மகிந்தவின் தேர்தல் வெற்றியும் தமிழீழர்களின் சர்வேதச நகர்வும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நிலைப்பாடு மைத்திரிபாலா சிறிசேனாவிற்கான ஆதரவாக உருப்பெற்றுள்ளது. இந்த நிலைப்பாட்டினை வைத்துக் கொண்டு அவர்கள் தமிழீழ மக்களாகிய எங்களை தொடர் கொலைக்களத்தின் விளிம்பில்  நிறுத்தியிருக்கிறார்கள் என சொல்வதற்கு நான் தயாரில்லை.

மைத்திரிக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு என்பது மறுபுறத்தில் இனவாத சிங்களர்களின் வாக்குகளை மகிந்தவிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. கடந்த சனாதிபதித் தேர்தலில் எதிரணி வேட்பாளராக நின்ற சரத் பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்ததினாலேயே  சிங்கள வாக்குகள் அவரை நிராகரித்தன. அதே போல மீண்டும் மைத்திரியை தமிழர்களுக்கு ஆதரவானவர் என்கிற ஒரே பிரச்சாரத்தின் மூலம் தோற்கடிக்கும் அனைத்து வழிகளும் மகிந்தவிற்கு திறக்கப்பட்டுவிட்டது.கிட்டத்தட்ட மகிந்தவின் தேர்தல் வெற்றி உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

தமிழீழ மக்களைப் பொறுத்தமட்டில் சிங்களத் தலைமைகளிடம் இருந்து  தீர்வு ஏற்பட்டு விடுமென நம்பியது கிடையாதென்றாலும் இந்தத் தேர்தலில் மகிந்த - மைத்திரி எனும் வேட்பாளர்களில் மகிந்த வெற்றியடைவது தமிழர்களின் சர்வதேச போராட்ட சூழலில் அவசியமான மூச்சாக அமைந்துவிட்டது. இனப்படுகொலை மற்றும் போற்குற்றச்சாட்டுகளுக்கான விசராணைகள் தொட்டு தமிழர்கள் பிரிந்து போவதற்கான பொதுவாக்கெடுப்பு என்கிற கடைசி சனநாயக அணுகுமுறை வரைக்கும் மகிந்த எனும் இனப்படுகொலையாளி அதிகாரத்தில் இருப்பது சர்வேதச அளவில் போராடிக்கொண்டிருக்கிற மனித உரிமை அமைப்புக்களில் இருந்து தமிழீழ ஆதரவு அமைப்புக்கள் வரை சாதகமானது என எண்ணுகிறார்கள். இந்த நோக்கு நிலையும் தீர்மானமும்  சரியானது என்பதிலும் பார்க்க பொருத்தமானது.

இந்து சமுத்திர பிராந்திய அரசியலில் பொருண்மிய வளங்கள் கொண்ட  இலங்கைத் தீவில் நிகழும் இரு இனங்களுக்கிடையேயான  பிரச்சனையை இனப்பிரச்சனை என்று  மட்டும் குறுக்கிக் கொள்வது தகாது. அது வரலாற்று அடிப்படையில் இரு தேசங்களுக்கான பிரச்சனை. இந்த பிரச்சனையை வல்லாதிக்க நாடுகள் இதுவரைக்கும் தமது பொருளாதார,புவிசார் சாதகங்களோடு தான் நோக்கி வருகிறதே தவிர அங்குள்ள உண்மைக்கு சார்பாக அல்ல.                 

இந்த நிலையில் நடந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின் மாறியிருக்கிற சர்வதேச அரசியல் சூழல்கள் தமிழர்களின் இனப்படுகொலைக்கு பின்பான அரசியல் நகர்வுகளில் பெரும் நம்பிக்கையை உண்டு பண்ணியிருக்கிறது.அமெரிக்காவின் தீர்மானங்கள்,தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம், ஜெர்மன் தீர்ப்பாயத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு என  பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருகிறது.மேலும் வருகிற மார்ச் மாதம் அ.நாவில் கொண்டுவரப்படும் தீர்மானம் என்பது மிக முக்கியமான ஒன்றாக விளங்கப்போகிறது. இவ்வளவு நாட்களும் அமெரிக்காவால் கொண்டு வந்த தீர்மானத்தை பார்க்கிலும் அய்.நா அமைப்பே இதை சமர்பிக்கவிருக்கின்றமை இந்தக் களத்தில் மிக முக்கியமானது.

தன்னலம் சார்ந்து இருந்தாலும் இவ்வாறான சர்வதேச அழுத்தங்களும் அழுங்குப்பிடிகளும் மகிந்தவின் குரல் வளையை நெரிக்க வேண்டுமாயின் இனப்படுகொலையாளி என்கிற குற்றத்தோடு மகிந்த அதிகாரக் கதிரையில் இருக்கவேண்டும். தத்தமது சந்தைப்படுத்தல்களுக்கும் புவிசார் நலன்களுக்கும் தமிழர் பிரச்சனையில் தீவிரமாக களமிறங்கியிருக்கும் வல்லரசுகளுக்கு மகிந்தவை அசைத்து பார்க்க மிஞ்சியிருப்பது தமிழர்களின் அழுகுரல் மட்டும் தானே. ஆக மகிந்த அதிகாரத்தில் இருக்கவேண்டும் என்பது எமது மேலான ஆசை அல்ல – அது எமது அரசியலுக்கு அவசியமான பொருளாக மாறியிருக்கிறது. 

தமிழீழர்களாகிய நாம் இப்போது சிங்களவர்களோடு போரிடவில்லை, அவர்களுக்கு பதிலாக எங்கள் களத்தில் சர்வதேசத்தை காலம் நிறுத்தியிருக்கிறது. இந்த மாற்றத்தில் தமிழர்களின் ஆயுதமாக இருப்பது மகிந்த தான் என்பதை மகிந்தவே அறிவர். இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட இராணுவத் தோல்வியின் பின்பு எமது போராட்டக்களம் மாறியிருக்கிறதென்றாலும் எமது போராட்டத்தின் முதலீடு என்னவோ மரணமாகத் தான் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.

சிங்கள இனவாத சக்திகளினதும் தேரவாத பவுத்த கடும்போக்குவாதிகளினதும் அனைத்து ஆதரவோடும் ,வல்லாதிக்க நாட்டுகளின் உதவிகளோடும் தமிழர்களை இனப்படுகொலை செய்த மகிந்தவை மிக எளிதாக தோல்வி நெருங்கிவிடாது. இது எதிரணியில் உள்ள சந்திரிக்கா தொட்டு  ரணில் வரைக்கும் தெரிந்த உண்மை என்றாலும் அவர்கள் எதிர்த்து நிற்பது சவாலானது. மைத்திரி வந்தால் அவர் தமிர்களுக்கான தீர்வுக் களஞ்சியம் ஒன்றை திறந்து விடுவார் என்று சும்மா பேசுவதற்கு கூட இடமளியாது அவரின் சிங்கள இனவாத கருத்துக்கள் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் தெறித்து வீழ்ந்தமை கவனிக்கத்தக்கது.

மேலும் பயங்கரவாதத்தை அழித்த யுத்தம் குறித்து விசாரணை செய்ய எனது நாட்டிற்குள் எவரையும் அனுமதிக்க மாட்டேன் என கூறிய மைத்திரியின் முகம் மகிந்தவின் நகல், இன்னும் சொல்லப்போனால் தமிழர்களைக் கொல்வது பாவமல்லவே என்ற மகா வம்சத்தின் புதுப்படிமக் குரல். ஆக ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் இவர்கள்.

இந்தத் தேர்தலில் தமிழர்களின் பங்கெடுப்பு என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சொல்வது போல கண்டிப்பாக மைத்திரிக்கான வாக்காக அமையவேண்டும் என்பதில்லை. அது புறக்கணிப்பு என்று கூட தமிழ் வாக்காளர்களால் வடிவமைக்கபடலாம். இதன் வாயிலாக வடக்கில் இந்தத் தேர்தலில் தனக்கான வாக்குகள் முப்பது வீதமாக இருக்குமென எதிர்பார்க்கும் மகிந்தவின் அபிவிருத்தி நம்பிக்கையையும் நொறுக்கிவிடமுடியும். 

தமிழீழ மக்களின் போராட்ட வரலாற்றில் இது மாதிரியான சூழல்கள் வழமையான ஒன்று தான் என்றாலும் இந்த தேர்தல் முக்கியம் வாய்ந்தது. மகிந்தவின் வெற்றி சிங்கள மக்களால் தான் உருவாக்கப்படும் என்பதில் எவ்வளவு உறுதி இருக்கிறதோ அது போலவே சர்வதேச அளவிலான தமிழீழ மக்களின் அரசியல் வெற்றி சிறிலங்கா அதிபர் மகிந்தவினாலேயே உருப்பெருக்கப்போகிறது. ஆக 2015ம் ஆண்டின் ஜனவரி மாத 8ம் நாளில் மகிந்த அடையப்போகும் தேர்தல் வெற்றியே சர்வதேச தளத்தில் தமிழீழ மக்களின் நீதிக்கான போரட்டத்தில் பெரும் சாதகங்களை ஏற்படுத்தப்போகிறது என்பதில் எவ்வித அய்யமும் மாற்றுக்கருத்தும் இருக்கப்போவதில்லை.





Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்