தமிழ் வாசகப்பரப்பு கவனிக்கத்தவறிய தமிழீழப் பெண் படைப்புக்கள் - அகரமுதல்வன்




துயரமான காலத்தை காகிதங்களில் எழுதுவதே துயரமானது எனும் அனுபவம் எனக்கிருக்கிறது. அதுவொரு வதைமிகுந்த செயல்.  அதுமட்டுமல்ல பயங்கரங்கள் சொற்களிலும் தொற்றிவிடுகிற             அபாயம் இருக்கிறது. வாழ்வே கனவாகிப்போன சாவின் சகதிக்குள் புதைந்திருந்தும் புதைந்து மீண்ட பின்னரும் அதை எழுதுவதானது ஆழிபோலான மரணத்தின் துர்வாசனையை மீண்டும் சுவாசிப்பது போலானது. 

ஈழம் இந்தநூற்றாண்டில் பல்வேறு தளங்களில்  முக்கியத்துவம் பெறப்போகின்ற ஒரு பெயர்ச்சொல். அது பெயர்ச்சொல் மட்டும் தானா?  ஈழம் அவலத்திற்கு எதிரான போராட்ட மந்திரம். அது இனிவரும் எல்லாக்காலங்களிலும் மானுட நீதிக்கான அடையாளம். அதுவொரு நீதியின் இலட்சணை.  தம் கைகள் வெடிகுண்டுகளால் அறுக்கப்பட்டபின்னரும் பறவைகளின் சிறகுகள் குறித்தும் அதன்       சுதந்திரம் குறித்தும் இலக்கியம் படைக்கும் விடுதலையின் வேட்கை மண்ணுக்கு இருக்கிறது. 

ஈழம் என்பது இரத்தத்தால் பலியிடப்பட்ட விடுதலையின் கருவறை எனும் சொல்லாடல் மிகவும் சரியானது. அந்தக் கருவறையில் இருந்து அறிஞர்களும், கலைஞர்களும் பிறந்தெழுந்தார்கள், பிறந்தெழுவார்கள் என்பது திண்ணம். அந்தப் பிறப்புக்களின் அதிவேகமான காலகட்டம் இதுவென்றால் மிகையில்லை.


ஈழத்திலிருந்து வெளிவந்தகவிதைகள் தமிழ்க் கவிப்பரப்பில் மிகமுக்கிய பங்காற்றியவை. அந்தக் காலகட்டத்தில் ஓர்மம் மிகுந்த வாழ்வின் விநோதமான அலைக்கழிப்பும், பிடிநிலையற்ற இருத்தலும், போரும் போராட்டமும், ஆதிக்கத்தின் கனத்த இரைச்சல்களும், வெகுண்டெழும் இறுமாந்த குரல்களும், வாழ்வை போருக்குள் பொருத்திய மாந்தர்களின் கனவுகளும் நவீன தமிழ்க்கவிதை உலகுக்கு வழங்கியது ஈழத்தமிழ்க் கவிதைகள் தான் என்பதை எவரொருவராலும் மறுக்கத்தான்இயலாது.



“எழுதுங்களேன்
நான் எழுதாது செல்லும்
என் கவிதையை
எழுதுங்களேன்.”
இந்தக் கவிதை கப்டன் வானதியால் எழுதப்பட்டது. தனக்கென வாழமறுத்த ஒரு ஆன்மாவின் குரலிது. தமிழீழப் போராளியின் உறைந்தகணத்தின் வரிகளிது. மரத்துப்போன இறுக்கமான மனத்தின் கோரிக்கையிது. இந்தக் கவிதையின் மனச்செயற்பாடு பிரபஞ்சத்தை உலுக்கும் இழத்தலின் வலியில் நிற்கிறது. இது சுயத்தின் துன்பத்தைச் சொல்லவில்லை. மாறாக இனத்தின் துன்பத்திலிருந்து உதிக்கிறது. இது போலான பலநூறுகவிதைகளை           தமிழ்க் கவிதைப்பரப்பிற்கு அளித்தது தமிழீழர் கவிதைகள் என்பதனை சுட்டிக்காட்ட வேண்டும்.
தமிழ் இலக்கியம் எனும் பொதுச்சொல்லில் தமிழீழர் இலக்கியம் தவிர்க்கப்படமுடியாதது என பேராசிரியர். க.சிவத்தம்பி அவர்கள் குறிப்பிடுவார். அது அவரின் மதிப்பீடுகளில் மிகமுக்கியமானது. கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என நீண்டுசெல்லும் கலைவழியிலான தமிழீழர் செயற்பாடுகளில் போராட்டத்துக்குள்           இருந்து எழுதிய பெண்களின் எழுத்துக்கள் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றன. தமிழீழப் பெண்களின் கவிதைகளை தமிழக வாசிப்புப்            பரப்பு மிகவும் விரிவாக அறிந்துவைத்திருக்கின்ற போதிலும் அவர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளும், நாவல்களும் கவனிக்கப்படாமல் இருப்பது வேதனைக்குரியது. (எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் போராளியின் காதலி எனும் நாவல் குறித்து கூழாங்கற்கள் இலக்கிய அமைப்பு நடாத்திய இனப்படுகொலைகளும் இலக்கியங்களும் அமர்வில் விவாதிக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது )
மலைமகள், வெற்றிச்செல்வி, ஆதிலட்சுமி,நாமகள்,பிரமிளா, என நீண்டு கொண்டே போகும் தமிழீழப் பெண்களின் சிறுகதைகள் எத்தனையோ  ஆனி பிராங் டயரிக்குறிப்புகளுக்கு நிகரானவை. 
மலைமகளின் சிறுகதைகள் சுயஇயல்பும் பிரதேசத்தன்மையும் கொண்ட தனித்துவமானவை. அவரின் கதைகள் முள்ளிவாய்க்காலுக்கு முன்னரானவை. ஆனால் உலகுக்கு தெரியாத ஈழத்தின் நிறைய முள்ளிவாய்க்கால்களைக் கொண்டிருக்கும். போராளியெனும் ஊழியத்தை மனநிறைவாகக் கொண்டிருக்கும் தமிழீழப் பெண்களின் அகவுலகத்தை மலைமகளின் கதைகள் திறம்பட உரைத்துவிடும். 
இராணுவத்தின் சோதனைகள் தமிழ்ப் பெண்களை எவ்வளவு சித்திரவதைக்குள்ளாக்குகின்றது, அவர்களின் துவக்குகள் எதனை குறிபார்க்கின்றன, களத்தில் போரிடும் போராளிகள் மக்களோடு எப்படி அன்பொழுக நடக்கிறார்கள் என, கழுத்தில் நஞ்சணிந்து கொண்டு யார்  என்று தெரியாத ஒரு சகோதரியின் திருமணம் பற்றிய உரையாடல்களோடு களத்தில் சண்டை செய்வதென மலைமகளின் சிறுகதைகள் வெளியுலகம் அதிசியக்கும் நிறைவான தியாகங்கள் கொண்ட பாத்திரங்களால் தரிசிக்கப்படுபவை. 
மலைமகள் ஒரு போராளி. இந்த நூற்றாண்டில் ஆசியப்பிராந்தியத்தில் தமிழீழர் மண்ணில் தான் பெண்ணியவாதம் நிலைத்துநின்றது. பெண்ணியவாதம் என்பது தலைநேராக நிற்கும் கட்டுப்பெட்டித்தனங்களை தலைகீழாக நிறுத்துவதல்ல. தலைநேராக நிற்கும் கட்டுப்பெட்டித்தனங்களின் தலையை அறுத்தல் தானென நிரூபித்த தலைமுறை பிரசவித்த பெண் மலைமகள். 
ஈழப்போராட்டம் என்பது இன்றைய சூழலில் தியாகம், துரோகம் எனும் இருபெட்டிக்குள் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது கவலைக்குரியது. ஆனால் இவைகளின் பாதிப்பு இல்லாமல் போராட்டம் இருந்திருக்கவில்லை. மலைமகள் இவற்றிலிருந்து வெளியே நிற்கிறாள். அவளின் கதைகள் இரத்தமூறிய முனைகளில் இருந்து கொப்பளிக்கும் சாட்சிகள். தமிழீழப் பெண்களின் இலக்கியம் இவ்வுலகில் மொழிபெயர்க்கப்படவேண்டும். பெண் என்பவள் எப்படியான புதுமைகளுக்கும் சமூகத்தின் தடத்தில் அவளின் பாய்ச்சல்கள் எப்படி நேர்ந்திருக்கிறது என்பதற்கும் அவைகள் மொழிபெயர்க்கப்படவேண்டும். மலைமகளின் ஒரு கவிதை நான் சொல்லும் தன்மைக்குச் சாட்சி. அவளின் கவிதைகள் வெகுண்டெழும் வெளிப்படையான தன்மை கொண்டவை.
நான் உரக்கக்கத்துவேன்
புதைக்கச் சொன்னவர் எவரோ
.......
என் கதறல்
செம்மணி வெளிகடந்து
பிரபஞ்சமெங்கும் பரவும்
.........
குருதி வழிகையிலும்
என் குரல் அதிரும்
ஆதிக்கக் கோட்டைகள் உதிரும் வரையில்
எனது குரல் உயரும்.
இந்தக் கவிதை மலைமகளினது. மலைமகள் கதைகள் ஈழ இலக்கியத்தின் மிக முக்கியமான இடத்தை தக்கவைக்கும் காலகட்டம் வரலாற்றுக்கு அவசியமான ஒன்று. அவளொரு போராளியாகவிருந்தாள். புலிகள் இயக்கத்தின் காலகட்டம் என்பது வெறுமென ஆயுதத்தை நம்பியது மட்டுமல்ல, இலக்கியத்தையும் நம்பியது என்பதற்கான எழுத்திலக்கிய ஆதாரங்கள் மலைமகளைப் போன்ற போராளிகளின் எழுத்துக்கள். 
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு முன்னர் – பின்னர் என தமிழீழர் இலக்கியம் ஆராயப்படவேண்டும். அது வரலாற்றின் கண்கொண்டு வாசிக்கப்படவேண்டும். போராட்டமும் நம்பிக்கையும் விடுதலையும் கனவாகித் தழலும் காலகட்டத்தில் நடந்துகொடுமைகளை பற்றிய மலைமகளின் கதைகள் அதிர்வுக்குரியவை.
அவை இந்நாட்களில்  மட்டுமல்ல எந்நாட்களுக்கும் உரியவை. மலைமகள் இனப்படுகொலைக்களத்தில் இருந்து மீண்டாளா என்று எனக்குத் தெரியாது. இனப்படுகொலைக்களத்தில் இருந்து மீண்டாளா எனும் கேள்வியே என்னை கொல்கிறது. அங்கு நான் சாகதது குறித்துத்தான் இந்நாள் வரைக்கும் கவலை கொள்கிறேன் என்பது என் ஆயுள்துயரம். அது என்கூடவே வரும். மலைமகளை அவளின் கதைவழியாக நாம் கண்டுணரவேண்டும். மலைமகளை எந்தக் குண்டுகளும் கொல்லாது. ஏனென்றால் அவளொரு போராளி அதன் பின்னர் எழுத்தாளர்.
வெற்றிச்செல்வி இன்னொரு போராளி. அவரின் கதைகள் நிரகாரிக்கவே முடியாத ஈழப்பெண்களின் உளவியலை கூடவே சொன்னால் அதிஇருளான ஏக்கங்கள் பற்றி கொடியேறுபவை. போராளிகளுகிருக்கும் தாய்மையுணர்வு வெற்றிச்செல்வியின் கதைகளில் கண்டுணரமுடியும். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பின்னர் தமிழீழரால் எழுதப்படுகிற படைப்புக்களில் அதுவும் போராளியாகவிருந்து வதைமுகாம்களுக்கு சென்று மீண்டுவந்து எழுதுபவர்களில் மிக முக்கியமானவர் வெற்றிச்செல்வி. 
அவரின் “காணாமல் போனவனின் மனைவி” எனும் சிறுகதைத்தொகுப்பு முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான நான்கு வருடங்களில் வெளியானது. அந்தத் தொகுப்பின் தலைப்பே தமிழீழர் அவலத்தின் இன்றைய சாட்சிக்குரலாக இருக்கிறது. இனப்படுகொலைக்கும் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரும் ஈழத்தின் அவலங்கள் எப்படியாகிவிட்டதென அவரின் இந்தத்தொகுப்பு அறிவித்துவிடும். காணாமல்போனவர்களை தேடுவதே வாழ்வென ஆக்கப்பட்ட மனிதர்களைக் குறித்தும் அழிக்கப்பட்ட குங்குமங்களைக் குறித்தும் இன்றைய ஈழத்தின் பாடுகளை எழுதிக்கொண்டிருக்கும் வெற்றிச்செல்வியின் கதைகள்         எதிரியின் அவலத்திற்கு பிறகான சமூகம் பற்றிய அவலத்தின் கொடுமைகளைக் கூறுகின்றன. 
வெற்றிச்செல்வியின் நாவல் “போராளியின் காதலி” அது தமிழீழர் இலக்கியத்தின் போர்க்களத்தின் காதலை இரத்தமும் சதையுமாக சொன்னபிரதி ஆனால் அது கவனிக்கப்படாமல் இருக்கிறது. தமிழ் இலக்கியப்பரப்பில் ஒரு கொடூரவியாதியிருக்கிறது. யாரைப் பற்றி எந்தப் பதிப்பகத்தின் நூல்களைப் பற்றி எழுதவேண்டும், பேசவேண்டும் எனும் குறுகிய மனம் கொண்டஇருட்டடிப்புக்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. 
வெற்றிச்செல்வியின் நாவலைப் பற்றி தமிழகத்தின் இலக்கியவிற்பன்னர்கள் வாயே திறக்கவில்லை. அவர்கள் திறக்கவேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது. ஆனால் அவர்கள் அதே நிலத்தில் வந்த வேறொரு பிரதியைப் பற்றி நாளும் பொழுதும் கூவிக் கூவி ஊழியம் செய்வதன் அரசியல் வேறு விதமானது. ஊழிக்காலம் எனும் நாவலுக்கு தமிழகத்தில் கொடுக்கப்பட்ட வரவேற்பு வெற்றிச்செல்வியின் போராளியின் காதலிக்கு கிடைக்காத பின்னணி குறித்து ஆராய்வதற்கு கூட ஆட்கள் இல்லாமல் போனது குறித்து கவலைகொள்கிறேன். வெற்றிச்செல்வி முள்ளிவாய்க்காலுக்குப் பிறகும் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு போராளி. ஒரு என்றால் எண்ணிகையில் ஒன்றல்ல. தமிழில் ஒப்பற்ற என்றுமொரு பொருளுண்டு. வெற்றிச்செல்வியின் காணாமல்போனவனின் மனைவியும், போராளியின் காதலியும் ஈழத்துப் பெண்களின் இருநிலையான காலகட்டத்தைப் பற்றிய நிலவரங்களோடு தன்னை இணைத்திருப்பது.
ஈழ இலக்கியம் என்பது தமிழகத்தின் வாசகப்பரப்பில் இரண்டுவிதமாகவே அணுகப்படுகிறது. புலி ஆதரவு – புலி எதிர்ப்பு இது கவலைக்குரியது. புலியெதிர்ப்பு எனும் செயற்பாடு மலிவான அரசியல்தன்மை கொண்டது. எதற்கெடுத்தாலும் புலியைப் புறம் சொல்லும் புளுகுக்கதை சொல்லிகள் நிறையப் பேரை அது  இயந்திரத்தன்மையாய் உற்பத்திசெய்து கொண்டேயிருக்கிறது. 
நீதிக்குப் புறம்பாக நின்று கொண்டு ஒரு அமைப்பை குறை சொல்லும் படலத்தில் ஒரு படுகொலையை மூடி மறைத்துவிடும் இவர்களைப் பற்றி பேசுவதே காலத்திற்கு கேடு. புலி ஆதரவு என்பது    அறம் என்பதை நாம் கைக்கொண்டால் அது தானாகேவ நம்மைப்பபற்றி விடும். புலி எதிர்ப்புவாதம் பாதிக்கப்பட்ட இனத்தின் சாட்சியாக இன்றைவரைக்கும் இருந்தது கிடையாது. அமைப்புசார் விமார்சனங்கள் அல்லது அப்படியான எண்ணங்கள் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் என்னளவில் இப்போதையே தேவையல்ல. கொல்லப்பட்டு இரத்தத்தின் முன்னால் பலியிடப்பட்ட மக்களின் நீதிக்காக அவர்களின் கண்ணீரின் பாத்திரம் அறிந்து எழுதவதை நான் தொண்டாகவே கொண்டிருக்கிறேன். 
நாம் எதைப்பற்றி பேசவேண்டும் எதனை இந்தச் சமூகத்தில் முன்னிலைப் படுத்தவேண்டும் என்று என்னைக் கேட்டால், எவன் மக்களின் கண்ணீரை, இரத்தத்தை,பாடுகளை எழுதுகிறானோ அவனைத்தான் நான் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று சொல்வேன். ஒரு மலைமகளுக்கு முன்னால் பல்லாயிரம் ஷோபாசக்திகளும் நொருங்கித்தான் சிதறுவார்கள். மாந்தர்களே! பொய்கள் சிதறுண்டு போகும் வேளையில் அதனை நம்பிய உங்கள் கைகளிலும் பாவத்திற்கான இரத்தக்கறையிருக்கும்.
நாம் மலைமகள்களையும், வெற்றிச்செல்விகளையும், ஆதிலட்சுமிகளையும், அம்புலிகளையும் இன்னுமின்னும் சொல்கிறேன். தமிழ்நதிகளையும், வானதிகளையும் வாசிப்போம். இலக்கியம் என்பது உண்மை. உண்மை என்பது இரத்தம். இரத்தம் என்பது நாம் விடுதலைக்கு வார்த்ததண்ணீர்.         எம் விடுதலை என்பது அறம். அறம் என்பது எம் எழுத்து. எழுத்தென்பது கொன்றுபோடப்பட்ட எங்களின் உண்மைக் கதை.   

Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்