தமிழ் மக்களை இனித் தமிழ்தேசியம் தான் காப்பாற்ற வேண்டும் - அகரமுதல்வன்


உலக அரசியற்போக்கில் பரவலாக கவனம் பெற்றிருக்கும்”தேசியம்” என்கிற பதத்தை தவிர அதன் உள்ளீடான அரசியல் அர்த்தத்தை தெரிந்திருப்பவர்கள் நம்மில் மிகக் குறைவானவர்களே.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்காலங்களில் தோன்றிய தேசியமெனும் பதத்தின் இரத்தவோட்டங்களையும், அதன் இதயத்துடிப்பையும், அவசியத்தையும்       பல ஆயிரம் ஆண்டுகால தொன்மைமிகுந்த தமிழினம் அறிந்திருக்கவேண்டும்.

அனைவரின் சுய உரிமையில் தொடங்கி இனம்,நாடு என்ற கூட்டுச்சுயம் வரை விரிந்துநிற்கிறது தேசியம். ஒரு தனிமனிதனுக்கு சுயம் இருப்பதைப் போலவே ஒரு இனத்திற்கும் சுயமிருக்கிறது. அதனைப் பாதுகாப்பதைத் தான் சுயநிர்ணயம் என்கிறோம்.

இந்த நூற்றாண்டில் மானுடம் காவுவாங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் களத்தில் இருந்து எழுதப்பட்டு வெளியான இந்த நூல் வரலாறு. அத்தோடு தமிழீழத் தேசியத்திற்காக  எழுந்த ஆயுத ரீதியிலான  விடுதலைப்போராட்டத்தின், அஸ்தமனக்காலத்தில் எழுதப்பட்ட உதயத்தின் வெளிச்சமாகவுமிருக்கிறது.

அநீதியால் அலைக்கழிக்கப்பட்டு,
கொல்லப்பட்டுக் கொண்டிருந்த நாட்களில் தேசியத்தையும் ஜனநாயகத்தையும் குறித்து எழுதவல்ல, மனோபலமும் அரசியல் மீதான நம்பிக்கையும் அறிஞர் மு. திருநாவுக்கரசிடம் இருந்ததில் ஆச்சரியம் கிடையாது. அவர் அரசியலில் பூரணத்தெளிவு கொண்டவர். இவ்வுலகில் அரசியலின்றி ஏதுமில்லை என்கிற கார்ல் மார்க்ஸின் மேற்கோளை தனது சக்தியாகக் கொண்டிருப்பவர். அவரின் அரசியல் ஆய்வு நூல்கள் ஏற்படுத்திய அதிர்வுகள் அளப்பெரியவை.

மேற்கத்தையை அரசியல் சிந்தனைகளையும், அணுகுமுறைகளையும் பிடித்துத்தொங்கியபடி, அதுவே தீர்மானமான வழிகோல் என                 நின்றிருந்த அரசியல் ஆய்வுப்பாணிகளை எல்லாம் தகர்த்து, தமிழின் அரசியல் ஆய்வுக்கு புதிய இரத்தம் வழங்கியவர் மு. திருநாவுக்கரசு.

“தேசியமும் ஜனநாயகமும்” என்கிற இந்த நூலில் அவர் குறிப்பிடும் தேசியவாதத்தின் பண்புகளையும், அதன் பணிகளையும் காவிச்செல்ல வேண்டியவர்களாக தமிழினம் மட்டுமல்ல, அனைத்து தேசியவாதிகளும் இருக்கிறார்கள். தேசியங்களின் மீது அதிகளவு நம்பிக்கை கொண்டிருக்கக்கூடிய இந்த நூற்றாண்டின் அரசியலை வடிவமைத்திருக்கும், கடந்த நூற்றாண்டுகளின் தடங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

ஒரு இன அடையாளத்தின் மூலமாக மக்கள் திரள் கூட்டுச்சேரும் பொழுதில் தேசியம் உருவாகினாலும் ஜனநாயகமே அதற்கு உயிர்மூச்சாய் திகழுகிறது.   ஜனநாயகம் எனும் இதயத்தை நீக்கிவிட்டு தேசியம் என்கிற உயிரற்ற உடலைக் கொண்டு எங்கும் செல்லமுடியாது, எதுவும் செய்யமுடியாது என இந்நூல் எச்சரிக்கவும் செய்கிறது.

உலகின் எல்லாநாடுகளிலும் தேசியமிருக்கிறது. அவற்றுள் ஜனநாயகத்தை கொண்டிருப்பவை, ஜனநாயகத்தை மறுதலிப்பவை, அரை ஜனநாயகத்தை வைத்து அலங்கரிப்பவை என பலதரப்பட்ட நாடுகள் இருக்கின்றன.

இஸ்ரேல் பேசுகிற தேசியமென்பது ஆதிக்கத் தேசியம். ஜனநாயகப் பண்புகளைக் களைந்து “இஸ்ரேல் தேசியம்” வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அது பாலஸ்தீன மக்களைக் கொன்றுகுவிக்கிறது. மேலும் இத்தனை ஆண்டுகால மனிதகுல நாகரிகம் தன்னையே தன்னால் மாய்த்துக்கொள்ளுமளவுக்கு அருவருக்கத்தக்க இனப்படுகொலையை பொஸ்னிய முஸ்லிம்கள் மீது நிகழ்த்திய மிலோசோவிக் தலைமையிலான சேபியர்கள் பேசியதும் தேசியமே.

தன்னிச்சையாகவே ஆதிக்கவாதமும் இனவாதமும் இஸ்ரேலின்         தேசியமாக உருக்கொள்கின்றன. கடந்த நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் (1992) சேபியத் தேசியம் பொஸ்னிய முஸ்லிகளைக் எவ்வாறு கொன்றதுவோ, அதைவிட பன்மடங்கு வகையில் சிங்கள பெளத்த தேசியத்தால் தமிழீழர்கள் நடப்பு நூற்றாண்டின் தொடக்கத்தில் வகை தொகையின்றி ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

தேசியமென்பதை நாகரிக யுகத்தின் ஜனநாயக விழுமியங்கள் கொண்ட அரசியல் பண்பாடாக நாம் புரிந்துகொள்ளவேண்டும். தேசியத்தின் பேரால் நடத்தப்படும் படுகொலைகள் யாவும் இனப்படுகொலை வாதமேயன்றி அதனை நாம் தேசியவாதம் என்று பொருள்கொள்ளக்கூடாது.

இவ்வுலகில் நடந்தேறிய முதலாவது தேசிய விடுதலைப் போராட்டத்தை பிரித்தானிய ஆங்கிலேயருக்கு எதிராக நிகழ்த்திய அமெரிக்க ஆங்கிலேயர்களின் தேசியமானது ஜனநாயகத்திற்காய் முகிழ்த்ததுவே. மன்னராட்சிக்கு எதிராக, பிரித்தானிய ஆதிக்கத்திற்கு எதிராக ஜனநாயகத்தில் ஊற்றெடுத்த அமெரிக்கத் தேசியம் இன்றைக்கு உலகின் ஆதிக்கவாதமாக தோற்றம் கொண்டுவிட்டது.

அங்கு நிலவும் அரை ஜனநாயகமே மூச்சிழுத்துக் கொண்டேயிருக்கிறது. இன்றைய அதிபரான ரொனால்ட் ரம்ப் பேசக்கூடிய அமெரிக்கத் தேசியம் உலகளவில் கடுமையாக விவாதிக்கப்பட்டதொரு விடயமாகும். ஆனால் தேசியப் பாதுகாப்பு என்கிற வகையில் அவர் முன்னெடுக்கிற விடயங்கள் அனைத்துக்குமே அமெரிக்கர்களின் பெரும்பான்மையான ஆதரவு இருக்கவே செய்கிறது.

தேசியச்சிந்தனை இன்றைய காலகட்டத்தில் மேலெழுந்து வருவதற்கான பெரிய சாட்சியாக ரொனால்ட் ரம்பின் தேர்தல் வெற்றியையே நம் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று புரிந்துகொள்ளவேண்டும். நான் இதனைக் குறிப்பிடுவதின் பரிமாணமானது பிறிதொன்றிற்கானது.

அமெரிக்கத் தேசியமானது 1776ஆம் ஆண்டிலிருந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டேயிருக்கிறது. வரலாற்றில் ஜனநாயகத்தின் மீது எத்தனையோ படுகொலைகளை நிகழ்த்திய அமெரிக்கா தனது தேசியத்தில் ஜனநாயகத்தை தவறவிடுவதாயில்லை.

ஆனால் தேசியத்தின் பேரால் பலவிடங்களில் பகிடிக்குள்ளாகும் இனமாக தமிழினம் தானிருக்கிறது.
இது திட்டமிடப்பட்ட ஒரு கூட்டுச்சதி.

சீனா,அமெரிக்கா,ரஷ்யா, வடகொரியா என உலகத்தின் திசைமுழுக்க எழும் தேசியத்தை தேசியமென ஒப்புக்கொள்கிறவர்கள் தான், தமிழ்த் தேசியத்தை இனவாதமாக,சாதிய ஆதிக்கவாதமாக சித்தரிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த நிலையை தேசியத்திற்குள் இருக்கும் ஜனநாயக அணுகுமுறைகளோடு துடைத்தழிக்கும் வாதங்களையும் படைப்புக்களையும் முன்எடுப்பவர்களாக தமிழ்த் தேசியவாதிகள் இருக்கவேண்டும்.

“அரசியல் தீர்மானங்களில் மக்களுக்குப் பங்கில்லை என்றால், அங்கு மக்களுக்கு என்று எதுவுமில்லை” என இந்த நூலில் எழுதப்பட்டிருக்கும் வாக்கியத்தை தனது மூளையில் அழியாத மைகொண்டு எழுதவேண்டிய பொறுப்பு தேசியவாதத்திற்கிருக்கிறது.

மு. திருநாவுக்கரசு அவர்கள் இந்நூலில் எழுதியிருக்கும் ஐந்து கட்டுரைகளும் வெவ்வேறு வரலாறுகளில் தொடங்கி மீண்டும் மீண்டும் தேசியத்தின் ஜனநாயகத்தை வலியுறுத்துவதாகவே அமைந்திருக்கிறது.

தமிழீழத் தேசியம் பற்றிய கட்டுரையில் இலங்கைத்தீவின் தமிழ்- சிங்கள இனப்பிரச்சினையின் அடிநாதமாக விளங்கக்கூடிய இந்திய எதிர்ப்பு வாதம்பற்றி குறிப்பிடப்படுகிறது.இதன் வாயிலாக இலங்கைத்தீவில் நூறாண்டு காலம் தொடருகிற இனப்பிரச்சினையிலிருந்து இந்தியா ஒரு போதும் தள்ளிநின்று விடமுடியாதென குறிப்பிடுவதோடு, பெளத்த சிங்களவர்கள் கொண்டிருக்கும் இந்திய எதிர்ப்பால் தமிழர்கள் கொல்லப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழீழத் தேசியத்திற்குள்ளும் இந்தியாவைக் குறிப்பிடாமல் ஒரு தமிழீழத்தவரால் கடந்துபோகமுடியவில்லை. ஆனால் இந்தியா எப்போதும் தமிழீழத்தை,  தமிழீழ மக்களின் நீதியான குரலை வெகுலாவகாமாக கடந்துபோகிறது என்கிற கவலை என்னிடமும் இருக்கவே செய்கிறது.

இந்தக் கட்டுரை இலங்கைத் தீவில் நிகழ்ந்த பல்வேறு குறியீட்டு எழுச்சிகளையும், தமிழ்- சிங்கள இருதரப்பினருக்கும் இடையில் எழுந்த பெருமைவாத போட்டிகளையும், இன்னும் சொல்லப்போனால் சைவம்- பெளத்தம் என்கிற மதரீதியான புத்துயிர்ப்புகளையும் அலசி ஆராய்கிறது.

சிங்களவர்கள் மத்தியில் இருந்த ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யக் கூடிய அதிகாரப்பகிர்வுகள் குறித்தும் சிங்கள – பெளத்த ஆதிக்கவாதம் எப்படி வடிவமைக்கப்பட்டது என்பதை நுண்மான் நுழைபுலத்தோடு எழுதுவதற்கு தமிழீழச் சமூகத்திடம் இருக்கிற ஒரே அறிஞர் மு. திருநாவுக்கரசு அவர்களே.

தமிழீழத் தேசியத்தைப் பொறுத்தவரையில் அதனுடைய போதாமைகளை அது கவனிக்கத்தவறிய விடயங்களை பாரபட்சமின்றி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சிங்களவர்கள் மத்தியில் பெளத்தவாதம் தலைதூக்கியதும் கிறிஸ்தவர்களாகவிருந்த கரையோரச் சிங்களர்கள் பெளதத்திற்கு மதம் மாறினார்கள். சிங்கள கிறிஸ்தவர்கள் தம்மை ஆளக்கூடாது, தலைமை தாங்கக் கூடாது என பெளத்த சிங்களர்கள் கூறிக்கொண்டிருந்த காலத்தில்,சைவமத உணர்வு மேலோங்கியிருந்த தமிழர் தரப்பில் இருபதாண்டு காலத்தலைவராக கிறிஸ்தவரான தந்தை செல்வாவே இருந்தார் என்பதை ஓர் நல்ல அம்சமாக குறிப்பிடுகிறார்.

தமிழர்கள் மத்தியில் மாமன்னர்களை வியந்தும் போற்றியும் பாடுகிற கொடுமுடிச்சிந்தனை இருபதாம் நூற்றாண்டிலும் எஞ்சியிருந்தது, இருபத்தியோராம் நூற்றாண்டிலும் இருக்கிறது. தேசியத்திற்கு அதுவே ஒரு பின்னடைவு தான். சிங்களவர்கள் துட்டகைமுனுவை முன்னிறுத்தினார்கள் என்றால், தமிழர் தரப்பு எல்லாளனை முன்நிறுத்தியது.

நாம் எல்லாக்காலங்களிலும் ஒரு பிம்பத்தை போற்றக்கூடிய, அல்லது அதனைக் காவிச்செல்லக் கூடியவர்களாக இருக்கிறோமே தவிர நாம் அரசியலை  அதன் அர்த்தத்தில் புரிந்துகொள்ளத் தவறுகிறோம்.

இன்றைக்குத் தமிழ்த் தேசியமெனும் அரசியற்பதம் மிகமுக்கியமான தேசியவாதமாக உருக்கொண்டுவிட்டது. தமிழீழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு பின்னரான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் தோன்றிய தமிழ்தேசிய இயக்கங்களின் எண்ணிக்கை முப்பதிற்கும் மேலானவை. இந்தவொரு தேசிய எழுச்சியின் வீச்சு கருத்தில் கொள்ளவேண்டியது.  தமிழீழ மக்களின் விடுதலைக்கான ஒரு குரலாகவும், தமிழகத்தின் உரிமைப்பிரச்சினை சார்ந்த குரலாகவும் தோன்றிய அமைப்புக்களில்  சில தமிழ்தேசியத்தை தனிமனித பிம்பங்களுக்குள்ளால் நிலைநிறுத்த முயற்சிக்கின்றனர்.

தேசியமென்பதே தனிமனித பிம்பங்களுக்கு எதிரானது. படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான மக்களின் உடலங்களும், அங்கவீனமாக்கப்பட்ட குழந்தைகளின் முகங்களுமே நமது தேசியத்தின் அவசியத்தை இவ்வுலகிற்கு உணர்த்த போதுமானதாகவிருக்கும்.

ஒரு மனிதனுக்கு அவசியமானது என பேராசான் கார்ல் மார்க்ஸ் குறிப்பிடும் உணவு, உடை, உறையுள் என்பவற்றையெல்லாம் தாண்டி இன்றைக்கு தமிழீழ மக்கள் ஒவ்வொருத்தருக்கும் உயிர் பாதுகாப்பு அவசியமாயிருக்கிறது.

தந்தை செல்வா தனது அரசியல் ஜீவிதத்தின், இறுதி அத்தியாயத்தின்  உரையில் குறிப்பிட்ட வார்த்தைகள் இன்றைக்கும் சபிக்கபடுகிற தமிழனின் தலையெழுத்தாய், விதியாய் நீள்கிறது.

சாத்வீகத்திலிருந்து ஆயுதப்போராட்டமாக தன்மை மாறிய தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்றைக்கு மீண்டும் சாத்வீகத்திற்கு திரும்பியிருக்கிறது. ஆனால் கடந்தபோன வழிக்கு திரும்புவது பின்னடைவு. தமிழீழத் தேசியத்தில் மிதவாதமும், வன்முறையும் தோல்விகண்டு விட்டது.

நாம் தேசியத்தின் உள்ளீடுகளில் நிறையவற்றை கைவிட்டிருந்தோம். பல்வேறு இடங்களில் ஜனநாயகம் கூட தமிழீழத் தேசியத்தில் இல்லாமலிருந்ததை வரலாறு பதிந்துவைத்திருக்கிறது. நாம் தேசியவாதத்தை ஜனநாயகப்படுத்துகிற ஒரு காலகட்டமே இதுதான்.

தந்தை செல்வா தனது இறுதி உரையில் “தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று கூறினார். தமிழர்களிடம் இப்போது கடவுளுமில்லை, கோவில்களுமில்லை. தேசியம் மட்டுமேயிருக்கிறது.

இந்த நூலைப் படித்தபிறகு தமிழ் மக்களை இனித் தமிழ்தேசியம் தான் காப்பாற்ற வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது.

நன்றி.

வெளியீடு : ஆகுதி பதிப்பகம்
விலை: எழுபது ரூபாய் (இந்தியா)


Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்