அவலம்

ஒரு நல்ல மனிதன் வசதியிருக்கும்  பாதையைத் தேடமாட்டான். மாறாக கடமையிருக்கும் பாதையைத்தான் தேடுவான் – பிடல் காஸ்ரோ



“தப்புவித்த எங்களிடத்தில் புதியபாடலொன்று
கம்பீரமாய் அமர்ந்திருப்பதை
காயத்தின் தழும்புகளுக்குள்ளிருக்கும் 
சிவந்த தீவு அறியும்”
(டாங்கிகளில் சரியும் முல்லை நிலா கவிதைத்தொகுதியிலிருந்து )

இரத்தம் சொரியும் தமிழ் மக்களின் பக்கமிருந்து உருவாகியிருப்பவன் நான். எல்லாவிதமான தத்துவங்களை விடவும் நடைமுறை மேலானது. எப்போதும் தத்துவங்கள் நடைமுறையால் சரிபார்க்கப்படவேண்டும். தத்துவம் நடைமுறையால் தான் உயிர்பெற முடியும். ரத்தம் சொரியும் பரிசோதனை எலிகளாக்கப்பட்டிருக்கும் அனுபவத்தைக் கொண்ட       தமிழீழ மகன் நான். இந்தத் துயரிலிருந்து விடுபடுவதற்கு துயரத்தின் அடிச்சுவடுகளை அடையாளம் காணவேண்டிய பொறுப்பு எனக்குண்டு. ஒவ்வொரு தமிழீழ குடிமகனுக்குமுண்டு.

அதுமட்டுல்லாமல் தமிழீழத்துயரத்தை வெறும் உணர்ச்சிபூர்வமான தளங்களில் இருந்து பார்க்காமல் அதற்கான அறிவியல் காரணங்களையும் அதன் மீது கட்டியெழுப்பப்பட்டிருக்கும் யதார்த்தத்தையும் பரிசீலனைக்கு உட்படுத்தியேயாகவேண்டும். அது அவசியமானது. விருப்பு வெறுப்பைக் கடந்து நாம் உணர்ச்சியின் பருத்த ஆடைகளைக் களைந்து அறிவெனும் புத்தாடைகளை அணியவேண்டும். அறிவின்றி வெற்றியை மட்டுமல்ல, தோல்வியைக் கூட உணரமுடியாது. அது துயரத்தின் பன்மடங்கிற்குள் எம்மைச் சுழற்றியடித்து விடும்.

புவிசார் அரசியல், பூகோள அரசியல், சர்வதேச அரசியல், மற்றும் உள்நாட்டு அரசியல் என்ற நீண்ட அரசியல் வரலாற்றை பல்வேறு கோட்பாடுகளின் பின்னணியில் வைத்து தமிழீழர் பிரச்சனையை அணுகும் அறிஞர் மு.திருநாவுக்கரசு அவர்களின் “யாப்பு; டொனமூர் முதல் சிறிசேனா வரை” நூல் வெளியீட்டு விழா தொடர்பாக எழுந்த எதிர்ப்புக்களும் என் மீது வசைமாரியாகப் பொழியப்பட்ட அவதூறுகளுக்கும் காரணமானவர்கள் மீது எனக்கு எந்த வருத்தமுமில்லை. 

அவர்கள் மீது வருத்தம்கொள்வது எனக்கு வேலையாகாது. அது அவரவர் அளவில் அவரவர்க்கான அச்சங்களும் தனிமனித கசப்பும் நிரம்பிய ஒரு அபத்தமான பண்பின் வெளிப்பாடு.  அதனை எப்போதும் போலவே நான் “நாய்கள் குரைக்கட்டும்,ஒட்டகங்கள் தங்கள் பிரயாணத்தை தொடரட்டும்” எனும் அரேபியப் பழமொழியைக் கைத்தடியாகக் கொண்டு நடந்து கடந்துவிட்டேன். அது குறித்து எந்தக் களைப்பும் எனக்கு இல்லை.



“யாப்பு;டொனமூர் முதல் சிறிசேனா வரை” கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த  அமைவிடத்தை இந்துசமுத்திரத்தின் மத்தியில் கொண்டுள்ள இலங்கைத்தீவில் வாழும் தமிழர்கள் புவிசார், பூகோள, சர்வதேச, உள்நாட்டு  அரசியல் என்ற அனைத்துச் சக்திகளின் அரசியல் நலன்களுக்குள்ளும் சிக்குண்டுள்ளதை மட்டுமல்லாமல் இதனடிப்படையில் தமிழர்கள் புவிசார் அரசியலின் கைதிகளாக ஆக்கப்பட்டிருக்கும் கொடூரமான உண்மையை வேதனை கொப்பளிக்க நிரூபித்து நிற்கிறது.

மேலே குறிப்பிட்ட அரசியல்களின் அனைத்துவகை நலன்களுக்காகவும் தமிழீழர்களை ஒடுக்கும் பிரித்தானியா, இலங்கை, இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை நோக்கி தமிழ் மக்களின் நீதியின் குரலாய் ஒலித்துநிற்கிறது இந்த நூல்.

தமிழீழரின் பிரச்சனையானது வெறுமென சிங்களர் –தமிழர் எனும் இனப்பிரச்சனையல்ல; இந்தியாவிற்கு எதிரான தமது வரலாற்று ரீதியான யுத்தத்தை சிங்கள அரசு தமிழீழர்கள் மீது புரிகின்றது என உறுதிப்படுத்துவதோடு இந்தியாவின் மீது பகைமை கொண்ட அந்நிய நாடுகளும் இந்துசமுத்திரம் மீது ஆதிக்கம் செலுத்தும் பூகோள வல்லரசுகளும் சிங்கள அரசுடன் நட்பை பெறுவதற்காக தமிழீழ ஒடுக்குமுறையில் கைகோர்த்து நிற்கிறது என்பதை வரலாற்றின் சுவடுகளில் இருந்து வெளிச்சப்படுத்தி நிற்கிறது இந்த நூல்.

அந்நிய சக்திகளுடன் சிங்கள அரசு கைகோர்த்து விடக்கூடாது என்பதற்காகவும் சிங்கள அரசின் நட்பை பெறுவதற்கும் இந்திய அரசு சிங்களர்களோடு கைகோர்த்துச் செயற்படுவதானது தமிழீழரை அழிக்கும் செயல் மட்டுமல்ல, கூடவே இந்தியா தன்னை அழிக்கும் சிங்கள அரசின் சூழ்ச்சி மிக்க செயலுக்கு உதவி புரிகின்றது என்று புதிய கோணத்தில் ஆய்வு செய்யும் இந்த நூல் இந்தியாவிற்கு எதிரான இலங்கை அரசின் வரலாற்று யுத்தத்தில் இந்தியாவின் பெயரால் கொல்லப்படும் தமிழீழர் விவகாரத்தில் இந்திய அரசு இலங்கைக்கு உதவி செய்கிறது என்பதை எங்கும் சரணாகதி அடையாமல் யாருக்கும் சாமரம் வீசாமல் சுட்டிக் காட்டுகிறது.

இந்தியாவிற்காகவே அனைத்துச் சக்திகளாலும் அழிக்கப்படும் தமிழீழர் இந்தியாவின் யுத்தத்தையே சிங்கள அரசுடனும் அந்நிய அரசுகளுடனும் புரிகின்றனர் எனும் அரசியல் உண்மையின் பொருட்டு இந்தியாவிடம் நியாயத்தையும் அதன் பொறுப்பையும் தட்டிக்கேட்கின்றது. அந்தவகையில் இந்தியாவின் முன்னாள் இராணுவ அதிகாரியான கேணல் திரு. ஹரிகரன் அவர்களை இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு ஆகுதி பதிப்பகம் அழைத்திருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் கசப்பான காலகட்டமாக இருந்த இந்திய அமைதிப்படைக் காலத்தில் இராணுவ அதிகாரியாக செயற்பட்ட அவர் இந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கெடுப்பதென்பது அல்லது அவரை அழைத்ததென்பது எந்த இந்தியச்சதி வலையுமல்ல. நேர்மைத் திறனுடனும் நெஞ்சுத் துணிவோடும் இந்த நூலைப் பற்றி விவாதிக்கவேண்டும் என்பதில் ஆகுதி பதிப்பகம் உறுதியாகவிருந்ததைப் போல அவரும் எண்ணினார். 

இது நீதியின் ஒருவகைப் போர் முறை. யாரிடமும் எந்த இடத்திலும் சரணடையாமல் அறிவுபூர்வமாகவும், நியாயபூர்வமாகவும் தமிழ் மக்களின் உரிமைக்குரலை ஒலித்து நிற்கும் இந்த நூலை மாற்றுக்கருத்தாளர்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை அறியவேண்டியது காலத்தின் அவசியம்.  நியாயமும் போர்க்குணமும் நீதிகேட்டலும் நிரம்பியிருக்கும் இந்த நூல் இந்தியாவை நோக்கி நியாயம் கேட்கிறது. எவ்விதமான பச்சாதாபத்தையும் இந்நூல் கொண்டிருக்கவில்லை. அது வாசிப்பவர்களுக்கு தெரியும். 

இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த எழுத்தாளார் திரு. ஆழி செந்தில்நாதன் அவர்களும், ஊடகவியலாளர் திரு. மகா. தமிழ்ப் பிரபாகரனும் நிகழ்வை ஒட்டி எழுந்த வாதப்பிரதிவாதங்களை அடுத்து நிகழ்விலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்கள்.

அதிலும் வருத்தங்கள் எதுவுமில்லை. நிகழ்வை புறக்கணிக்கச் சொல்லி எல்லா அழைப்பாளர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் வேண்டுகோள் விடுத்தபடியே இருந்த சகோதரர்களையும்,நண்பர்களையும் என்னைத் துரோகி என்றும் இந்திய உளவாளி என்றும் எழுதிக்கொண்டிருந்த       சக படைப்பாளிகளையும், அகரமுதல்வன் ஒரு சின்னப்பிள்ளை போல இந்தியாவின் ஆட்டத்திற்கு ஆடத்தொடங்கும் பொம்மை என்றும் பேசிக்கொண்ட  இன்னும் நான் மதிக்கும் மூத்த மற்றும் சில தமிழக படைப்பாளிகளையும், அதை விட பிரபாகரனையே மூச்சுக்கு முந்நூறு முறை உச்சரிக்கும் அகரமுதல்வன் இந்த நூல் வெளியீட்டு விழாவில் நன்றியுரை சொல்கிறார் என எழுதிய இணையத்தளங்களையும்           நான் அறிவேன். (நான் தலைவர் பிரபாகரனின் பெயரை மூச்சுக்கு   முந்நூறு அல்ல, முந்நூறுக்கு முந்நூறு தரம் சொல்வேன்.) 

மேலே உள்ள வசவுகளுக்காய் நான் நோகேன். அது அவரவர் எண்ணம். அவரவர் சொற்கள். அவர்கள் சொற்களுக்கு நான் என்றுமே பலியாகேன். நான் என்றுமே பிழைத்ததில்லை. பிழையேன்.

பல்வேறு சக்திகளும் சம்பந்தப்பட்டு மிகவும் சிக்கல்வாய்ந்ததாய் வளர்ந்து வரும் சர்வதேச அரசியல் உறவில் “விட்டால் குடும்பி, வழிச்சால் மொட்டை” என்பதைப் போல அரசியலைக் கையாள முடியாது. இந்த விடயத்தில் மாற்றுக்கருத்தாளர்களையும்,எதிரிகளையும் எதிர்கொள்வதற்கு தயாராகும் சிக்கல் வாய்ந்த உறவுக்கு நாம் தயாராகவேண்டும். நான் தயாராகிவிட்டேன். எதிரிகளோடும் மாற்றுக்கருத்தாளர்களோடும் தான் வாழ்கிறோம், அவர்கள் மத்தியில் தான் வாழ்கிறோம். 

மாற்றுக்கருத்தாளர்களிடம் கருத்தியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சரணடைவது தான் கூடாதே தவிர, அவர்களோடு விவாதிக்கத் தவறக்கூடாது.

பரிபூரணமான உண்மை என்று எதுவுமில்லை. உண்மைகள் ஒப்பீட்டு ரீதியானவை. மனிதனின் கருத்தில் சரி, பிழை, நல்லது, கெட்டது         இருக்க முடியும். இவை தொடர்ச்சியான கருத்தாடல்களின்               மூலமும் நடைமுறைமூலமும் சரி செய்து சுத்திகரிக்கப்பட வேண்டும் என்பது தான் சிந்தனை வளர்ச்சியின் அடிப்படை தத்துவம். ஒரு மனிதனின் கருத்தில் 90% சரியும் 10%பிழையும் அல்லது 10% சரியும் 90%பிழையும்  இருக்கக்கூடும். இங்குள்ள பிரச்சனை சரியை எடுத்து பிழையைக் களைவது தான். 90%பிழையை நிராகரிக்க வேண்டும் என்பதால் 10% சரியை  நிராகரிக்க வேண்டும் என்று இல்லை.

இந்தவிடயத்தில் எல்லாவற்றையும் கண்மூடித்தனமான உணர்ச்சி நிலையிலிருந்து எதிர்ப்பதும் ஒருவகையிலான அநீதியே என்பதைத் தான் நான் சொல்வேன். அறியாமையும் எதிர்ப்புகளும் என் மீதான அவதூறுகளும் அறிஞர் மு. திருநாவுக்கரசு மீதான வசவுகளும் இருவருக்கும் கவலையல்ல. இந்த நூல் வெளியீட்டு விழாவானது தமிழீழர்களின் நியாயத்தை எடுத்துக்கூறவே வல்லது. இந்த நூல் வெளியீட்டிற்கான எதிர்ப்பென்பது அறியாமை கொண்டதன்றி வேறல்ல. அந்த அறியாமைக்கு பலியாகி நீதிக்கான முன்னெடுப்பில் இந்த நூலும் ஆகுதி பதிப்பகமும் ஓரடி பின்வாங்கி தனது வெளியீட்டை ரத்துச் செய்துள்ளது. இதற்கான பொறுப்பை இந்த நிகழ்வை எதிர்த்தவர்கள் ஏற்கவேண்டும். இந்நிகழ்வு நிறுத்தப்பட்டதானது அறியாமைக்குப்பலியாகி ஒரு அறிவியல் படுகொலையை நிகழ்த்திவிட்டது. இந்தப்படுகொலைக்கு பாத்திரமானவர்கள் அதை உணரும் நாட்களை கைவிரல் கொண்டு எண்ணி வருகிறேன்.


இவ்விடயத்தில் ஒருவனை ஒரு முகாமுக்குள் முத்திரை குத்துவது தவறானது. அப்படி நினைப்பவர்கள் யாருடனும் பழகமுடியாது.அப்படியிருப்பவர்கள் “உறிமேல் சமணர் போல தான் இருக்கமுடியுமே தவிர அரசியலில் இருக்க முடியாது”. இந்தப்  புனிதத்தேசியவாதம் பேசினால் நாம் எங்கும் எமது பிரச்சனையை பேசமுடியாமல் ஆகிவிடும். எந்த ஊடகங்களிலும் அதைப் பற்றி பேசவோ எழுதவோ முடியாமல் போய்விடும். எல்லா ஊடகங்களுக்கும் ஒரு அரசியலுண்டு.

தமிழீழரின் விடுதலைக்கு ஓர் புதிய காலச்சாரமும், புதிய அணுகுமுறையும் தேவை  அது முற்றிலும் அறிவார்ந்து இருக்கவேண்டும். அறிவிலிருந்து தள்ளி  நின்று நாம் தமிழீழப்பிரச்சனையை இனியும் விவாதிக்கமுடியாது. சிலருக்கோ மக்களின் அவலம் கச்சாவாக மாறியிருக்கிறது. சிலர் தமிழீழப் பிரச்சனை என்பது தமக்கான காப்புரிமை அதை வேறெவரும் பேச இயலாது என்பதைப் போல எண்ணுகிறார்கள். எல்லாம் அவரவர் நலன்சார்ந்த அவரவர் அரசியல் இலாப நோக்குக் கொண்ட சிந்தனையன்றி வேறெதுவுமில்லை. 


நாம் கொல்லப்பட்டோம், வெல்லப்படவில்லை என்பதை கொன்றவர்களுக்குத் தானே சொல்லியும் எழுதியும் வருகிறோம்.         நாம் யதார்த்தத்திற்கு முரணாக நடைமுறைக்கு எதிராக இன்னும் இன்னும் இயங்கவே இயலாதென்பது தான் உண்மை. நாம்             அப்படித்தானிருப்போமாயின் அந்த அறியாமையும் புனிதத் தேசியவாதமும் எம்மை இன்னொரு தடவை கொல்லும் என்பதில் எந்த அய்யமும் இல்லை. நான் மக்களின் அவலத்தை கச்சாவாக்க எண்ணுபவன் கிடையாது. நான் மக்களின் அவலத்திற்கு தீர்வு தேடும் பக்கத்தில் நிற்கிறேன். இதுகுறித்து மேலும் விவாதிப்பதென்பது எனது அரசியல் செயல்பாட்டில் தேவையற்ற ஒன்று. என்னோடும் ஆகுதி பதிப்பகத்தோடும் அறிவைக்கெடுக்கா அரசியல் உணர்வோடும் துணை நின்ற அத்துணை பேருக்கும் என் தார்மீகமான நன்றிகள்.

அகரமுதல்வன்
23.09.2016            

Comments

Post a Comment

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்