மகிந்த -மைத்திரி – அமெரிக்கா

இனவாத உளவியலில் சிங்கள தேச ஆட்சியாளர்களிடம் நிலவி வருகின்ற ஒற்றுமை,உடன்பாடுகள் போன்றவை அவர்களிடம் ஆழவேரூன்றிப் போய் கிடக்கும் படுகொலைச்சிந்தனையிலிருந்து உருப்பெற்றவை. அங்கு வாழும் சிறுபான்மை மக்கள் மீது வரலாறு நெடுக அடக்குமுறைகளை நிகழ்த்தி இலங்கைத்தீவு ஒரு பவுத்த நாடு – அது சிங்களர்களுக்கே சொந்தமானது என நிறுவ முயலும் சிங்களத் தலைவர்களின் குரல்கள் ஓரினத்தன்மை கொண்ட ஆட்சியை வலியுறுத்துவதாக மட்டுமே அமைந்திருக்கிறது.

இந்த இனவாதக் கோட்பாட்டின் நவீன ஆட்சியாளராகவிருந்து இனப்படுகொலையினை நிகழ்த்திய மகிந்த இனப்படுகொலைக்கு பின்னராக நிகழ்ந்த இரண்டாவது தேர்தலில் தோல்வியுற்றமை பல்வேறு நெருக்கடிகளை தமிழர்களின் அரசியல் நகர்வுகளில் ஏற்படுத்திவிட்டது என்று உறுதியாக நம்பமுடியும். வெறுமென மகிந்தவிற்கு எதிரான நிலைப்பாடு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிக்கு அளித்த ஆதரவே இன்று மகிந்தவை தோல்வியடைய செய்திருக்கிறது. தமிழர்களின் வாக்குகளே மைத்திரியை  வெற்றியடைய செய்திருக்கிறது என்றாலும்  தன்னை வெற்றி அடையச் செய்த தமிழர்களுக்கு மைத்திரி எதையும் செய்துவிடப்போவதில்லை.

தமிழர்களின் அரசியல் சக்தியாகவிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மைத்திரிக்கான ஆதரவு நிபந்தனைகளற்றது, மேலும் இந்த முடிவைத் தவிர வேறு வழியேதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  தலைவர் சம்பந்தன் அவர்களிடம் இருக்கவில்லை எனச் சொல்லுவது தங்கள் மிதவாதத்தை  நியாயப்படுத்த விளையும் போக்கு. “வேறு வழியில்லாமல் முடிவெடுப்பதற்கல்ல இதுவே வழியென செல்வதற்கு தான் தலைமை” என்பதை சம்பந்தன் புரிந்து கொள்ளவேண்டும். இந்தத் தேர்தலை எந்த சத்தமுமின்றி பகிஸ்கரிப்பு செய்திருக்கலாம் அல்லாது போனால் வடக்கு- கிழக்கு ஆகிய தமிழர்களின் தாயகத்தில் பொது வேட்பாளரை நிறுத்தி சர்வதேசத்திடம் தமது எதிர்ப்பை மிகச் சிறப்பாக வெளிக்காட்டியிருக்கலாம்.ஆனால் அது நிகழவில்லை இதற்கு மேலாக இவர்களின் இந்த முடிவு தமிழீழ மக்களின் பன்னாட்டு ரீதியிலான அரசியல் நகர்வுகளை பெரியளவில் பின்னடைய செய்திருக்கிறது.

ஏனெனில் இலங்கைத் தீவில் நிகழும் இரு தேசங்களுக்கிடையிலான பிரச்சனை இனச்சிக்கலால் மட்டுமல்ல,அது புவிசார் அரசியலின் அனைத்து வழிகளாலும் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் பிராந்திய அரசுகளின் சுரண்டல் போட்டிகள். இந்து சமுத்திர பிராந்தியத்தில் கதாநாயக சக்தியாக விளங்கும் இலங்கைத்தீவை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முனையும் பிராந்திய வல்லரசுகள் அங்கு நிகழும் இரண்டு இனங்களுக்கிடையேயான பிரச்சனையை தமக்கு சாதகமாகவும் அதனை அணைந்துவிடாமலும் பார்த்துக்கொள்கின்றனர். புவிசார் அரசியலின் பலியாடுகளாக தமிழர்கள் மட்டும் ஆக்கப்படுவது இதன் மூலமே சாத்தியமாயிற்று.

இலங்கைத் தீவில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வளங்களை தமதாக்கி கொள்ள விரும்பிய வல்லரசுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியில் தோற்கடிக்க தமது பெருவாரியான உதவிகளை போட்டி போட்டுக்கொண்டு செய்தன. இதில் அமெரிக்கா,சீனா, இந்தியா போன்ற நாடுகளின் பங்களிப்பு அதிகமானது. பிராந்திய வல்லரசுகளாக இருக்கும் இந்தியா,சீனா போன்ற நாடுகளையும் உலக வல்லரச சக்தியாகவிருக்கும் அமெரிக்காவையும் ஒரே நேர்கோட்டில் கையாண்ட மகிந்தவின் ராஜதந்திரம் சிங்கள ஆட்சியாளர்களின் வரலாற்றில் அதிசியக்கத்தக்கது.

சீனாவை மத ரீதியாகவும், சுயபழியுணர்ச்சியுடனிருந்த இந்தியாவையும், புலிகள் இயக்கம் மீது கடுமையான அதிருப்தி கொண்டிருந்த அமெரிக்காவையும் ஒன்றாக திரட்டி பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனும் அமெரிக்க குடுவையிலேயே அடைத்த மகிந்தவின் சதுரங்கத்தில் அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் அடைந்த ஏமாற்றமும் தோல்வியும் அவர்களுக்கே உணர நாள் பிடித்தது.

புலிகள் இயக்கத்தின் இராணுவ தோல்விக்கு பின்னர் சீனமயமாகிய இலங்கைத்தீவு பிராந்திய அளவில் இந்தியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதோடு ,தனது தெற்காசிய தளமென நம்பிய இந்த தீவையே சீனாவுக்கு பரிசளித்த மகிந்தவின் போக்கு அமெரிக்காவிற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியமை மறுக்கமுடியாதது. இந்த இடத்திலிருந்து மகிந்தவுக்கு எதிராக திசை திரும்பிய அமெரிக்காவின் ஒவ்வொரு நடவடிக்கையும் மகிந்தவை சற்று நிலைகுலைய வைத்தது என நம்பலாம்.

இனப்படுகொலை தொடர்பாகவும், அங்கு போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை தொடர்பாகவும் பேசுவதன் மூலம் மகிந்தவை சற்று பணியவைத்திடலாம் என தீர்மானித்து அமெரிக்க கொண்து வந்த தீர்மானங்கள் இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு உலகளவில் மிகப் பெரும் அறிமுகத்தை ஏற்படுத்திக்கொடுத்தது.அமெரிக்க  தீர்மான நகல்களில் தமிழர்கள் பாத்திரங்களாக இருந்தாலும் தமிழர்களின் வாழ்வுக்கு தீர்வு இருந்ததாயில்லை என்பது உண்மை தான். மகிந்த எனும் மேற்குலக எதிர்ப்பு உணர்வு கொண்ட ஒரு  நாட்டின் அதிபரை மிரட்டுகிற அல்லது விரட்டுகிற உலக வல்லரசின் இந்த திட்டமிடலில் தான் மகிந்த ராஜபக்ச இலங்கையின் முன்னாள் அதிபராக்கப்பட்டிருக்கிறார்.

தனது பழைய நண்பரான ரணில் விக்கிரமசிங்கவை பிரதிநித்துவப்படுத்தும் இரண்டாம் கட்ட முயற்சியில் அதாவது 2004ம் ஆண்டின் அதிபர் தேர்தலுக்கு பிறகு இன்று மீண்டும் ரணிலை தூசி தட்டி தேர்தல் களத்தில் நிறுத்திய அமெரிக்கா இந்தத் தேர்தலில் மைத்திரியின் முகத்தில் வென்றிருக்கிறது. தலையெடுக்க ஆரம்பித்து ஆறு வருடங்களில் இலங்கைத் தீவிலிருந்து சீனா பரிதாபமாக தூக்கி எறியப்படும் நிலையை அமெரிக்கா ஏற்படுத்தி விட்டது.  இதன் மூலம் தனது நெடிய கனவு ஒன்றை அமெரிக்கா அடைந்துவிட்டது.

நிறைவேற்று அதிகார அதிபர் முறையை நூறு நாட்களில் மாற்றி அமைத்து பாராளுமன்ற ஆட்சி முறையை கொண்டு வருவதாக கூறியிருக்கும் தற்போதைய அதிபர் மைத்திரியின் குரல் அமெரிக்கக் குரல்,ரணிலை பிரதமராக்கி தன் இந்து சமுத்திர பிராந்திய அரசியலில் தன்னை நிலை நிறுத்தப் போகும் உலக வல்லரசின் திட்டம்.மேற்குலக ஆதரவு நிலை கொண்ட ரணிலுக்கு அமெரிக்கா எப்போதும் துணையாக இருந்திருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான பேச்சுவாரத்தைகளில் நோர்வே முகமூடியணிந்த அமெரிக்காவின் கிளிப்பிள்ளையான ரணிலைத் தான் புலிகள் தேர்தல் மூலம் நிராகரித்தனர் என்பது மறுக்க முடியாத புலிகளின் ராஜதந்திரம்.

கைவிட்டு விடுவதன் மூலம் சர்வதேச ரீதியில் தொடர்ந்து தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் தமிழீழர்களின் குரல்கள் அமெரிக்காவை பொறுத்த மட்டில் பெறுமதியற்றவை, ஏனெனில் அந்த குரல்களுக்கு செவிசாய்ப்பதன் ஊடாக அமெரிக்காவுக்கு எதுவித பயனுமன்று.வல்லரசுகள் எப்போதுமே தமது நோக்கு நிலையிலிருந்தே அடக்கப்படுகிற மக்களின் அவலங்களை கையாளுவார்கள்.

மறுவாழ்வு, வடமாகாண சபைக்கான அதிகாரம்,இராணுவத்தை மீளப் பெறுவது போன்ற தமிழர்களின் அவசர கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாதென கூறியிருக்கும் மைத்திரிக்கும் – மகிந்தவுக்குமான நிலைப்பாட்டு வித்தியாசங்கள் சிங்கள மக்களின் சமூக, பொருளாதார அசைவுகளில் கண்டிப்பாக இருக்கலாமே தவிர தமிழர்களின் நிலைப்பாட்டில் மயிரிழை மாற்றங்கள் கூட நிகழ்ந்துவிடாது. பிராந்திய வல்லரசான இந்தியா 13ம் திருத்தச்சட்டத்தை வலியுறுத்துவதை மட்டுமே தொடர்ந்து செய்யுமானால் அது அங்குள்ள தமிழர்களை வெறுப்பு நிலைக்கு கொண்டு செல்லும்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய அணுகுமுறையில் மிகப் பெரும் மாற்றங்கள் இனிவரும் காலங்களில் நிகழ்வதன் ஊடக இந்திய மக்களுக்கு தமிழர்கள் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறையை தெரியப்படுத்தலாம்.

கிட்ட நோக்கில் தமிழர்களுக்கு சாதகத்தையும் தூரநோக்கில் பாதகத்தையும் மைத்திரியின் ஆதரவு ஏற்படுத்தும் என வடமாகாண முதலைமைச்சர் விக்கினேஸ்வரன் சொல்வது முரணனானது.தமிழர்களைப் பொறுத்தமட்டில் இது பாதகத்தை ஏற்படுத்திய முடிவாகிவிட்டது.மைத்திரியை ஆதரித்து அதிபராக்கியது வேண்டுமென்றால் மிதவாத தமிழ் தலைவர்களுக்கு வெற்றியாக இருக்கலாமே தவிர பதவியிழந்து போன மகிந்தவின் தோல்வி வெறுமென மகிந்தவுக்கு மட்டுமானதல்ல மரணத்தை முதலீடாகக் கொண்டு சர்வதேச தளத்தில் தமது நீதிக்காக போராடும் ஒவ்வொரு தமிழீழர்களுக்குமானது தான்.  

அடக்கப்படும் தமிழ் மக்களின் அரசியல் சக்திகளாக இருந்து கொண்டு தூர நோக்கற்ற ஒரு அரசியல் முடிவை தீர்மானிக்கும் பூகோள பிராந்திய அரசியல் அறிவற்ற மிதவாத தமிழ் தலைமைகள் மீண்டுமொரு முறை தமிழீழர்களை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டார்கள் என்கிற வரலாறு மட்டுமே மைத்திரியின் தேர்தல் வெற்றியில் தமிழர்களுக்கு எஞ்சியுள்ள ஒன்று.

-அகரமுதல்வன்
24.01.2015 

Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்