புலிகளின் தோல்வி அவர்களின் சமரசமற்ற அரசியலில் தான் உலகத்தால் வடிவமைக்கப்பட்டிருந்தது – அகரமுதல்வன்



இனப்படுகொலைக்கு பின்பான ஈழ இலக்கியத்தில் தனது கவிதைகளின் மூலமும் உரைகளின் மூலமும் தாக்கத்தையும் தெளிவையும் ஏற்படுத்தி வருபவர். யுத்தம் மாபெரும் இனஅழிப்பு என இரண்டையும் வெவ்வேறு தளத்தில் ஊடுருவி அரச பயங்கரவாதத்தின் கொடூரங்களை தனது இலக்கியத்தின் ஊடே வெளிப்படுத்துபவர். தானொரு தமிழீழ அகதி என்று எங்கும் தன்னை அடையாளப்படுத்தும் கவிஞர் அகரமுதல்வனுடனான உரையாடல்.

இனப்படுகொலை, போர்குற்றம் பல்வேறு மனித உரிமை குற்றச்சாட்டுகளை மிக லாவகமாக கையாண்ட இலங்கை அரசாங்கம் அதிலிருந்து தப்பிவிட்டது என்று எண்ணுகிறீர்களா?

ஓம், அதில் ஒரு சிறிய மாற்றம். இலங்கை அரசாங்கம் அல்ல, இலங்கை அரசு தற்காலிகமாக தப்பி விட்டது என்று சொல்லவேண்டும். அதுவும் நடந்து முடிந்த சனாதிபதித் தேர்தலில் தான் நிகழ்ந்து முடிந்து இருக்கிறது. இனப்படுகொலை குற்றச்சாட்டை மகிந்த அரசாங்கம் கையாண்ட விதத்திற்கும் மைத்திரி அரசாங்கம் கையாளும் விதத்திற்கும் பெரிய மாற்றங்கள் புறப்பார்வையிலே சுயம்பாகவே தோன்றிவிடும். இனப்படுகொலைக் குற்றச்சாட்டை எதிர்கொண்டு அதனை முறியடிப்பதற்கு மகிந்த அரசாங்கம் எடுத்துக் கொண்ட முயற்சிகளைப் பார்க்கிலும் மைத்திரி அரசு அதனை பன்மடங்கு சாயம் வெளுக்காமல் செய்து வருகின்றது. இலங்கையை பூகோள ரீதியாக பங்குபோடும் வல்லரசுப் போட்டிகளின் நகர்த்தல் விளையாட்டில் தான் இனப்படுகொலை எனும் காய் கையாளப்பட்டுக்கொண்டே இருக்கிறது. சீனாவின் பிரித்தெடுக்க முடியாத நண்பனாக இருந்த மகிந்தவை இலங்கையில் தோற்கடிக்கும் முகமாகவே இந்தத் தேர்தலில் அமெரிக்காவின் ஆலோசனையில் ரணில் களமிறக்கப்பட்டிருந்தார். மகிந்த அதிபராக இருந்த காலங்களில் இரண்டு தடவை தீர்மானங்களைக் கொண்டு வந்த அமெரிக்கா மைத்திரியின் வெற்றியின் பின் கொண்டு வரவிருந்த தீர்மானத்தை மனித உரிமைப் பேரவையில் ஒத்திவைத்துள்ளமையே இதற்கு மாபெரும் சாட்சியாக மாறியுள்ளது. சிங்கள ராஜதந்திரத்தின் அசலான நகர்வுகள் இனப்படுகொலைக்கு பின்பான இன்றைய அரசியலில் தான் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.

அப்படியென்றால் இலங்கையை இப்பொழுது அமெரிக்கா ஆளுகின்றதென்று நீங்கள் சொல்வதை வைத்து  எடுத்துக் கொள்ளலாமா?

அரசியலில் நிகழும் கணங்களைத் தவிர வேறு எல்லாம் பொய்யானவை. போர் முடிகிற வரைக்கும் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் அரசின் நண்பனாக இருந்த மகிந்த அதன் பின்பு சீனாவின் உறவினர் ஆகியதைப் போல மகிந்தவின் நண்பராக இருந்த மைத்திரி ரணிலின் அறிமுகத்தோடு அமெரிக்காவிற்கு உறவினர் ஆகிவிட்டார் என்பது உண்மை தான். அமெரிக்கா இந்து சமுத்திரத்தின் முத்தை நீச்சலெதுவும் இல்லாமல் கைப்பற்றி விட்டது இந்த விசயத்தில் அமெரிக்கவிற்கும் தமிழீழ மக்கள் மீதான இனப்படுகொலை உதவி இருக்கிறது. வேறு எதனைச் சொல்ல இப்போது இலங்கை என்பது வெள்ளை மாளிகைக்கு கையில் கிடைத்த சுடாதபழம் தான்.

தமிழர்களுக்கான தீர்வை இந்தியாவே பெற்றுத்தர வேண்டும் என்று தமிழ் அரசியல் கட்சித்தலைவர்கள் வராலற்றில் அன்றிலிருந்து இன்று வரைக்கும் கோரிக்கை வைக்கிறார்களே அது எந்த மாதிரியான நம்பிக்கை?

உதாசீனம் செய்ய முடியாத அளவுக்கு அந்த கோரிக்கை நம்பிக்கை மிகுந்தது தான். இந்தியா மீதும் இந்துக்கள் மீதும் கொண்டுள்ள அச்சமும் கோபமும் தான் இந்துக்களாக அடையாளம் காணும் ஈழத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த காரணமாகவும் அமைந்திருக்கிறது. இந்தியாவிற்கு எதிரான யுத்தம் தான் தமிழீழ மக்களுக்கு எதிராக நிகழ்கிறது என்றால் உங்களுக்கு சிரிப்பாகக் கூட இருக்கும் ஆனால் அது தான் உண்மை. தமிழீழ மக்களாகிய நாங்கள் கடந்த வரலாறு என்பது மிகவும் அபாயமான முரண்களைக் கொண்டது. இந்திய எதிர்ப்புணர்வின் யுத்தத்திற்கே இந்தியாவின் ஆயுத்தையும் அதன் அறிவுரைகளையும் வாங்கிக் கொண்டு சிங்கள ராஜதந்திரமும் பவுத்த மதவாதமும் தமிழர்களைக் கொன்று போட்டு விட்டது. நாம் தமிழர்கள் என்று சொன்னாலும் சிங்களவர்கள் இந்துக்கள் என்று தான் சொல்வார்கள். தேரவாத பவுத்தத்தின் கருத்தியலில் இலங்கைத் தீவே பவுத்த நாடு தான். இவ்வளவு நடந்து முடிந்த பின்னரும் ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் இந்தியாவிடம் இப்படியான கோரிக்கை வைப்பது என்பதை நம்பிக்கை என்று தான் சொல்லவேண்டும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி தமிழீழத் தேசமானது இந்தியாவின் பாதுக்காப்புக்கு வரலாற்று நிபந்தனை.


புலிகள் இயக்கத்தின் தோல்விக்கு அவர்களின் இராணுவ ரீதியாலான நம்பிக்கை தான் காரணம் என்று குற்றம் சுமத்தப்படுகிறதே புலிகளின் தோல்வி குறித்து உங்கள் பார்வை என்ன ?


புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆன பின் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்பது ஆச்சரியம் அளிக்கிறது. புலிகளின் தோல்வி குறித்து கண்ணை மூடிக் கொண்டு பதில் சொல்லும் அளவுக்கு அவர்கள் களத்தில் கிளித்தட்டு விளையாடியது கிடையாது. தமிழர்களின் விடுதலைக்கும் விமோசனத்துக்குமான ஒரு போராட்டத்தை அவர்கள் எந்த சமரசமுமின்றி முன் எடுத்தார்கள். அவர்கள் இராணுவ ரீதியில் பலமாகவும் வல்லமை பொருந்தியவர்களாகவும் இருந்ததைப் போலவே அரசியல் ரீதியாகவும் இருந்தார்கள். அவர்கள் அமைதியை விரும்பினார்கள். பல்வேறு பேச்சுவார்த்தைகளில் பங்குகொண்டு தமிழ் மக்களின் அபிலாசைகளை பேச்சுவார்த்தை மேடைகளில் கூறினார்கள் ஆனால் அதனை ஒரு போதும் சிங்கள ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டது கிடையாது. புலிகளின் தோல்வி அவர்களின் சமரசமற்ற அரசியலில் தான் உலகத்தால் வடிவமைக்கப்பட்டிருந்தது. புலிகள் இராணுவ ரீதியிலான  நம்பிக்கையில் இருந்து தான் தோல்வி கண்டார்கள் என்று சொல்வதெல்லாம் கற்பனை,ஆக புலிகள் எல்லாவகையிலும் தோற்கடிக்கப்பட்டார்கள் என்பது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்தக் கூற்றும் பொய். தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலை புலிகளால் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டிருந்தால் பிரபகாரனுக்கும் அமைதிக்கான நோபல் பரிசும் ஐ.நாவில் பேசும் வெற்று வெற்றியும் கிடைத்திருக்கும். அந்த அவமானத்தை புலிகள் விரும்பாததால் தான் கொல்லப்பட்டார்கள். என்னைப் பொறுத்தமட்டில் இது களரீதியாக தோல்வி என்றாலும் அரசியல் ரீதியாக அறம் சார்ந்த வெற்றி தான்.


ஆகட்ஸ் மாதம் நிகழவிருக்கும் இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் போட்டியிடும் நிலையில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என எண்ணுகிறீர்கள் ?


இனப்படுகொலைக்கு பின்பான தமிழீழ மக்களின் வாழ்க்கையைப் போலவே தான் அரசியலும் திக்கற்று திசை தெரியாமல் நிற்கிறது. தமிழ் அரசியல் தலைமைகளாக தோன்றும் சக்திகள் மக்களையும் அவர்களின் எதிர்காலத்தையும் அதலபாதளத்துக்குள் தள்ளி விடும் நிகழ்வுகள் தான் அங்கு நடந்தேறிக்கொண்டே இருக்கின்றது. இந்தத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இலங்கைத் தமிழ் காங்கிரசும் போட்டியிடுகின்றது. இதில் எந்தக் கட்சி வென்றாலும் சொல்லும்படியான மாற்றங்கள் என்று ஒன்றும் மக்களுக்கு வந்துவிடாது. நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் மைத்திரியை ஆதரித்து மகிந்தவை இனப்படுகொலை குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆசனங்களை பெறுவதைப் பார்க்கிலும் மக்கள் அரசியலில் களத்தில் நின்று செயற்பட்ட மற்றக் கட்சியின் வேட்பாளர்களான கஜேந்திரனோ, பத்மினி சிதம்பரநாதனோ நாடாளுமன்றம் சென்றால் மனம் மகிழ்ந்து கொள்ளலாம். அவர்கள் மக்களுக்காக பேசக்கூடியவர்கள், பேசுவது மட்டுமல்லாமல் செயற்படக்கூடியவர்களும் தான். ஆனாலும் அடிப்படையில் இரு கட்சிகளின் தலைமைகளிடமும் இனப்படுகொலைக்கு பின்பான மக்களின் நோக்கு நிலையில் இருந்து எந்தவொரு அரசியல் வேலைத்திட்டமும் இல்லை என்பது தான் எளிய உண்மை.

இந்த அரசியல் வெறுமையில் இருந்து மீண்டு வரமுடியாத அளவிலா தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது மற்றக் கட்சிகளோ  இருக்கிறது?


இந்த அரசியல் வெறுமையின் இருப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தான் நீட்டிக்கிறது என்பது  தான் அருவருப்பானது. 2009க்கு பிறகான இவ்வளவு காலமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு எந்தவொரு உருப்படியான விசயத்தையும் செய்யவில்லை. கொழும்பின் எல்லாக் கட்டளைகளையும் அவர்களே வேறு விதங்களில் தமிழர் நிலங்களில் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். வடமாகாண சபைத் தேர்தலில் உணர்வெழுச்சி உரைகளையும் மாவீரர் துயிலுமில்ல புனரமைப்புகளையும் வாக்குறிதியாக அளித்ததோடு பிரபாகரனுக்கு மாவீரன் பட்டம் கொடுப்பதையும் கையில் எடுத்து வாக்கு வாங்கியதை தவிர அவர்கள் மக்களுக்கு வேறு எதனையும் செய்யவில்லை. இப்படியான வெறுமை நிரம்பிய ஒரு சூழலை அவர்களே ஏற்படுத்தி அதில் லாபம் அடைந்து விடுகிறார்கள். உண்மையில் வெறுமை நிலவும் அரசியல் களத்தில் அரசியல் வாதிகள் நன்றாக காசு பார்க்க முடியும் என்பதற்கு இவர்களே நல்ல உதாரணம். மற்றக் கட்சிகள் பற்றி பேச என்ன இருக்கிறது. அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் நேரடியான அரசியலுக்கே வருகிறார்கள்.

புலிகள் இயக்கம் சாதிய முரண்பாடுகளை களைய எந்தவொரு வேலைத்திட்டத்தையும் முன் எடுக்கவில்லையென்பதோடு ஆதிக்க சாதியான சைவ வெள்ளாளர்களின் விருப்புக்கு ஏற்பவே பிரச்சனைகளை கையாண்டதென எழுத்தாளர் சோபாசக்தி விமர்சித்து வருகிறாரே?

முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன், சாதி என்கிற சமூக குற்றத்துக்காக பேசுபவர்கள் தமது சாதிய அடையாளங்களை முதலில் துறக்க வேண்டும். தானொரு வெள்ளாளன் என்றும் பறையன் என்றும் சொல்லிக் கொண்டு சாதியத்திற்கு எதிராக பேசுவது என்பது கேலியானது. சோபாசக்தி சிரிப்பு வரும்படி கதைகள் சொல்வதில் அபாரமனவர். புலிகள் இயக்கம் தமிழீழத்தில் நிலவிய சாதிய முரண்பாடுகளை இல்லாமல் ஆக்கியது. ஒரு இனத்தின் விடுதலைக்கும் விமோசனத்துக்கும் போராடிய இயக்கத்தில் சாதிய முரண்பாடுகள் இல்லாது இருந்தன என்பது தான் வரலாறு. கட்டித்துப் போன சாதிய வேற்றுமைகளால் சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தவர்கள் மீது பல்வேறு வன்முறைகள் புலிகளின் வரவுக்கு முன்னதாக இருந்ததே தவிர பின்னர் அது இல்லாமல் ஆக்கப்பட்டது. இனவன்முறைக்கு எதிரான விடுதலைக்கான கூட்டு மனோபாவம், சகோதரத்துவம், மற்றவனின் துன்பங்களில் பங்கெடுத்துக்கொள்ளும் பண்பு, சாதி மறுப்புத் திருமணம் என்பவை புலிகள் நிர்வாகத்தில் நிகழ்ந்தது. சாதி என்கிற பேச்சை பேசுவதற்கு அந்த மண் வாய்ப்பே அளிக்கவில்லை. நீங்கள் குறிப்பிடும் எழுத்தாளர் புலிகளை எப்போதும் குற்றம் சொல்லும் தொழிலை செய்து வருபவர். அதை நம்புவதற்கு தமிழகத்திலும் நிறைய ரசிகர்கள் அவருக்கு இருக்கிறார்கள். புலிகள் சைவ வெள்ளாளர்களின் விருப்புக்கு இயங்கினார்கள் என்ற கூற்று அவரின் கதைப் பிரதிகளைப் போல அசலான புனைவு தானே தவிர உண்மை இல்லை.

புலி எதிர்ப்புவாத இலக்கியம் குறித்து ?

இனப்படுகொலையையும் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அங்கீகரிக்கும் காலத்திற்கு ஒவ்வாத வாதம் மேலும் இலக்கே இல்லாதவர்களால் இலக்கியத்தை படைக்க முடியாது என்பதில் எனக்குத் தெளிவும் நம்பிக்கையும் இருக்கிறது.

உங்கள்அறம் வெல்லும் அஞ்சற்க” தொகுப்பிலுள்ள கவிதைகள் வாசிப்பவர்களை பெரும் மனஉளைச்சலுக்கும் நெருக்கடிக்கும் உள்ளாக்குபவை எப்படி அவ்வாறான சூழல்களைத் தாங்கிக் கொண்டீர்கள்?

கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இனத்தின் அடுத்த பிணமாக ஆகலாம் என்று இனப்படுகொலைக் களத்திலும் கொல்லபட்டு முடிந்த ஒரு இனத்தின் எச்சமாக இனப்படுகொலைக்கு பின்பான காலங்களிலும் சூழலுக்கு ஏற்ப வாழ்வு வடிவம் பெற்றது. யுத்தம் ஒன்று நிகழ்ந்து இருக்குமேயானால் அதில் தமிழர்களிடம் வெற்றி தான் கைசேர்ந்திருக்கும். யுத்தத்திற்கு பதிலாக இனப்படுகொலை நடந்த போது யுத்தகளத்தை தாண்டி எங்கள் வீட்டுக் கூரைகளிலும் பள்ளிக்கூட மைதானங்களிலும் தான் குண்டுகள் வீழ்ந்தன. எமது வாழ்க்கை வெடிகுண்டில் தொடக்கி வெடிகுண்டில் முடிந்து போகும் வெடிகுண்டு நூற்றாண்டின் வாழ்க்கை என்று தான் சொல்லவேண்டும். சகோதரன் தீபச்செல்வனின் பதுங்குகுழியில் பிறந்த குழந்தையும், எனது குழந்தை பயங்கரவாதியும் என்கிற தலைப்பிலான கவிதைகள் இதற்கு நல்ல சாட்சி.

ஈழப்பிரச்சனையில் தமிழக இடதுசாரிகளின் நிலைப்பாடு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

தமிழகத்தில் இடதுசாரிகள் இருக்கிறார்களா என்ன? மானுடத்தையும் மக்களின் உரிமைக்குரலையும் ஆதரிக்கும் சில இடதுசாரித் தோழர்களை காண்பது தான் அரிதாகவே இருக்கிறது. இவ் உலகின் எல்லாத்தத்துவங்களும் மே-18ம் திகதி எனது கண் முன்னே நிர்வாணமாக நின்றதை மீண்டும் உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மொஸ்கோவும் மற்றும் பீக்கிங் சோசலிசத்தின் இன்றைய பெயர்கள் இந்த இனப்படுகொலையில் மிகப்பெரும் பங்கை ஆற்றியது. இடதுசாரிகள் புலிகள் மீது பல்வேறு விமர்சனங்களையும் அதிருப்தியையும் கொண்டிருக்கிறார்கள். புலிகளை பெரும் வலதுசாரி அமைப்பு என்றும் பாசிஸ்ட்டுகள் என்றும் உருப்படித்தியிருக்கிறார்கள். தமிழக இடதுசாரிகள் ஒரு நாளும் தமிழீழ மக்கள் குறித்தோ அவர்களின் உரிமைப் பிரச்னை குறித்தோ எண்ணியது கிடையாது. இப்பொழுது மக்கள் பிரச்னையை கடந்து பிரபாகரன் தலைவரா பாசிஸ்டா தோழர் என்பது தான் அவர்களின் ஈழப் பிரச்சனைக் குறித்த பார்வை. வியட்நாமில் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ரிச்சட் நிக்சனை 1972ம் ஆண்டு சீனாவுக்கு அழைத்து உறவை ஏற்படுத்திக் கொண்ட மாவோ இன்றும் இடதுசாரிகளின் தலைவராக இருப்பதில் இருந்து ஈழப் பிரச்சனையில் இவர்களின் நிலைப்பாடு குறித்து எந்தக் கவலையும் இல்லை.


தமிழீழம் தமிழீழம் சொல்கிறீர்களே, அது இனியும் சாத்தியமா?

அதில் சாத்தியத்திற்கு என்ன இருக்கிறது, எனது தாயகம் தமிழீழம். தமிழீழம் என்கிற தேசம் எப்போதும் எம்மோடு இருக்கிற ஒன்று தான். இந்தியர்கள் பிரித்தானியர்களின் ஆக்கிரமிப்புக்கும் அதன் ஆட்சிக்கு எதிராக போராடியதைப் போல நாம் சிங்களர்களின் ஆக்கிரமிப்புக்கும் அதன் அதிகாரத்துக்கு எதிராகவும் எமது மண்ணில் போராடி வருகிறோம். பிரித்தானியர்கள் வன்கவர்ந்த போது இந்தியா என்கிற தேசம் இருந்ததைப் போல சிங்களர்கள் வன்கவர்ந்த தமிழீழமும் இருக்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது தாயக மீட்பு போராட்டமே தவிர ஒரு புதுத் தேசத்தை உருவாக்கும் போராட்டம் அல்ல. இந்தியா சாத்தியமாகித்தானே இருக்கிறது.

 நேர்காணல் -நேஷனல் டுடே (ஆகஸ்ட் 2015)


  




























  

  



Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்