பான் கி மூனின் றுவாண்டா – மகுடி வாசிக்கும் சொற்சித்திரம் - பி.கு





தற்கால தமிழ் இலக்கியச் சூழலில் வெகுஜன கதைகள் எழுதுவது, இலக்கிய தரம் வாய்ந்த கதைகள் எழுதுவது போன்ற பல விதமான போக்குகள் இருக்கிறது. புதிய வகையான எழுத்துகளும், கதைகளும் களங்களும் வந்த வண்ணம் இருக்கிறது. எத்தனை விதமான படைப்புகள் வந்தாலும் ஈழ இலக்கியம் என்பது எப்போதுமே தனித்துவமானது. ஒரு விதமான சார்பு நிலையோடு எழுதப்பட்டாலும் உண்மைக்கு வெகு நெருக்கமாக நின்று உரையாட கூடியது இந்த ஈழ இலக்கியம். இங்கு, நாம் சந்தித்த மனிதர்களின் கதைகள், வாழ்ந்த வாழ்கின்ற மண் சார்ந்த கதைகளே அதிகம் எழுதப்படுகிறது. வெகு அரிதாக நம்முடைய கதைகள் புனைவுகளின் ஊடாக தொக்கி நிற்குமாறு எழுதப்படும். இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கும் களம், ஈழ இலக்கியம். அது எழுதுபவரின் வாழ்க்கையை, அவர் அடைந்த இன்னல்களை, அவரது வலிகளை, அவரை சார்ந்தவர்களின் வலிகளை, அவர்களது உரிமையை, எவ்வித சமரசமுமின்றி, தண்ணீர் கலக்காத மதுபானத்தைப் போல் அப்பட்டமாக எடுத்துரைக்கிறது.

அகரமுதல்வனின் இந்த பான் கீ மூனின் றுவாண்டா-வும் பங்கருக்குள்ளும், குண்டுகளுடனும் ரத்தமும் சதையுமாக வழிந்து ஓடும் வாழ்க்கையையும், துரோகமும், குரோதமும் நிரம்பிய அகவுலகையும் புறவுலகையும் பட்டவர்த்தனமாக வெளிக்காட்டும் ஒரு படைப்புதான்.

1. பெயர்
இந்த கதையில் இவர் எடுத்திருக்கும் விஷயம், அதிகம் கவனிக்கப்படாத, யாராலும் அவ்வளவாக எழுதப்படாத ஒரு களம். ”ஆண்டவன் கட்டளை” என்றொரு படம் வந்தது. அதில் ஈழத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டில் வாழும் வகையில் ஒரு கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். அந்த கதாபாத்திரம் இறுதிவரை ஊமையாகவே நடித்துக்கொண்டிருப்பார். பேசும்போது, தன்னுடைய பேச்சில் ஈழத்தமிழ் வந்துவிடக்கூடாது அதன்மூலம் வேறு பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காக அப்படி நடிப்பார். இந்த கதையும் கிட்டத்தட்ட அது போன்றதுதான். தன்னுடைய பெயரைக்கூட வெளிப்படையாக சொல்ல முடியாத அளவுக்குத்தான் ஒரு அகதியினுடைய வாழ்க்கை இங்கு கட்டமைக்கப்படுகிறது. ஈழத்தில் இருந்து சென்னை வரும் ஒருவன் ’இளம் அகதி’ என்று மூத்த அகதி ஒருவரால் பெயர் சூட்டப்படுகிறான். வந்த இடத்தில் ஒரு பெண் அகதி மீது மையல் கொண்டு, அவளது கையால் உணவு உண்டு, நினைத்தபோதெல்லாம் அவளுடன் கூடுகிறான். அவ்வளவு நெருக்கமாக ஆன பின்னும் அவர்களிருவரும் தங்களுடைய உண்மையான பெயர்களை ஒருவொருக்கொருவர் சொல்லாமல் மறைக்கின்றனர். இந்த கதையில் அந்த பெயர் விஷயத்தை கதையின் மையமாக எடுத்துக்கொண்ட முதல்வன் அதிலிருந்து விலகி அந்த இருவருக்குமான காதல் மொழிகளையும், காமம் குறித்தும் அதிகம் எழுதியதைப் போல் தெரிகிறது. மேலும், அடிப்படையில் அகர முதல்வன் ஒரு கவிஞர் என்பது கதையின் ஒவ்வொரு வரிகளிலும் தெளிவாகிறது. வார்த்தைகள் ஒவ்வொன்றும் மினுக்கிக்கொண்டு நிற்கின்றன. சற்று நிதானமாக வாசிக்கவில்லை என்றால் கதையை மறந்து சொற்களில் விழுந்து மகுடிக்கு மயங்கும் சர்ப்பமாய் லயித்து கிடக்கக்கூடும்.

( உதா:- முலைக்காம்பின் நுனியில் இருவருக்கும் உருவேற்றம் ஊறியது.
ஒரு தவளையை விழுங்க நெளியும் பாம்பின் ஸ்வர நெளிவை அவளின் உடல் ஜனித்தது. )

2. தீபாவளி
இடப்பெயர்வில் தொடங்கும் கதை, தன்னுடைய நிலத்தைவிட்டு நகரமாட்டேன் என்றிருக்கும் கதிர்காமனின் கடந்த காலத்தை கண்முன்னே விரிக்கிறது. குறிப்பாக பிரசவத்திற்கு செல்லும் பெண்ணின் உடற்பாகங்களை தொட்டு தடவி சுகங்காணும் இந்திய ராணுவத்தின் உண்மை முகத்தை தோலுரிக்கிறது. அதுமட்டுமில்லாது மருத்துவமனையிலும், கைக்குழந்தை என்றும் பாராமல் நடத்தும் ராணுவத்தின் அத்துமீறல்களையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது. மேலும் இந்திரா காந்தியின் மீது ஈழத்தவர்களுக்கு இருந்த மதிப்பையும் அன்பையும் உணர்த்தும் விதமாக கதை நகர்கிறது. இந்த கதையில் என்னை கொஞ்சம் அதிர்ச்சியுற செய்த சம்பவம், கொல்லப்பட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கீழே கிடக்க, அந்த சமயத்தில் ஒரு ராணுவத்தாள் தன்னுடைய ஜீன்ஸ் பேண்ட்டை கழட்டி அவள் மேல் தன்னுடலை விழுத்தினான் என்று எழுதியிருப்பார் முதல்வன். இந்த வரி வாசிக்கையில் ஒரு நிமிடம் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு அமர்ந்திருந்தேன். அத்தனை எளிதாக இந்த வரிகளை கடக்க முடியவில்லை. இந்திய ராணுவம் மருத்துவமனை என்றும் பாராமல் சின்ன குழந்தைகள் மீதும் வன்முறை நடத்தியதை முகத்திலறைந்து உணர்த்தும் முக்கியமான கதை இந்த ’தீபாவளி’.

3. கள்ளு
தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் கதையாகத்தான் இதைப்பார்க்க தோன்றுகிறது. கதை என்ற அளவில் சிறப்பாக வந்திருக்கிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் நேரிடையாக சொல்லிருக்கலாம் என்பது என் எண்ணம். இதில் தெய்வானை என்ற கதாபாத்திரம் முக்கியமான ஒன்று. கதையில் வரும் மூன்றுபேரை ஒன்றிணைக்கும் புள்ளி தெய்வானைதான். கதைசொல்லியின் அப்பா வப்பாட்டியாக வைத்திருந்த தெய்வானை, பொயிலை சண்முகத்துடன் பீ பத்தையில் இருந்த தெய்வானை, கண்டிவீரனை ஓட ஓட அடித்து பின்னர் அவனுக்கே மனைவியாகிய தெய்வானை. இறுதியில் ஜீவசொருபிக்கும், கபிலுக்கும் தாயான தெய்வானை. இதனிடையில் புலிகளின் இயக்கத்தில் சேராமலையே தன்னை இயக்கத்தின் ஆள் என்று முன்னிறுத்திக்கொள்ளும் சிலரையும் சாடியிருக்கிறார் முதல்வன். அதுமட்டுமின்றி கிடைக்கும் இடங்களிலெல்லாம் இயக்கத்தை நல்ல விதமாக சொல்லிக்கொண்டே வருகிறார். (உதாரணமாக:- தன் தகப்பனை தாயுடன் சேர்த்து வைப்பது, பொயிலை சண்முகம் தன் வேலையாளை சாதி சொல்லி திட்டியதால் இயக்கம் அவனை கொன்றது) இதனால் தான் இதை ஒரு சார்புடைய நூல் என்று எழுதியிருந்தேன். முதல்வனே கூட இதை ஒப்பும் கொள்வார் என்று நினைக்கிறேன்.

இன்னொரு விஷயம், இந்த கதைக்கு எதற்காக ’கள்ளு’ என்று பெயர் வைத்தார் என்று இறுதிவரை என்னால் யூகிக்கவே இயலவில்லை.

4. சங்கிலியன் படை
இது ஒரு கொடூரமான கதை. ஒரு நம்பிக்கை துரோகத்திற்கான தண்டனை. காதலுக்கு செய்த குரோதத்திற்கான மரண பரிசு. இதுவரை நாம் வாசித்த கதைகளில் இருந்து சற்று வேறுபடுகிறது. அடங்கியவனின் அவலத்தை நிறைய கதைத்து இருக்கிறோம், இது அடங்கியவன் அத்துமீறி எழுந்தால் என்னவாகும் என்ற கதை. உடனிருந்து குழி பறித்தவனின் கதை. காதலித்த பெண்ணை புணர்ந்து கொன்றவனை, கொல்லும் கதை. கொலை என்றாலே அநியாயம் என்ற எண்ணத்தை உடைத்தெறியும் கதை.
இப்பேர்ப்பட்ட ஒரு கதையை லா.ச.ரா மாதிரி எழுத முடியுமா?? அப்படித்தான் எழுதியிருக்கிறார் முதல்வன்.

உதாரணமாக.,
இரவின் பேரின்ப வாசனை வெளியை வலை பின்னிக் கொண்டிருக்கிறது.
மின்குமிழ்களின் வெளிச்சம் சிவப்பு நிற குரோட்டன்களில் பூத்து நின்றன..
தீயின் ஒளி காற்றில் கலைந்து ஜெயந்தன் போலொரு புன்னகை செய்தது.
உயிரின் வெக்கையான நிறம் கறையாக நெளிந்து போனது.
பழுத்த பலா இலையின் நிறத்திலான சட்டை.(எப்படி இருக்குமென யோசிக்கிறேன்)

இன்னும் பல…..
ஒரு அக்மார்க் ஈழத்து கதை. இன்னும் கொஞ்சம் தெளிவு இருந்திருக்கலாமோ என்று எனக்கு தோன்றியது. ஏனெனில் வேறொரு நிலத்தின் கதையை சொல்கிறபோது வாசிப்பில் தடுமாற்றம் வருவது இயல்புதான், மற்றும் கதையின் அமைப்பும் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதால், வாசகன் குழம்புவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

மேலும், முதல் 10,15 வரிகளுக்குள்ளாகவே 6 முறை சைக்கிளில் போய்க்கொண்டிருந்தான், மிக வேகமாக மிதித்தான், மித வேகமாக சென்றான் என்று வெவ்வேறு சொற்களில் வருவது சற்று அயர்ச்சியை தருகிறது.

5. இவன்
இந்தத் தொகுப்பில் இருக்கும் கதைகளில் இது சற்று வித்தியாசமான கதை. முந்தைய கதையைப் போலவே, நம்பிக்கைத் துரோகத்தை முன்னிறுத்துவது. அதுமட்டுமல்லாது, இயக்கத்தின் நடவடிக்கைகளையும் ஈழத்தவர்கள் மீது அவர்கள் காட்டிய அக்கறையையும் எடுத்துரைக்கிறது. தன் பிள்ளைகள் கனடாவில் இருக்க, தனித்து வாழும் கிழவி ஒருத்திக்கு ஒத்தாசையாக ’இவன்’ இருக்கிறான். கிழவியும் இவனை அளவுக்கதிகமாக நம்புகிறாள். அவளிடம் இருக்கும் சொத்துகளைப் பார்த்த இவனுக்கு மனம் சஞ்சலப்படுகிறது. தனது கூட்டாளியுடன் சேர்ந்து அந்த கிழவியிடம் இருந்து வைர அட்டியலை திருடுகிறான். இயக்கத்திடம் மாட்டிக்கொள்ளும் அவன், தான் செய்த காரியத்தை தன் வாயாலையே அங்கிருக்கும் ஒரு ஓபீஸரிடம் சொல்வதாக கதை நகர்கிறது. அந்த கிழவியே வந்து அவனை விட்டுவிட சொன்னாலும், அவனை விடாது வைத்திருந்து தண்டனைக் காலம் முடிந்தவுடன் வெளிவிடுகிறது இயக்கம். வீட்டிற்கு திரும்பி வந்தவனைப் பார்க்க, நிறைய பேர் கூடியிருக்கிறார்கள், அதில் அந்த கிழவியும் இருக்கிறாள். அவளது காலில் விழுந்து கதறுகிறான். அப்போது ’இவனது’ மகள், கழுத்தில் அந்த வைர அட்டியலோடு அவன் முன் வருகிறாள். அந்த கிழவியோ எதுவும் பேசாது சென்றுவிட, இவனது மகள் இவனிடம் இப்படி சொல்வதாக இக்கதையை முடிக்கிறார் முதல்வன். ”குற்றவாளியே உன்னைச் சுடுவதற்கு எனக்கொரு துவக்கு வேண்டும், இல்லாது போனால் உனது கையில் கிடந்த துருப்பிடித்த கோடாரியாவது தேவை”. இந்த கதையில் முதல் பத்தியொன்று ”இவனை” அறிமுகப்படுத்துவதாக வருகிறது. அது இக்கதைக்கு எந்த விதத்திலும் ஒட்டுவதாக தெரியவில்லை மற்றும் இந்த கதை முடிய இன்னும் இவ்வளவு நேரமிருக்கிறது என்பதுப்போன்ற வரிகள் சற்று சலிப்பூட்டுகிறது.

6. தாழம்பூ
சங்க இலக்கியங்களில் நாம் கேள்விப்பட்ட கதைதான். போர்க்களத்தில் இருக்கும் வீரனை எதிர்நோக்கி இருக்கும் மனைவியின் உள்ளத்து உணர்வுகளை ஒரு கவிக்கே உரிய மொழியுடன் விவரிக்கும் முதல்வன், அதே சமயத்தில் களத்தில் ராணுவத்திற்கும் இயக்கத்திற்கும் நடக்கும் போர்க்காட்சிகளையும் அதே வீரியத்துடன் கதையின் ஊடாக சொல்லி செல்கிறார். லோஜியின் பார்வையிலிருந்து இனிமையான காதல் கவிதை போல தொடங்கும் கதை, பிற்பாதியில் அதியமானின் கள செயல்பாடுகளையும் சில போர் நுணுக்கங்களையும் விவரிக்கிறது. இந்த கதையில் என்னை ஈர்த்தது, ஒரு நீள் கவிதையை சிறுகதையாக்கி இருக்கும் அந்த விதம்தான். கவிதைக்கு தோதான பல வரிகளை உள்ளடக்கியது இந்து கதை. உதா:- “முட்கள் குவிந்த ஒற்றையடிப் பாதையில் வெறுங்காலோடு பூக்களை நடும்” , “அவளிடமிருந்து பகல் தப்பித்துக்கொண்டேயிருந்தது” , “கனவிலும் வாழ்விலும் நம்மை ஏமாற்றும் இந்த யுத்தத்தை எம்மால் ஏமாற்றவே முடியவில்லை”. இது போன்ற வரிகள் கதை நெடுகிலும் இடம்பெற்று நம்மை ஒரு விதமான கிறக்க நிலையிலையே கொண்டுசெல்கிறது. இந்த கதையின் முடிவு கொஞ்சம் நாடகீயமாக தெரிந்தது. முடிவில் ஒரு திடுக் திருப்பம் இருந்தே ஆகவேண்டும் என்ற யாரோ உருவாக்கிய கோட்பாட்டுடன் முடிக்க முயன்றிருப்பதாக தெரிகிறது. ’தாழம்பூ’விற்கும் இந்த கதைக்கும் என்ன தொடர்பு என்று அடுத்தமுறை முதல்வனை சந்திக்கையில் கேட்க வேண்டும்.

7. கரை சேராத மகள்
புலிகள் தங்களது இயக்கத்தில் குழந்தைகளை சேர்ப்பதில்லை என்பதை தெளிவுப்படுத்தும் ஒரு கதையாகத்தான் இது எனக்கு தெரிகிறது. அதுமட்டுமின்றி தனிமையில் வாழும் ஒரு பெண்ணின் துயரும், அவள் சந்திக்கும் பிரச்சனைகளும் எடுத்தாளப்பட்டுள்ளது. இயக்கத்தில் சேர வேண்டும் என்று செல்லும் அந்த மகளை படிக்கச்சொல்லும் தமிழினியின் மூலம் இயக்கத்தின் கொள்கைகளை தெளிவுப்படுத்துகிறார் முதல்வன். ராணுவத்தால் தன்னுடைய கால்களையும் கண்ணையும் இழந்த சாதனா, தன் தாய்க்கு கொள்ளிக்கு வைத்துவிட்டு கடைசி வரை கரை சேராத மகளாகி தான் போனாள்.

8. முயல்சுருக்கு கண்கள்
முதல்வன் ஒரு தேர்ந்த கதைசொல்லி என்பதை மீண்டுமொருமுறை இந்த கதையின் மூலம் உணரமுடிகிறது. இந்த தொகுப்பில் இருக்கும் வித்தியாசமான கதைகளில் இதுவும் ஒன்று. காடு, வேட்டை, காதல், காமம் என்று பயணிக்கும் இந்த கதையில் பல நுணுக்கமான விஷயங்கள் காணக்கிடக்கின்றன. உதா:- நீரில் குளித்து தலையை சிலுப்பி வெளிவரும் ராவணனுக்கு இன்றும் பத்து தலை என்ற இடம், இதில் ராவணன் என்பது நாய். அடுத்ததாக, உடும்பின் மையை எடுத்து நாயின் மூக்கில் தடவுவது. இதுபோன்ற நுணுக்கமான விவரிப்புகள் கதை நெடுகிலும் பரவிக்கிடக்கிறது. காடுகளின் மீதும் வேட்டையின் மீதும் முதல்வனின் ஆர்வம் புலப்படுகிறது. காதல் மொழிகளிலெல்லாம் புகுந்து விளையடுகிறார். குறிப்பாக காமத்தை எழுதும் போது சற்றும் விரசமின்றி மொழியை கையாளும் கலை இயல்பாகவே வருகிறது அகரனுக்கு. கதையின் உச்சபட்ச சொல்லாடலாய் நான் கருதுவது இதைத்தான், “உங்களுக்கு உடும்பு வேட்டையை விட முயல் வேட்டையில திறமை அதிகம்” என்று ஆதவி சொல்லும் இடமும், கிழவர் சொல்லும், ”உடும்பு வேட்டைக்கு முயலோட போன ஒரே வேட்டைக்காரன் நீதானடா” என்ற இடமும்.

9. தந்தம்
சொல்வதற்கும் எதுவுமில்லை. மிகச்சுமாரான கதை. கதையாகவில்லை, கதையாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இன்னும் கூடுதல் தெளிவு இருந்திருக்கலாம். அல்லது என் புரிதலில் பிசகாகக்கூட இருக்கலாம்.

10. குடாநாட்டில் வாத்தியார் கடத்தப்பட்டார்
இக்கதையின் ’குடாநாடு’ என்பதை கொடநாடு என்றும், ’வாத்யாரை’ எம்.ஜி.ஆர் என்றும் நாம் யூகிக்கக்கூடும் ஆனால், இது அதுவல்ல. முழுக்க முழுக்க வெளிப்படையான அரசியல் பேசும் கதையிது. எம்.ஜி.ஆர் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததை, உதவி செய்ததை போகிறப்போக்கில் சொல்லுகிறார் முதல்வன். ஒரு இடத்தில் ரஹ்மான் பாடல் கேசற் குறித்து வரும் சொல்லாடலில் இசை மீதான இயக்கத்தின் நிலைப்பாடு தெரிகிறது. கீர்த்தனாவாக இருந்து அனுமாவாக மாறியவளின் கதை, இயக்கத்துக்கான அவளின் உயிர்த்தியாகம், லண்டன் ரத்தினத்தின் திட்டம், அதானஸ் வாத்யாரின் கோபம், மகிந்த ராஜபக்சே என்று நேரிடையாக தாக்குகிறார் ஆசிரியர். குண்டு கட்டி அனுப்பப்படும் கீர்த்தனா என்ற அனுமா உண்மையான போராளியாக நம் மனதில் இடம்பெறுகிறார்.

என்னை பொறுத்தவரையில் கடைசி இரண்டு கதைகளும் தன்னிறைவு அடையவில்லை என்றுதான் சொல்வேன். அல்லது வாசிப்பவரிடம் அதிக உழைப்பை கோருபவை.

மேற்கண்ட, இந்த கதைகள் அனைத்திலும் என்னை ஈர்த்த விஷயம் என்னவென்றால், கதை மாந்தர்களுக்கு முதல்வன் வைத்த பெயர்கள். குறிப்பாக, சிவபாதம் திருநாவுக்கரசு, இந்திரா, பொயிலை சண்முகம், கண்டிவீரன், லோஜி, பூ ராணி, கழுத்துளுக்கி, ஆதவி, இராவணன் (நாய்), தேங்காய் தினேஷ், லண்டன் ரத்தினம்.

மேலும் கதை நெடுகிலும் விரவிக்கிடக்கும் கவிதை மொழி. கவிஞன் சிறுகதையாளனாக உருவெடுக்கும்போது இயல்பாகவே வரக்கூடிய விஷயம் தான் இது. இதில் ப்ளஸும் இருக்கிறது, மைனஸும் இருக்கிறது. வெகு சில இடங்களில் சிறு சிறு எழுத்துப்பிழைகளும், வாக்கியப்பிழைகளும் தென்படுகிறது.

கதைக்களுக்கான தலைப்புகளில் இன்னும் கொஞ்சம் மெனக்கெடலாம் என்று தோன்றுகிறது.

இந்த நூலை படிப்பதற்கு முன் இலங்கை அரசியலையும், தமிழீழத்தையும், ராணுவ-புலிகள் இடையேயான மோதலையும் அறிந்திருத்தல் கதைகளை உள்வாங்குவதற்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன். றுவாண்டா என்ற நாட்டின் மீது ஐ.நா சபையின் அப்போதைய தலைவர் பான் கி மூன் கொண்டிருந்த நிலைப்பாட்டை முன்னிறுத்தும் விதமாக, அறியச்செய்யும் விதமாக தொகுப்புக்கு இந்த தலைப்பு வைத்திருப்பதாக சொல்லியிருக்கிறார் அகர முதல்வன்.

போருக்கு முந்தைய வாழ்வு, பிந்தைய வாழ்வும் மக்களும், நிலமும் புறமும், தனிமனித துரோகம், குரோதம், காதல், தனிமை இவற்றை சுற்றி எழுப்பப்பட்ட கலவையான தொகுப்புதான் இந்த ”பான் கி மூனின் றுவாண்டா”.

என் யூகம் சரியென்றால் அவர் இந்த கதைகளின் மூலம் வேண்டி நிற்பதெல்லாம் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட அவர்களது வாழ்க்கையை மட்டுமே; இலக்கியம் படைப்பதோ விருது வாங்குவதோ அவரது இலக்காக இருக்காதென்று நம்புகிறேன். அவர் எழுதுவது அம்மக்களின் வாழ்வையும், நிலத்தின் கதையையும் தான்.



இன்னும் பல காத்திரமான படைப்புகள், சொல்லப்படாத கதைகள் அகரமுதல்வனிடம் இருந்து வெளிவருமென்று நம்புகிறேன்.

Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்