எனது இரவும் உமது பகலும்







மீதியின் மீதியிலிருந்து
சிதையும் பகலை
இரவு ஒழிக்கிறது
அதன் மேற்பரப்பில் ஒளிரும் நிலா
பொய்யின் கனவுக்கு பாத்திரமானது
துடிக்கும் சில நட்சத்திரங்கள்
அதற்கே அந்நியமானது
நீங்கள் இரவைப் போர்த்திக் கொள்கையில்
தூங்கி விடுகிறீர்கள்
அல்லது புணர்கிறீர்கள்
எப்போதும் போல
அற்பத்தின் கனவுகளை காண்கிறீர்கள்
உங்களுக்கு தெரிந்திராத இரவுகள்
என்னிடம் இருக்கிறது
அதன் தோல் மெய்யின் கருவிலிருந்து
மழித்த பகலின் உரோமங்கள்
அதன் முகத்திலிருப்பது
மலினமான ஒரு இருட்டு
நான் மீதியின் மீதியிலிருந்து
எப்போதும் ஒரு சூரியனை திறக்கிறேன்
என் உதிரங்கள் சூரியக் கதிர்களாய்
உம் கழல் படுகிறது
அது உங்களுக்கு பகலாகவும்
எனக்கு இரவாகவும்
மீதியற்று அலைபோல அசையும்
இந்தக் காலத்தின் நெஞ்சில்
துவக்கின் சன்னங்கள் பாய்ந்திருக்கிறது.

-அகரமுதல்வன்
28.12.2015



Comments

  1. காலத்தின் நெஞ்சில் துவக்கின் சன்னங்கள்
    மலினமான ஒரு இருட்டு
    அதன் மேற்பரப்பில் ஒளிரும் நிலா

    உங்களுக்கு தெரிந்திராத இரவுகள்
    என்னிடம் இருக்கிறது

    முதல்வன் இந்த சொற்ப வரிக்குள்ளே இந்த இரவில் என் பார்வைக்கு வந்து சேர்ந்த இந்த கவிதையில் கசியும் இரவு என்னை துன்புறுத்துகிறது என்று என் உணர்வைச் சொன்னால் சரியாக இருக்குமா?

    ஆனாலும்
    என்ற இந்த ஒற்றை வரிக்குள் அத்தனையும் இருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது..

    காலத்தின் நெஞ்சில்
    துவக்கின் சன்னங்கள் பாய்ந்திருக்கிறது.

    இதை பதிந்த இதே நேரம் தற்செயலாய் நான் எழுதிவிட்ட இதையும் இங்கேயே பதிவு செய்கிறேன்

    கட்டுப்பாடுகள் அவிழ்ந்துவிடாது பயணப்படு
    அது மட்டும்
    அது மட்டுமே
    கட்டுடைக்கட்டும்
    பயணத்தின் மீதான அத்தனை ஒழுங்கையும்

    எனது இரவும் உனது பகலும் ஒரே திசை நோக்கி விடியவே காத்திருக்கிறோம்..

    -ரேவா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்