பான் கீ மூனின் ரூவாண்டா: ஒரு ஐம்பது ஓவர் கிரிக்கெட் ஆட்டம் - ஆர்.அபிலாஷ்






கூட்டத்தில் கண்ணில் படும் பெண் முகங்களில் ஒருசில மட்டும் அழகானவையாய் படும். அந்த அழகு முகங்களில் ஒன்றிரண்டு மட்டுமே நம்முடன் தீராத ரகசியமொன்றைப் பேசும். அகரமுதல்வனின் மொழி அப்படியானது. வாக்கிய அமைப்பைப் பொறுத்தமட்டில் அவர் லஷ்மி சரவணகுமாரை வெகுவாய் நினைவுபடுத்துகிறார். உதாரணத்துக்கு கீழே வரும் மேற்கோள்களைப் பாருங்கள்:

பந்தயத்தின் விதிகள் தெரியாமல் மைதானத்தில் இறக்கி விடப்பட்ட கடிவாளக் குதிரை போன்று ஆடைகள் நீங்காத அவளின் மார்புகளையே பார்த்துக் கொண்டிருந்தான். அகதியானவள் பிசைந்து கொடுக்கும் சோற்றை அவன் விழுங்கி சாப்பிட்டான். இருவருக்குமிடையில் மூட்டம் போலொரு வாசம் உருண்டது.” (பெயர்)

இரவின் திரையில் கொக்குகள் எழுந்து பறக்கையில் வெண்பஞ்சுகள் வெடித்து அலைவதை போலிருந்தது.” (முயல்சுருக்கு கண்கள்)
மானின் கொம்புகளாய் தருணங்கள் வளர்ந்தன. மிகச்சிக்கலான சாயலில் இருவருக்குமிடையில் பிரபஞ்சம் தோகை விரித்தது.” (முயல்சுருக்கு கண்கள்)

லஷ்மி சரவணகுமார் கவிதையின் மிக மிக சன்னமான பட்டிழையில் சிறுகதையின் ஒளிப்பூச்சியை தட்டுத்தடுமாறி அழைத்துச் செல்பவர். அகரமுதல்வன் இயல்பாகவே அந்த தடத்தையே தேர்ந்திருக்கிறார். ஏனெனில் அவர் முதலில் கவிஞர். அடுத்தே கதைசொல்லி.
சிறுகதை என்பது கவிதையின் வடிவத்துக்கு மிக அணுக்கமானது; சிறுகதை எழுதுவதானது.தொட்டால் உடைந்து விடுவது போன்ற நீர்க்குமிழிகளை விரல் நுனியில் வாங்கி உயிர்கொடுக்கும் பணி. பு.பி, தி.ஜா, அழகிரிசாமி அசோகமித்திரனில் இருந்து .முத்துலிங்கம் வரையிலான உரைநடையை பிரதான கருவியாய் கொண்ட எதார்த்த கதைசொல்லிகள் கவித்துவமான உணர்வெழுச்சி தருணத்தை ஸ்கலிதம் போல் திரட்டி கொண்டு வந்தே சிறுகதையில் வெற்றியை தொட்டுள்ளார்கள். இன்னொரு பக்கம், இயல்பாகவே கவித்துவமான, உருவக மொழியை கொண்ட எஸ்.ரா, ஜெயமோகன், கோணங்கி போன்றோரும் சிறுகதையில் கொடி நாட்டி இருக்கிறார்கள்.

லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் தாக்கம் காரணமாகவே தமிழில் பின்னவர்களின் மரபு தோன்றியது. லஷ்மி சரவணகுமாரும் அவ்வழியே வந்தவர். ஆனால் அகரமுதல்வன் லத்தீன் அமெரிக்க முகஜாடை இன்றியே அப்பாணியிலான கதைகளை இத்தொகுப்பில் எழுதியுள்ளார் என்பது சிறப்பானது, குறிப்பிடத் தக்கது.

அதென்ன அந்த பாணி என நீங்கள் கேட்கலாம். இந்த இரண்டாவது பாணி கதையெழுத்தானது கதை கூறலின் சம்பிரதாயமான வகைமையை மீறியது. உதாரணமாய், இத்தொகுப்பில் வரும்பெயர் கதையில் துவக்கம், மையம், முடிவு எனும் அமைப்பிலான ஒரு கதையே இல்லை. இக்கதையின் மாந்தனுக்கு பெயரும் இல்லை. பெயரில்லை என்பது தான் அவனது சிக்கல். இது கிட்டத்தட்ட எல்லா அகதி இலக்கிய படைப்புகளின் சாரமாக வரும் பிரச்சனை. தான் எதுவென அறியாத, அதை அறியத் தவிக்கும் ஒருவனின் கதை இது. அவன் ஈழத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்துள்ளான். அவனைப் போன்ற ஒரு மூத்த அகதி தான் சிவபாதம் திருநாவுக்கரசு. அவர் அவனிடம் அவனது பெயரை வினவ அவன் சொல்லற்று நிற்கிறான். அவர் அவனுக்கு புதுப்பெயர் அளிக்கிறார்அகதினானவன். கதை துவங்கும் போது அவர் காலமாகி விடுகிறார். இப்போது அவன் முழுக்க முழுக்க புலம் இழந்தவன். அவன் தன்னைப் போன்ற அகதியானவளான ஒரு பெண்ணைக் கண்டு ஈர்க்கப்பட்டு அவளிடம் செல்கிறான். இருவரும் கூடுகிறார்கள். விடிகாலையில் அவன் துயில் கலைந்தெழ அவள் சொல்கிறாள்அகதிகள் புணரும் ரகசியத்தை விடியும் இரவும் பார்த்து விடக் கூடாது. அப்படியே நித்திரை கொள். காலமை எழும்பிக் குளிக்கலாம்.” இருவருக்கும் புணர்ச்சி என்பது காம தணிப்பு மட்டுமல்ல. அது ஒரு சுயத் தேடல். பெயர் மற்றும் அடையாளத் தேடல். இரவில் நிகழும் ஒரு ரகசியப் புணர்ச்சி எப்படி பெயரற்றதாக, மௌனமாய், இருளின் அசைவின்மை கொண்டதாய் உள்ளதோ ஒரு அகதியின் இருப்பும் அவ்வாறே அமைகிறது என மிக நுணுக்கமாய் தொட்டுக்காட்டும் கதை இது.

ஒரு விட்டில் பூச்சி விளக்கில்லாமலும் சுவரில் மோதுண்டு நிலத்தில் சுழன்றது. இளம் அகதியின் மேனி அகதியானவளை இறுகித் துளிர்த்தது.”
மேலே உள்ள வரியுடன் கதை முடிகிறது. அக்கதையின் ஒரு திறப்பைப் போன்றே இவ்வரி உள்ளது. விளக்கு இல்லாமல் வியர்த்தமாய் சுவரில் மோதும் விட்டிலின் அவலம் போன்றது ஒரு அகதியின் வாழ்வு என்கிறார் அகரமுதல்வன். விளக்கை, அதன் ஒளியை, அகதியின் அடையாளம் எனக் கொள்வோமெனில் இந்த ரகசியப் புணர்ச்சி நமக்கு சிறப்பாய் பொருள் தரும்.



இக்கதையில் என்றல்ல அகரமுதல்வனின் மிச்ச கதைகளிலும் பெண்ணுடல் என்பது இழந்த ஈழ மண்ணுக்கான ஒரு உருவகமாகவெ வருகிறது. “தீபாவளியிலும் (என்னைக் கண்கலங்கச் செய்த, பதறச் செய்த ஒரு கதை) கதிர்காமனின் மனைவியான சந்திராவின் உடல் அவ்வாறு ஒரு உருவகமே. தொடர்ந்து ராணுவத் தாக்குதல்களில் உருக்குலையும் தம் மண்ணில் இருந்து சிதறிச் செல்லும் மக்கள். அவர்களிடையே தனது நிறைமாத மனைவியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் கதிர்காமன் அக்கதையில் வருகிறான். ஒரு சோதனைச் சாவடியில் ஒரு ராணுவ வீரன் சோதனை செய்யும் சாக்கில் சந்திராவின் உடம்பில் திரும்பத் திரும்ப தடவுகிறான். இது கதிர்காமனை கொலைவெறி கொள்ளச் செய்கிறது. அவனுக்கு அவனைக் கொன்று விட வெறி மூள்கிறது. ஆனால் அமைதியாக பொறுத்துக் கொள்கிறான். பின்னர் மருத்துவமனையில் சந்திராவுக்கு பிரசவம் ஆகிறது. குழந்தைக்கு இந்திரா என, புலி ஆதரவு நிலைப்பாடு கொண்ட, மறைந்த இந்திய பிரதமரின் பெயரை சூட்டுகிறான். சந்திரா இங்கு போரில் சிக்குண்ட ஒரு நிலத்தின் உருவகம் என்றால் அக்குழந்தையே தமிழ் ஈழம்.

கள்ளு கதையின் தெய்வானையையும் நாம் இவ்வாறே வாசிக்க இயலும். தெய்வானை என்கிற பெயரை நாம் ஈழத்தின் உருவகமாய் கொள்வோம் எனில் அது நகைமுரணான ஒன்றாகிறது. தெய்வானை முருகனின் அதிகாரபூர்வ மனைவி எனில் இக்கதையில் வரும் தெய்வானை பிறர் கணவர்களை கவர்கிறவள். குடும்பமற்றவள். தெய்வானைக்கான அந்தஸ்தை இழந்தவள். நிலைத்த ஆண் துணையோ வாழ்விடமோ வாழ்வாதாரமோ இன்றி அவள் கதைமுழுக்க தவித்தலைகிறாள். ஆனாலும் துணிச்சலாய் வாழ்வை எதிர்கொள்கிறாள். இறுதியில் அவள் என்னானாள்?
இப்போது அவளுக்கு காது கேட்காது. … ஒரு மார்பை நீக்கி புற்றை வெட்டினார்கள். பொஸ்பரஸ் குண்டுகள் காரணமாக இருக்கலாமென்று வைத்தியர்கள் நிறையப் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். தாய்நாடுமில்லை, தாய்களுக்கு முலையுமில்லை என்று யுத்தம் எல்லாவற்றையும் சபித்து விட்டது.”

அகரமுதல்வனின் கவிதைகள் பரிச்சயமுள்ளவர்களுக்கு இந்த விளக்கம் ஆச்சரியம் அளிக்காது. ஏனெனில் அவரது கவிதைகளிலும் தொடர்ந்து பெண்ணுடல் ஈழமண்ணுக்கான ஒரு உருவகமே. அவ்வகையில் அவரது கவிதை எழுத்தின் ஒரு நாசூக்கான நீட்சியாக இக்கதைகள் அமைந்துள்ளன எனலாம்.

ஈழ அரசியலைப் பேசுவதில் அகரமுதல்வனின் ஆச்சரியமின்றி ஷோபா சக்தி, சயந்தன் போன்றோருக்கு எதிர்நிலையில் நிற்கிறார். “வாடா வாடா பாருடா என புலிகளைப் பற்றி நேர்முகமான செல்பிக்களை அளிக்கிறார். புலிகள் குழந்தைகளை இயக்கத்தில் சேர்த்துக் கொண்டதில்லை; அவர்கள் சாதி ஒடுக்குமுறையை எதிர்த்தார்கள்; பெண்கள் குடும்பத்துக்குள் வன்முறைக்குள்ளான போது அதை கண்டித்தார்கள். களவு உள்ளிட்ட சமூகக் குற்றங்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கினார்கள் .இப்படி புலிகள் ஒரு முற்போக்கான, அறம் பிறழாத இயக்கம் எனும் சித்திரத்தையே அகரமுதல்வன் அளிக்கிறார். அதுவும் புலம்பெயர்ந்தோரின் புலி எதிர்ப்பெழுத்துக்கு பதில் கூறுவது போல் அமைவதால் அது வீரேந்திர சேவாக்கின் ஷாட்கள் போல சற்றே மிகையாக, அதிரடியாய் அமைகிறது.

சங்கிலியன் படை”, “இவன்”, “கரை சேராத மகள்”, “தந்தம்”, மற்றும்குடாநாட்டில் வாத்தியார் கடத்தப்பட்டார்ஆகிய கதைகள் அப்படியானவை. ஒன்று, வடிவரீதியாய் இவை சிறுகதைகள் ஆகவில்லை. அடுத்து, ஈழ ஆதரவுஈழ எதிர்ப்பு எனும் இருமையை ஒரு கறுப்புக்கண்ணாடியைப் போன்று இக்கதைகள் அணிந்திருக்கின்றன. அதனால் கதைமாந்தர்களை வாழ்வின் விதிச்சுழலில் அகப்பட்ட எளிய மனிதர்களாய் பார்க்க அகரமுதல்வனால் இயல முடியாமல் போகிறது

ஒருவித முன்னெண்ணத்துடன் இக்கதைகளை அவர் அணுகி இருப்பதால் அவை .மு.. பிரச்சார கதைகளைப் போல் ஆகி விடுகின்றன. ஆனாலும் ஈழத்தின் எளிய மக்களின் அன்றாட அவஸ்தைகள், எகத்தாளப் பேச்சு, பகடி, கிண்டல், கவித்துவ தருணங்கள் ஆகியவற்றை அவர் சித்தரிக்கும் விதத்தில் இக்கதைகள் நாம் நிச்சயம் படிக்க வேண்டிய படைப்புகள் ஆகின்றன.
தாழம்பூமற்றும்முயல்சுருக்கு கண்கள்நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட கவித்துவ, மீ-எதார்த்த பாணிக் கதைகள். எழிலான மொழிநடையும், உவப்பாண வர்ணனையும் என்னை இக்கதைகளை ரசிக்க செய்தன. ஆனாலும் இவ்விரண்டு கதைகளும் சிறுகதையின் முழுமையை எட்டவில்லை என்றே சொல்ல வேண்டும்.


இத்தொகுப்பை நான் ஒரு ஐம்பது ஓவர் கிரிக்கெட் ஆட்டத்துடன் ஒப்பிடுவேன். முதல்பாதியில் அற்புதமான கவர் டிரைவ்களும் ஸ்டைலான புல் ஷாட்களும் வருகின்றன. பிற்பாதி முழுக்க ஸ்லாக் ஓவர்கள் போல் கன்னாபின்னா அடிதடி கிரிக்கெட். இடையில் ஒன்றிரண்டு நளினமான ஷாட்களும் மின்னி மறைகின்றன. மொத்தத்தில் ஒரு வெகுசுவாரஸ்யமான அனுபவமாய் இது அமைகிறது

Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்