புதிய மனம் புதிய எண்ணம் புதிய சிந்தனை - இனப்படுகொலைக்கு பின் களமும், சர்வதேசமும்

இனவாதம் என்பது வெறும் நபர்களிடம் தங்கி  நிற்பதல்ல அரசு எந்திரத்தில் தொடங்கி ஒட்டுமொத்த இனமொன்றின் கூட்டு உளவியலில் தினம் தினம் புதிய பரிமாணங்களை தன்னகத்தே ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.சிங்கள இனவாதமும் கொழும்பு ஆட்சியாளர்களும் தமிழர்கள் மீது நிகழ்த்திய படுகொலைகளானது கட்சி பேதங்களைத் தாண்டிய ஒற்றுமையில் நிகழ்த்தப்பட்டது. கல்ஓயா தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து நடாத்தபட்ட இனப்படுகொலையில் இருபெரும் பிரதான சிங்களக் கட்சிகள் இரண்டுமே பங்குவகித்தன  என்பது உலகறிந்த உண்மை. 

கொழும்பின் கூட்டு உளவியலில் தமிழர்கள் மீதான வெறுப்பும் அழித்தொழிப்பும் அவர்களின் அரசியலை தக்க வைக்க உதவுகிறது. அகிம்சை வழியிலான போராட்டங்களுக்கு செவி சாய்க்காத தமது கடந்த கால தலைவர்களின் வழியை பின் தொடரும் இன்றைய சிங்களத் தலைமைகள் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழித்த தத்தமது பங்குகளைப் போட்டி போட்டு அறிவிக்கும் சூழல் இப்போது தான் அதிகரித்துள்ளது. புலிகள் இயக்கத்தின் இராணுவத் தோல்வியோடு தமிழர்களின் விடுதலைக் கோரிக்கை முடிந்து போய்விட்டதாக சிங்களத் தலைவர்கள் எண்ணுவதைப் போலவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எண்ணுகிறது. புலிகளின் போராட்ட வடிவம் தோல்வியுற்றதே தவிர தமிழீழ விடுதலைக்கான கோரிக்கை தோல்வியுறவில்லை. 

இனப்படுகொலைக்குப் பின்பான இன்றைய காலத்தில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு அரசியல் திருப்பங்களை கையாளும் ஆளுமை தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருக்கிறதா என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியைக் கொண்டு சிறிலங்காவின் நாடாளுமன்றில் எதிர்க்கட்சியாக இருப்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதனை சாத்தியமாக்க விரும்புகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இருபெரும் பிரதான சிங்களக் கட்சிகள் சேர்ந்து அமைத்துக் கொண்ட சிங்கள பவுத்த தேசிய அரசின் நாடாளுமன்றில் எதிர்கட்சியாக இருந்து தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்று விடலாம் என நம்புவது நொங்கில் இருந்து இளநீர் குடிக்கலாம் என எண்ணுவதைப் போல தான்.

ரணில் மற்றும் மைத்திரி அரசின் எந்தவொரு உரைகளிலும் தமிழர்கள் தொடர்பான பிரச்சனை குறித்து பேசப்படாமல் இருப்பதையிட்டு எதிர்க்கட்சி எந்தவொரு அதிருப்தியையும் வெளியிடவில்லை. சிங்கள எதிர்கட்சித் தலைவர்கள் போல செயற்படுவேன் என்று சம்பந்தர் சொல்லியதை போல் செயற்படும் இடம் இதுவாகத்தான் இருக்கும். மேலும் நிகழ்ந்த இனப்படுகொலை குறித்தும் போர்குற்றம் குறித்தும் சர்வதேச அளவில் விசாரணை செய்யப்படுவதை மறுத்து உள்ளக விசாரணையை வலியுறுத்தும் சிங்களத்தின் கொலைதர்மத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்த நிலையை தமிழ் மக்களுக்கு ஏதுவானதொன்றாக எப்படி பார்க்கமுடியும்?  மகிந்தவின் தோல்வியை இன்னொரு சிங்களக் கட்சியைப் போலவே ஜனவரி -8புரட்சி என்று கூறினாலும் அதில் உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசுகளும் தான் வெற்றி அடைந்திருக்கின்றன.

உலகத்தில் இருக்கும் இரண்டு தமிழ் அரசுகளான தமிழ்நாட்டின் சட்டமன்றமும்,வடமாகாண சபையும் கொண்டு வந்த இனப்படுகொலை தீர்மானமானது தார்மீகமான சனநாயகத்தின் வழி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் ஒரு மனதாக கொண்டு வரப்பட்டு இருப்பது மிக முக்கியமானது. தமிழ்நாட்டின் போடா போடி அரசியல் சச்சரவுகளுக்குள் இல்லாமல் இந்த தீர்மானம் தற்போதைய தமிழக அரசினால் கொண்டுவரப்பட்டது உலகளவில் கவனம் பெற்றதை மறுக்க முடியாது. இப்படியான தீர்மானங்களின் ஊடாக நாம் எதனைப் பெற்றுவிட்டோம் என்கிற கேள்வி இருந்தாலும் இப்படியான தீர்மானங்கள் முக்கியமானவை என்பதில் வேறு கருத்துக்கள் இருக்கமுடியாது.

மகிந்தவின் காலத்தில் இருந்ததைப் போன்று நாட்டில் அடக்குமுறைகளும் அதிகார துஷ்பிரயோகங்களும் இல்லாததைப் போன்று நடந்து முடிந்த இரண்டு தேர்தல்களுக்கு பிறகு சிங்கள ஆட்சியாளர்கள் ஒரு பிம்பத்தை கட்ட முனைகிறார்கள். ஆனால் மிக எளிதான உதாரணம் வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது என்று மைத்திரி வடக்கில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது குறிப்பிட்டதை நினைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஆட்சி மாற்றம் என்பது வெறுமென மகிந்தவுக்கு எதிரானது அல்ல, அது தமிழர்களுக்கும் எதிரானது தான். மகிந்தவின் கடும்போக்கு எப்படியான விளைவுகளை மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறதோ அதைவிடவும் கடுமையான விளைவுகளை ரணில் –மைத்திரி அரசு ராஜாங்க ரீதியாக தமிழர்களுக்கு ஏற்படுத்தப்போகிறது.

நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வேதச விசாரணையைக் கூட சம்மதிக்க முடியாத, அழுத்தம் தர முயலாத புதிய ஆளும் கட்சியையும் எதிர்க்கட்சியையும் நாம் ஒரு சிறிலங்காவின் கட்சிகள் என்று தான் பார்க்கமுடியுமே தவிர ஆளும் கட்சியை சிங்களக் கட்சிகள் என்றும் எதிர்கட்சியை தமிழ் கட்சி என்று பார்க்கமுடியாத அவலம் நிகழ்ந்துள்ளது. சம்பந்தர் இருக்கும் இதே எதிர்கட்சி பொறுப்பில் இன்னொரு சிங்கள கட்சி இருந்தாலும் அவர்களும் உள்ளக விசாரணையையே வலியுறுத்துவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த எளிய உண்மை இதன் பின்னணியில்   ஒரு உண்மை பொருள் பொதிந்து கிடக்கிறது அதுவானது தமிழ் மக்கள் இந்த பிரச்சனைக்கு சிறிலங்காவின் அரசியல் யாப்பு அமைப்புக்குள் ஒரு தீர்வை பெற்றுவிடமுடியாது என்பது தான்.

தந்தை செல்வா முன்னிறுத்திய சமஸ்டிக்கும் சம்பந்தன் முன்னிறுத்தும் சமஸ்டிக்கும் என்ன வேறுபாடுகள் என்ன ஒற்றுமைகள் என்று வாக்களித்த மக்களுக்கே தெரியாமல் இருக்கிறது. மக்கள் சமஸ்டியை ஆதரித்து வாக்களித்தார்கள் என்று நம்புவது எல்லாம் பொய்க்கதை. இந்த வாக்குகள் வீடு எனும் சின்னத்துக்கு விழுந்ததே தவிர சமஸ்டி எனும் கொள்கைக்கு விழவில்லை. அரசியல் யதார்த்த ரீதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் மனவுலகில் இருந்து பிளவுபடுகிறது. இனப்படுகொலையில் காணமல்போனவர்கள் குறித்து மக்கள் முடிவு தெரியாமல் வாழ்வு முழுக்க அழுது கொண்டிருக்கும் நிலையில் வெள்ளை வானில் கடத்திச் சென்றவர்களே விசாரிக்கட்டும் என்று தலையாட்டிவிட்டு  இருப்பது கரட்டி ஓணானை தான் நினைவு படுத்துகிறது.

அமெரிக்கா இந்த ஆண்டின் மார்ச் மாதம் கொண்டுவரவிருந்த தீர்மானம் ஜனவரி-8ம் திகதி சாராம்ச ரீதியில் நீர்த்துப் போயிருந்தாலும் புதிய அரசின் கோரிக்கைக்கு ஏற்ப அது ஒத்திவைக்கப்பட்டது. செப்டெம்பர் கொண்டு வரப்படவிருக்கும் தீர்மானம் கிட்டத்தட்ட அமெரிக்காவின் வல்லரசு திருவிளையாடலில் இல்லாமல் கூட ஆக்கப்படும் என்பது வேறு கதை,ஆனால் அதனை நடைமுறைபடுத்த வேண்டும் என்று ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாய் திறக்கவில்லை. கடந்த வாரம் மீண்டும் இனப்படுகொலை மற்றும் போர்குற்ற சர்வதேச விசாரணை நிகழ்த்தப்படவேண்டும் என்று வடமாகாண சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பது குறித்து சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துத் தான் என்ன?

இந்த இனப்படுகொலையையும் விசாரணையையும் எப்படியும் அரசியல் வடிவமைத்துக் கொள்ளும். வல்லரசுகள் தங்களின் நோக்கு நிலையில் இருந்து இவ்வாறான பிரச்சனைகளை வரலாறு நெடுகவும் கையாண்டு இருக்கின்றன. குறிப்பாக இலங்கைத் தீவில் நிகழும் இத்தனையாண்டு கால இனப்பிரச்சனையில் வல்லரசுகளின் ஆதிக்கமும் அவர்களின் விருப்பமும் மாறி மாறி அரங்கேறியிருக்கின்றன. சிங்கள ராஜதந்திரமானது உலகத்தை தனது காலடியில் எப்போதும் எச்சில் வடித்து கிடக்க செய்யும்.  

இந்தியாவின் ஒரு பாஞ்சாலியை துயிலுரிந்தவர்களுக்காக மகாபாரதப் போரே நிகழ்ந்தது, ஒரே பெண்ணின் சேலை உரியப்பட்டதற்கு மூன்றே மாதத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். இது இந்தியா எனும் தேசத்தின் தர்மம். கல்லெறி தூரத்தில் இவ்வளவு லட்சம் மக்கள் எத்தனை பாஞ்சாலிகள் துயிலுரியப்பட்டார்கள்? இந்தியாவின் பெயரால் கொல்லப்படும் தமிழர்களை ஏன் இந்தியா புரிந்து கொள்ளவில்லை.? தமிழர்களுக்காய் அனுதாபப்படுவதை விட இந்தியாவிற்காய் அழிக்கப்படுகிறோம் என்கிற நீதியை புரிந்து கொள்ளுங்கள். பவுத்தம் இந்துக்களை கொலை செய்யும் ஒரு நவீன யுத்தமே இதுவெனக் கொள்ளுங்கள். சிங்கள ராஜதந்திரம் எப்போதும் தேரவாத பவுத்தத்தின் மகாவம்ச மனநிலையில் கட்டி எழுப்பப்பட்டிருகிறது. தமிழர்கள் இந்துக்கள் ஆகையால் கொல்வதில் பாவமில்லை என்ற கூற்றோடு அது தொடங்கப்படுகிறது. அந்தத் தீவே பவுத்தத்திற்கானது பவுத்தர்களுக்கானது என்கிறது சிங்கள மனோபாவம். "நாம் இந்தியர்களாகவும் இந்துக்களாகவும் இனம் காணப்பட்டு இந்தியர்களின் ஆயுதங்களாலேயே பவுத்தர்களால் கொல்லப்பட்ட இந்துக்கள்" என்கிற ஒரு குழப்பமான அரசியல் பின்னலை சிங்கள ராஜதந்திரம் ஏற்படுத்தியதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். 

“முதலில் ஓம் என்று சொல் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” எனும் சிங்களப் பழமொழி தான் அவர்களின் அரசியல் மேடைகளிலும் நிகழ்த்தப்படுகிறது. சர்வதேச நாடுகளின் பிராந்திய புவியியல் சந்தைப் போட்டிகளில் இன்னும் சிக்குண்டு கிடக்கும் இந்தப் பிரச்சனையை ராஜதந்திர மிக்க தமிழர்களின் போராட்டங்களால் மட்டுமே மீட்டு வெற்றியடையமுடியும். நாம் புதிய மனம்  புதிய எண்ணம் புதிய சிந்தனையோடு உலகத்தை அணுகவேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கிறோம்.

தமிழ்கட்சி தலைமைகளின் கொழும்புக்கு தொங்கும் வௌவால் அரசியல் காயங்களோடும் மரணங்களோடும் காணமல்போன வலிகளோடும் ஆயிரம் ஆயிரம் கல்லறைகளில் கிடக்கும் உயிர்களுக்கும் நீதியை பெற்றுத் தரும் என்று நம்புவது மூத்திரத்தை கயிறு என்று எண்ணுவதைப் போலாகிவிடும்.



Comments

  1. எல்லா அரசியல் வாசிககும் சுயநலம் உள்ளவர்கள் அவர்கள் நமக்காகவும் நம் மக்களுக்காகவும் குரல் மட்டுமே கொடுகின்ரனர் எந்த செயலிலும் இரங்குவதும் இல்லை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்