இரத்தம் கலவாத துப்புரவான கடல் நிரந்தமாகிறது - யமுனா ராஜேந்திரன்




நினைவுகள் இல்லாமல் ஒருவன் ஒரு இடத்துடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ள முடியாது. எனது தாய் நாட்டை நானே கட்டமைத்துக் கொண்டேன். எனது மொழிக்குள் எனது அரசைக் கூட நான் அமைத்துக் கொண்டேன். எனது சொந்த நாட்டில் அல்லது எனது சொந்த வீட்டில் அல்லது எனது சொந்த ஒரு அறையிலேயே கூட நான் பெயர்ந்தலைபவனாக இருக்கலாம்;; அந்நியனாக இருக்கலாம். பெயர்ந்தலைதல் என்பது புவியியல் சார்ந்த அர்த்தத்தை விடவும் பரந்துபட்டது. இது பாலஸ்தீனம் குறித்த பிரச்சினை மட்டுமல்ல. நான் பெயர்ந்தலைதலுக்கு அடிமைப்பட்டுவிட்டேனோ தெரியவில்லை. அப்படியும் இருக்கலாம். வரலாறு முழுக்க இந்தப் பெயர்ந்தலைதல் இலக்கிய சிருஷ்டிக்கான உந்துதலாக இருந்திருக்கிறது இல்லையா?
- மஹ்முத் தர்வீஷ்

நாடற்றவனாய் வாழ்கிறேன் 
நாடற்றவனாய் எழுதுகிறேன் 
நாடற்றவனாய்த் திமிருகிறேன்

- அகரமுதல்வன்

ஈழ இலக்கியத்தையும் ஈழக் கவிதையையும் தமிழக இலக்கியவாதிகள் எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள்? இவற்றை அணுகுவதற்கான இவர்களது மதிப்பீடுகளின் ஆதாரங்கள் என்ன? ஈழக் கவிதைகள் அரை நூற்றாண்டு தேசிய விடுதலைப் போராட்ட அனுபவங்கள்-முப்பத்தைந்து ஆண்டு கால ஆயுதவிடுதலைப் போராட்ட அனுபங்கள் குறித்தவை. தமிழ்க் கவிதை மரபில் இத்தகைய கவிதை மனோபாவத்துக்கு முன்னோடி உண்டா? சமகாலத்; தமிழ்க் கவிதையில் இதற்கான முன்னோடிகள் உண்டா? இந்திய அளவில் எந்தக் கவிதைகளை இவற்றோடு வைத்துப் பேச முடியும்? தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தேசிய விடுதலைக் கவிதைகள் எனில் எவற்றுடன் இவற்றை ஒப்பிட்டுப்பேச முடியும்? இவற்றுக்கு அடிநாதமாக தமிழ் இலக்கியவாதிகளுக்கு இடையில் வேர்கொண்டிருக்கும் விமர்சன அரசியலின் அடிப்படைகள் என்ன?

ஈழக் கவிதைகளுக்கு நெடிய தமிழ்க் கவிதை மரபில் புறநானூறு சார்ந்த மரபு இருக்கிறது. இந்திய அளவில் நக்சலிச ஆயுதப் போராட்ட அனுபவங்களை முன்வைத்த வங்காள-ஆந்திர-கேரள-இன்குலாப் வழியிலான தமிழக மரபு இருக்கிறது. இந்த மரபை அறிந்து கொள்ள, இது பற்றி வெளிப்படையாகப் பேச இக்கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும், நாவல்கள், இந்த அனுபவங்கள் குறித்த இலக்கிய விமர்சனம் தமிழில் அறிமுகமாயிருக்க வேண்டும். தமிழில் இது நிகழவில்லை. ஏன்? தேசிய விடுதலைப் போராட்டக் கவிதைகள் எனில் ஆசிய-ஆப்ரிக்க-இலத்தீனமெரிக்க தேசிய விடுதலைப் போராட்ட அனுபங்களை முன்வைத்த நாவல்கள், கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும் தமிழில் நிகழவில்லை. ஏன்? தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அரசியல் கவிஞர்கள் எனில் மயக்காவ்ஸ்க்கி, நெருதா, பிரெக்ட் போன்றவர்கள்தான் அவர்கள். மயக்காவ்ஸ்க்கி தற்கொலை செய்து கொண்டு மரணமுற்றார். பிரெக்ட்டை தமிழனுக்கு ஸ்டாலின் எதிர்ப்பாளராகத்தான் தெரியும்.

பிரெக்ட் ஸ்டாலினை ஆதரித்தார். ஸ்டாலினை விமரிசித்தும் எழுதினார். நெருதா ஸ்டாலினை ஆதரித்தார். 500 ஆண்டுக் காலனியத்தை எதிர்த்தார். தமிழ் வாசகனுக்கு நெருதாவை காதல் கவிதைகளை எழுதிக் குவித்தவனாகத்தான் அதிகம் தெரியும்.
தமிழில் மையங்கொண்டிருந்த, இலக்கிய வட்டங்களில் ஆதிக்கம் செலுத்திய கவிதை விமர்சன அடிப்படை என்பது காந்திய-இந்திய தேசிய-மணிக்கொடிப் பரம்பரை-அகவய கவிதைகள் சார்ந்த மதிப்பீடுதான். உலக அரசியல் கவிதை எனும் அளவில் அந்த அனுபவங்களில் இருக்கும் ஆழ்ந்த-சிக்கலான-முரண்நிறைந்த வெளிகளை தமிழ்க் கவிதை விமர்சனம் அறியவேயில்லை. அரசியல் கவிஞர்களை முழுமையான காதல் கவிஞர்களாக முன்வைத்தார்கள் அல்லது ஸ்டாலினிய எதிர்ப்புக் கவிஞர்களாக முன்வைத்தார்கள். பிரம்மராஜனுக்கு ஈழ நாவலை மதிப்பிட ஸ்டாலினுக்கு எதிரான விமர்சன அடிப்படை போதுமானதாக இருந்தது. ஜெயமோகனுக்கு ஈழ விடுதலைப் போராட்டத்தையம் கவிதையையும் மதிப்பிட போராளிகள் மனம் பிறழ்ந்த-மிருகத்தன்மை கொண்ட-வன்முறையாளர்கள் எனும் சித்திரமும் காந்திய வன்மமும் போதுமானதாக இருந்தது. ஈழ நாவல்கள் சார்ந்த விமர்சனம், உலோகம் நாவல், வன்முறையும் தமிழ்க் கவிதையும் பற்றிய அவரது கட்டுரை என ஒருவர் உரசிப் பார்த்துக் கொள்ளலாம். 

ஈழப் போராட்டம் குறித்து எத்தகைய புரிதலையும் நுண்ணுணர்வையும் ஒருவர் கொண்டிருக்கிறாரோ அதுதான் அந்த இலக்கியம் குறித்த விமர்சன அடிப்படையாக ஒருவருக்கு அமையும். உலக தேசிய விடுதலைப் போராட்டம் குறித்து எத்தகைய புரிதலையும் நுண்ணுணர்வையும் ஒருவர் கொண்டிருக்கிறாரோ அதனை ஒப்பவே அந்த இலக்கியம் குறித்த மதிப்பீட்டுப் பார்வையும் அமையும். மார்க்சிய மரபில் ஸ்டாலினியம் எதிர் ஸ்டாலினிய மரபும் இணையாகவே இருந்து வருகிறது. தமிழகச் சூழலில் ஸ்டாலினிய விமர்சனம் என்பது மார்க்சிய வெறுப்பாகவும், தேசிய விடுதலைப் போராட்ட வெறுப்பாகவும், ஈழ விடுதலைப் போராட்ட வெறுப்பாகவும்தான் தான் ஆகியிருக்கிறது. இதனை ஒரு புறம் மனித உரிமை -பன்மைத்துவம் எனும் பெயரில் அ.மார்க்ஸ் போன்றவர்களும், மறுபுறம் ஸ்டாலினிய மற்றும் வன்முறை எதிர்ப்பு எனும் பெயரில் ஜெயமோகன்-பிரம்மராஜன் என இன்னபிறர்களும் கடைப்பிடித்து வருகிறார்கள். ஈழப் போராட்ட வெறுப்பு எனும் இந்த விஷயத்;தில் இந்துத்துவவாதிகளும்-இந்துத்துவ எதிர்;ப்பாளர்களும் ஒன்றிணையும் புள்ளி என்பது எவ்வாறு உருவாகிறது எனும் ஆய்வு சுவாரசியமானது.

இன்னொருபுறத்தில் இத்தகைய கூட்டு இலங்கை-இந்திய-தென்னாசிய-உலகச் சூழலில் மிகப் பாதுகாப்பான-அரசுகளின் செல்லப் பிள்ளைகளாக இவர்கள் ஆகும் நிலைபாடும் இயல்பாகவே இவர்களுக்குக் கிடைக்கிறது. இதுவே ஈழ இலக்கியம்- கவிதைகளைத் தமிழக இலக்கியவாதிகள் அணுகும் முறை.
இனி, ஈழக் கவிதை விமர்சனத்தின் நிலை ஈழ மற்றும் புகலிடச் சூழலில் எத்தகையதாக இருக்கிறது? இந்தியாவின் நேஷனல் புக் டிரஸ்டின் மூலம் 2007 ஆம் ஆண்டு சிங்களத்-தமிழ் ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வந்த ரஜீவ விஜேசிங்க அதனது தொடர்ச்சியாக சிங்களத் தமிழ்க் கவிஞர்களின் ஆங்கிலக் கவிதைத் தொகுப்பிற்காக ஈழத் தமிழ்க் கவிஞர்களிடம் கவிதை வேட்டையாடி அந்தத் தொகுப்பு கண்ணாடிப் பிம்பங்கள் எனும் பெயரில் நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா வெளியீடாக வெளியாகிருக்கிறது. ரஜீவ விஜேசிங்க சார்பாக ஈழத் தமிழ் படைப்பாளிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கும் சுற்று நிருபமொன்றில் கவிதைகளின் தொகுப்பாளராக ரஜீவ விஜேசிங்க இவ்வாறு குறிப்பிடுகிறார் : என்னிடம் பூர்வாங்கமாக காண்பிக்கப்பட்ட படைப்புக்களில் சிலவற்றைப் பொறுத்து லேசான, தொகுப்பிற்குகந்த மாற்றங்கள் செய்யப்படும், எழுத்தாளர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் இது ஒப்பத்தக்கதாயிருக்கும் என நினைக்கிறேன். என்ன அச்சிடப்படுகிறதோ அதில் அசல் மொழிபெயர்ப்பாளர்தான் படைப்பினை உருவாக்கியவர் மற்றும் உரிமையாளர் என்பது இந்தப் புத்தகத்தில் பதியப்படும். இதற்கு படைப்பாளிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும்என்று கோருகிறார் ரஜீவ விஜேசிங்க. கவிதையில் அதனது ஒருங்கமைவில் சொற்கள் மேற்கொள்ளும் அர்த்த முக்கியத்துவத்தினை எந்தக் கவிஞனும் உணரமுடியும். அதனைத் தீர்மானிக்கிற உரிமையைக் கூட ரஜீவ விஜேசிங்க தன்னிடம் எடுத்துக் கொள்ள விரும்புகிறார்.

எண்பதுகளில் தமிழகத்தைக் குலுக்கிய மரணத்துள் வாழ்வோம் தொகுப்பில் கவிதை எழுதிய 99 சதவீதமான ஈழக்கவிஞர்கள் ரஜீவ விஜேசிங்காவின் தொகுப்பிலும் கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். மரணமுற்ற வில்வரத்னம், சண்முகம் சிவலிங்கம், செல்வி,.சிவரமணி உள்பட ஈழத்தின் இன்றைய முக்கியமான கவிகளான சேரன், ஜெயபாலன், நுஹ்மான், கி.பி.அரவிந்தன் வரையிலுமானவர்களது கவிதைகள் இருக்கிற இத்தொகுப்பில், தொகுப்பிற்குக் கவிதைகள் கொடுக்க மறுத்தவர்கள் தவிர, முள்ளிவாய்க்காலின் பின் உருவான முக்கியமான ஈழக்கவிகளான தீபச்செல்வன் மற்றும் தமிழ்நதி போன்றவர்களின் கவிதைகள் இல்லை. இத்தொகுப்பில் இலங்கை ராணுவத்தினால் காணாமல் போக்கப்பட்ட புதுவை இரத்தினதுரையினது கவிதைகள் இடம்பெறவில்லை. இலங்கை அரசின் வேட்டைக்குத் தப்பி ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களை ஆதரிக்கும் சிங்களக் கவிஞனான மஞ்சுள வெடிவர்த்தனவின் கவிதைகள் ஒன்று கூட இத்தொகுப்பில் இல்லை என்பது இத்தொகுப்பின் அரசியலைச் சுட்டப் போதுமானதாகிறது.

இத்தொகுப்பின் வெளியீட்டு விழா இலங்கை கனடிய தூதரக ஏற்பாட்டில் கனடாவில் நடைபெற்றது. பிற்பாடு யாழ்ப்பாண இந்திய தூதரகத்திலும் புதுதில்லியிலும் கொழும்பிலும் வெளியீடுகள் நடைபெற்றன. இது குறித்து தனது வலைத்தளத்தில் கட்டுரையெழுதிய ரஜீவ விஜேசிங்க இந்தத் தொகுப்பின் மூலம் பாதுகாப்பு அமைச்சகத்துக்குத் தான் ஒரு பிரச்சார ஆயுதத்தை வழங்கியிருக்கிறேன்என எழுதுகிறார். இலங்கையில் இன நல்லிணக்கம் ஓங்கியிருக்கிறது என்பதை இதனை வைத்து இலங்கை தூதரகங்கள் உலகெங்கிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும் ஆனால் செய்யவில்லைஎன்கிற தனது ஆதங்கத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார். மட்டுமன்று, இலங்கையில் இனக்கொலை நடைபெறவில்லை அங்கு இனநல்லிணக்கம் கொழிக்கிறது என ஐரோப்பியரொருவரால் எடுக்கப்பட்ட ஆவணப் படத்தை பாதுகாப்பு அமைச்சரின் ஒத்துழைப்புடன் கொழும்பில் தான் திரையிட்டதாகவும் பூரிப்புடன் அறிவிக்கிறார் இலக்கியவாதி ரஜீவ விஜேசிங்க.

புத்தகத்தில் இடம்பெறும் பதிப்புரை, தொகுப்புரை, சமகால ஈழத்தமிழ் மற்றும் சிங்களக் கவிதைகள் குறித்த இரு மதிப்பீட்டுரைகள் மிகுந்த இனப்பாரபட்சம் கொண்ட கட்டுரைகளாக இருக்கின்றன. சிங்களக் கவிதை பற்றிய வரலாற்று ரீதீயான கட்டுரை முள்ளிவாய்க்கால் சம்பவமுடிவு வரை எடுத்துக்கொள்கிறது. அரசியல் மொழியில் எழுதப்பட்ட அக்கட்டுரை முள்ளிவாவாய்க்கால் பேரழிவின் பின் சிங்களவர்களால் எழுதப்பட்ட மூன்று கவிதைகளின் மொழிபெயர்ப்பினையும் கொண்டிருக்கிறது. தமிழ் தற்கொலைப் போராளிப் பெண் ஒருவர் குறித்த மிகக் கொச்சையான கவிதை ஒன்றின் மொழிபெயர்ப்பும் இதில் இருக்கிறது. தமிழ்க்கவிதை பற்றிய கட்டுரை முற்றிலும் அரசியல் நீக்கப்பட்ட மொழியில் எழுதப்பட்டு தொண்ணூறுகளோடு ஈழத்தமிழ்க் கவிதையை மூடிக்கட்டிவிடுகிறது.

முள்ளிவாய்க்கால் எனும் சொற்றொடரே தமிழ் கவிதைத் தரப்பு சார்ந்து இத்தொகுப்பில் பதிவு செய்யப்படவேயில்லை. இதற்கான பொறுப்பை ரஜீவ விஜேசிங்க ஈழத்தமிழ் கவிதைத் தேர்வுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது சாதுரியமாகச் சுமத்திவிடுகிறார். தொகுப்பின் தமிழ்க் கவிதைகளில் இனப்பகைமை என்பதே இல்லைஎன்கிறார் விஜேசிங்க. ஒன்றுபட்ட இலங்கையர் எனும் உணர்வே தொகுப்பின் அடிநாதம்எனவும் அவர் முத்தாய்ப்பாகக் கோரிக்கொள்கிறார். எனது பாலஸ்தீன தேசத்தை நான் எனது மொழிக்குள் காவித் திரிகிறேன்என்பான் அமரனான பாலஸ்தீனக் கவிஞன் மஹ்மூத் தர்வீஸ். ஒடுக்கப்பட்டு நாடு நாடாக அலைந்து திரியும் ஈழப் படைப்பாளிகளின் மொழியைக் கூட தன்வசம் எடுத்துக் கொள்ள முனைகிறார் ரஜீவ விஜேசிங்க. எண்பதுகளில் மரணத்துள் வாழ்வோம்என எழுந்த ஈழத் தமிழ்க் கவிஞர்களின் தலைமுறையை முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்பான இன்றைய இலங்கையின் பரஸ்பர சிங்களத் தமிழ்க் கண்ணாடிப் பிம்பங்களாகஆக்கிக் காட்டியிருக்கிறார் ரஜீவ விஜேசிங்க. சமகால இலங்கைக் கவிதைஎனும் தொகுப்பின் வழி அவரது தமிழர் எதிர்ப்பு அரசியலை அவர் சந்தேகமில்லாமல் மிகச் சாதுரியமாகச் சாதித்துத்தான் இருக்கிறார்.

ஈழ இலக்கியமும் கவிதையும் தொடர்பான பிரதான நீரோட்டத் தமிழக-ஈழ-புகலிட விமர்சன மரபினுள் அதிகம் விவாதிக்கப்படாத, செல்வா கனகநாயகம் மற்றும் கனடா தமிழ்த்தோட்டம் போன்று ஈழத்தமிழர்களால் சர்வதேசிய அளவில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட தொகுப்புகளில் எந்தப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படாத ஒரு புதிய தலைமுறைக் கவிஞர்கள் ஈழத்தில் இருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பு இவர்களது 50 தொகுதிகள் வரை வெளியாகியிருக்கின்றன. தீபச்செல்வன், தமிழ்நதி, அகர முதல்வன் போன்றவர்களோடு தீபச்செல்வன் தொகுத்த ஆறு ஈழக் கவிஞர்கள், குட்டி ரேவதி தொகுத்த பின்முள்ளிவாய்க்கால் கவிதைகள் போன்ற தொகுதிகளில் இவர்தம் கணிசமான கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. ஈழப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் என்பது ஒன்றின் முடிவு பிறிதொன்றின் துவக்கம்.

புறநானூற்று மரபு, பாப்லோ நெருதா, மயக்காவ்ஸ்க்கி, பிரெக்ட், இன்குலாப் போன்றவர்களையொட்டி ஈழ அனுபவத்தையும் சேர்த்து ஈழவிடுதலைப் போராட்;டம் சார்ந்து வரலாறு சார்ந்து ஈழக் இலக்கியத்தை முள்ளிவாய்க்காலுக்கு முன்னும் பின்னுமான இலக்கியம் என வரையறுக்கலாம். போராட்;டத்தின் எழுச்சி, நெருக்கடி என்பதாக இதனைப் பகுத்துக் கொள்ளலாம். போராட்டத்தின் தார்மிக நியாயமும் எழுச்சியும் நெருக்கடியும் பேசப்பட்ட அளவில் பின் முள்ளிவாய்க்கால் பேரழிவு அனுபவமும் விளைவான விமர்சனமும் மீளெழுச்சியும் இலக்கியப் பரப்பில் பேசப்படவேயில்லை. ஈழம் என்பது அழிவும் இழப்பும் இழிவும் என்பதான சித்திரமே தமிழகத்தில் தொடர்ந்தும் முன்வைக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவு அனுபவங்களை முன்வைத்து குணா.கவியழகனின் நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு. அப்பால் ஒரு நிலம் என மூன்று நாவல்கள் வெளியாகி தமிழகத்திலும் ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் அதிகம் வாசிக்கப்பட்ட பேசப்பபட்ட நாவல்களாக அவை இருந்தபோதிலும் வெகுஜன இதழ்களிலோ அல்லது இலக்கிய மட்டங்களிலோ அந்த நாவல்கள் குறித்த கவனம் இல்லை என்பதன் காரணம் என்ன? போலவே, முள்ளிகைகல் பேரழிவின் உருவாகி வந்திருக்கும் 50 கவிதைத் தொகுதிகள் ஏன் இலக்கிய வட்டங்களில் பொருட்படுத்திப் பேசப்படாமல் இருக்கிறது?

ஈழப்போராட்டம் குறித்த அரசியல் ஒவ்வாமை இலகபகிய ஒவ்வாமையாக இருக்கிறது. ஈழப்போராட்டத்தின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் தேய்விலும் அழிவிலும் உலக-பிராந்திய நாடுகளின் பங்கை தமது அரசியல் நோக்கு காரணமாக எவரும விமர்சனத்திற்கு உட்படுத்தத் தயாராக இல்லை. இந்த நிலைபாட்டுக்கு இயைந்த, ஈழ விடுதலையை இழிவாக அழிவாகப் பார்க்கும் படைப்புக்களையே தமிழக வெகுஜன இதழ்களும் இலக்கியவாதிகளும் உயர்த்திப் பிடிக்கிறார்கள். முள்ளிவாயக்கால் பேரவலத்தில் உலக பிராந்திய சக்திகளின் பங்கையும் அவை அம்மக்களின் மீது சுமததிய பேரழிவையும் துயரையும் சித்தரிக்கும் படைப்புக்களை இல்லாததாக ஆக்கிவிடக் கருதுக0றார்கள். இதனையும் தாண்டித்தான் முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் துயரையும் மீளெழுச்சியையும் பேசும் படைப்பாளிகள் தமிழ் பேசும் உலகெங்கிலும் கவனம் பெற்று வருகிறார்கள். குணா.கவியழகன், தீபச்செல்வன், தமிழ்நதி, அகரமுதல்வன் போன்றவர்கள் இத்தகைய படைப்பாளிகள். முள்ளிவாய்காகல் பேரழிவு, அகதி வாழ்வு, நிலம் பிரிந்த துயர், போராடும் வேட்கை, களநிலமை குறித்த  விமர்சனம் போன்றவற்றை இவர்களது படைப்புகள் முன்வைக்கின்றன. இந்த புதிய மரபின் பகுதியாகவே அகரமுதல்வனின் இந்தக் கவிதைகளின் தொகுதி வெளியாகிறது.

உம்மிடம் கத்தி எம்மிடம் இரத்தம்
உம்மிடம் உருக்கிரும்பும் நெருப்பும் எம்மிடம் தசை
உம்மிடம் பிறிதொரு டாங்கி எம்மிடம் எமது கற்கள்
உம்மிடம் வாயுக்குண்டு எம்மிடம் மழைஎன்றான் பாலஸ்தீன தேசியக் கவிஞன் தர்வீஷ்.
மரணமடைந்த எமது தோழர்களின் சார்பாக
நான் தண்டனை கோருகிறேன்
யார் எனது தந்தையர் நாட்டை
இரத்தம் சிந்தவைத்துச் சிதறடித்தார்களோ
அவர்களுக்கு எதிராக நான் தண்டனை கோருகிறேன்
இந்த உலகின்மீது பாவக்கைகள் செலுத்தி
இந்தக் கொடுமைகள் நிகழ
மூலமாக இருந்தவனுக்கு எதிராக
நான் தண்டனை கோருகிறேன்
இந்தக் கொடுமைகளை விட்டுக் கொடுத்து
மன்னிப்பவர்களாய் இருப்போர்க்கு மத்தியிலும்
நான் தண்டனை கோருகிறேன்என்றான் இலத்தீனமெரிக்க புரட்சிக் கவிஞன் நெருதா

இந்த நூற்றாண்டைப் பிளந்த கோடாரி
முள்ளிவாய்க்காலின் எலும்புஎன்று எழுதும் அகரமுதல்வன்-




எல்லாப் போர் வாள்களையும் உறையில் செருகி 
சாந்தமான ஓய்வு வழங்குவோம் 
எதிரிகளுக்கு இரத்தம் ஊறட்டும்
வாளும் சாவும் 
இல்லாக் காலத்தில் 
இருப்பின் மிச்சம் 
எங்கள் கல்லறையில் வழியும்என்கிறான்

முள்ளிவாய்க்கால் நிலம் குறித்து அகரமுதல்வன் தீட்டிக்; காட்டும் காட்சிகள் எமது காலத்தின் கலிங்கத்துப் பரணி :

சமீபத்தில் கருகிய ஒருவனுடலில்
ஆழ வேர் பரப்பி தாளமிடும்
ஒற்றைச் சொல்லின்றி சுடுகாட்டுப் பாடல்
ஆதி நிலமுழுதும்
இடம்பெயர்ந்து கொண்டிருப்பதை விட
படுகாயங்களில் அமைதியிருப்பதை
அம்மாக்கள் கற்றுக்கொண்டார்கள்
கிபிர் அடிக்கு மத்தியில்
பிறந்த குழந்தையை ரத்தத்தில்
துடைக்க கற்றுக்கொண்டோம்
வெடித்துச் சிதறிய குண்டுகளின்
சுவாலையில்
தேத்தண்ணி சூடாக்கினோம்
பரா வெளிச்சத்தில் பதுங்குகுழி தோண்டினோம்
எங்கள் இரவுகள் யுத்தத்தின் தீபாவளி
கைகளில் நடுக்கத்தின் கருப்பை
மிக மோசமாகவிருக்கும்
நாளத்தின் அதிர்வு அசையும்
குருதியிழப்பு வாழ்வின் எளிமை
அவலத்தின் முகம் நான்
போர் துரத்திய 
எனது மரணம் வியப்பானது
தசைகள் சிதைத்து வீசியெறியும்
சிரிப்பற்ற நிலத்திலிருந்து
அது முளைவிடுகிறது
பதுங்குகுழிக்குள்ளிருந்து வாளி மூத்திரத்தை
வெளியே ஊற்றிய அம்மாவிடம்
இப்போது கைகளில்லை
மாதவிடாயின்
குருதிப் போக்கினை கிடந்தபடி கழித்த
அக்காவின் காயம் பல கடல்கள்
டாங்கிகளின் வாய்கள்
பட்டினியான எம்முடலை
பசி கொண்டது
ஊரின் தெருக்கள் முழுதும்
ரத்த வாடையை முகர்ந்து பார்த்த
குழந்தைகளின் முகத்தில்
மாமிசத்தின் நதி ஓடிக்கொண்டிருந்தது
யுத்தத்தில் பவனி வரும் மரணம்
சவக்குழிகளுள் தாயகம் புதைத்து
அகதி இருட்டிற்கு இழுத்துச்செல்கிறது
துயரின் கீழே எனது தாயகம்
மீண்டும் யுத்தத்தை அணியத்தொடங்குவதால்
அய்யமின்றி அது நம்மிடமே இருக்கிறது.
சோதனைச்சாவடி தாண்டி போகும் பேருந்தில் 
கொடுமையான விதியோடு பயணிக்கும் 
என்னிடம் வன்புணர்வின் நீட்சி 
கூடவருகிறது
மாமரத்தின் கிளைகளில் அமெரிக்கக் குண்டும் 
புத்தக அறையில் பாகிஸ்தான் குண்டும் 
யுத்தத்தின் வார்த்தையை மினுக்கிய இரவு 
முன்னேறிய சிங்களச் சிப்பாயின் 
சடலத்தில் நீண்டு எரிந்தது இரவு 
இந்த இரவு சினத்தின் இதயத்தைப் பார்த்தது 
இந்த இரவு காயத்தின் மகிழ்ச்சியைப் பார்த்தது 
இந்த இரவு மரணத்தின் மரணத்தைப் பார்த்தது 
இந்த இரவு எழுச்சியின் யுகத்தைப் பார்த்தது 
நான் அதன் தொடக்கமுமாயிருந்தேன்
காத்திருப்பை பிரவகிக்கும் 
வனாந்தரக் குரல்
காயமுற்ற ஒரு நிழலாய் 
சாளரம் நோக்கி எழுந்து வருகிறது
எங்கே எனது வீடு.
கடலில் விழுந்த என் தசைத்துண்டங்கள் 
துக்க நூற்றாண்டின் பால்யம் 
ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பிணங்களில் 
இணக்கமாகிறது பூகோள உறவு
விரையும் ஆகாயக் கருமையில் 
வீழ்ந்த எல்லைகளையும் கடல்களையும்
முத்தமிட்டுக் கொண்டேயிருக்கிறேன்
கனவுகளை எதிரொலிக்கும் காயங்களின் மீது 
மற்றொரு சாகப்தத்தின் 
உறுதி மொழியாய் 
வேட்கையின் கம்பீரம் அறைகூவுகிறது 
ரத்தத்தில் ஓடும் 
பாய்ச்சலின் வெண்மை 
எங்கும் என் நிழலாய் மிதக்க 
சமர்க்கள மொழியில் 
காற்று திடீரென வெடிக்கிறது.
பெருந்துயரச் சதுப்புகளில் 
படியேறிக் கொண்டேயிருக்கிறது 
பேயுருப் பாலை
தென்னையிலிருந்து இறங்கி வரும்
அந்திச் சூரியனுக்கு பச்சை நிறமிருந்தது
அநேகமான நள்ளிரவுகளுக்கு பயமிருக்கிறது 
அதன் நடுக்கமாய் நாய்கள் ஊளையிடுகிறது
வாழ்தலின் அதிருப்தி அமைதிப்படாமல் 
அங்கேயே காத்திருக்கிறது
காதலும் வீரமும் தானே தமிழர் மரபு? நிலம் பிரிந்தான். நிலவு பிரிந்தான். காதலியைப் பிரிந்தான் அகரமுதல்வன்
நான் இறந்துவிட்டேன் என நீ அறியும்போது
பிற சொற்களைச் சொல்
பூ என தேனீ என கண்ணீர்த் துளி என ரொட்டி என
புயற்காற்று எனஎன எழுதுகிறான் மரைணமுற்ற எல் சால்வடோர் கவிஞன் ரோக் டால்டன். அகரமுதல்வன் இப்படிச் சொல்கிறான் :
இனி எழுதப் போவதில்லை என்றாலும்
உனதழகின் துளி முல்லை நிலம்
மழைத்தூறல் கானலில் சிதறுமெனில்
இனியெனக்கு வாழ்வுமில்லை
புழுங்கியழும் மனசு சுடுகாடு போல
எரிந்தபடி ஒளிர்கிறது
நீயற்ற தனிமை நிழலற்று
நெடும் தூரம் வருந்தி
காமத்தின் பகையில் கண்மூடிச் சாகிறது
ஊதல் காற்று வம்பு செய்யும்
இரவின் அரும்புகளை
கழிந்த நாட்கள் வருத்துகிறது
நெஞ்சில் ஊர்ந்த எறும்பின் மாலையில்
நெளிந்தவுன் இனிப்புடல்
வானமாய் சிவந்ததில்
என் நெஞ்சம் உனக்கே உரிமை
நீயற்று வாழ்வது
நரகத்தை விட வருத்தம்
கேட்கத்தவறிய தொன்மத்தின் யாழிசை
மீளத்துளி விருப்பம் அற்று
கொங்கைகள் கட்டி அணைக்கும்
மோனத்தின் சித்து
பிசுபிசுத்த சுவாசக் கோளங்களில் 
நாம் இயற்கை எய்தி விட்டோம் 
உன் கட்டை விரல் காலில் 
படர்ந்துள்ள ரீங்காரம்
கிழுவம் வேலிகளில் தாவும் அணில்கள்
தூக்கிச் சுமந்து சிலிர்த்த மாலையில் 
அரூபமாய்க் கரைகிறது கணுக்காலின் மச்சம்
எனக்குப் பிடித்த 
உன் பச்சை நிறப் பாவடையில் 
தண்ணீர் தெறிக்க பூக்கிறது 
உனக்குப் பிடித்த எல்லாப் பூவும்
பிரியத் தொடங்கிய முதல் நாளில் 
மலையொன்று உதிர்வதாய் 
விசும்பியழுத எனது தெரு
துள்ளிய கனவுகளுள் 
நீர்களற்று கரையிறந்தது
அன்பின் அளவறியா பழத்தை பிளந்த 
இலையுதிர் காலத்தின்
வறண்ட சொற்கள் 
ஜீவனற்ற அரங்கில் ஆனந்த தாண்டவமிடும்
வெறிச்சோடிய இருள் துவாரத்தின் 
இசை வயலில் 
யாசிக்கும் இதயம் சுடர் வளர்க்க
காத்திருப்பை தின்னும் காத்திருப்பின் மேனியில் 
கண்ணீர் கசியும் ஆகாயம் 
அறிந்திருக்க வாய்ப்பில்லை 
எந் நிலம் கண்ணீராலானதை.
கோட்டையின் இருட்டிலிருந்து 
யாரோ ஒருத்தி தமிழில் 
கதறுகிறாள் 
இந்த நூற்றாண்டின் எல்லா நாட்களும் 
இப்படித் தான் கேட்கும்

எனது கவிதைத் தேர்வில், எனது மொழிபெயர்ப்பு அனுபவத்தில் என்னை மிக மிகப் பாதித்த கவிஞன் எல்ஸால்வடார் நாட்டின் ரோக் டால்டன். நாடுகளுக்கிடையில் அலைந்து திரிதல், கட்டற்ற காதல், பாலுறவின் சந்தோஷம், புரட்சிகர அரசியல் கடப்பாடு, இடம்பெயர்வின் சுமை அல்லது விடுபடல் என வேறு வேறு விதமான அனுபவங்களின் கலவையாக எழுந்தவை அவனது கவிதைகள். தீவிரமான தத்துவ மற்றும் அரசியல் ஈடுபாடுகள், அனுபவங்கள் மற்றும் தேடல்கள் அற்றவர்களால் அவனது கவிதைகளைத் தொடர்வது சாத்தியமில்லை. ரோக் டால்டனின் கவிதைகள், கொண்டாட்டம் தரும் உடலுறவையும் வன்முறையின் இடையிலான அரசியல் தீவிரத்தையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாத அளவிலான கவிதைகள். பாலினம் சார்ந்த தடைகளைத் தகர்க்கும் காதல் கவிதைகள் அவருடையவை.

மயக்கோவ்ஸ்க்கியின் தற்கொலைக்கும், சே குவேராவின் படுகொலைக்கும் இடையிலானது ரோக் டால்டனின் அனுபவ உலகம். சிறையுண்ட உடலிலிருந்தும் சுரண்டல் உலகின் வன்முறையிலிருந்தும் மீறிச் சென்று கவிதைகளுக்குள் விமோசன உணர்வை அடைய நினைப்பவர்களுக்கான கவிதைகள் ரோக்டால்டனுடையவை. வேறு வேறு மட்டங்களில் அதனது கருத்தியல் தளத்திலாயினும், ஈழத்துக் கவிகளான சிவரமணியின் தற்கொலையையும், கொல்லப்பட்ட செல்வியின் ஆளுமையையும், வேட்டையாடிக் கொல்லப்பட்ட நாவலாசிரியன் கோவிந்தனின் பதட்டத்தையும், அகரமுதல்வனின் காதல் விழைவையும் வெஞ்சினத்தையும் நிலம்பிரிந்த சோகத்தையும் நான் இந்த அடிப்படையிலேயே புரிந்து கொள்ள விழைகிறேன்.

குருதிவலிமையின் முன்பு எழுத்தின் எஜமானர்களுக்கு சொல்லணிகள் அவசியம் இல்லை என்பதனை நான் அறிவேன். ஆகவே எமது சொற்கள் எமது உரிமைகள் போலவே வெகு எளிமையானவை. இந்த மண்ணின் மீது இந்த மண்ணிற்கு உரியவராக நாங்கள் பிறந்தோம். எங்களுக்கு பிற அன்னயைத் தெரியாது. இதுவன்றி பிற அன்னை மொழியையும் எமக்குத் தெரியாது. இந்த நிலம் அதிகமான வரலாற்றையும் அதிகமான தீர்க்கதரிசிகளையும் கொண்டிருந்தது என நாங்கள் அறிந்தபோது பன்முகத்துவம் அனைத்தும் தழுவியதே ஒழிய ஒரு சிறைச்சாலை அல்ல என்பதனை நாம் அறிந்து கொண்டோம்……ஒரே ஒருவர் கடவுளின் மீதும் நிலத்தின் மீதும் நினைவுகளின் மீதும் ஆதிக்கம் கொண்டாட முடியாது என்பதனையும் நாங்கள் புரிந்து கொண்டோம். வரலாறு நியாயமானதோ அல்லது நேர்த்தியானதோ அல்லவெனவும் நாம் புரிந்து கொண்டோம். 

மனிதர்கள் எனும் அளவில் எமது இலக்கு வரலாற்றை மானுப்படுத்துவதுதான். நாம் சமவேளையில் வரலாற்றின் பலியாகவும் சிருஷ்டியாகவும் இருக்கிறோம்.... எமது உடல்களின் மீது நிரந்தரமாக யுத்தம் தொடுத்திருப்பதோடு இவர்கள் எமது கனவுகளின் மீது எமது மக்களின் மீது எமது வீடுகளின் மீது எமது மரங்களின் மீது யுத்தக் கொடுமைகள் புரிகிறார்கள். இனஓதுக்கல் சமூகத்தைத் தவிரவும் இது எமக்கு எதனையும் உத்தரவாதப்படுத்தவில்லை. இதயங்களை தோல்வியற்ச் செய்கிற வாள்களின் சாத்தியம் தவிர வேறெதனையும் எமக்கு இது உத்தரவாதம் செய்யவில்லைஎன்று தனது பாலஸ்தீன விடுதலைப் போராட்ட உணர்வை வெளியிடுகிறான் பாலஸ்தீனத் தேசியக் கவிஞனான மஹ்முத் தர்வீஷ்.
அம்மா 
ஒரு போதும் யுத்தத்தை மறவாத 
நாமெல்லாம் பைத்தியங்கள் தானேஎனக் கேட்கும் அகரமுதல்வன்-
யுத்தத்தின் விலைமதிப்பற்ற சாட்சியென 
எனக்கு மேலே முத்திரைகள் பதிகிறது 
இப்போதுதான் என் வாழ்வு காயப்படுகிறது
யுத்தம் பற்றி ஒவ்வாமை உள்ளவர்களும் 
யுத்தத்தை சாபமிடுபவர்களும் 
அமைதியை பின் தொடருகிறார்கள்
எனது துயரத்தின் எல்லாக் கோணங்களும் 
அமைதியின் கோடுகளைக் கொண்டிருக்கிறது 
யுத்தம் அமைதியை விட நேர்மையானது
எனக்குப் பின்னால் யுத்தம் முழங்கத்தொடங்கி 
ஒரு மகத்தான சுதந்திரத்தை வட்டமிடுகிறது
இந்தத் யுத்தத்தில் மொத்த மீட்சியும் 
இரத்தம் கலவாத துப்புரவான கடலும் 
நிரந்தமாகிறது

கவிதை ரகசியத்தில் அவிழும் பூவிதழ்கள் போன்றது. சமயத்தில் செங்குழம்பை விசிறும் எரிமலை போன்றது. எரிமலைக் குழம்பாகவும் கண்ணீரில் விரியும்; பூவிதழாகவும் நம்மை அசைத்தபடி தெறிக்கின்றன அகரமுதல்வனின் பிம்பங்கள். சில கவிதைகளுக்குள் என்னால் உடனடியில் நுழைந்து விடமுடிகிறது. கவிதை மௌனத்தின் நொடி அசைவில் திறவுபட வேண்டும். கவிதையில மொழியின் இறுக்கமும் உறைவும் அகரமுதல்வனின் நாடற்ற வாழ்வின் இறுக்கமும் உறைவும் தந்ததாகவும் இருக்கலாம். காரணமாக, சில கவிதைகளின் கதவுகளை இரண்டு மூன்று வாசிப்புகளின் பின்தான் திறக்க முடிகிற அளவு இறுக்கமாக இருக்கிறது.

இரத்தம் கலவாத துப்புரவான கடல் அகரமுதல்வனின் கனவு. அதுவே நிரந்தரம். அதுவே மோனம். இருள் புலரும். சூர்யன் வருவான். அதுவே எதிர்கால நம்பிக்கை. இப்படித்தான் பேரவலத்திலிருந்;து மீளும் நம்பிக்கையின் குரலாக அகரமுதல்வனின் கவிதைகள் இருக்கின்றன. அகரமுதல்வனின் நெற்றிக்கு ஆதுரமாக தூரத்திலிருந்து ஒரு முத்தத்தை அனுப்புகிறேன்..

வாழ்த்துக்களுடன்
யமுனா ராஜேந்திரன்
15
ஜனவரி 2015

Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்