'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன்வைத்து ஒரு பகிரல் - கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்







கவிதை ஒருபோதும் தனது பிரதேசத் தன்மையைக் காவு கொடுத்து உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற வேண்டியதில்லை" போருக்குப் பின் அறியப்பட்ட ஜெர்மானியக் கவிஞர்களில் சிறந்தவரான பால் ஸெலான் ஒரு இலக்கியப் பரிசு ஏற்புரையில்,

"இழப்புகளுக்கு மத்தியில் அடையச் சாத்தியமுள்ளதாய் இருப்பதும், அண்மையிலிருப்பதும் இழக்கப்படாமலிருப்பதும் மொழி ஒன்றுதான்" என்றார்.

நம்பிக்கை, துயரமான பெருமூச்சு, உயிர்தழுவும் காதல், துடிதுடிக்கத் தொப்புள் கொடி அறுபட்ட வலி, கையறுநிலை, பதிலற்ற கேள்விகள், உயிர்ப்பின் சிறுவிதை - இப்படி அனைத்தையும் உள்ளடக்கியதாய் - 'பேரழிவு இலக்கியத்தின்' (Holocaust Literature) அங்கமானதொரு கவிதை வெளிப்பாடாய் தம்பி அகரமுதல்வனது 'அறம் வெல்லும் அஞ்சற்க' வெளிவந்துள்ளது.

மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் - என்கின்ற அருமையான வார்தைகள் வெறும் சொற்களாக மட்டுமே ஆகிவிடும் - அவற்றை இங்கு நான் பயன்படுத்தினால் –
ஏனென்றால் - முகத்தில் அறைந்து, மனசாட்சியை உலுக்குகின்ற அகரமுதல்வனது :

தொப்புள்கொடிகள்


" இப்பொழுது கவிதைகளை வாசிப்பதை
நிறுத்திவிட்டு அனைவரும்
படுகொலைகள் குறித்து கலைப்படுவோம்
கோணஸ்வரி கிருசாந்தினி இசைப்பிரியா
குருதி படிந்து கிடக்கும் வாய்ச் சொற்களில்
படுகொலைக்கான தடயங்கள் அமர்ந்திருக்கிறது
ஈழம் குறித்து கலந்துரையாடல் செய்வோம்
பாலச்சந்திரனுக்கு எழுதும் கவிதைகளில்
மூளை கலங்கும் அளவிற்கு
எதுகை மோனை
கைதட்டல்
கண்ணீர் சிந்தல்
விபரீத மவுனத்தில் வீச்சற்ற நடையில்
தேசம் குருதி ஆக
பிணங்களாய் மிதக்கும் ஆற்றிலிருந்து
காயப்பட்ட கால்களையும்
கவிதைகளையும்
கொண்டுவர
அவமானம் நிறைந்த முங்களோடு
தமிழ்நாடு எங்களை வரவேற்கிறது"

எனும் கவிதையைக் குற்றவுணர்வின்றிக் கடக்க முடிவது சுலபமல்ல.
இத்தொகுப்பை, முழுவதும் ஒரு ஏதிலியின் துயரமும், மனஉணர்வும், மீண்டெடுதலும், சுய இரக்கமற்ற போர்க் குணமும், 'பதாகைப் புரட்சியளர் களைப்' பலி கேட்கின்ற கள வீரர்களின் பக்கம் நிற்கின்ற நேர்மையும் வியாபித்திருக்க,
"நாங்கள் நிர்வாணமாக இருக்கிறோம்
நாங்கள் மரணத்தோடு இருக்கிறோம்
நாங்கள் தாகத்தோடு இருக்கிறோம்"

எனும் நம் ஈழத்துச் சகோதரனின் குரலை, ஒரு கவித்துவ ரசானுபவத்துடனோ, விமர்சன அளவுகோல்களுடனோ, எதிர்கொண்டு அதன் கவிதையியல் கூறுகள் குறித்து விதந்தோ, அல்லது இகழ்ந்தோ அணுக முடியாது.

இவை எந்தக் கைகளினால் எழுதப் பட்டிருக்கின்றன என்பது எனக்கு மிக முக்கியம் –

"ஊஞ்சலாடிய முற்றங்களில் முட்கம்பிகள் முளைக்க
அகதியெனும் பெயரோடு தொப்புள் கொடி மண்ணில்
போலிஸ் பதிவுகளை நிரப்பிக் கொண்டிருக்கிற
எனது விரலேறிப் பாய்கிறது அவமானத்தில் பூனை"

எனும் வதைமுகாம்களின் பூமியிலிருந்து, பெரும் போரவலத்திற்குப் பின்பு வந்த ஒரு கவிஞனின் விரல்களால் இது எழுதப்பட்டது எனும்போது - அறிவைத் தூக்கி எறிந்துவிட்டு, உணர்ச்சியைக் கட்டியணைத்து மட்டுமே இக்கவிதைகளை நான் உள்வாங்குவேன். அவ்வகையில் நான் ஒரு உணர்ச்சி வசப்படுகின்ற பாமரத்தி தான்!

உலகிலேயே தான் பேசுகின்ற தாய்மொழிக்காக அழிக்கப்பட்ட ஓரினம், நமது ஈழத் தமிழினம் தான். மிகக் கூர்மையாக இத் துயரை,
" கேரளத்திலிருந்து வந்தவன் மலையாளி
ஆந்திராவிலிருந்து வந்தவன் தெலுங்கன்
இப்படியாக
வேறு மொழி பேசுகின்ற அனைவரும்
மொழியின் பெயரால் அழைக்கப்பட
நாங்கள் அகதிகளென தூற்றப்படுகிறோம்"
என அகரமுதல்வன் சொல்வது உயிர் வலிதருகின்ற கவிதை அல்லவா?                                                                                                                                                          

இங்கு இலக்கியச் சூழலில் பொதுவாக ஒரு கருத்து முன்வைக்கப்படுவதுண்டு. கவிதை என்பது ஒரு பொதுக்கருத்தைப் பேசினால், அதன் கலைத் தன்மையை இழந்து, அது பிரச்சாரமாகிவிடுகின்றது என்பதே அது. ஈழ அவலம் குறித்த உணர்வாளர்கள், படைப்பாளிகள் பலரும் சந்திக்க நேர்கின்ற கருத்து மேற்சொன்னது.

பின்காலனிய நாடுகளுக்கு இருக்கின்ற பெரிய சுமையை ஊடறுத்து, Franz Fannan கூறியது போல, தனது சொந்த பண்பாட்டை மீள் கண்டுபிடிப்பிற்கு உள்ளாக வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இருந்தது. தமிழ்க்கவிதைக்கும் அதுமிகப் பெரிய கடப்பாடு. ஆனால் பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலக் கவிதைகளுக்கு இச்சுமை இல்லாத சுதந்திரத்தினால் பாலியல் சிக்கல்கள், தனிமனித உணர்வுகள், புராணிக மீட்டுறுவாக்கங்கள், இயற்கை, ஆன்மீகம், தொழில் நுட்ப முறைக்கேற்ப பரிசோதனை முயற்சிகள் எனப் பல தளங்களில் அவை பயணிக்கின்றன.


"மழைகள் பற்றி
வண்ணத்துப் பூச்சி பற்றி
பூஞ்சோலைகள் பற்றி
குற்றவுணர்வற்றுத் திரியும்
ஜாலச் சொற்கூடுகள்
மனச்சுமையற்று கவிதைகளாகக்பபடுகிறது"

என்கின்ற ஒரு ஈழக் கவிஞனுக்கு இச்சுதந்திரம் சாத்தியமில்லை.
படுகொலைக் களத்தில் பூர்வகுடிகள் நிராயுதபாணிகளாக்கப்பட்டு மரித்த அவலத்தின் குருதியற்று அவனது ஒரு சொல்லும் பிறப்பதில்லை.

இங்கிருக்கும் சில விமர்சக அறிவு ஜீவிகள் அவற்றை உணர்வெழுச்சிக் கவிதைகள் - Verse Donnes என்று முத்திரையிடலாம். ஆனால் கவிதை ஒருபோதும் தனது பிரதேசத் தன்மையைக் காவு கொடுத்து உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற வேண்டியதில்லை.

அதுபோலவே, கவிதையினுடைய இலக்கியத் தகுதிக்குச் சமூகப் பிரச்சனைய எடுத்துப் பேசுவதும் ஊறு விளைவிக்கிறது என்றொரு போலி வாதமும் இங்குண்டு. அவர்கள் ஆப்பிரிக்க, லத்தீன், அமெரிக்கக் கவிதைகளை எல்லாம் கொண்டாடுவார்கள் - அவை முன்வைக்கின்ற சமூகப் பிரச்சனைக்காக. ஆனால் ஈழம் என்று வருகையில் - அவை வெறும் புலம்பல் அல்லது போர் பற்றிய பதிவுகளே என்று ஒதுக்கிவிடும் போக்கும் இங்குண்டுதானே. வேடிக்கையைப் பாருங்கள் - அகம், புறம் என்கிற மரபிலே வந்தவர்கள் நாம். பின்னர் அகத்திலே மட்டுமே நின்றுவிட்டு, புறத்திற்குப் போகாமல், அப்படி முழுவதுமாகத் தன் இனம் குறித்துச் சினமும், துயரும், அவநம்பிக்கையும், அறமும், உறுதி எடுத்தலுமென ஒரு ஈழக் கவிஞன் எழுதினால், அது பிரச்சாரத் தொனி - எனவே இலக்கியத் தகுதியற்றது என்று பேசுபவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான் - தன்னுடைய ஊரை, இனத்தை, மொழியை, குலக்குழுவை முதன்மைப் படுத்தி, மொழிபெயர்க்கவியலாத அளவிற்குப் பிரதேசத் தன்மையோடு கூடிய ஒரு Tamil Sensibility இல் எழுதப்படுவது எவற்றிற்கும் குறைந்ததன்று.

"உன் கையை ஒரு தலையணையாகப் பயன்படுத்து
வானம் தன் மேகங்களைப் பயண்படுத்துகிறது
பூமி தன் மண்ணாங்கட்டிகளை.
வீழும் மரம்
தன் இலைகளை.
அது ஒன்றுதான் வழி.
தொலைவின்றிப் பாடலைக் கேட்பதற்கு -
காதில் நுழையாத அந்தப் பாடல்
காரணம் அது காதிலேயே இருக்கிறது.
என்றுமே திருப்பிச் சொல்லப்படதா ஒரே பாடல்.
ஒவ்வொருக்கும் தேவைப்படுகிறது
மொழிபெயர்க்கவியலா ஒரு பாடல்"

-அகரமுதல்வனின் இந்த அத்தனை கவிதைகளும் அப்படி மொழி பெயர்க்கவியலா பாடல்கள்தான், துயரமும், எழுச்சியும்தான். இன்னும் சொல்லப்போனால், அவை பிரதேசத்தன்மையையும் தாண்டி, ஆஷ்விட்சின் வதை முகாமையும், 1915இலும், 1922இலும் நடந்த ஆர்மீனியப் படுகொலைகளையும், பாலஸ்தீனத்தையும் நம்முன் நிறுத்துகின்றன.

கடவுளைக் கேள்வி கேட்கின்ற கவிதைகளும், போர் என்பது காதலையும் கொல்லும், சானு என்றொரு புலியின் குழந்தை என நான் கடக்கவியலாத பல கவிதைகள் இதில் உண்டு என்றாலும், மிக முக்கியமான கவிதையாக நான் குறிப்பிட விரும்புவது தலைவன் என்பவனும் தசைகளின் கூட்டுருவே எனும் கவிதையைத்தான். தமிழ்க் கவிதைப் பரப்பிலே குறிப்பிட்டுக் கொண்டாடப் படவேண்டிய மிகச்சிறந்த அரசியல் கவிதை இது.

'உயிர்த்தெழுதல்' எனும் நம்பிக்கையை முன்வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வோருக்கான, மிக நியாயமான தோலுரித்தலை இக்கவிதையின் மூலம் திடமாகத், தைரியமாகச் சொல்லியிருக்கிறார் தம்பி. நாம் மதித்துப் போற்றுகின்ற கொண்டாடுகின்ற தியாகங்களைச், அவற்றிற்குச் சொந்தமானவர்களை உரிய இடத்தில் கெளரவப் படுத்துவதோடு, நடப்பு நிதர்சனத்தைத், தம்மினத்தாருக்குச் சுட்டிக் காட்டி,

"உயிர்த்தெழ முடியாதபடிக்கு
உடல் துறைத்துக் கிழிபட்டு
சிலுவையொன்றில் அறையப்பட்டான்
மெக்கான இயேசு.
வன்முறைக்குட்பட்ட மானிடக் கையின்
பழிவாங்கலை
அல்லது புதிய வீரியத்தை
கிளர்ச்சியைப்
புரட்சியை
இல்லாதொழிக்கும் புதிய வியாதி உயிர்தெழல்.
இனியும் வெறும் கைகளோடு பயணிப்போம்.
இதுவரைக்கும் இருந்ததையும் இழந்து.
என்று சொல்கின்ற தம்பிக்கு ஒரு அன்பான புறங்கை முத்தம்.

லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ் எழுதிய,
கருப்பு இயேசுநாதர் எனும் பின்வரும் அரசியல் கவிதைக்கு நிகரானது அகரமுதல்வனது மேற்சொன்ன கவிதை.

"இயேசுவானவர்
ஒரு கருப்பராகத் திரும்பி வருவாரானால்
அது நல்லதல்ல.
அவர் சென்று பிராத்தனை செய்யமுடியாத
தேவாலங்கள்
இங்கு ஏராளமாக உள்ளன.
எவ்வளவு புனிதப்படுத்தப்பட்டாலும்
நீக்ரோக்களுக்கு
அங்கே வாயில்கள் மறுக்கப்படும்.
அங்கே இனம்தான் பெரிதே தவிர
சமயம் அல்ல.
ஆனால் - இதை மட்டும் உறுதியாகச் சொல்லாம்.
இயேசுவே நீர்
நிச்சயமாக மீண்டும்
சிலுவையில் அறையப்படுவீர்"

நமக்கான இயேசு திரும்பி வருவாரென்றால் நமது எதிரிகள் அழிக்கப்பட்டு நாம் சுதந்திரத்தின் சுடரை ஏற்றுவோமென்பதே நமது நம்பிக்கை என்றாலும், நிசர்சனத்தைச் சுட்டுகின்ற அகரமுதல்வனது இக்கவிதை இச்சூழலில் அதிமுக்கியமானது.

பிற ஈழத்துக் கவிஞர்களிடமிருந்து மாறுபடுகின்ற ஒரு அசலான மொழி, மிக முக்கியமாகக், கண்ணீர் தவிர்த்து, பெரும் வெடிகுண்டு வேண்டும் என்கின்ற உறுதி, தனது கவிதை மொழியின் உள்ளடக்கம் வரலாற்றிலிருந்து பிரித்தெடுக்க முடியாத இலக்கியத்தைப் பேச வேண்டுமென்கிற தெளிவு,
"அனைத்துக் கடவுளரும் திருவோட்டோடு நிற்க
ஆயிரம் கடவுளரை -
விக்கலெடுத்த அதே நாய் வாந்தி எடுத்தது"
எனும் துணிச்சானதொரு, காத்திர நடை - இவை தம்பி அரகமுதல்வனைத் தனித்துக் காண்பிக்கின்றன.

உருசியாவிலுள்ள காகசிய மலைத்தொடர்களில் ஓர் உச்சியில் அமைந்துள்ள மலைநாடுதான் தாகெசுதான். இம்மலைநாட்டின் பாவலன் இரசூல் கீ மசுதோவு, தனது 12ம் வயதில் கவிதை எழுதியவர். (அகரமுதல்வனது வயது 22) அவரது பாடல்களைப் பற்றி அவரது தந்தை "உனது பாடல்களில் ஒரே ஒரு சுருட்டைப் பற்றவைக்கும் அளவிற்குத்தான் நெருப்பு இருக்கிறது" என்றாராம்.
பின்னாளில், தாகசுதானில் நிலநடுக்கம் கண்ட நாட்களில் கூட இரசூலின் பாடல்களைக் கேட்பதற்காகக் கூட்டம் திரண்டதாம்.

அத்தகைய சக்தி இக்கவிதைகளுக்கும் உண்டு - சோர்வுற்று, சுயநல தமிழக அரசியல் மாயைகளில் சிக்கி அழல்வுற்ற, நம்பிக்கையற்றுக், கையறு நிலையில் இருக்கின்ற ஈழத்துச், சகோதர சகோதரர்களுக்கு, பெருந்துயர் முள்ளிவாய்க்காகலுக்குப் பிறகான பிடிமானத்தை, உத்வேகத்தை இவை தரும்.

வேடிக்கை பார்த்த என் போன்ற தமிழச்சிகளுக்கு குற்றவுணர்ச்சியையும், தீராத அவமானத்தையும், (கூடவே கொஞ்சம் சொரணையும்) தருகின்ற இவற்றிற்கும், எழுதிய தம்பிக்கும் –
ஒரு வார்த்தை -
இசைப்பிரியாவை, பாலச்சந்திரனைப்
பார்த்தபிறகு,
"எனக்கு இரக்கத்தின் மீது நம்பிக்கையில்லை".

Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்