"இரண்டாம் லெப்ரினன்ட் " கேட்க மறுக்கிறவர்களுக்காக சொல்லப்பட்ட கதைகள் - லஷ்மி சரவணகுமார்.





"துப்பாக்கி சுடப்படும் ஒவ்வொரு முறையும் ஒரு தோழனை இழக்க நேர்ந்தது, ஒருவர் தியாகியாக நேரிட்டது. மனித உடல்களால் உரமிடப்பட்ட நிலத்தில், முன்பணமாகக் கொடுக்கப்பட்ட மற்றுமொரு தொகை புதைந்து போயிற்று.”

                     ’போர் தொடர்கிறது’ – ‘அகஸ்தா ரூவா பாஸ்டோஸ்.


கதைகளுக்கு எப்போதுமொரு தனித்தன்மை உண்டு. கதை சொல்லிகளை காலம் மறந்து போனாலும் கதைகள் ஏதாவதொரு வடிவில் எப்போதும் நம்முடன் உலவியபடியேதான் இருக்கின்றன. மனிதர்கள் பேசிப் பகிரும் அனேகமான கதைகளின் ஆணி வேரை நம்மால் இனங்காண முடியாதபோதுதான் முகம் தெரியாத அக்கதை சொல்லிகளின் மீது அலாதியான மதிப்பு கொள்ள முடிகிறது. வாழ்வை எழுதுதல் என்பதுதான் கதை சொல்வதின் பிரதானம், அல்லாது வாழ்விற்கு வெளியே நான் அமானுஷ்யங்களை எழுதவே விரும்புகிறேனென சிலர் பிதற்றினாலும் உண்மையில் எல்லா அமானுஷ்யங்களும்  வாழ்வில் நாம் கவனிக்க மறந்து போனவைதான். ஒரு கதை யாருடைய வாழ்வைப் பின்னனியாகக் கொண்டிருக்கிறதென்கிற அழுத்தம் அதை வாசிக்கும் போது எல்லாவற்றையும்விட முக்கியமாகிறது

யுத்தத்தின் வாழ்வை உலக இலக்கியம் நமக்கு ஏராளமாய் தந்திருக்கிறதுதான், ஆனால் அதன் வழியாய் நாம் தெரிந்து கொண்டதும் உணர்ந்து கொண்டதும் சொற்பத்திலும் சொற்பமே. யுத்தத்தின் கதை என்பது நம்மளவில் பாரதக் கதையாகவும், சங்கப்பாடல்களாகவுமே இருக்கின்றன. யுத்தத்தின் வீர்யத்தையும் வலியையும் நாம் பிரக்ஞை பூர்வமாக அறிந்திருக்கவில்லை என்பது கசப்பான நிஜம். இருப்பின் எல்லா கனங்களையும் கொண்டாட்டங்களோடு கடத்தும் ஓர் சமூகத்தில் யுத்தத்தின் துயரமென்பது வேடிக்கையாகவும், போலி அனுதாபங்களாகவுமே மிஞ்சி நிற்கின்றன அதிகமும். தமிழன் இயல்பாகவே தன்னைத் தவிர்த்து மற்றவர்களுக்காக கவலை கொள்ளும் குணம் கொண்டவன்

நமக்கு வெகு அருகில் கண்ணெட்டும் தூரத்தில் நடந்து கொண்டிருந்த எல்லா துயரங்களையும் மறந்தவர்களாகவே பலகாலமாய் இருந்திருக்கிறோம். இருக்கிறோம். அது யாரோ ஒருவரின் துயரம் என்கிற மனநிலை அந்த நிலத்தின் அசலான பிரச்சனைகள் நோக்கி நம்மைக் கவனம் கொள்ளாமல் அசட்டை கொள்ளச் செய்திருக்கிறது. கதை சொல்லிக்கென நியாயங்களும் கட்டுப்பாடுகளும் இருப்பது போல் அதை வாசிப்பவனுக்கும் சில நியாயங்கள் இருக்கின்றன. அந்த நியாயங்கள் என்னவென்று ஒரு வாசகன் முழுமையாக தெரிந்து கொள்ளாததின் விளைவுதான் உண்மையை விட்டுவிட்டு பொய்களின் பின்னால் போகச் சொல்கிறது.

கதை சொல்லுதலென்பது ஒரு வகையில் இட்டுக்கட்டுதல்தான் என்றாலும் மனித வாழ்வின் அறத்திற்கெதிரானதாக அதை பயன்படுத்தும் சமகால இலக்கிய புலிகள் ( இவர்களுக்கும் புலிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.) அதைக் கொண்டு தமது பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடிகிறவர்களாக இருக்கிறார்கள். வேஷம் கட்டப் பழகிய பின் யாருடைய அறமும் நம்மை நிர்ப்பந்திக்கப் போவதில்லையென்னும் பெரும் நம்பிக்கை. சற்றே அழகானதொரு மொழியில் இத்தனை காலம் அவர்கள் பொய்யையும் பொய்யான கதைகளையும் தான் எழுதி வந்திருக்கிறார்கள். ஈழப்போர் முடியும் வரையிலான காலகட்டத்திலும் கூட போராளிகளின் அசலான முகங்களையும், போராட்டத்திற்கும் மக்களுக்குமான உறவையும் பதிவு செய்த பிரதிகள் அரிதிலும் அரிதானவை. அந்தப் பதிவுகளையும் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டதில் புலித் தோல் போர்த்திக் கொண்டவர்களுக்கும் அவர்களின் ஏஜெண்டுகளுக்கும் பெரும் பங்குண்டு

2009 ற்குப் பிறகாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த சில நேர்மையான பதிவுகள் நமக்கு வந்து சேர்ந்தன. ஆவணங்கள், செய்தித் தொகுப்புகள், என வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு செய்திகளை நாம் அறிந்து கொள்ள முடிந்த போதிலும் புனைவுகள் மட்டுந்தான் வலிமையாக நமக்கு காலத்தின் நிஜத்தை உணர்த்துவதாய் இருக்கின்றன. களத்தில் சொல்லொண்ணா இன்னல்களை எதிர்கொண்டவர்கள் எழுதத் துவங்கியபின் இத்தனை காலம் நம்மை ஏமாற்றியவர்களின் திருட்டு முகங்களும் முகத்திரைகளும் கிழிந்து தொங்குகின்றன. குணா.கவியழகனின் நஞ்சுண்ட காடும், விடமேறிய கனவும் அப்படியான குருதிக்கறை படிந்த பதிவுகள். அதிகளவில் நிலமிழந்து வெளியேறியவர்கள் பேச வேண்டிய தேவையை இந் நாவல்கள் நமக்கு உணர்த்தும் வேளையில் தான் அகரமுதல்வனின் இந்தக் கதைகளை வாசிக்க நேர்ந்தது. அகரமுதல்வனை கவிஞனாகவும் ப்ரியத்திற்குரிய நண்பன் தீபச்செல்வனின் நண்பனாகவுமே முதலில் அறிவேன். இந்தக் கதைகளை வாசிப்பதற்கு முன்னால் அவர் குறித்து எனக்கிருந்த பிம்பங்கள் நம்பிக்கைகள் அவ்வளவும் களைந்து முற்றிலும் புதியதொரு மனிதனாகவே எனக்குத் தெரிகிறார். வாழ்வின் துடிப்பு மிக்க கனல்களை சேகரித்து வைத்து அதைக் கொட்டித் தீர்க்கக் காத்திருக்கும் ஒரு கலைஞனின் உக்ரத்தை இந்தக் கதைகளெங்கும் பார்க்க முடிகிறது

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தம் நிகழ்ந்த காலத்தையும், பிற்பாடு விசாரணை என்கிற பெயரில் போராளிகளையும் போராளிகளென என சந்தேகம் கொண்டவர்களையும் சிங்கள ராணுவம் எவ்வாறு சிதைத்துக் கொண்டிருக்கிறதென்பதை நுட்பமாக விவரிக்கின்றன இந்தத் கதைகள். நமக்குத் தெரிந்த மனிதர்களின் தெரியாத கதைகளுக்குள் உலவி வரும் ஒவ்வொரு வார்த்தைகளுக்குள்ளும் நாம் வெடித்துச் சிதறுகிறோம். சிதைக்கப்பட்ட உடல்களின் துண்டான உடல்களாகிறோம். ஈழம் குறித்து இதுவரையிலும் நம்ப வைக்கபட்டிருந்த பொய்மைகளிலிருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டிருக்கும் இக்கதை மாந்தர்கள் பெரும்பாலும் போராளிகளாகவும் அவர்களோடு தொடர்புடையவர்களாகவும் இருக்கிறார்கள்

ரத்தப் புத்தகத்தின் திருப்பும் பக்கங்கள் தோறும் ஓலத்தின் மரண ஓலத்தின் எல்லையற்ற அலறல்களை உணரமுடிகிறது. போராட்டங்கள் அடிப்படையில் தியாகத்தை முன்னிறுத்துகிறது, தன்னை இழக்கத் துணிவில்லாத ஒருவனால் போராளியாக முடியாதென்பது நிதர்சனம். இழப்பின் நிழலில் தான் விடுதலையின் சுகந்தத்தை உணரமுடியும். இழக்கத் தயாராயில்லாத எவரும் எதையும் தங்களின் அடுத்த தலைமுறக்கு விட்டுச் செல்லமுடியாது. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் பலம் அவர்கள் இலக்கியத்தையும் தங்களுக்கான போராட்ட வடிவமாக மாற்றிக் கொண்டதுதான். தமிழில் அதன் வடிவ உத்திகளை மட்டும் திருடிக்கொண்ட நம்மவர்களுக்கு உள்ளடக்கமான போராளிகளின் வாழ்வை எழுதும் போது கசக்கத் துவங்கிவிடுகிறது. தமிழ் இலக்கியமும் இலக்கியவாதிகளும் சுயநலத்தின் மறு உருவங்கள். வாழ்வின் அறம் என்பதோடு எந்தத் தொடர்புகளையும் அவர்கள் வைத்துக் கொள்வதில்லை

இத்தொகுப்பிலிருக்கும் ஒவ்வொரு கதைக்குமே ஒரு பிரத்யேகத் தன்மையுண்டு. பெரும்பாலான கதைகள் ஒரு கதைசொல்லியின் பார்வையிலேயேதான் சொல்லப்பட்டிருக்கின்றன. இதனாலேயே கதைகளை வாசிக்கும் போது அதன் மொழியையும் மீறி நமக்கு வெகு அருகில் ஒருவர் அமர்ந்து கொண்டு எல்லாவற்றையும் ப்ரியத்திற்குரிய குரலில் உயிர்ப்போடு சொல்கிற உணர்வு மேலிடுகிறது. இப்படி சொல்வதற்கு அவர் எடுத்துக்கொண்ட மொழி அலாதியானது. “நான் அழத் தெரியாதவன் கடுமையான சாவுகளும் இரத்தங்களும் நாளாந்தம் காட்சியாகும் மண்ணில் வாழ்கிறவர்கள் அழத்தெரியாதவர்களாக ஆகிக் கொண்டிருந்த காலத்தில் நான் அழத்தெரியாதவனாகவிருந்தது தான் மாபெரும் கொடுப்பினை.” இது கதை சொல்லியின் நிலைப்பாடு மட்டுமல்ல, யுத்த நிலத்தின் மனிதர்கள் குறித்தான நமக்கான எளிய படிப்பினை. தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு போராளி இறக்கும் போதும் வேதனைகளை விழுங்கிக் கொண்டுநமது தேசத்தின் வரைபடத்தில் நீயுமொரு கோடுஎன இவர்களால் யோசிக்க முடிகிறது

யுத்தத்தின் தீவிரம் சொந்த ஊரிலிருந்து துரத்தும் போதுகூட அந்தப் போராளியின் தாய் வீரச்சாவடைந்த தனது மகனின் படத்தை மண்ணில் புதைத்துவிட்டுநீங்க நாடு பிடிச்சால் இந்தப் படத்தை வெளியால் எடுக்கலாம் தம்பிஎன்று சொல்லிவிட்டுப் போகிறார். 2 ம் லெப்டினண்ட் கதையை வாசிக்கும் தமிழ்நாட்டு வாசகன் இவற்றை அதீத நாடகத்தனம் கொண்டதாக நினைத்துக் கொள்ளமுடியும். ஆனால் சமயங்களில் நாம் நம்பமுடியாதளவிற்கு வாழ்க்கை அதீத நாடகீயமானதுதான்

அகரமுதல்வனே  ஒரு கதையில் சொல்வதுபோல், “ஒரு வீதியின் மக்கள் உடலங்கள் சிதறிக் கிடப்பதையும் அதில் இருந்து ரத்தம் ஓடுவதையும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத உங்களிடம் யுத்தத்தின் அசலைச் சொல்லு என பணிக்கும் இந்தக் கதையை நீங்கள் திரைப்படங்களையும் தொடர் நாடகங்களையும் விட்டுவிட்டு இந்த யுத்தப் பக்கத்தைக் கேட்டு உணருவீர்கள் என்று நான் நம்பியது கிடையாது என்றாலும் உங்கள் மீது வைத்திருக்கும் அன்புக்கும் மரியாதைக்கும் சொல்லுவதுதான் முடிவாகிவிட்டது.” பிரான்ஸ் அல்ஜீரியாவிற்கு செய்த கொடுமைகளுக்கும் துரோகங்களுக்கும் சற்றும் குறைந்ததல்ல, இந்தியர்கள் ஈழத்தமிழர்களுக்கு செய்தவை. ஈழத்தின் கடைக்கோடி கிராமத்திலிருக்கும் ஒரு தமிழனுக்கு இந்தியாவின் சமகால பிரச்சனைகள் குறித்து கவனம் இருக்கிறது. நமக்கு வெகு அருகிலிருக்கும் நிலம், அதிலும் நம் உறவுகள் என்கிற எந்தவிதமான அக்கறைகளும் நம்மிடம் இருந்ததில்லை. அரசியல் அறிவற்ற இந்த மொன்னைத்தனம் தான் யுத்தத்திற்கு முன்பும் அவர்களை தனிமைப்படுத்தச் செய்திருக்கிறது. ”பங்கருக்குள் இருக்கும் வெக்கை கடுமையானது, அது யுத்தத்தை விடவும் எரிச்சல் தரக்கூடியதென” முப்பது மைல்களுக்கு அப்பால் ஒருவன் தன் வாழ்வை எழுதும் அதே காலத்தில் தான் நாம் நம் நடிக நடிகையரின் கலைவிழாக்களை கண்டு ரசித்திருக்கிறோம். நம் எழுத்தாளர்கள் தின்று செரிக்க முடியாத கொழுப்பின் எச்சத்தை எழுத்தில் தள்ளிக் கொண்டிருந்தனர். 

"அம்மாவும் அமெரிக்காவும்" என்ற அந்தக் கதை ஒரு வகையில் சோபா சக்தியின் "குண்டு டயானா" கதைக்கு எழுதப்பட்டிருக்கும் பதிலாகவேதான் தெரிகிறது. குண்டு டயானா கட்டமைத்த பொய்யை இந்தக் கதை இரண்டு பத்திகளில் தகர்த்துவிடுகிறது. கதையின் இறுதியில் “இன்னும் இந்தக் கரையிலிருந்து அந்தக் கரையிலிருக்கும் உங்களின் காலடி வரைக்கும் ரத்தம் ஓடிவரவேண்டும், அப்படித்தானே. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமையுங்கள்.” என்பதை வாசிக்கையில் குண்டு டயானாவை நிஜமென நம்பிக் கொண்டாடும் தமிழக அறிவுஜீவிகளையும் சேர்த்தேதான் நாம் சந்தேகிக்க வேண்டியுள்ளது. 

எல்லாம் இழந்தவன் வாழ்விற்கான போராட்டத்திற்கு நடுவிலும் தமக்கு அரசியல் விடுதலை மட்டுமே முக்கியமென நினைக்கிற சூழலில் அவர்களை அகதிகளாக்கப் பார்க்கிற மனநிலையே பெரும்பான்மையான தமிழ் நடுநிலைவாதிகளுடையது. நிலமில்லாததொரு வாழ்வை ஒரு மனிதன் எப்படி பூர்ண சுதந்திரமெனச் சொல்ல முடியும். அவர்கள் கேட்பது ரொட்டித் தொண்டுகளும் அகதிகளுக்கான அட்டையுமல்ல. நிலம். அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட நிலம். ஆதிரை என்னும் சிறுகதையில் இப்படி வருகிறது, “தான் கொல்வது போராளிகளை என்று நம்புகிற யுத்தத்தின் நம்பிக்கை எவ்வளவு பூஞ்சையானது. இந்த யுத்தம் கொல்ல நினைத்தது போராளிகளையும் போராட்டத்தையுமல்ல. லட்சோப லட்சம் ஆதிரைகளின் உளத்துணிவை.” அரசியல் விடுதலைக்கான தேவையை மறக்கச் செய்ததில் சிங்கள பேரினவாதத்திற்கு இருந்த அதே பங்கு இந்திய பாசிஸ்டுகளுக்கும் உண்டு. ”மனிதர்களைக் கொல்ல வலுவிருக்கும் யுத்தத்தால் ஞாபகங்களைக் கொல்ல முடியாதுசொந்த நிலத்தின் மீதான நேசமுள்ள அத்தனை பேருக்கும் பொதுவானது

இந்தத் தொகுப்பில் இன்னும் குறிப்பாகச் சொல்ல ஒரு விஷயம் இருக்கிறதெனில் இக்கதைகள் பெரும்பாலும் பெண்களையே பிரதானமாகப் பேசுகின்றன. கரும்புலி கதை அதில் மிக முக்கியமானதொன்று. நாம் சிறிதும் கற்பனை செய்துகொள்ள முடியாத வன்முறைகளை எதிர்கொள்ளும் அந்தப் பெண்களின் கதை, போராளிகள் அல்லாத மற்ற பெண்களின் நிலை என்னவாயிருக்கும் என்கிற கூடுதல் அச்சத்தையும் நமக்குள் விதைத்துவிட்டுச் செல்கிறது. ”யுத்தநிலத்தில் தோண்டப்பட்ட பங்கர்களுக்குள் அதிகமாக புதைக்கப்பட்டவை அதிகாரங்களின் நாற்றமெழும்பும் விந்துகளும் அடக்கப்படும் இனத்துப் பெண்களின் சிதைந்த யோனிகளின் குருதிகளும் கதறல்களும் தான்” என்னும் கரும்புலியின் வரிகள் ஈழத்திற்கு மட்டுமேயானதல்ல. 

வன்முறைக்கு பழக்கப்படாத சமூகம் தன்னை மனச்சிதைவின் தொகுப்பாய் வெளிக்காட்டுவதோடு வன்முறையைக் கொண்டாடுதல் கலைச்செயல்பாடென திடமாக நம்புகிறது. இன மற்றும் குழுவாத கலவரங்களை தன் வாழ்வு முழுமைக்கும் எதிர்கொள்ளும் ஒரு ஆசியனோ ஆப்பிரிக்கனோ வன்முறையை எதிர்கொள்வதற்கும் எழுதுவதற்குமான வேறுபாடு மேற்கின் மனநிலைக்கு முற்றிலும் எதிரானது. எரிந்த முடியாத காகிதமென கருகிக் கொண்டிருக்கும் நமக்கு மேற்குலகின் புதிய வரலாற்றுப் பக்கங்கள் சமயங்களில் சலிப்பூட்டுகின்றன. அந்தப் போலித்தனத்தை தனது முகமூடிகளாகப் போட்டுக் கொள்ளும்  இங்கிருந்து போன நம்மவர்களின் மீது மட்டுமீறிய கோபத்தை ஏற்படுத்துகின்றன

இந்தக் கதைகளில் போகிற போக்கில் ஆங்காங்கே எந்தந்த ஆயுதம் எந்த நாடுகளிலிருந்து வாங்கப்பட்டதென்கிற தகவல்கள் வருகின்றன. சிங்கள தேசம் தனித்து நடத்திய யுத்தமாய் அல்லாமல் உலக நாடுகளின் கூட்டுச் சதியென்பதை ஒரு சாதாரண வாசகனால் இனங்கண்டுகொள்ள முடியும். உலக நாடுகள் நியாய விசாரணையை தவிர்ப்பதற்குப் பின்னாலுள்ள அரசியல் காரணங்கள் இது பன்னாட்டு கூட்டுச்சதி என்பதுதான். உரிமைகளைப் போராடி நினைக்கும் எந்த சமூகத்தையும் வளரவிட்டு அவர்களுக்கான இடத்தை வரலாற்றில் தர எந்த அதிகாரமும் தயாராய் இல்லை. கானகி, சாகாள், பரணி, பூவிழி, பைத்தியத்தின் தம்பி, மோன், விசாரணை என ஒவ்வொரு கதையும் துயரத்தின் எச்சங்களால் நிரம்பியவைதான். ஒவ்வொரு கதையையுமே தனித்தனியாக படமாக எடுக்க முடியும். இந்த வலிகளை உலகிற்குச் சொல்ல உண்மையில் ஒரு அகரமுதல்வனோ, குணா.கவியழகனோ மட்டும் காணாது. நூறாய் ஆயிரமாய் கதை சொல்லிகள் வேண்டும். 

ஏனெனில் அசலை விடவும் போலி வேகமாய் பரவக் கூடியது. ஈழம் குறித்தும் புலிகள் குறித்தும் போலிகள் கட்டமைத்து வைத்திருக்கிறவை ஏராளம். அதனால் தான் இங்கே இருப்பவர்கள் தங்களின் பொருளாதாரத் தேவைகளுக்காக ஒண்டிப்புலி கவிதை எழுத முடிகிறது. அதையும் நிஜமென நம்பும்படி போராட முடிவதோடு, தங்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டத்தையும் சேர்த்துக் கொள்ள முடிகிறது. தமிழ் மக்களிடமிருந்த கொஞ்ச நஞ்ச அரசியல் அறிவையும் கூறு போட்டு நாசம் செய்ததில் பெரும் பங்கு அரசியல்வாதிகளுடையது அல்ல, அறிவுஜீவிகளுடையதுதான். ஈழத்தை அரசியல் விவாதமாக அல்லாமல் வியாபாரமாக மாற்றியது இவர்கள்தான். யுத்தம் எத்தனை பயங்கரமானதோ அதற்கு சற்றும் குறைந்ததல்ல  பிறகான வதை முகாம்கள். விசாரணை, கரும்புலி கதைகள் அதை கொஞ்சமாக சொன்னாலும் அதன் பிண்ணனியில் முழுமையாக நாவல்கள் வருகிற போதுதான் நடந்து கொண்டிருக்கிற வன்முறையின் தீவிரம் நமக்குப் புரியும்

பூவிழியக்காவின் கண்ணீர் அவர் கதைச் சொற்களுக்கானதல்ல, சொன்ன துயரத்துக்கானது அல்ல, தான் சந்தித்த வதைகளையும், கூட்டுக் கொடுமைகளையும் வெளியிலே சொல்ல முடியாத காலத்தை சபிக்கும் கண்ணீர். தானொரு உயிரிருக்கும் இசைப்பிரியா  என பூவிழி அக்க சொல்லத் துணிந்து பிறகு ஏனோ எண்ணி மறுத்த கண்ணீர் தான் ஆஸ்பத்திரி தரையெங்கும் நிரம்பியிருந்தது.” பூவிழியக்காவும், இசைப்பிரியாவும் வெறும் பெயர்களல்லராமேஸ்வரத்தின் ஒரு மீனவன் சாதாரணமாகச் சொல்கிறான் கடற்புலிகள் இருந்த காலம் வரை  எங்கள் படகுகளை சிங்களன் மறித்ததில்லையென, நிஜமும் அதுதான். புலிகள் இருந்தவரை பாதுகாப்பாய் இருந்தது ஈழத்தமிழன் மட்டுமல்ல, தமிழகத்து மீனவத் தமிழனும் தான். யாருக்காகவும் எப்போதும் வாய் திறப்பதில்லையென உறுதியாய் இருப்பவர்களுக்காக எப்போதும் ஏதாவதொரு வடிவில் கத்திக் கொண்டே இருப்பதைத் தவிர்க்கமுடியாது. இறந்தவர்களின் நினைவாக குவாரனி மக்களால் பாடப்பெறும் பாடலொன்றில் இப்படி வருகிறது.

எனது குரல்
மாண்டவர்கள் மத்தியில்
மீண்டும் ஒலிக்கும்
இந்த யுகம் முடிந்து
புதுயுகம் தொடங்கும்போது
எனது வார்த்தை
மீண்டும் உயிர்ப்பெற்றெழும்…”

அவர்கள் கேட்க மறுத்தாலும் நாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். இந்தக் கதைகளை வாசிக்க இருக்கும் உங்களிடம் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். ‘கவனம் இந்தக் கதைகள் உங்களைப் புரட்டிப் போடலாம். அழச் செய்யலாம். குற்றவுணர்வு கொள்ளச் செய்யலாம். வலி தாளாது ஏதேனுமொரு கணத்தில் நீங்கள் உடைந்து நொறுங்கலாம். ஏனெனில் இவையத்தனையும் நிஜம்.’




Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்