நீங்கள் நேர்கண்டவரே எம்மைக் கொன்றவர்



தமிழீழத் தமிழர்கள் எனும் தனித்துவமிக்க தமிழ் தேசிய இனம் எதிர்கொண்ட இனப்படுகொலையை இந்த நூற்றாண்டு அல்ல இனிவரும் நூற்றாண்டு கூட மறந்துவிடாது. அப்படிப்பட்ட இனப்படுகொலையை பெருவிருப்போடு நிகழத்திய சிங்கள இனவாதத்தினதும் சிறிலங்காவினதும் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவை தமிழருக்கு எதிரானவர் என்று வட்டம் போட்டு சுருக்கிவிட முடியாது. ஏனெனில் மகிந்த எனும் பெயர்ச்சொல் இந்த நூற்றாண்டில் மானுடத்திற்கு எதிரானது. அந்தப் பெயர் நீதிக்கு அப்பாற்பட்டது.கொடூழியத்தனமான யுத்தக்கொலைகளை நிகழ்த்திய வரலாற்றில் இப் பெயர் புதிது. இவ்வாறு எத்தனை அநீதிகளின் வகைகள் இருக்கிறதோ அனைத்திலும் அவருக்கு முடி சூட்டலாம்.ஆக மகிந்த எனும் பெயர்ச் சொல் இருபத்தோராம் நூற்றாண்டில் விதவிதமான மானுடக் கொலைகளின் வடிவமைப்பாளர் என்று கூட சந்தேகமின்றி நிறுவலாம்.
                                                                                                                     
நேற்றைக்கு தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட மகிந்தவின் நேர்காணல் வெறும் சந்திப்பை காட்சிப்படுத்தியது போன்றது. கேட்கப்பட்ட கேள்விகள், பதிலளிக்கும் போது தலையசைத்து ஆமோதித்த இடங்கள் என எல்லாமே ஒத்திகை பார்த்து அரங்கேற்றப்பட்டது போல- அதில் அவ்வளவு சந்தேகமின்றி முடிவுக்கே வந்துவிடலாம்.

இப்படிப்பட்ட நேர்காணலை ஒளிப்பரப்பு செய்யவேண்டாமென எழுந்த தமிழகத்தின் உணர்ச்சி மிக்க போர்க்குரல்,ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல பாவனை செய்யப்பட்டு வீணடிக்கப்பட்டுவிட்டது.   அதிலும் குறிப்பாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் கடிதம் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் நடந்தேறியது.ஆனால் எனக்கு இன்னுமொரு சம்பவம் நினைவில் வந்தது. இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்து முடிந்த பின்னர் இந்தியாவில் இருந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் குழுவிலிருந்த   விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் இதே இனப்படுகொலையாளி மகிந்தவோடு தானே கைகுலுக்கி புன்னகை உதிர்த்தினார். அந்த சந்திப்பை அவரால் முடிந்திருந்தால் தவிர்த்திருக்கமுடியும்.  மகிந்தவின் நேர்காணலை ஒளிபரப்பு செய்யக்கூடாது என சொல்லுவதும் ஒளிப்பரப்பு செய்யலாம் என சொல்வதும் தனி நபர் உரிமை.

அந்த நேர்காணலில் மகிந்தவின் பதில்கள் சிங்கள ராஜதந்திரிகளின் பதில்கள் போல அமைந்தது ஆச்சரியமில்லாதது. மீன்களுக்கு எல்லை தெரியாது என கூறிய மஹிந்த மீனவர்கள் தற்போது தாக்கப்படுவதில்லை என பொய்யுரைத்தார். மேலும் இந்தியா எனது உறவு ,சீனா எனது நண்பன் எனச் சொல்லும் இந்தக் கூற்றில் ஒரு வரலாறு புதுப்பிக்கப்படுகிறது. இலங்கையின் பிரதமரான ஜே.ஆர் ஜெயவர்த்தன  இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களை  சந்தித்த  பொழுது எனது மூக்கும் உங்களது மூக்கும் ஒரே மாதிரி இருக்கிறது பார்த்தீர்களா? என சொன்ன ஒரு வரலாறு  உண்டு. ஆக ஜே.ஆர் அவர்களின் கூற்றை ஒத்த பதிலை மகிந்த கூறியிருக்கிறார் என்றாலும் சீனாவை நண்பன் என சொல்லும் அவரின் கூற்று உண்மை தான். எதிரியின் எதிரியை நண்பனாக்கும் அரசியல் சூத்திரத்தை மிக அன்போடு ஏற்று நடக்கிற சிங்கள ராஜதந்திரியான மகிந்தவுக்கு சீனா நண்பன் எனில் இந்தியா எப்படி உறவாக இருக்கும்?            

இந்து சமுத்திர பிராந்தியத்தின் கதாநாயக சக்தியாக விளங்கும் சிறுபுள்ளியான தீவை தன் ஆதரவு சக்தியாக வைத்திருக்க முனையும் இந்தியாவை மிகக் கடுமையாக ஏமாற்றிய சிங்களத் தலைவர்களில் முக்கியமான இடத்தை மகிந்த பெற்றுக்கொண்டமையை இந்திய அரசியல் அவதானிகளே அவதானிக்க மறந்துவிட்டார்கள்.

இது மட்டுமல்லாது இனப்படுகொலைக்கு பிறகு அமைந்த வடக்கு மாகாண சபைக்கான எந்தவொரு அதிகாரத்தையும் குறிப்பாக காவல்துறை மற்றும் காணி அதிகாரத்தை தரமறுக்கிற மகிந்த வடக்கு மாகாணசபைக்கு அனைத்து வசதிகளும் செயற்படுவதற்கு வழங்கப்பட்டிருப்பதாக கூறுவதும் வழங்கப்படும் நிதிகளுக்கு அமைய கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்தியை செய்ய முவருவதில்லை எனவும் குற்றம் சாட்டுவது சிரிப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் பதில்கள்.

கதிரையைக் கூட வாங்குவதற்கு அதிகாரம் இல்லை எனக் கூறிய வரதராஜப்பெருமாளின் நிலையில் தான் இன்றும் தற்போதைய வடமாகாண முதல்வர்  விக்னேஸ்வரன் இருப்பது யாவரும் அறிந்ததே. ஆக தமிழர்களுக்கான எந்தவொரு தீர்வையும் வழங்கமுன்வராத அச்சு அசலான சிங்கள இனவாதத்தின் தலைவராகவும் மிருகங்களை விடக் கீழானவர்களாய் மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் தமிழர்களை இனப்படுகொலை செய்தவருமான சிங்கள இனத்தின் மீடபரான மகிந்த வடக்கில் புது இரும்பு போட்டு, புது தார் காய்ச்சி தண்டவாளங்களையும், வீதிகளையும் போட்டு  நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டது என சொன்னால் அதனை ஆமோதித்து தலையாட்டுவது இன்னுமொரு படுகொலை என்று தான் சொல்லத்தோன்றுகிறது.

நேற்றைக்கு ஒளிபரப்பட்ட நேர்காணலில் இந்திய வராலற்றில் ஒரு தமிழ் ஊடகத்தில் முதன் முதலாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச என தொகுப்பாளர் ஒருவர் அறிமுக உரை வழங்கியமை எவ்வளவு அவமானம் என்பது மானமிருந்தால் உணர்ந்துகொள்ளலாம். பாவம் அதையுணர வாய்ப்பற்று போனார்கள் அவர்கள்.

இலங்கை எனும் தேசத்தில் வாழ்கிற மூவின மக்களும் தனக்கு உறவினர்கள் என்றும் தான் இன்னுமோர் தமிழ் மாணவன் என்றும் ஐ.நாவில் தமிழில் உரையாற்றிய நிகழ்வு ஒருமைப்பாட்டை அடையாளப்படுத்தியதாக சொல்லி எல்லோரும் ஒரே மக்கள் என்கிற தனது பொய்யான கருத்துருவாக்கத்தை மீண்டும் உருத்திரட்டுகிறார் மகிந்த. பல்லின மக்கள் வாழும் தேசத்தில் எல்லோரும் ஒரே மக்கள் எனும் ஓரினத்தன்மையை வலியுறுத்தி சிங்கள மயப்படுத்தமுனையும் இவரின் தந்திரோபாய திட்டமிது.

மேலும் தனது உறவினர் ஒருவர் யாழ்பாணத்துப் பெண்ணை திருமணம் செய்திருப்பதாக சொல்லி நான் எப்படி தமிழருக்கு எதிரானவராக இருக்கமுடியும் என கேள்வி எழுப்புகிறார். கேள்வி கேட்கும் ஊடகவியலாளர் அதனை ஆமோதித்து தலை அசைப்பது நீங்களும் பார்த்துக் கடந்த துயர் தானே.

இந்த நேர்காணல் எந்த அத்திவாரத்தில் இருந்து எழுப்பப்பட்டது என்பதனையெல்லாம் தாண்டி இதுவொரு அழியாத துயரமும் கூட.             சர்வதேச அளவில் இனப்படுகொலை மற்றும் போர்குற்றங்களினூடாக அடையாளங்காணப்படும் மகிந்தவிடம் அதுகுறித்த ஒருகேள்வியைக் கூட கேட்கவில்லை. இது எந்தவகை ஊடக தர்மம்.

தமிழக சட்டசபையில் போற்குற்றவாளி என அறிவிக்கப்படவேண்டும் என தீர்மானத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட  இவரிடம் அது சம்பந்தமான ஒரு கேள்வியைக் கூட கேட்கவில்லை என்கிற கவலை எனக்கில்லை ஆனால் இது ஊடகத்தின் பொத்தல்களை எமக்கு உணர்த்துகிறது. குறிப்பாக இதே ஊடகத்தில் பாலச்சந்திரன் படம் வெளியான போதும் இசைப்பிரியா படம் வெளியான போதும் உணர்ச்சி நிரம்பிய விவாதங்கள் நிகழ்ந்தவை என்பதை நம்மால் மறந்துவிட முடியுமா ?

இந்த நேர்காணல் தமிழர்களின் ஊடக வரலாற்றில் அவமானத்தை கருத்தரிக்க செய்திருக்கிறது. உபாதை நிறைந்த கேள்விகளோடு இனப்படுகொலையை நிகழ்த்தியவரை நேர்காணல் செய்வதில் என்ன நியாயம் மிஞ்சியிருக்கும். தமிழ்நாட்டில் இருந்து தமிழீழத்திற்கு சென்ற ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரனை கைது செய்து கொடும் சிறையில் அடைத்து நீருக்கு பதிலாக பெட்ரோல் வழங்கப்பட்டதே அதைக் கூட கேள்வியாக கேட்கவில்லையே. பிறகு என்ன நீங்கள் ஊடகம், பிறகு என்ன உங்கள் தர்மம்.

ஊடகங்களிடமும்,ஊடகவியலாளர்களிடமும்,அறிவுஜீவிகளிடமும், நாம் இவ்வாறு தான் கொலை செய்யப்பட்டோம் , எம்மை  அவர்கள் கனரக ஆயுதங்கள் கொண்டு சவக்குழியில் சரித்தார்கள் என்று எத்தனை தடவை சாட்சியம் சொல்லவேண்டும், எத்தனை தடவை எங்கள் மரணங்களை உங்களுக்காய் நிகழ்த்தவேண்டும்.

                                                                           
-அகரமுதல்வன்
30.12.2014



                                                           





Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்