காலத்தின் தேவை எதுவோ அது அகரமுதல்வனின் காட்டமான இலக்கியம் ஆகிறது - உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன்




தமிழீழத்துக்கு இன்று தேவைப்படும் இலக்கியம் எது என்னும் கேள்விக்கு “அறம் வெல்லும் அஞ்சற்க” என்னும் தனது நூலில் முன்னுரையில் அகரமுதல்வன் விடை தருகிறார்.

இலக்கிய வடிவத்திற்குள் பெரும் வெடிகுண்டு இருக்க வேண்டும் ,அது தான் சார்ந்த கனவுகளை, தாகங்களை அர்த்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தொடரும் நிராகரிப்புகளால் பின் தள்ளப்படும் தனது விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும்.

உணர்ச்சி மிக்க இப் பொழிச்சல் உரை இலக்கியம் முள்ளிவாய்க்கால் நெருப்பில் எரிந்தும் வெளியே தப்பிப்பாய்ந்து நெஞ்சின் கொப்பளங்களோடு துடி துடித்தும் இன்னும் இன்னும் விடுதலை தேடும் ஒரு போராளியின் வெறி பிடித்த கத்தல் ஆகி மாந்த நெஞ்சங்களின் ஆணி வேரை உலுக்குகிறது.

புதுப்பா (புதுக்கவிதை) எனப்படும் இலக்கியத்தை நான் பா (கவிதை) இலக்கியம் என ஒப்புவதில்லை. அதை ஒரு வீச்சான உரை இலக்கிய வடிவமாகவே பார்க்கிறேன். “உரை வீச்சு” என்று சாலை இளந்திரையன் அழைத்தார். “வரிப் பீச்சல்” என்று மாவிட்டபுரம் சச்சிதானந்தன் சொன்னார். நான் பொழிச்சல் என்கிறேன்.

அந்த வகையில் அகரமுதல்வனின் “அறம் வெல்லும் அஞ்சற்க” பொழிச்சல் இலக்கியம். ஒரு போராளியின் கையில் எழுதுகோல் இருந்தால் அது எழுதாது வெடிக்கும் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.

இந்த நூல் ஒரு விடுதலைப்போராட்டத்தின் முடிவு குறித்த ஒப்பாரி அல்ல ஒரு விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சி பற்றிய அறைகூவல் என்கிறார் அகரமுதல்வன்.

“ இனவெறி கர்ப்பம் தரித்துக் கொலைகளை பிரசவிக்கும் நிலம், ஊதிப்பெருத்த குழந்தையொன்றின் பிணத்தை உண்ணும் எறும்புகள் , குருதிப்பிரியர்களால் துயிலுரியப்பட்டவளின்  அவயங்களைக் கீறிய மிருகங்கள், தலைகள் கொய்யப்பட்ட முண்டங்கள், அகல விரியும் பெண்களின் குறியில் உயிரோடு துழாவிய துவக்குகள், கைகளில் விலங்குகளும் நகத் தசைகளில் ஊசிகளும் குத்தி நிற்க ரணங்களின் மேடுகளில் முளைவிடும் புற்களென வழியும் ரத்தங்கள், துன்பச் சிலுவையோடு அசைவுறும் காத்திருப்பு வாழ்வு” அகரமுதல்வனின் ”பொழிச்சல்” இலக்கியமாய்ச் சிங்கள அரசின் இன அழிப்புக் கொள்கையையும் கொலைவெறி மண்ணின் அடிமை வாழ்வையும் கொடிய துயரையும் பதிவு செய்கிறது.

ஆனால் இத்தனைக்கும் நடுவே அகரமுதல்வன் இன்னுந்தான் புயலாய் அதிர்கிறார். ஆவென்று வாய் பிளக்கும் சாவின் வாயில் மண்ணைப் போட்டு இயசுவின் துணிச்சலோடு உயிர்த்தெழுகிறார். தமிழீழ இனவிடுதலைப் போரின் தொடர்ச்சியைத் தன் எரிமலைப் படைப்பால் உறுதிசெய்கிறார்.

“ரத்த நிறத்திலொரு நிழல்
வன்மம் பீறிட்டு வழிய
நூற்றாண்டுகளுக்கு மேலாக படர்கிறது

இது பற்றி எழுதுவதாலோ
அல்லது பேசுவதாலோ
தசைகளை துளையிட துப்பாக்கிகள் தயார்
......................................
.........................................
ஆனாலும்
சிறுமைப்படும் மானுடத்தின்
கையாலாகாத வெளியொன்றில்
பற்றிப் படரும்
எனது குருதிக் கறைகளும்
கவிதைகளும்
ஒரு சுதந்திர சுவர்க்கத்திற்கு இட்டுச் செல்லும்
அடுத்த தலைமுறையை”

இது தான் அகரமுதல்வன் இலக்கியம். காலத்தின் தேவை எதுவோ அது அகரமுதல்வனின் காட்டமான இலக்கியம் ஆகிறது.

பூர்வீகப் புறாக்களை வந்தேறிய பூனைகள்
வாய்க்கு ருசியாக்கும்
வரலாறுகள் எம் மண்ணின் தொடர்கதை.

மாயக் கனவுகளில் மாய்ந்து போகிறதே
உயிர் நெய் ஊற்றிப் பற்ற வைத்த விடுதலை வேள்வி
நெஞ்சத்தில் எரியும் வன்மம்
அணையாமல் பார்க்க வேண்டும்

குரலெதுவும் கேளாத பெருவெளியில் அச்சத்திற்காய்
வாய்மூடும் வாழ்வை தவிர்ப்பது மேல்

மாயக்கனவினிக்க கண்ணுறங்கும் காலத்தை
காவலரண் ஒன்றை கருத்தரிக்கச் செலவு செய்
என்கிறார் அகரமுதல்வன்.

“இனியும் வெடிக்கக்கூடும் தற்கொலைக் குண்டு” என்னும் அகரமுதல்வனின் பொழிச்சல் இலக்கியம் ஆயிரம் தோல்விகள் நேரினும் விடுதலை அடையப்படும் வரை தமிழீழ மண்ணின் இனவிடுதலைப் போர் ஓயாது என இடி முழக்கம் செய்கிறது.

வெற்றிச் செருக்கு எதிரிக்கு வாய்த்துவிட
அசாதாரணமாய் வலிந்த போரை ஏவி 
இரவின் துயரை எம்மீது விரித்திருந்தான் 

அபாயநிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக
ஒன்றிப்போகும் தோற்றத்திற்கு அப்பாலும் 
எனது துப்பாக்கிகள் இயங்கினவே 

அதீதமாய் தாகமெடுத்த விடுதலை உயிருக்கு 
விடியல் இவ்வாறே தோன்றுமென 
நம்பிக்கை இன்னுமிருக்கின்றன.

இளையவன் பாலச்சந்திரன் படுகொலை நிகழ்வை அகரமுதல்வன் பதிவு செய்கிறார். இங்கும் விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சி குறித்த அவர் நம்பிக்கையே சிலிர்க்கிறது.

“ வலிந்து மூடிய உலக விழிகளுக்கு முன்பு
பிஸ்கட்கள் கொரித்திடும் சத்தத்தில்
வல்லூறுகள் குருவிக் குஞ்சை விருந்தாக்கியிருக்கின்றன

அவன் புகைப்படத்தையும்
எம் எலும்புகளையும் பரப்பி வைத்து
பிரபஞ்ச மனச்சாட்சியிடம் நீதி தேடும் முன்பு

உறுதிப்படுத்தியே தீரவேண்டும்
தேசத்தின் எல்லைச் சுவர்களை பலப்படுத்த
இன்னுமிருக்கின்றன
நாங்களாய் எங்கள் சவங்கள்” .

அகரமுதல்வனின் ஒவ்வொரு பொழிச்சலும் அன்னை மண் மீட்புக்கான தொடர்பாய்ச்சலே அன்றி வேறில்லை.

என்னிடமிருந்து உறிஞ்சப்பட்ட
இன்பங்கள்
இன்னும் மிச்சமிருக்கின்றன

துருப்பிடித்த துப்பாக்கி ரவைகளில்
குரூர வலியையும் வெறுமையையும்
போரில் தோண்டிய
பதுங்குகுழியில் மறைத்து வைத்து
அழிக்கப்பட்டவற்றை கட்டியெழுப்ப
முனைகிறேன். . . .
மீண்டும்
பருமனான எனது தேசம் நோக்கி நடந்து
மகிழ்வாக வீழலாம் .

“மகிழ்வாக வீழ்தல்” தமிழீழ விடுதலைக்கான மன உறுதி. மண்வாழ வீழ்வதை எத்தினை மகிழ்ச்சியான நிகழ்வாகத் தமிழீழப் போராளி கருதுகிறான். இந்த மகிழ்ச்சி வழிவழி வந்த மாவீரர் மரபு.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்பதையும் தமிழீழ விடுதலைப் போர் முடங்கிப் போகாது என்பதையும் அகரமுதல்வன் இலக்கியம் முரசுகொட்டுகிறது.

“ராசதந்திரம் பற்றிய ஒரு தோல்வி” என்னும் பொழிச்சலில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியை மேலும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

கனவுகள் தீராமல்
நகரும் இப்பொழுதில்
நான் நோக்கி நடக்கும் தேசம்
எனக்கானதே

தோல்வியை ஒப்புக்கொண்டு
வெற்றியின் அருகில் செல்ல
பிரபஞ்சத் தந்திரங்களை
கையாளும் வல்லமை வந்து சேர்
என்னிடத்தில் .

அகவை இருபத்து மூன்றுதான் ஆகிறது, இளமையின் தொடக்கத்தில் இருக்கிறார் அகரமுதல்வன். அகவை மிஞ்சிய அவர் ஆற்றலை “அறம் வெல்லும் அஞ்சற்க” நூலில் பார்க்கிறோம். அணுவைப் போல் சிறியவராக இருக்கிறார்.

ஆனால் நூலின் முன்னுரையில் அவரே கூறி இருப்பது போல் அவர் இலக்கிய வடிவத்திற்குள் பெரும் வெடிகுண்டு இருக்கிறது.

சிறகு விரித்த ஒரு விடுதலைப் பறவையின் இலக்கிய சிலிர்ப்பு அறம் வெல்லும் அஞ்சற்க.

காசி ஆனந்தன் 
தமிழகம்
01.06.2015





Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்