தேர்


நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் 
நாடு பெரிதென்று வாழுங்கள் –வே .பிரபாகரன்

தமிழ்தேசியர்களே ஒன்றுகூடுங்கள்!

யாழ்பாணத்தின் தென்மராட்சி பகுதியில் இருக்கும் ஊரான வரணி வடக்கு அருள்மிகு சிமிழ் கண்ணகி அம்மன் கோயில் தோரோட்டத்தில் நடந்திருக்கும் தீண்டாமை என்கிற சமூக குற்றத்தை நினைத்தால் அருவருக்கிறது.ஒடுக்கப்பட்ட சாதியைச்சேர்ந்தவர்களும் சேர்ந்து கோவிலின் தேரை இழுத்துவிடுவார்கள் என்பதற்காக பக்கோவை வைத்து நகர்த்தியிருக்கிறார்கள் அங்கிருக்கும் ஒடுக்கும் உயர்குடி சமூகம்.எத்தனையோ அழிவுகளையும் உயிரிழப்புக்களையும் சந்தித்தது மட்டுமில்லமால் பெரியளவிலான இனப்படுகொலையை எதிர்கொண்டும் ஈழத்தமிழர்களிடம் இவ்வாறான சாதியவேறுபாடுகளும்,தீண்டாமைக் குற்றங்களும் இருக்கிறதென்றால் நாம் சிங்கள இனவாதிகளிடம் இருந்து விடுதலையை அடையமுடியாது.



தேசியத்தின்  பிரக்ஞையால் ஒன்றுதிரண்டு போராடிய ஒரு செம்மார்ந்த இனத்தின் சாதியப்பிளவுகளும்,அதன் தீண்டாமைக் கொடூரங்களும் இவ்வாறு மீண்டும் துளிர்விடுமாயின் நாம் தேசவிடுதலையை மட்டுமல்ல சமூக விடுதலையையும் அடையமுடியாது.இந்தத் தீண்டாமைக்கு எதிராக நாம் அனைவரும் குரல் எழுப்பவேண்டும்.இனமாக ஒன்றுசேர்ந்து பொதுஎதிரியோடு போர்புரிந்த                                இந்த மண்ணில் சமூக பொருளாதார பின்னணிகளோடு சனங்கள் சாதிகளாக                பிரிந்து  நின்றால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பின்னர் சிங்கள ஆட்சியாளர்கள் இப்போது முன்னெடுக்கும் கட்டமைப்பு சார் இனப்படுகொலையில் தமிழ்ச் சாதிவெறியர்களுக்கும்  பங்குண்டு.எனவே ஈழநிலப்பரப்பில் சாதியவாதத்தையும், சாதிய உணர்வையும் ஊக்குவிக்கும் இவ்வாறன நிகழ்வுகளை முன்னின்று நிகழ்த்துபவர்களும் இனப்படுகொலையாளிகளே.

தமிழ்தேசிய எழுச்சியின் மீது அதற்கு எதிரானவர்கள் முன்வைக்கிற சாதியரீதியான குற்றச்சாட்டுக்கள் தமிழகத்தை பொறுத்தவரை ஏராளமானவை.ஆனால் அது தேசியம்          எனும் ஜனநாயக பிரக்ஞை குறித்து அடிப்படை அறிவற்றவர்களால் முன்வைக்கப்படுபவை. சமூகத்தில் இருக்கும் அனைத்து பழமைவாதங்களுக்கு எதிரானது தான் தேசியம்.                    அவ்வாறனதொரு நிலையில் தமிழ்தேசியம் இன்று எதிர்கொள்ளக்கூடிய களரீதியான              விமர்சனங்களை இனிவரும் காலங்களில் களைந்துவிடும்.தமிழ்தேசியத்தின்                              ஜனநாயக பண்புகளையும் அதன் பொறுப்புமிக்க உள்ளீடுகளையும் புரிந்துகொள்ள              மறுப்பவர்கள்  முன்வைக்கும் குற்றச்சாட்டை போக்கவல்ல முன்னெடுப்புக்களை                      தமிழகத்தின் தமிழ்தேசிய இயக்கங்கள் ஊர்களில் இருந்து தொடங்கவேண்டும். 

ஆனால் ஈழநிலத்தில் தமிழ்தேசிய விடுதலைப்போராட்டம் விடுதலைப்புலிகளால் ஆயுதவழியில் நடந்துகொண்டிருந்த காலத்தில் சாதியவாதத்தை அவர்கள் ஒடுக்கினார்கள்.      காலங்காலமாக ஒடுக்குமுறைக்கு ஆளான ஈழத்தின் சமூக அமைப்புக்களில் இருந்து              வந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதன்மைப் பொறுப்புக்களில் அமர்த்தப்பட்டனர்.விடுதலைப்புலிகள் தமது அரசியல் செயல்பாடுகளில் சாதிய                        ஒழிப்பை மிகத்தீவிரமாக முன்னெடுத்தனர்.அங்கு சாதி ஊனமாக்கப்பட்டது,                        சாதியவாதிகள் ஊமையாக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். தீண்டாமை கொல்லப்பட்டது.          ஆனால் புலியெதிர்ப்புவாதிகள்  தமிழ்தேசியம் என்பதே வெள்ளாளதேசியம் தான்                    என அய்ரோப்பாவில் இருந்து ஆண்டிப்பட்டி வரை திட்டமிட்ட நடவடிக்கையைப்                    போல முன்னெடுத்தனர்.தமிழகத்தில் இருக்கும் இடதுசாரி அமைப்பான சி.பி.எம்                      போன்ற அமைப்புக்களில் இருக்கும் படைப்பாளிகள் மற்றும் சிலர்                      ஐரோப்பாவில் இருக்கும் புலியெதிர்ப்புவாதிகளிடம் ஊதியம் பெற்று                    இந்தப்பணியைச் செய்தனர்.கூலிக்கு கொலை செய்வதும், கூலிக்கு பொய் சொல்வதும்  ஒன்று தான் என்று அவர்களுக்கு தெரிந்திருக்குமென்று நம்புகிறேன்.

சீனத்தேசியமும்,ரஷ்யத்தேசியமும் புரட்சியாகவும்,                                                    தமிழ்தேசியம் சாதியவாதமாகவும் இவர்களால் முன்வைக்கப்பட்டது.தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழ்தேசிய கூட்டுஎழுச்சியையும் புலிஎதிர்ப்பு வாதிகள்                        வெள்ளாளதேசியம் என விளிப்பது இன்றும் தான் நடந்துகொண்டிருக்கிறது.                            ஆனால் ஒப்பற்ற ஒரு இனவிடுதலைக்காக,தமது உயிர்வாழும் உரிமைக்காக                          அனைவரும் சமமென்கிற புள்ளியில் உருத்திரண்டு நின்ற தமிழீழ மக்களின்                              தமிழ்தேசிய எழுச்சி எந்தச்சாதிக்கும் சொந்தமில்லை.எந்தவொரு தேசியத்திலும்                      சாதிக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் இடமில்லை.தேசியமென்பதே உன்னதமான                          ஜனநாயகம் தானின்றி வேறில்லை.

இப்படி புலிஎதிர்ப்புவாதிகள் முன்னெடுத்து வருகிற தமிழ்தேசியத்தின் மீதான  அவதூறுகள் பல்வேறு இயக்க சார்பு கசப்புணர்வுகள் கொண்டவை.அதனில் முக்கியத்துவம் தருவித்து ஆய்வு செய்ய  எதுவும் இருக்காது.தமிழ்தேசிய ஆயுத விடுதலைப்போராட்டம் நடந்துகொண்டிருந்த காலத்தில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களத்தில் பல்வேறு        முன்னெடுப்புக்களையும் சாதி ஒழிப்புக்கான வேலைப்பாடுகளையும் செய்து வந்ததை எவராலும் மறுக்கமுடியாது.

ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ்.தேசத்தின் விடுதலைக்காய் ஒன்றாய்                        வடம்பிடித்த தமிழர்கள் கோவில் தேரை வடம்பிடிக்க சாதியால் பிரிந்துபோயினர்.இப்படியொரு இழிவான நிலைக்கு காலம் கொண்டுவந்து                நிறுத்திவிட்டது. காலம் எங்கு நிறுத்தியிருக்கிறதோ அங்கிருந்து தான் தேசியச்செயற்பாட்டாளர்கள் தமது பணிகளை முன்னெடுக்கவேண்டும்.                             இதுவரைக்கு அந்தப்பகுதிக்கு தமிழ்தேசிய அமைப்புக்களில் இருந்து எவரும்                 சென்றிருப்பதாக தெரியவில்லை.ஈழசிவசேனையின் நிறுவுனர் ஐயா மறவன்புலவு                 சச்சிதானந்தன் அவர்கள் அந்தக்கோவிலுக்கு சென்றதுமட்டுமில்லாமல் அங்கிருக்கக்            கூடிய சனங்களைச் சந்தித்து நடந்தவற்றை கேட்டறிந்த காணொளியை தனது                          முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

ஒரு பெண் கோவில் முகப்பில் நின்று கொண்டு இஞ்ச நடந்தது சாதிப்பிரச்சினையில்லை,தேரை இழுக்கமுடியாததால தான் பக்கோ கொண்டு இழுத்ததாக சொல்கிறார்.இன்னொருவர் இது சாதிப்பிரச்சினை தான்.இங்கு இன்னும் சாதி இருந்துகொண்டிருக்கிறது,தாழ்ந்த சாதிக்காரர் என்று தான் தேரை இழுக்க சிலர் மறுத்தார்கள் என்று சொல்கிறார். மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் இந்தப்பிரச்சினையை ஒரு ஊடகவியலாளராக பதிவு செய்துவிட்டு அமைதிகாக்கிறார்.தமிழர்களைக் கொல்ல ஆணைகள் வழங்கும் புத்த பிக்குகளோடு நின்று கொண்டு பசுவதைக்கு எதிராக குரல் எழுப்பும் மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயாவின் சறுக்கல்களோடு இதுவும் ஒன்று. அவர் இந்தவிடயத்தில் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமலிருப்பது கவலை. கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்லும் ஈழசிவசேனையால் சாதியவாதிகளே ஊரைவிட்டு வெளியேறுங்கள் என்று கூட சொல்லமுடியாமல் இருக்கிறது. பிக்குகளோடு சேர்ந்து நின்றுகொண்டு இந்துக்களின் கோவில்கள் கிறித்துவர்களால் இடிக்கப்படுகின்றன என்று குரல் எழுப்பும் அவரிடம் நாம் எந்தவொரு நீதியையும் கோரவாய்ப்பில்லை.

ஆனால் ஈழத்தமிழர்களுக்கு மத்தியில் இருக்கிற சாதியவாதம் இப்போது இன்னும் இன்னும் கூர்தீட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது. புலிகளுக்கு பயந்திருந்த சாதிய                          வன்கொடுமையாளர்கள் இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டிற்கு பிறகு எல்லாத்துறைகளிலும் வெளியே தலைநீட்டத் தொடங்கிவிட்டனர். இந்தவிவகாரம் கோவில் தேரில் மட்டுமல்ல,பள்ளிக்கூட அதிபரின் நியமனத்தில் இருந்து, அரசியல் வேட்பாளரை தொகுதியில்  நிறுத்துவது வரை பரவிவிட்டது.இப்படிப் போனால் வெகுவிரைவில் செம்மணிக்கு அருகிலேயே ஒரு கீழ்வெண்மணியை கண்டுவிடுகிற அவமானத்தை நாம் பெற்றுவிடுவோம்.இந்தத் தேர் இழுப்புச் சம்பவமானது எங்கள் காதுகளில் அபாயமணியாக ஒலித்திருக்கிறது.அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றுதிரளவேண்டிய அழைப்பு மணியிது. சாதியின் குரூரம் இன்றைக்கு வளர்த்தெடுக்கப்படுமிடமாக கோவில்கள்  மாறிப்போய்விட்டன.நாளைக்கு பள்ளிக்கூடங்கள்,பிறகு சுடுகாடுகள் என நம்மை நாமே இனப்படுகொலை செய்துவிடுவோமே என்கிற அச்சமும் அவமானமும் தோன்றிவிட்டது.

இதனைப் போக்கவல்ல சிந்தனையாளர்களும் களப்பணியாளர்களும் தமிழ்தேசியத்துவத்தின் உள்ளீடான சமூக விடுதலையை நிலைப்படுத்த கடும்பணி செய்யவேண்டும். ஊருக்குள் இருக்கும் சாதியவாதிகளை இனம்கண்டு அவர்களை சமூக உறவிலிலிருந்து தனிமைப்படுத்தவேண்டும்.சமூகத்தை சாதி தின்னத்தொடங்கினால் எஞ்சும் சாம்பலிலும் தலைகுனிவு மட்டுமேயிருக்கும்.இனவிடுதலைக்காய் போராடிக்கொண்டிருக்கிற இப்படியானதொரு காலகட்டத்தில் நாம் இந்தச் சாதியையும் அது பின்பற்றும் தீண்டாமைக் குற்றத்தையும் அழித்தொழிக்க புறப்படுவோம்.அதுவே நாம் தமிழீழ விடுதலைக்காய் உயிர்நீத்த ஒவ்வொரு உன்னதமான மாவீரர்களுக்கும் செய்கிற ஆகச்சிறந்த மரியாதை. இதனைச்செய்ய தவறினால் இருப்பதையும் இழந்து இல்லாமற்போவோம்.

Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்