடங்கியிருப்பது கவலைக்குரியது. ரணில் பிரதமரானதன் மூலமும் தேசிய அரசாங்கம் அமைவதன் மூலமும் தமிழர்களுக்கு தீர்வு வந்துவிடாது மாறாக ரணிலின் அரசாங்கம் தமிழர்களுக்கு எஞ்சியுள்ள நீதி கோரும் உரிமையையும் தனது சிங்கள மற்றும் மேற்குலக ராஜதந்திரத்தினால் நசுக்கிவிடும் என்பது உறுதி.

தேசிய அரசாங்கத்தில் இதுவரைக்கும் எதிர்க்கட்சி அந்தஸ்து கோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எந்தவொரு பதிலும் ரணில் –மைத்திரி அரசினால் சொல்லப்படவில்லை. இதன் பின்னணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமையும் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். அமைந்திருக்கும் தேசிய அரசு என்பது சிங்கள தேசிய அரசு தான் என்பதனை தெரிந்து கொண்டும் ஏற்கமறுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஆசனங்கள் அனைத்தையும் துறந்து சாத்வீக போராட்ட வழியின் மூலம் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி போராடவேண்டும். இனப்படுகொலைக்கு உள்ளான மக்களுக்கு சிங்கள நீதியைத் தான் பெற்றுத்தர முடியும் என்று தமிழ் கட்சியும் எண்ணினால் அது தமிழ் மிதவாத கட்சிகளின் வரலாற்றின் இன்னுமொரு குற்றச்செயல் தான். மரணத்தை முதலீடு செய்து சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய தமிழீழ மக்களின் அரசியலை முன் எடுத்துச் செல்லும் தமிழ் அமைப்பு மக்களை ஏமாற்றுமாக இருந்தால் அது இன்னொரு இனப்படுகொலைக்கு நிகரான மகாபாதகம்.

ரணில் அரசு வழங்கும் சிங்கள நீதி என்பது இனப்படுகொலை குற்றச்சாட்டின் முக்கிய நபரான சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்சல் பட்டம் வழங்கியது தான். உள்ளக விசாரணையை மறுத்து சர்வதேச விசாரணையையும் பொதுவாக்கெடுப்பையும் நடத்தவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு சாத்வீக போராட்டங்களின் வாயிலாக அழுத்தம் கொடுக்கவேண்டுமே தவிர சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியாக இருப்பதில் எந்த பயனுமில்லை. தமிழர் பிரச்சனையை உலக நாடுகள் தமது நலன்களுக்குள்ளால் மட்டுமே பார்க்கிறது என்பதற்கு அமெரிக்காவின் தீர்மான ஒத்திவைப்புக்கள் ஆதரமானவையே. இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் வெளிவரவிருந்த போர்குற்ற தீர்மானம் மைத்திரி அரசின் கோரிக்கைக்கு ஏற்ப செப்டெம்பரில் கொண்டு வரப்படுவதாக அறிவித்திருந்தது. இந்த தீர்மான ஒத்திவைப்பை மகிந்த அதிபராக இருந்திருந்தால் அமெரிக்கா ஒருபோதும் இணங்கியிருக்காது என்பது எளிய உண்மை. மகிந்தவை சிறிலங்காவில் தோற்கடிப்புச் செய்ததன் மூலம் சர்வேதச அளவில் தமிழர்கள் தோல்வியடைந்தது தெள்ளத் தெளிவாகிவிட்டது.

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்குப் பதிலாக குறித்த விடயங்கள் தொடர்பான ஞாபகங்களை காலப் போக்கில் மறக்கச் செய்யும் முயற்சிகளையே மேற்கொள்ள வேண்டும் என சிங்கள ராஜதந்திரியான தயான் ஜயதிலக குறிப்பிட்டுள்ள கூற்றுத் தான் சிங்கள அதிகாரங்களின் ஒட்டுமொத்த குரல். தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு வெறுமென ராஜபக்சாக்கள் மட்டும் சொந்தமானவர்கள் இல்லை. கட்சி பேதங்கள் அற்று சித்தாந்த பேதங்கள் அற்று சிங்களவர்கள் என்கிற இனவாத கூட்டுணர்வோடு இயங்கிய அனைவரும் தான் இனப்படுகொலையாளிகள்.

சுதந்திரத்துக்கு பிறகான இலங்கையின் வரலாற்றில் இன்றுவரை தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் எந்தவொரு படுகொலைகளுக்கும் சிறிலங்காவின் நீதித்துறை தண்டனை வழங்கியது கிடையாது. தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை ஒரு தனிநபரினால் நிகழ்த்தப்பட்டது என்று என்று கூறுவதை விட அனைத்து சிங்கள அரசு இயந்திரத்தினதும் இனப்படுகொலையாக புரிந்துகொள்ளவேண்டும். சிங்கள நீதி என்பதே தமிழர்களுக்கு எதிரானது இன்னும் சொல்லப்போனால் சிங்கள பவுத்த நீதி என்பது இந்துக்களுக்கு எதிரானதாகவே சிங்கள ஆட்சி நிர்வாகங்களில் எழுதப்பட்டிருக்கிறது. ஆக தமிழர்கள் மீதான இனப்படுகொலை என்பது சிங்கள மக்கள் அனைவரினதும் ஒட்டுமொத்த மன விருப்பத்தின் வெளிப்பாடாகும். சிங்கள ராஜதந்திரம் இனப்படுகொலையை மறக்கச் செய்யும் நடவடிக்கையை முன் எடுக்கப் போவதாக அறிவித்திருக்கிற போதிலும் அது கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டுவிட்டதை தமிழ் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

உள்ளக விசாரணை என்கிற போலி விளையாட்டில் தமிழர்களின் நீதி கோரும் குரலை சிங்கள ஆட்சியாளர்கள் நசுக்க நினைப்பது மட்டுமில்லாமல் இனப்படுகொலையை ஒரு கனவு போல மறக்கவைக்க முயல்வது புதிய இனவாதத்தை உருத்திரட்டி நிற்கிறது. 1956இல் இருந்து 2009வரை நிகழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் குறித்து கிஞ்சித்தும் கவலையற்று இருந்த பண்டாரநாயக்காக்களும்,சேனநாயக்காக்களும், சந்திரிக்காக்களும், விக்கிரமசிங்காக்களும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு நீதி தேடித் தருவார்கள் என சொல்வதை உலகில் சுய அறிவுள்ள எவரும் நம்பமுடியாது.

கொழும்புக்கு அழுத்தம் தரும் அளவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியலை முன் எடுக்கவேண்டும் என்றால் அது தான் பெற்றிருக்கும் பத்துக்கு மேற்பட்ட ஆசனங்களை வைத்துக் கொண்டு எதிர்கட்சியாக இருந்து விடுவதால் மட்டும் நிகழ்ந்துவிடாது. தேர்தல் எவ்வளவு முக்கியமாக இருந்ததோ அவ்வளவுக்கு முக்கியமாக தேர்தலுக்கு பிறகான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் முக்கியமானது என்பதனை மறந்து விடக்கூடாது.உள்ளக விசாரணை என்பதில் புதிய அரசும் உறுதியாக இருப்பதாக தெரிவித்துவிட்ட நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் இருந்து விலகி ஒரு மாபெரும் கவனஈர்ப்பு சனநாயக புறக்கணிப்பை உலக்குக்கு நிகழ்த்திக் காட்டவேண்டும். அமெரிக்கா தனது அரசியல் நலனுக்கு ஏற்றபடியாக உள்ளக விசாரணைக்கு தாம் ஒத்துழைப்பதாக கூறியிருக்கும் இன்றைய நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்ன செய்யப் போகிறது. ஒடுக்கும் அரசின் சகோதர நிறுவனமாக ஈழப்பிரச்சனையில் அமெரிக்க தனது வேசத்தை மாற்றி அமைத்திருக்கும் நிலையில் இந்தச் சூழலை கையாள முடியாத அளவிற்கு ஈழத் தமிழர் அரசியலில் ஒரு வெறுமை தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் உருவாக்கப்பட்டுவிட்டது. ஜனவரி 8ம் திகதி நிகழ்ந்த மகிந்தவின் தோல்வியில் கட்டியெழுப்பப்பட்ட இந்த நிகழ்ச்சி நிரலில் மீண்டும் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்கள் தான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். 

தமிழர்களின் பிரச்சனையின் தீர்வானது அவர்களுக்கான தாயக விடுதலையே தவிர கொழும்பு அனுமதிக்கும் உரிமைகள் அல்ல என்பதனையும் நடந்து முடிந்த இரண்டு தேர்தலிலும் மகிந்தவின் தோல்வியானது தமிழர்களின் சர்வேதச முன்நகர்வில் அவர்களின் நீதி கோரும் போராட்டத்துக்கு பின் அடைவை ஏற்படுத்திவிட்டது. இரண்டு இனவாத சிங்களக் கட்சிகளும் இணைந்து இயங்கு சிங்கள தேசிய அரசில் தமிழர்களுக்கு தீர்வு வந்திடப்போவதில்லை. மீண்டும் தமிழர்கள் சாத்வீக வழியிலான போரட்டங்களை கையிலெடுத்து தமது மரணத்தை உலகின் முன் வைத்து இழைக்கப்பட்ட அநீதிக்கும் தமது விடுதலைக்குமாய் போராட விதி பணித்துக்கொண்டே இருக்கிறது.

Comments

  1. மேக்ஸ்வெல் மற்றும் உடலகம அறிக்கைகளை வைத்துக்கொண்டு தென்னாப்பிரிக்காவைப் பின்பற்றி தானும் உண்மை நீதி நல்லிணக்கம் என்ற போர்வையைப் போர்த்தப் போவதாக பௌத்த சிங்கள அதிகாரவர்க்கம் பகடையை உருட்டிவிட்டது. சம்பந்தன் கூட்டணியை நம்பி ஈழமக்கள் மோசம் போனது தான் மிச்சம்.


    ReplyDelete
  2. மகிந்தவின் அதிகாரத் தோல்வி தமிழர்களின் அரசியல் பின்னடைவு – அகரமுதல்வன் = ஆழ்ந்து படித்தேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு சு அகரமுதல்வன்
    இரண்டு இனவாத சிங்களக் கட்சிகளும் இணைந்து இயங்கு சிங்கள தேசிய அரசில் தமிழர்களுக்கு தீர்வு வந்திடப்போவதில்லை.

    ReplyDelete
  3. அருமையான அலசல் தீர்வு என்பது???

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்