சந்தனம் மித்தினால் தடவுடா புடுக்கில







தமிழீழ தாயகத்தில் நிகழ்ந்த இனவன்முறையினால்/ அல்லது அதனை கராணம் காட்டி ஐரோப்பிய நாடுகளிற்கும் பிற டாலர் தேசங்களிற்கும் புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய ஆதரவு என்பது மிக முக்கியமானது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசு நிகழ்ந்த காலத்தில் மிகப் பெரும் பொருளாதார பூவுலகை அந்த அரசுக்கு ஆதரவாக கட்டி அமைத்த முன்னுதாரண மக்களாக புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இந் மக்களுக்கு வரலாற்றில் பெரும் பங்குண்டு என்பது உறுதியானதென்றாலும் சில புலம்பெயர் மக்களிடம் காணப்படும் படோபடங்கள் அருவருக்கச் செய்கிறது என்பது தான் வருத்தமான உண்மை.

இனப்படுகொலையின் பின் தமிழீழ தாயகத்தில் மக்கள் படுகின்ற அவலம் என்பது பட்டினிகள் சூழ தொடர்ந்து செல்கிறது மேலும் போரில் வீசப்பட்ட இராசயனக் குண்டுகளால் அந்த நிலம் நச்சுவளி கொண்ட காற்றைத் தான் வீசி வருகிறது ,பச்சை வயல்களென தலை அசைத்த ஊரின் அடையாளம் மழை அற்று வறண்டு போய்க் கிடக்கிறது.

இனப்படுகொலை தமிழர்களின் உயிரை மட்டும் குறிவைத்து நிகழ்த்தப்பட்டதல்ல தமிழன் நெல் விதைக்கும் வயலிலிருந்து அவன் சுவாசிக்கும் காற்று வரை நீர் அருந்தும் கிணறு வரை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.தாயகத்தில் வாழும் உறவுகள் பட்டினியால் சாகும் நிலை ஆங்காங்கே நடந்தபடியிருப்பதை தமிழீழ இனத்தின் அவமான பட்டியலின் முதல் நிலையில் தான் சேர்க்கவேண்டும்.

ஏனெனில் சகோதரன் ஒருவன் ஒருவேளைச் சோற்றுக்கு கூட வழியற்று இருக்கும் இந்தக் காலத்தில் பிரமாண்ட திருமணங்களையும், கேளிக்கை நிகழ்ச்சிகளையும், காசு மிஞ்சிய திரள்வதன் பொருட்டு நிகழ்த்திக் கொண்டிருக்கும் சில புலம்பெயர் தமிழீழ உறவுகளின் இந்த மாதிரியான படுகொலைகளை எந்த சபையில் கொண்டு சென்று நீதி கேட்பது என்கிற இயலாமை தான் என்னிடம் மிஞ்சி வழிகிறது.

சில புலம்பெயர்ந்த தமிழீழத் தமிழர்களின் திருமண விழாக்கள் சொல்லும் அளவைத் தாண்டி பிரமாண்ட பணப்பலத்தோடு தமிழ்நாட்டில் உள்ள நட்சத்திர விடுதிகளில் நடைபெறுவது வழமையான ஒன்றாகிவிட்டது.

மேலும் இது தத்தமது பொருளாதார தகமைகளை காட்டிக் கொள்வதற்காக போட்டி போட்டு நடைபெறுவதால் நண்பனின் திருமணத்தில் பத்து வகையிலான பூக்கள் கொண்டு இருக்கைகள் வடிவமைக்கப்பட்டால் நூறு நிறப்பூக்கள் கொண்டு இருக்கைகள் அலங்கரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையோடு தான் அடுத்து வருகிற வெளிநாட்டு மாப்பிள்ளை ஐரோப்பிய நாட்டிலிருந்து மீனம்பாக்கத்திற்கு விமானம் ஏறுவார் என்றால் பாருங்களேன்.

இந்த விடயம் குறித்து எழுதிக் கொண்டு போகும் போது "சந்தனம் மித்தினால் தடவுடா புடுக்கில" ஒரு பழமொழியை அம்மம்மா சொல்வது எனக்கு நினைவில் வருகிறது கிட்டத்தட்ட இந்தமாதிரியான நிகழ்வுகள் புடுக்கில் சந்தனத்தை தடவுவது போலத் தான் எனக்குத் தோன்றுகிறது ,

இந்த முடிவில் எனக்கு சந்தேகமில்லை தான் தாய் நாட்டை மீட்கிற விடுதலைப் போரில் தம்மை இணைத்து அவயங்கள் தோறும் விழுப்புண் பட்ட சகோதரிகள் ,சகோதரர்கள் என அனைவரும் வேலை வாய்ப்பற்று துன்பப்படும் நிலையில்,அவர்கள் சாப்பிடுவதற்கு கூட எந்த வழியுமற்ற இந்த துன்பச் சூழலில் நட்சத்திர விடுதிகளில் பிரமாண்ட மணவறைகளோடும் அதிக செலவழிப்புகளோடும் நடந்தேறுகிற திருமணங்கள் அநீதியானது.

"சொந்தக் காசில் நாங்க எங்கட பின்னான சொறிஞ்சா உனக்கு என்னடா" என சிலர் இப் பதிவின் பின்னூட்டத்தில் மிகப் பெரும் அறமற்ற கோபத்தோடு கேட்கக்கூடும் அது குறித்து எனக்கு பயமோ கவலையோ இல்லை.. ஏனெனில் உமது பொருளாதாரம் என்பது எமது தாயக விடுதலைக்கான பெரும் பலம்.

மண்டியிட்டு கேட்கிறேன் உண்ண உணவின்றி தவிக்கும் ஒவ்வொரு தாயகத்தின் சொந்தக்களுக்கும் உறவுகளுக்கும் உங்கள் படோபடங்களை விடுத்து உதவ முனையுங்கள்.. .
வேர்கள் இருக்கும் பட்சத்தில் தான் கிளைகளுக்கு உயிருண்டு.

-அகரமுதல்வன்
09/09/2014

Comments

Popular posts from this blog

சிங்கள ராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை – அகரமுதல்வன்

அகரமுதல்வன் படைப்புக்கள் அவலத்தின் அழகியல் - எழுத்தாளர் அகிலன் எத்திராஜ்

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்