வலிபெருத்தலும் மற்றொன்றும்

மண்ணுள் நீள்விக்கும் ஓலத்தின் குடலில் 
ஒரு நிலைத்த தகிப்பின் அணிவகுப்பு
என்னை நோக்கி வளைகிறது
மெய்யான போர்க்குணத்தின் இளைப்பாறல்
என் முகமெங்கும் ஊடறுக்கும்
ஒப்பனைச் சிரிப்பு
இரத்தம் குடியிருக்கும் அமைதியின் ஊற்றில்
சொந்த வனத்தின் தோட்டாக்கள்
பொழிந்தபடி பளபளக்கிறது
மூர்க்க மோதல்களில் தசைகள் எரிக்கும்
சூடான சூரியன் என்னுடன் நடக்கிறது
தலைபிளந்த ஆயுதங்களில்
காலத்தின் முழுமை புலப்படாது
கவிதையைப் போல பிணங்களை
ஆராதிக்கும் தீவு
என்னைச் சூழ்ந்துள்ளது
எந்தப் பொழுதும் அழுகிப்போன
துயரத்தின் மேன்மையில்
நாடற்றவனாய் வாழ்கிறேன்
நாடற்றவனாய் எழுதுகிறேன்
நாடற்றவனாய் திமிருகிறேன்
எத்தனையோ இரவுகள்
நெருப்பாகவே இருக்கிறது
நெருப்பினூடாயே அணைகிறது.

நன்றி - கணையாழி ஏப்ரல்.2015


Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்