நான் எனக்காகவேனும் எழுதத்தானே வேண்டும் – குணா கவியழகன்









முள்ளிவாய்க்கால் என்றவுடன் உங்களுக்குத் தோன்றுவது?

பிரளயம் ! பிரளயத்தின் மனித உத்தரிப்பு எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு ஒத்திகையாகவே அதை  உணர்ந்திருக்கிறேன். இப்போதும் முள்ளிவாய்க்காலின் பிணக்காடு நித்திரையைத் தின்று தீர்க்கிறது. நிசிகளில் கொதிக்கும் இரத்தம்.  உயிர் நித்திய உறக்கத்தைப் பெற்றாலே தவிர இப்போது உறங்கவிடப்போவதில்லை. முள்ளிவாய்க்காலின் நினைவுகள் சதா எழுந்து தூக்கத்தைத் தொலைத்து துக்கத்தில் சாய்த்து விழுத்திவிடுகிறது. அந்தப் பிணக்காடுகள் ஒரு பிரளய காலத்தையே கற்பனை செய்யவைக்கிறது. சாதாரணமாகப் பறிக்கப்பட்ட உயிர்கள் அல்ல அவை. வதையின் உருசியை அனுபவித்தபின் பறிக்கப்பட்ட உயிர்கள் அவை. பசியின் வதைதாகத்தின் வதைபிரிவின் வதை,இழப்பின் வதைநோயின் வதை என எல்லாவகை வதைகளையும் உருசித்து மரணம்வரை சாகடிக்கப்பட்ட மக்கள். தன் மரணத்தைத் தானே பார்த்திருக்கவேண்டிய துர்ப்பாக்கியம் காயமுற்று இறந்தவர்களுக்கு நிகழ்ந்தது. பசித்திருந்தவர்களுக்கு நிகழ்ந்தது. நோயுற்றிருந்தவர்களுக்கு நிகழ்ந்தது. தாயின் மரணத்தைக் குழந்தையும்குழந்தையின் மரணத்தைத் தாயும் பார்த்திருக்க நிகழ்ந்தது. தங்கள் மதத்தில் நிர்வாணத்தை மார்க்கமாகக் கொண்டவர்கள்ஒரு இனத்தை நிர்வாணமாக்கிப் புசித்ததும்கொண்டாடியதும் நாகரீக உலகம்                இதைப் பார்த்திருந்ததும் மனிதகுலப் பண்பாட்டுக்கே அவமானமாகும்.

நீங்கள் எழுதிய ஏணைப்பிறை நாவல் த.வி.புலியினரால் வெளியிட மறுக்கப்பட்டதாக நஞ்சுண்ட காடாக வெளிவரும் போது  சொல்லப்பட்டதே?


ஆம், அப்போதைய சூழலில் நான் வெளியிடுவதற்கு அனுமதிபெற வேண்டி இருந்தது. முதலில் அனுமதி தரப்பட்டபோதும், பின்னர் குறுக்கீடு வந்தது. மீண்டும் அனுமதி கிடைத்தது. ஆனால் மீண்டும் குறுக்கீடு வந்துவிட்டது. அதன்பின்னான காலம் உக்கிரமான போர்க்காலம் ஆகிவிட்டது. நஞ்சுண்டகாட்டின் செய்தி தேவையான காலத்தில் அறியப்படாமலேயே  போய்விட்டது.

நீங்கள் ஒரு போராளியாக எழுதிய அந்த நாவலை வெளியிட ஏற்பட்ட குறுக்கீடு இயக்கத்தின் முடிவாகத் தான் இருக்கும். ஆனால் நஞ்சுண்ட காடாக அது வந்திருந்த சமயம் புலிகளால் தடைவிதிக்கப்பட்ட நாவல் என்கிற சொல்லாடலுக்கு நீங்கள் ஏன் மறுப்புத்தெரிவிக்கவில்லை? அந்த நாவலின் தேவையான காலம் எதுவென்று நினைக்கிறீர்கள்? 

இந்த நாவல் வந்திருக்கவேண்டிய காலம் என்பது எழுதப்பட்ட ஆண்டு தான். அதாவது சமாதான காலம். நாவலின் ஆத்மா புரிந்துகொள்ளப்பட வேண்டிய காலம் அதுவாகத்தானிருந்தது. துரதிஸ்டமாக அது நிகழவில்லை.ஆனாலும் இன்று அதன் தாக்கத்தினளவு வேறு பரிமாணத்தில் வீரியத்துடன் விரிந்துசெல்கிறது.
மற்றது நீங்கள் கேட்கும் விடயம் “தடைசெய்யப்பட்ட” என்ற சொல்லாடல் தொடர்பானது. அதைப்பற்றி பலமுறை பல இடங்களில் சொல்லிவிட்டேன். அந்த நாவலை அமைப்பில் உள்ளவர்கள் வாசிக்க அனுமதிக்கப்பட்ட போதிலும் அதனை வெளியிடுவதற்கு ஒரு அரசியல் அமைப்பாக விடுதலைப்புலிகள் தயக்கம் காட்டினார்கள். முடிவில் தடுமாறினார்கள். இது தான் நிகழ்ந்தது. அதற்கான காரணத்தை அறுதியிட்டு என்னால் வியாக்கியானம் செய்துவிடமுடியாது.

·  தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியாக வீழ்ச்சியை அடைந்த பிற்பாடு புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் அரசியல் செயற்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?

அப்படியொன்று இருக்கிறதா என்னஅப்படியிருக்கிறதென்றால் நீங்கள் அரசியல் செயற்பாடு என்று எதைக் கருதுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. உணர்ச்சிவசப்பட வைக்கும் நிகழ்ச்சிகளோ உணர்ச்சியுடன் இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் நிகழ்ச்சிகளோ அரசியற் செயற்பாடாக ஆகிவிடாது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் தாயக அரசியல்மீது அக்கறையும் அனுதாபமும் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அது ஒன்றிணைக்கப்பட்ட அரசியற் செயல் திட்டத்தின் செயற்பாடாக உருப்பெறவில்லை என்றே கருதுகிறேன்.

அப்படி ஒன்று இருக்கிறதா என்ன? என்று எதைக் கேட்கிறீர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியாக வீழ்ச்சியடைந்தது என்று நான் சொன்னதையா? ஒன்றிணைக்கப்பட்ட அரசியல் செயற்திட்டம் என்று நீங்கள் எதனை சொல்லுகிறீர்கள்?
புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் செயற்பாடு என்று நீங்கள் சொன்னதனை தான் கேட்கிறேன். புலம்பெயர் தமிழர்கள் ஒரு சமூகமாகி உருத்திரண்ட நிலைமை மாறி உதிரத்தொடங்குகிறது.           ஒரு மைய அமைப்புக்குள் அவர்கள் இணைக்கப்படவில்லை.             இதுவே முதல் கோணலாகிறது. இப்போதுள்ள உதிரி அமைப்புக்களின் செயற்பாடுகள் கூட மைய அரசியல் குறிக்கோள் கொண்ட வேலைத்திட்டமாக இணைக்கப்படவில்லை.




உங்களின் விடமேறிய கனவு நாவல் தமிழீழர்களின் போர்க்கால உரைநடை இலக்கியத்தின் அசலான தொடக்கப் பிரதி என்று நினைக்கிறேன். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?  

நீங்கள் ஒரு வாசகராக அப்படி உணர்வது மகிழ்ச்சி தரக்கூடியதுதான். ஆனால் அதைப் பற்றிக் கருத்துச் சொல்லவேண்டியது விமர்சனத் துறையைச் சார்ந்தவர்களே. நான் படைப்புத் துறையைச் சார்ந்தவன். விமர்சனத்துறையிடமிருந்து தான் மதிப்பீடுகளை  எதிர்பார்க்கிறேன்.


     தமிழ் இலக்கியத்தின் விமர்சனத்துறை மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை நான்                   மறுதலிக்கவில்லை. ஆனால் “விடமேறிய கனவு” நாவலுக்கு மதிப்பீடு செய்கிற அளவில்                 தமிழின் விமர்சனத்துறை மேன்மையாக இருக்குமா என்ன ?


அது தான் இங்கு பிரச்சனையே. விமர்சனத்துறையின் வறுமைதான் வீரியமான நவீன இலக்கியங்கள் தமிழில் வெகுவாக வரமுடியாமல் இருப்பதற்கான காரணம். விமர்சனத் துறை மேதமையுடன் செயலாற்றாவிட்டால் மகிமையான படைப்புக்கள் வெளிவராது. மேலும் வெளிவருகிற அரிய படைப்புக்களும் அதன் மகிமையை சமகாலத்தில் பெறத்தவறிவிடும். மொண்ணையான விமர்சனங்கள் மொண்ணையான படைப்புக்களையே கொண்டாடும். அதன் தொடர்ச்சியாய் மொண்ணையான படைப்புக்களே அதிகம் வெளிவரும்.

புலம்பெயர் இலக்கியச் சூழல் மிகவும் மந்தமாக இருக்கிறது போல தோன்றுகிறது,அப்படித்தானே?

இந்தளவிற்கான இலக்கியச்சூழல் இருப்பதே பெரிய விடயம் என்றுதான் கருதுகிறேன். மனிதர்களை இயந்திரமாக்கிவிடும் புலம்பெயர் நாடுகளின் வாழ்க்கைச்சூழல் கலைஇலக்கியச் செயற்பாட்டுக்கு ஒத்துழைக்கக்கூடியதல்ல. ஒரு ஒவ்வாமைத்தனமே இருக்கக் கூடியது. ஆயினும் இன்றைய புலம்பெயர்ந்தவர்களின் கலைஇலக்கியம் இந்தளவிற்கு இருப்பதே பெரிதுதான். தவிரவும் புலம்பெயர் சூழலில் இது இரண்டாம் தலைமுறைக்காலம். முன்னர் இருந்த வீரியம் இப்போது இருப்பதும் பொதுவில் சாத்தியமில்லைத்தான். இந்த வாழ்வனுபவத்தை இரண்டாம்மூன்றாம் தலைமுறைகள் தத்தம் புலம்பெயர் நாட்டு மொழியினூடாக முன்வைப்பதற்கான ஏதுநிலை துலக்கமாக உள்ளது.

·         தமிழீழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியை உலகம் பெற்றுத்தந்து விடுமென்று நம்புகிறீர்களா?

உலகம் என்பது என்ன? சர்வதேச மைய அரசியலை கட்டுப்படுத்தக்கூடிய அதிகார வல்லமைகொண்ட நாடுகளின் அரசியலே. இதைத்தானே உலகம், உலகநீதி என்கிறோம்.  இந்த அதிகாரம், தனக்கு நலன் அளிக்காத எந்த ஒன்றையும் அழித்துவிடவே விரும்பும். முப்பதுவருட ஆயுதப்போர் அழிவுற்றது உள்நாட்டு அரசியலால் அல்ல. அப்படியிருக்க நூற்றாண்டை உலுக்கிய மனிதப்பேரழிவை நிகழ்த்திய அரசியல் அயோக்கியத்தனம் இந்த உலகத்திடம் இருந்தே வந்தது. ஆயின் நீதி எங்கிருந்து வரும்?

ஆனால் சுதந்திரத்துக்காகப் போராடும் மக்களின் அரசியலுக்குள் உலக அதிகார நாடுகளின் அரசியல் தலையீடு செய்தால் அது ஒரு மனிதப்பேரழிவையே பரிசளிக்கும் நயவஞ்சகமானது என்பதற்கான எடுத்துக்காட்டாக முள்ளிவாய்க்கால் அழிவு நிகழ்ந்துவிட்டது. இதை இந்த அர்த்தத்தில் உலகின்முன் பறைசாற்றவேண்டிய ஒரு அரசியற்செயற்பாட்டை முன்னெடுக்கவேண்டியவர்களாகத் தமிழர்கள் உள்ளனர். அதில் அவர்கள் வெற்றி அடைந்தால், அந்த அவப்பெயரைக் களையாது இந்த உலக அதிகார நாடுகள் வருங்காலத்தில் பிற உள்நாட்டு அரசியலுக்குள் தலையிடமுடியாத சங்கடச்சூழல் உருவாகலாம். அதை அவர்கள் விரும்பப்போவதில்லை. தங்களிடம் ஒரு தார்மீக நியாயம் இருக்கின்றது என்று காட்டவே அவர்கள் விரும்புவார்கள். கறைபடிந்த கையைக் காட்டி எங்கும் காரியம் செய்ய முடியாது. அப்படியாயின் ஈழத்தமிழர்களுக்கு ஒப்புக்காகவேனும் ஒரு பரிகார நீதியை வழங்கியாகவேண்டிய சூழல் உருவாகலாம். அத்தகைய ஒரு நெருக்கடியை உருவாக்குவதுதான் இப்போது ஈழத்தமிழர்களிடம் இருக்கக்கூடிய ஒரு அரசியல் செயல்திட்டமாக இருக்கமுடியும். போரின் அழிவை ஆயுதமாகப் பயன்படுத்தவேண்டிய தருணம் இது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுபட்ட இலங்கைக்குள் உரிமையைக் கோருவது பற்றி போராளியாக என்ன நினைக்கிறீர்கள்?

குற்றமில்லை. அது ஒரு யதார்த்தம். அந்த யதார்த்தத்தை மீறி கற்பனைக்குள்  தமிழ் அரசியலைக் கொண்டுபோக முடியாது. ஆனால் அது அரசியல் பயணமாக இருக்கவேண்டுமே தவிரஅது ஒரு அரசியல் தற்கொலையாக இருக்கக் கூடாது. போராட்டத்தின் கண்டடைவாக இருக்கவேண்டுமே தவிரகாட்டிக்கொடுப்பாக இருக்கக் கூடாது. அது அரசியல் அறுவடைக்காக இருக்கவேண்டுமே தவிரஅரசியல் அயோக்கியத் தனத்திற்காக இருக்கக்கூடாது.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் உரிமை கோருவதே அயோக்கியத்தனம் தானே?

வாய்ப்பில்லாத களத்தில் வாக்குவேட்டைக்காக வாய்வீச்சு அரசியலை முன்னெடுப்பது அதைவிட அயோக்கியத்தனம். அரசியல் உரிமை என்பது பிரிவினையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அடிப்படையில் அது ஒன்றுபடுவதற்கானது. இங்கு பரஸ்பர இறைமை ஏற்றுக்கொள்ளப்படுமாக இருந்தால், அதன் வழியே அதிகாரம் பகிரப்படுமாக இருந்தால் அதுவே இலங்கைத் தீவில் உள்ள அனைவருக்கும் நன்மை பயக்கும். இதனை பெரும்பான்மை சிங்கள ஆட்சியாளர்களும் சிங்கள மக்களுக்கும் புரிந்துகொள்ளத் தவறும் போதுதான் பிரிவினை அவசியமாகிறது

உங்களின் அப்பால் ஒரு நிலம் நாவலுக்கு மிகப்பெரிய அளவிலான வாசகப்பரப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் ஜெயமோகன் உங்கள் நாவல்கள் குறித்து எதிர் மறையான கருத்துக்களை எழுதினார்.நீங்கள் அவரை விவாதத்திற்கு அழைத்தீர்கள். ஜெயமோகனுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?


எழுத்தாளர் என்ற முத்திரையோடு எந்தத்துறை சார்ந்தும் தீர்மானம் வெளியிடக்கூடிய அபத்தச் சூழல் தமிழகத்தில் தான் அதிகமாய் உள்ளது. இதற்கு அடிப்படைக்காரணம் பேரூடகங்கள் தான். அவை தான் இவற்றிற்கு போலியான பெறுமானம் ஊட்டுகின்றன. இருதரப்புக்கும் தேவையாக இருப்பது தம்மை சந்தைப்படுத்துவதே. எல்லாமே வியாபாரமாகிவிட்டது. அறமும் வியாபாரம் தான் அரசியலும் வியாபாரம் தான். இந்த வியாபாரம் குறித்த விழிப்பை சனங்களிடம் உருவாக்குவதே பெரிய சவால்.  அதற்காகவே அந்த விழிப்பிற்காகவே ஜெயமோகனை விவாதத்திற்கு அழைத்தேன். அதை ஏற்காமல் ஒழிந்துகொள்ளும் போதே உண்மை மக்களுக்கு தெரிந்துவிட்டது.

ஈழப்போராட்டம் பற்றிய எதிர் மறையான பொய்மையான கருத்துக்கள் தமிழகத்தில் கட்டியமைக்கப்பட்டதில் ஈழ எழுத்தாளர் ஒருவருக்கு பெரும்பங்குண்டு. அப்படியான பொய்களையெல்லாம் இந்தக் காலம் உதறித்தள்ளியிருக்கிறது என்பதை உணர்கிறீர்களா?

எங்கும் எப்போதும் உண்மையின் வாய் கட்டப்பட்டிருக்கும் வரைதான் பொய்கள் சுதந்திரமாக உலாவரலாம். உண்மையின் வாயைக்கட்டி வைத்துவிட்டுத் தான் இவற்றினை உலவிட்டார்கள் என்பதனை மறந்துவிடக்கூடாது. இன்றைய சூழலில் உண்மையின் வாயைக்கட்ட அவர்களால் முடியாதுள்ளது. ஏற்பட்டிருக்கும் இந்தச் சூழலில் நீக்கல் வழியாக இனி மெல்லக் கசிந்தேனும் உண்மை தான் வரும்.

புலிகள் சாதி ஒழிப்புக் குறித்து எந்தக்கரிசனையும் கொள்ளவில்லை என்றும் அங்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருந்ததோடு உயர்சாதியான வெள்ளாளர்களுக்கு ஒடுங்கியே புலிகள் இருந்தார்கள் எனவும்           பெயர் பெற்ற புலியெதிர்ப்புவாதி சொல்லிக்கொண்டிருக்கிறாரே?

சாதி பாகுபாட்டை ஒழிப்பதென்பது வாய்ப்பேச்சல்ல. தங்களை விளம்பரப்படுத்துவதற்கான வியாபாரமும் அல்ல. முற்போக்கு முகமூடிக்கான சரக்கும் அதுவல்ல. சாதி ஒழிப்பென்பது ஆழமான, நீண்ட சமூக பொருளாதார அரசியல் செயல் திட்டம். அதனை தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர யாரும் சரியாக முன்னெடுக்கவில்லை. விடுதலைப்புலிகள் தாம் உருவாக்கிய நடைமுறை அரசின் நிர்வாக அதிகாரம் கொண்டு சாதிய ஒழிப்பை சாத்தியப்படுத்த முயன்றார்கள்.  அதில் கணிசமான வெற்றியும் கண்டார்கள். அவர்களினால் இந்த விடயத்தில் முழுமையை அடையமுடியுமா எனும் காலஅவகாசத்திற்கிடையில் அழிக்கப்பட்டார்கள். இந்திய தேசியப் போராட்டத்தில் கூட சாதிய ஒழிப்புக்கு பதிலாக தீண்டாமை ஒழிப்பு என்ற சொல்லுக்குள் பதுங்கிக்கொண்டார்கள். தமிழீழ தேசியப் போராட்டத்தில் சமத்துவ சமூகம் கொள்கையாகவே கொள்ளப்பட்டது முன்னெடுக்கப்பட்டது.

பிராந்திய ரீதியான சிக்கல்களில் மாட்டிக்கொண்டு விட்ட ஈழத்தமிழர் பிரச்சனையை இந்தியா எவ்வாறு கையாளவேண்டுமென்று நினைக்கிறீர்கள்?

உண்மையில் ஈழப்பிரச்சனை இப்போது சர்வதேச பிரச்சனையாக மாறிவிட்டது. இந்தியா தன் பாதுகாப்பு நலனுக்காய் எதவாது செய்வதாக இருந்தால் அது இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை தனக்கு இசைவானதாக எப்போதும் பேணுகிற வலுவைக் கொண்டிருக்கவேண்டும். ஈழத்தமிழர்களை மெய்யாக நண்பர்களாக்கி கொள்ளாமல் இந்தியாவால் ஒரு போதும் அதன் நிரந்தர வெற்றியை சாதிக்கவே முடியாது.அது எப்போதும் தாவீத்துவினால் கூழைக்கல் கொண்டு வீழ்த்தப்படும் கோலியாத்தாகவே இலங்கையின் முன் நிற்கும்.

இனப்படுகொலைக்கு பின்னான சர்வதேச மாற்றங்கள் பல ஈழத்தமிழர்களுக்கு சாதகமாக அமைந்தன. ஆனால் அதனை நாம் தான் சரிவரக்கையாள வில்லையோ என்கிற சந்தேகம் எனக்குண்டு. இன்று அப்படியான சில சாதகங்களும் எம் கையிலிருந்து தவறியிருக்கின்றனவல்லவா?

சர்வதேச மாற்றங்கள் என்று நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். உள்நாட்டு மாற்றங்களை வைத்து சர்வதேசத்தை கையாளக்கூடிய அமைந்தது. ஆனால் அது தவறவிடப்பட்டுவிட்டது என்று தான் நம்புகிறேன். கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆட்சியை மாற்றுவதற்காக மேற்குலகம் காட்டிய அரசியல் நலனை தமிழர்களின் தலைமை தனது காத்திரமான பேரப்புள்ளியாக கொண்டு பலதரப்புகளோடு பேரத்தில் இறங்கியிருக்க முடியும். திடமற்ற அரசியல் தலைமைத்துவத்தால் அதனைக் கையாளமுடியவில்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

உங்கள் விடமேறிய கனவு அவலம்பற்றிய அவலத்தை சொன்னது. அப்பால் ஒரு நிலம். முழுக்க முழுக்க இராணுவத் தன்மை கொண்ட களம். அப்பால் ஒரு நிலம் இந்தக்கால கட்டத்தில் எவ்வாறு அவசியமானது?

அப்பால் ஒரு நிலம் எக்காலத்திற்கும் தமிழர்களுக்கு செழுமை சேர்க்கும் இலக்கியாமாக இருக்கும் என்பது எனது துணிபு.  இக்காலத்தில் அதன் தாக்கவிளைவு நிகழ்ந்த ஆயுதப்போரில் விடுதலையை அவாவிய மக்கள் அதற்கான விலையை எப்படிச் செலுத்தினர், அதிலிருந்த நேர்மை என்ன என்பதோடு ஒரு புரட்சிப்படைக்கும் ஒரு அரச ஒடுக்குமுறைப் படைக்கும் உள்ள உளவியல் வேறுபாடுவென்ன என்பதனையும் உணர்த்தக்கூடும்அது இப்போது தேவையாகவுமிருக்கிறது. மறைக்கப்படும் எல்லா நியாயத்தினாலும் உருவாகும் மனஅழுத்தத்திலிருந்து எழுத்தின் வழியாக விடுபடுவது என் சுயதேவையாகவும் இருக்கிறது. நான் எனக்காகவேனும் எழுதத்தானே வேண்டும்.

2017ம் ஆண்டும் பிறந்து விட்டது இன்னும் இரண்டு வருடங்களில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பத்து ஆண்டுகள் ஆகிவிடும். இவ்வளவு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களால் அரசியல் ரீதியாக ஏன் நீதி கேட்டு ஒரு முழுவீச்சில் போராடமுடியவில்லை?

நான் ஏற்கனவே சொன்னதுதான். ஒன்றிணைப்பதற்கான அரசியல் மையம் ஒன்றில்லை.அதாவது மைய அமைப்பு ஒன்றில்லை. போரில் தோல்வி உருவாக்கிய மனஉளைச்சலும்,நம்பிக்கையீனமும் மறுகாரணம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் காலத்தில் அவர்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்பு மிக்க மாபெரும் போராட்டங்கள் அந்தந்த வல்லரசு நாடுகளினால் நயவஞ்சகமாக புறக்கணிப்புக்குள்ளானதும் ஓரங்கட்டப்பட்டதும் கூட இதற்கு முக்கியகாரணமாய் இருக்கும். இந்தப் படிப்பினைகள் இந்த நாடுகளில் எங்கள் போராட்டங்களுக்கு சக்தியில்லை என்கிற கெட்டஅனுபவத்தை கற்றுக்கொடுத்துவிட்டன.

உங்கள் எழுத்துச் செயற்பாடு நாவல்களில் தொடர்கிறது. நாவல் உங்களுக்கு பிடித்த வடிவமா என்ன ?

நாவல் வாசிப்பை நானொரு அறிவுச் செயற்பாடாகவே கொண்டிருக்கிறேன். அதில் ஒரு முழுமை இருப்பதான உணர்வு என்னுள் இருந்து வந்திருக்கிறது. அதனால் அதுவே பிடித்துப் போயிற்று. அல்லது மனம் ஈர்க்கப்பட்டுவிட்டது


நன்றேது? தீதேது? நேர்காணல் தொகுப்பிலிருந்து.

Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்