முத்துமாலை சிதறும் உலகம்
இந்த நிமிடம் கரைகிற
காதலின் உறைதல்
சொல்லிட முடியாத ரணத்தின்
கூரைகளில் கொடியெனப் பறக்கிறது
இன்னுமே பார்த்திராத என்னிதயத்தின்
அழுகைச் சத்தம்
சோவென பெய்யும் மாரியின்
சுரத்தை குழப்புகிறது
நீ எனது
ஆதியின் முத்தமழை
உயிர்த் துளையின் மூங்கில் காற்று
விடியலின் குயிலோசை
ஜீவிதத்தின் ஆன்ம நதி
கதறும் துயரத்தின் கன்றைப் போல
நீயில்லாத வெளியெங்கும்
பேசிக்கொண்டிருக்குமென்னை
மண்புழுவென நினைக்கிறது நடுவெய்யில்
சிற்றளவும் குளிர்மையின்றி
அலாதிப் பிரியத்துடன்
இப்பொழுது எழுத தொடங்கியிருக்கிறேன்
சொற்களின் கல்லறையில்
இறந்தகாலத்தில் உனக்குப் பிடித்த
எனது பெயரை.
-அகரமுதல்வன்
11.07.2014

Comments
Post a Comment