சடங்கார்த்தமான ஆண் கவிதைகளை மீறும் படைப்பு - குட்டி ரேவதி










பெரும்பாலான ஆண் கவிஞர்களின் படைப்புகள் சலிப்பைத் தருகின்றன,அவர்களின் தொகுப்புகள் சுய நொய்மையின் பக்கங்களாக இருக்கின்றன. அல்லது அழகியலின் உபாசகனாக இருக்கின்றன. அப்படியான அழகியலுக்கும் அவர்களின் நிலக்காட்சிக்கும் தொடர்பே இருக்காது. உயிர்வாழும் சமாதிகளான அவர்களின் கவி குருக்கள் வகுத்த எல்லைகளைத் தாண்டி ஒரு சொல் கூட வெளியேறாமல் அதையே காவல் காக்கிறார்கள்.

எங்களை அரசியல் எழுதச்சொல்லாதீர்கள், அரசியல் எழுதுபவன் கவிஞன் அல்லன் என்று குழந்தைகளாகி அடம்பிடிப்பார்கள். சொற்களை உற்பத்தி செய்யாமல், காலங்காலமாக எழுதப்பட்டதையே வாந்தி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். பொதுவெளிக்குள் வந்து வாள் வீசும் திராணியற்றுசுயவெளிக்குள்ளேயே சுயமைதுனம் செய்து கொள்ளும் கவிதைகளும், கவி குருக்களின் முதுகினை சொறிந்து கொடுத்துக்கொள்ளும் கவிதைகளுமே நிறைந்து இருக்கின்றன. 

குறிப்பாக, மனித வாழ்வின் அறம் பற்றிய எந்தத் தன்னுணர்வும் இன்றியே சொற்களும் படிமங்களும் விரயம் செய்யப்படுகின்றன.  
கவிதைத்தொகுப்பின் வெளியீட்டுச் சடங்கார்த்தம் துக்கத்தைக் கொண்டாடுவதாகவே இருக்கிறது. மாறாக, பெண்களின் கவிதைப் படைப்புகள் உற்சாகம், கொண்டாட்டம், சமூகப்பங்கீடு, மொழியின் உச்சபட்ச நயம் என வெளிச்சம் பெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், எந்த வருடத்தை விடவும் இந்த வருடம் அதிக எண்ணிக்கையில், கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. 

எந்த இலக்கிய வடிவத்தை விடவும் அதிகமும் நெருக்கமாக 'கவிதையே' இருந்து கொண்டிருக்கிறது.சென்ற சில வருடங்களில் தமிழகத்தின் போராட்டங்கள், மரண தண்டனைக்கு எதிரான மக்கள் போராட்டம், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மீனவப்பெண்கள் போராட்டம், ஈழ இனப்படுகொலைக்கு எதிரான மாணவப் போராட்டம் என சமூகத்தின் எழுச்சி சீரியதிசையைப் பெற்றிருந்தது.

மொழியின் புழக்கமும், கலைச்சொற்களும், உணர்வுகளும் முழுமையுமாகத் திசைமாறியுள்ளன. இது காறும் எழுதி வந்த இலக்கியப்படைப்பாளிகளுக்கு, அதிலும் இப்போராட்டங்களின் நோக்கங்களையும் சமூக முன்னெடுப்புகளையும் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு, இப்பொழுது எழுந்துள்ள கலைச்செயல்பாட்டு எழுச்சி முற்றிலும் அந்நியமாக இருக்க, எப்பொழுதும் போல சனாதனம் காக்கும் பொதுமெளனம் காக்கின்றனர். இவ்விலக்கியங்கள் குறித்துப் பேசாது இருக்கின்றனர். அல்லது, மேடைகளில் பொருத்தமில்லாத உரைகளையும் புளகாங்கிதங்களையும் கொள்கின்றனர்.

எப்பொழுதுமே, ஈழத்திலிருந்து வரும் கவிதைகள் தமிழகக்கவிதை வெளியில் கவித்துவப்பாய்ச்சலுடன் தம் தாக்கத்தை நிகழ்த்திய வண்ணம் இருந்திருக்கின்றன. இப்பொழுது அவர்களிடம் உள்ளது மொழியும், கவிதையும், உணர்வுகளுமே. இந்நிலையில், அதைப் படைப்புகளாக்கி, அதன் வழியாக உணர்வுகளைப் போற்றிப்பாதுகாக்கும் நோக்கத்துடன் அவர்கள் கவிதை இன்னும் இன்னும் தீவிரப்பட்டுக்கொண்டே இருப்பதையும் உணரமுடிகிறது.

இந்நிலையில், அகரமுதல்வன் தன் மூன்றாம் தொகுப்பான, 'அறம் வெல்லும் அஞ்சற்க' என்ற தொகுப்புடன் வெளி வந்துள்ளார். 
முதல் தொகுப்பில் இடம்பெற்றிருந்த 'தன்னிலை' நிலையிலிருந்து, இந்த  தொகுப்பில் பொதுநிலை நோக்கிக் கவிதைகள் நகர்ந்திருப்பதை அகரமுதல்வனின் ஒவ்வொரு கவிதை வாசிக்கும் போதும் உணர்ந்தேன். இத்தொகுப்பிலும் எல்லாக் கவிதைகளிலும் கவிஞன் தன் சுயம் சார்ந்த, தனிமனித குரல்களை முன் வைத்த பொழுதும் அவை சுயத்தினை கழிவிரக்கத்துடன் நோக்கும் கவிதைகளாக இல்லவே இல்லை.

கடலுக்குள் நீந்தும் மரணங்கள் மூன்றாவது தடவை கொலை செய்யும் ஜெனெரல் என்ற முதல் இரண்டு கவிதைகளும் முதல் வாசிப்பிலேயே மனதில் தம்மைத் தைத்துக்கொள்கின்றன.

கடலுக்குள் நீந்தும் மரணங்கள்

ஒரு வேளை நீலக் கடல்கள்
மரணத்தின் மேல் பரவியிருக்கலாம்
கடல்கள் தன் பிள்ளைகளைத்
தின்கிறது
ஏனெனில் கரைகளிலிருந்து
கடலுக்கு செல்லும்
அப்பாவின் வருகை நிச்சயமற்றது
இந்தக் கடல் மகிழ்ச்சியானதல்ல
வலைகளை ஏற்றிச் செல்லும்
படகுகள்
திடீரென சுற்றிவளைக்கப்பட்டு
ஏற்கனவே நிம்மதியிழக்கச்
செய்ததுவாய்
அவலங்களோடு கரையேறுகின்றன
இதற்கு மேல் இனியும் நிகழாதுவென
வாக்குறுதி நட்பு நாட்டிலிருந்து வர
அதுபாட்டுக்கு தொடரப்படுகிறது
நித்திய கொலைகார்களின்
எல்லையேறும் சாக்கினால்
வலை உலர்த்தும் இடத்திலிருந்து
அப்பாவின் வருகைக்காய் வலை
வீசியிருக்கும்
குழந்தையொன்று விரும்பி உண்ணும்
மீன்களின் தசைகளில்
உருமாறியிருக்கும்
அந்த மீனவனின் கண்களும்
கதறல்களும்
எமக்குத் தெரியாமலும் கேட்காமலும்
போனதுவாய்.

வழக்கத்திற்கு அதிகமாக, தொகுப்பைக் கிளறி நோக்கும் விமர்சனப்பாங்குடன் தாம் ஈழக்கவிதைகளையும் நோக்க விழைகிறது மனம். ஏனெனில், இங்கே எடுத்துக்கொண்ட கவிதைக்கருக்கள், அரசியலின் பெயரால் வஞ்சிக்கப்பட்ட இனம் குறித்தது. அதனால் இன்னும் கூரிய நோக்குடன், பெருத்த அக்கறையுடன் எழுத வேண்டியிருக்கிறது, விமர்சிக்கவேண்டியிருக்கிறது, விரல் இடைவெளிக்கிடையே வரிகளும் பொருளும் நழுவிவிடாமல் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டியிருக்கிறது. 

ஏற்கெனவே, நான் குறிப்பிட்டது போல, நம்மிடம் மிஞ்சியிருப்பவை உயிர்கள் கூட அல்ல, இக்கவிதைகள் மட்டுமே. தமிழில், கவிதைகள் சிறுகதைகளைப் போல எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அல்லது, அங்கதம் செய்யும் துணுக்குகள் போல. அல்லது காதலை, காதலியின் வடிவில் இறக்கி வைக்கும் பெருமூச்சுகள், கவிதைகள் என்று சொல்லப்படுகின்றன. மிடில் மேகசின்களில் அவை பிரசுரிக்கப்படுகின்றன. கவிதைகள் என்று வியக்கப்படுகின்றன. போற்றப்படுகின்றன. இந்நிலையில், கவிதை, மூச்சுமுட்ட அழுத்திவைக்கப்பட்டிருக்கும் இடங்களைத் தேடிச்சென்று எழுதுவதும், மெனக்கெடுவதும் அருகிப்போய்விட்டது.

இதை யாரேனும் செய்கிறார், எப்போதேனும் செய்கிறார். அவரும் தாம் எழுதியவை கவிதை என்று அங்கீகரிக்கப்படாத சமூகத்தில், உடனே கவிதைகளைக் கைவிட்டு விட்டு கத்தரிக்காய் விற்கப் போய்விடுகிறார். இந்நிலையில் அகரமுதல்வன் தொடரும் முயற்சிகளுடனும், மூர்க்கத்துடனுமான இத்தொகுப்புடன் வந்திருப்பதாய்த் தோன்றுகிறது.
பலமுறை, நான் அங்கலாய்த்துக்கொண்டிருக்கிறேன். 

கவிதையியல் குறித்த அறிவும், விழிப்பும் அற்று கவிதைகளைத் தொடர்ந்து எழுதிக்குவிக்கும் ஒரு சமூகம் தமிழ்ச்சமூகத்தான் இருக்கவேண்டும். அதே போல, ஒரு கவிஞரின் கவிதைகளை விமர்சனம் என்ற பெயரில் இன்னொரு கவிஞரே எழுதித் தீட்டுவதும், தீய்ப்பதும், வியப்பதும், சொரிந்துகொடுத்துக்கொள்வதும் இங்கே தான் நடக்கும்.
சின்னஞ்சிறிய சிட்டுக்குருவி மூளையைக்கொண்டு, ஒரு மனிதன் கவிஞன் என்ற பெயரில், இன்னொரு கவிஞனின் எழுத்தை விமர்சிக்கும் போதும் பாராட்டும் போதும், உரக்கச்சிரித்து அந்த ஸ்பீக்கர் சத்தத்தைக் கடந்து போவதைத் தவிர எனக்கும் வேறு வழியில்லை. 

ஆனால், கவிதைகள் எழுதப்படும் விதத்தில், கவித்துவ இயலின் விதிகளை எங்கேயேனும் ஒருவன் தாண்டிக்குதித்தே ஆகவேண்டும். அது இயலவும் கூடும். கவிஞன் தான் தேர்ந்தெடுத்துக்கொண்ட திசையில் அயராமல் பயணிக்கும் பொழுது, புதிய கவித்துவ இயலைக் கண்டடைந்துவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இந்த எழுச்சியை, முயற்சியை சில தொகுப்புகளில் ஆங்காங்கே என்னால் கண்டறிந்துவிட முடிகிறது. அதே போன்ற ஒரு தொகுப்பாக, எழுச்சிக்கான அதிகச் சந்தர்ப்பங்களை இத்தொகுப்பில் காணமுடிந்தது.

இது வரையிலான, நாம் அறிந்த ஈழம் குறித்தான கவிதைகளின் படைப்புவெளியையும் கற்பனை வெளியையும் விரித்திருக்கிறார், அகரமுதல்வன். 
//துயரங்களுக்குச் சொந்தமான தீவொன்றில் 
பிறந்தது பற்றி கவிதையெழுதுவது 
தனது இதயத்தைத் தானே சுடுவதாகும் 
அல்லது கண்களைப் பிதுக்கித் தின்பது போல// 

பல கவிதைகளில் இனப்படுகொலையின் துயரக்குறியீடுகள் விரக்தியானவையாக இல்லாமல், உண்மையைப் பரிதவிப்புடன் சொல்லாமல் அதற்கே உரிய நீதியின் உணர்வுடன் முன்வைப்பதை நான் வெகுவாகக் கவனித்தேன். அதுவே, கவிதைகளுக்குள் என்னையும் ஒரு போராளியாக ஆக்கியது. 

சமீபத்தில் ஒரு நூலின் முன்னுரையில் இப்படியான வாசகத்தைக் கண்டேன். 'எந்தக்குறியீடும் இல்லாமல், படிமச்சிக்கலும் இல்லாமல் நூல் யதார்த்தமாக, எளிதாக வாசிக்க ஏதுவாக இருப்பதால் ஒரு சிறந்த நூலாக இருக்கிறது' என்று கண்டேன். இந்தக் காலத்தின் சாபங்கள் போல இருந்தன அந்த வரிகள். குறியீடு என்பது நீதியின் உரத்த குரலின் செப்பம், என்பதன் அறியாமையையும், அந்தப் பேதமையைப் பாராட்டிக்கொள்ளும் அறிவையும் ஒரு சேரக்கண்டேன். 

படிமங்கள், நேரடியான இரக்கமும், கழிவிரக்கமும், பரிவும் வேண்டாது, துப்பாக்கியின் முன் நெஞ்சை நிமிர்த்தும் வீரச்செயல். இதையெல்லாம் வேண்டாத சமூகம் இலக்கியத்தை எப்படிப் பார்க்கும் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. இதற்குப் பதில் அளிக்கும்படியாகவும் ஒரு கவிதை இருக்கிறது. 

தலைமுறைக்கொலைகள்
//இதனால் தான் கவிதையில் தொடரும் 
அமைதிக்குள் தொடர்ந்து முற்றும் 
வன்மத்தினால் 
ஒரு மரண ஓசை ஒலிக்கிறது//

கவிதை வெளியெங்கும், அரசியல் வெளிகளைப் புரிந்து கொண்டு, மனிதமனம் எப்படி உள்வாங்கவேண்டும் என்பதை நேர்செய்யும் வகையில் நிறைய படிமங்களும், புரிதல்களின் மொழியும் நிறைந்திருப்பதால் அரசியல் தெளிவைக் கொடுக்கின்றன. அந்தக்காலப் பொழுதையும், நிலக்காட்சிகளையும், மனிதர்களின் உணர்வுகளையும் கோர்த்துக்கொணர்ந்து அறம் என்பதை கவிதை தோறும் விதைத்திருக்கிறார்.

கவிதையின் தற்கொலை

//எப்பொழுதோ சந்தித்துக்கொண்டது 
வெய்யிற் பாம்புகள் தார்ச்சாலையில் 
வளைந்தோடிய போதோ 
கறுத்திருந்த மேகநதி 
தன் வியர்வைகளை பொழிந்த போதோ 
யாருமே அறிந்திராத சூட்சுமத்தின் 
பார்வையில் 
எனதுடல் நிலத்தை உழுதபடியிருந்தாய்
சிவந்திருந்த உதட்டின் ரேகைகளில் 
ஜீவிதத்தின் பெருகும் துயர் முற்றுப்பெற்றிருந்தது 
காதலானது ஜீவிதத்தின் நிறைவு 
காதலனது அன்பின் வன்முறை 
இப்போது நீயில்லையென்றால் 
சொற்களைத் தகர்த்து 
தன்னையே மாய்க்கும் இக்கவிதை//

இது போன்று ஆங்காங்கே அழகான உயிர்ப்பான காதல் கவிதைகள் தென்படுவது மனதை ஆசுவாசப்படுத்துகிறது. மேலும், காதலை, இதுவரையிலும் நாம் கேட்டுக் கேட்டுப்புளித்துப் போன, சலிப்பூட்டாத சொற்களால் அவர் கவிதையாக்குகிறார் என்பதும் இக்கவிதைகளின் சிறப்பு.

ஈழ நிலப்புலத்தில் இருந்து வந்தவர்களின் கவிதைச் சொற்கட்டு, எப்பொழுதுமே நமக்குப் புத்தம் புதிதானதாகத்தான் இருக்கிறது. 

இன்னும் எத்தனை தடவை இவர்களைக் கொல்ல முடியும்

//இந்நூற்றாண்டை நிரப்பிய 
துயரம் அவர்களுடையதே 
மேலும் மேலும் பிரபஞ்ச வெளியெங்கும் 
புதைத்துக்கொள்ள போதுமானவரை 
அவர்களிடம் சவங்கள் 
ஏனெனில் அவர்களுக்கான நாடு 
அவர்களிடமில்லை 
ஒரு புதிய சோகம் மிகு இன அழிப்பு போல 
மரண அறிவிப்புகள் படகுகளில் தொங்குகின்றன 
ஆயினும் பெயர் தெரியாத தீவுகளிற்கு 
கடலலையில் உப்பிப்போக 
தீர்மானிக்கப்பட்டவர்களாக 
நிலமற்ற இனம் பயணிக்கிறது. 
எழுந்து ஆர்ப்பரிக்கும் அலைகளிடம் 
கண்ணீர் விசும்பிக் கேட்கிறது 
இந்தக்கொடிய பயணம் எப்போது முடியுமென 
ஒரு குழந்தை 
ஏதுமறியா இக்குழந்தை எப்படியறியும்
தன்னை இரக்கப்பட 
இங்கு யாருமில்லையென 
முன்னர் படகொன்றில் புகலிடம் தேடிக் 
காணாமல் போனவர்களின் குருதிகள் 
அலை அலையாய் எழுவதாய்த் தோன்றும் 
கடல்வெளியில் சவக்குழி மணம் 
எங்கும் நீந்த அவலப்பாடலைத் 
தேம்பித்தேம்பிப் பாடுகிறார்கள் ஆதிமொழியில் 
நிச்சயம் இவர்களும் ஈழத்தமிழரே.// 

பிரிவு சொன்ன வாதை 

யுகங்களைக் கடந்திருக்கிறேன் 
என் வார்த்தைகளுக்கு 
நீ செவிட்டுத்தனங்களைப்
பரிசளிக்கும் போதெல்லாம் 
மவுனம் பூண்ட நீர்க்குட்டையொன்றில் 
விரும்பி வீழும் பூவொன்றின் வனப்பில்
உன் பெயர் கேட்பது இயற்கையெனக்கு 
உன் விழியிமைகளின் இடுக்கில் 
மாட்டிக்கொண்ட நிலவின் தவிப்பால் 
இரவுகளாயினும் சாளரம் ஊடே 
பரவும் வெளிச்சமும் உன்னைப் பற்றிப் பேசுவதில்லை 
உன் கருமை நிற திராட்சைக்கண்களின் 
நெடுஞ்சாலையில் 
விபத்திற்குள்ளான நான் 
ஜீவிதத்தை உன் காலடியில் தருவித்திருக்கிறேன் 
எனது கண்களிலிருந்து பொங்கி வழியும் 
கடலின் கரையில் நீ.

இத்தொகுப்பில், நிதானமான இடைவெளியில் காதல் கவிதைகள் வந்து போவது மட்டுமே, அவை இழப்பைப் பாராட்டும் கவிதைகள் என்றாலும் மனதை வருடுவதாக இருக்கிறது. 

பிரிவை நிர்ப்பந்தித்த இடப்பெயர்வு

எத்தனையோ அஸ்திரங்களை 
ஏவியபடியிருக்கிறது விழிகள் 
இலக்குகளற்ற உன் பேரழகின் சூட்சுமம் 
இறகுகள் பூட்டி 
என்னை பறவையாக்குகிறது 
ஆடைகள் போர்த்திய
உன்னுடல் அசைவுகளால் 
நீல வானம் மழையை அனுப்புகிறது 
உன் அங்கங்கள் தோறும் ஒரு துளி வீழ 
என் அகந்தையகன்று 
நானும் துளியாதல் 
ஒரு அன்பு தாண்டிய கடலில் சாத்தியமே 
ஆனாலும் உனக்கென 
ஒரு நதியைப் பிரசவிப்பதில் 
உனக்கென ஒரு பூவை மலர்த்துவதில் 
வலிமையற்று தனிமையை இசைப்பது 
காதலின் துன்பியல் காலம் 
உலகத்தின் எத்திசை நோக்கியும் 
பயணிக்கும் நாடவற்றவனின் படகொன்றில் 
குழந்தைகள் அழுவதைப் போன்றது 
எங்கள் இருவரின் பேரன்பும் பெரும் காதலும்.

'திலீபனுக்குப்பிறகான கண்கள்' கவிதை, காந்தியைப் பற்றியது, அவரின் அகிம்சையைப்பற்றியது. உண்மையின் விசாரணையாகவும் இருக்கிறது. 'தாய்களில்லாத புலிகளின் துயரம்' 'சானு என்ற புலியின் குழந்தை' 'தீவில் அழும் வீடுகள்' குறித்துப் பேச நிறைய இருக்கிறது. 

தவளைப்பாய்ச்சல்

இந்த மர்ம இரவை 
பூமி சுழற்றும் முன் 
கரைகளில் மிதக்கும் 
எலும்புகளைக் கடக்கவேண்டும் 
இல்லாது போனால் 
விடியும் நாளை அபாயகரமானது. 

முழுதொகுப்பிலும், 'இனப்படுகொலையை' எதிர்க்கும் உணர்வெழுச்சியின் பயணத்தை வாசகர் ஏற்கவைக்கும் ஒரு திட்டவட்டமான இயக்கத்தை அகரமுதல்வனிடம் உணரமுடிந்தது. 'தொப்புள்கொடிகள்' கவிதையுடன் இந்த நூல் முடிவுறும் போது இந்த எண்ணத்தை முழுமையும் உணர்ந்தேன். ஆனால், முழுத்தொகுப்பும் வாசித்ததன் பின்பு என்னை நெருடியது இது தான்: கவிஞனின் மனவெளியெங்கும் வெவ்வேறு கணம் சார்ந்த தொனிகள் தாம் ஊக்கம்பெறுகின்றன; அத்தொனிகளை, சொற்கள் வழியாக மனவெளியில் கொண்டு வருவதும், கவிதையில் துல்லியமாய் எடுத்து வைப்பதும் தாம் கவிஞனுக்கு இருக்கும் சவால் என்று நினைக்கிறேன்.

முழுத்தொகுப்பும் ஒரே தொனியில் படைக்கப்பட்டிருக்கும் உணர்வைத் தருகிறது. எனக்குத் தெரிந்து, ஈழத்தில் புழங்கப்படும் தமிழ் உரையாடலின் தொனிகள், தமிழகத்தின் தொனிகளிலிருந்து பெருமளவில் மாறுபட்டவை, சுவை நிறைந்தவை. உணர்வுகளுக்குத் துல்லியம் சேர்ப்பவை. கவிஞர் தமிழ்நதியும் தீபச்செல்வனும் இவ்விதத்தில் கவனமாகப் பணியாற்றியிருப்பவர்கள். அதிலும் கவிஞர் தமிழ்நதி தான், வேறெந்தக் கவிஞரை விடவும் நுட்பமாக, கூர்மையாக, இத்தகைய வெவ்வேறு தொனிகளுடன் தன் கவிதைகளில் வெளிப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. 

இன்றொரு நாள் எனினும்

அம்மா! மண்டியிட்டுக் கேட்கிறேன் 
உணவருந்தும் பீங்கானை 
இந்த ஒரு தடவை நான் உடைக்கிறேனே 
சிலீரென்றெழும் ஓசையால் 
உறக்கமும் குழந்தைமையும் 
கலைக்கப்பட்ட அவ்விரவுகளையும் மீட்டெடுக்க. 
இது தமிழ்நதியின் கவிதை. மேலும், முதிய கவிஞர்களின் முன்னுரைகள் இந்நூலில் மட்டும் அல்லாமல் எந்த ஒரு கவிதை நூலிலும் கவிதை நூலைச் சிதைப்பதாகவே எண்ணுகிறேன். அவை ஒரு செயற்கை உறுப்பைப் போல ஆகி, தொகுப்பை இனம் காணமுயலும் வாசகனின் திசைகளைக் குழப்புகின்றன. 

முடிந்தால், இந்த ஒரு சடங்கிலும் இருந்தும் கவிஞர்கள் எதிர்காலத்தில் விடுதலை பெற முயலலாம்.ஒரு நல்ல தொகுப்பு என்பதால் இத்தகைய விடயங்கள் மேலதிகமாய்க் கவனம் பெறுகின்றன. இறுக்கமான சமூக அமைப்பையும், இயந்திரத்தனமான விலங்கின் குணங்களுடன் மக்களை அணுகும் அரசையும் கவிஞன் தன் சொற்களால் தொடர்ந்து குறுக்கிட வேண்டியிருக்கிறது. அரசியலின் கருத்தாக்க அச்சாணிகளை முறிக்கவேண்டியிருக்கிறது.

இங்கே அரசியல் என்பது நிகழ்காலத்தின் இறந்த காலத்தின் நிழலும் சுவடுகளும் படிந்திருக்கும் மனவெளி. புழுதி பறக்கும் கண்களை உறுத்தும் அவ்வெளியை கவிஞனைவிடத் துல்லியமாக யாரும் சொற்களில் பிடிக்கமுடியாது. நிகழ்காலம் குறித்த அவநம்பிக்கையான உணர்வுகளுடன் காலத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால், இத்தகைய மனித வதையின் ஆதிகதை (நிகழ்வு) இயல்புள்ள தன்மைகளை அகரமுதல்வனின் கவிதைகள் முயன்றிருக்கின்றன. ஈழம் குறித்தான நினைவுகள் நம் ஆயுள்காலம், வாழும் காலம் மீறியவை. காலத்தின் தொடர்ச்சியில் நிகழ்வும் வெடிப்புகளை மீறி, காலத்தைத் தொடர்ச்சியானதாக்கும் எத்தனத்தை ஒரு கவிஞன் எடுக்கும் போது அவனே, தனிமனித அளவிலேயே ஒரு சமூகமாகவும் ஆகிறான். அகரமுதல்வன் அப்பொறுப்பை எடுத்துக்கொண்டதை நான் வரவேற்கிறேன்.


Comments

  1. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. ஒரு தொகுப்பை எழுதியவன் நிலம், மனவெழுச்சி என எல்லாவற்றையும் புரிந்து நுட்பமான பார்வையோடு முன் வைக்கப்பட்டதான விமர்சனம்.!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்