உள்ளுணர்வின் ஊடுருவலோடு கூடிய கவிதைகள் -கோவை ஞானி
அகரமுதல்வனின் “அறம் வெல்லும் அஞ்சற்க”கவிதைத் தொகுப்பினுள் 40 கவிதைகள் உள்ளன. மித்ர பதிப்பகம் வெளியிட்ட அவரது இரண்டாம் கவிதை நூலைப் படித்த பொழுது, ஈழத்தில் படுகொலைகள் கொடூரங்கள் பற்றி ஏராளமான விபரங்களோடு கவிதை எழுதியிருக்கிறீர்கள் இவ்வகை விபரங்கள் மட்டுமே கவிதையாகவில்லை என்று அகரமுதல்வனுக்குச் சொன்னேன் அவரும் பதில் சொன்னார். அறம் வெல்லும் அஞ்சற்க கவிதைகளைப் படித்த போது என் வியப்புக்கு அளவில்லை.
வழக்கமான ஈழத்து கவிஞர்களின் கவிதைகளிலிருந்து இவை முற்றிலும் வேறுபட்டு இருக்கின்றன என்பது மட்டுமல்ல இவற்றில் பெரும்பாலானவை அசலான கவிதைகள் அற்புதமான கவிதைகள் கவிதை இவருக்கு ஒரு அழகியல் சாதனமல்ல என்றாலும் கொள்ளையழகோடு கவிதை எழுதுகிறார். கவிதை எனக்கு ஒரு துவக்கு என்கிறார்.உண்மை தான் இவர் கவிதைகள் நம் நெஞ்சில் வெடிக்கின்றன.ஈழத்துக் கவிஞனது கவிதைகள் இந்தியத் தமிழனின் நெஞ்சில் வெடிக்கத் தான் செய்யும்.
ஈழத் தமிழர் மீது, ஈழத்து தமிழ்ப் போராளிகள் மீது மட்டுமல்லாமல் படைப்பாளிகள்,திறனாய்வாளர்கள்,ஆய்வாளர்கள் முதலிய அனைவர் மீதும் நமக்கு மிகுந்த மரியாதை உண்டு.ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே தம் தேசத்தை, தம் வரலாற்றை,தம் மாண்பைக் காத்துக் கொள்ள ஓயாது போரிட்டு வருபவர்கள்.இவர்கள். இத்தகைய போர்த்திறன் காரணமாக தமக்கென வலுவான ஆளுமையை பெற்றவர்கள் வருபவர்கள்.
இந்திய தமிழர்களாகிய நமக்கு இத்தகைய வரலாறு இல்லை. சுகமான வாழ்வில் பாதுகாப்போடு பல்வேறு வகைமையான பொய்மைகளோடு பிரமைகளோடு நமக்கு நிகரானவர் வேறு யார் இருக்க முடியும் என்ற
மிதப்போடு வாழ்ந்து நமக்கான வரலாற்றை, தன்மானத்தை ,விடுதலை உணர்வை இழந்து வாழ்கிறோம்.இந்நிலையில் தான் ஈழத் தமிழர்கள் மீது மிகுந்த மரியாதை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. ஈழத் தமிழர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள எவ்வளவோ உண்டு. கற்றுக் கொள்ளும் திறன் நமக்கு வேண்டும் .
இவ்வகையில் ஓர் அசலான கவிஞராகிய அகரமுதல்வனின் கவிதைகளுக்குள் ஒரு பயணம் செய்வதன் மூலம் நமக்கான வரலாற்றையும் நம்மை அடைத்திருக்கும் பொய்மைகளையும் தெரிந்து கொள்ள முடியும்.(அற்புதமானது அவரது கவித்துவம் என்பதற்கு தொகுப்பில் நிறைய சான்றுகள் உண்டு )
அகரமுதல்வன் கவிதைகளின் சில தனித்தன்மைகள் இங்கு சுருக்கமாகப் பார்த்துக்கொள்வோம்.செறிவான கவிதைகள்,கவிதைக்குள் கவிதை எனச் செருகிக் கொண்ட சிக்கலான வடிவங்களிலும் பல கவிதைகள்,மாபெரும் இயற்கை பற்றிய கவிதைகள் இடையிடையே வந்து போனாலும் முற்றிலும் அவை ஈழத்துப் போர்க்கள அனுபவத்தோடு செறிந்த கவிஞனின் உள்ளுணர்வின் ஊடுருவலோடுகூடிய கவிதைகள்.
போர்க்களத்தின் பல்வேறு (பா)வாதைகளையும்போர் முடிந்தும் முடியாத நிலையிலும் சிறைபட்டும் சித்திரவதைக் கூடத்தில் அடிபட்டும் சிதைந்தும் சிதைவுறாததுமான மனநிலையில் வாழ்கை, வரலாறு முதலியவை பற்றிய மாறுபட்ட வீரியமான பார்வைகளோடு கூடிய கவிதைகள். தன் இனத்து வரலாற்று அனுபவங்களை பிரபஞ்ச பேரண்ட சூழலில் வைத்தும் மனிதனின் நெடுங்கால வரலாற்றினுள் வைத்தும் பார்க்கின்ற பார்வையோடு கூடிய கவிதைகள்.ஈழத்துத் தமிழ் மகனின் தனித் தன்மைகளை இந்தியத் தமிழனால் எட்டித்தான் பார்க்கமுடியாது.
இத்தகைய வீரியமிக்க கவிதைகளுக்குள் அகரமுதல்வனின் தனித்துவமான அரசியல் பார்வையின் ஊடாட்டத்தையும் நம்மால் காணமுடியும். இந்த இளம் வயதில் இப்படி ஒரு மாறுபட்ட கோணத்தில் இப்படி ஒரு பார்வையை இவரால் எப்படி விரித்துக் கொள்ள முடிந்தது என்ற முறையில் இவரது அரசியல் பார்வையை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இனி இவரது சில கவிதைகளுக்கு செல்லலாம் .
அகரமுதல்வன் தனது சொற்களை எந்த உணர்விலிருந்து தேடி எடுக்கிறார் என்பது பற்றி ஒரு கவிதையில் சொல்லுகிறார். தனக்குள் கருணை இல்லை,தனக்குள் அழகுணர்வு இல்லை காரணம் என்னவாக இருக்க முடியும்? மரணம் துரத்துகிற கொலைக்களத்தில் தன்னிடம் கருணை கொண்டவர் யாருமில்லை.அழகியல் தேடும் தருணமும் இது அன்று. அப்படியானால் இவர் கவிதை எவ்வாறு இயங்கும் .கவிஞர் எழுதுகிறார் .
“கருணையென்பது சிறிதளவுமின்றி
எனக்கு முன்னர் தோன்றிய
சொற்களைக் கொலைப்படுத்தி
கவிதையென்றழைக்கிறேன்
விநோதம் எதுவென்றால்
எந்தச் சொற்களுமே இதுவரைக்கும்
சரணடைய
வெள்ளைக்கொடியோடோ
அல்லது வெறுமனவோ
என்னை நோக்கி வந்ததேயில்லை
.................................................
பெரும் வாதை சொற்களுக்கானதே தவிர
எப்போதும் என்னை நெருங்கியதில்லை
(கவிதை எண் 16)
ஒரு போராளியை ஓவியத்தில் வரையத்தான் முடியுமா என்று நமக்குள் கேள்வி எழுப்புகின்றது அகரமுதல்வனின் ஒரு கவிதை. போராளியை அவன் அகத்திற்குள் நுழைந்து அனுபவதிற்குள் விரிந்து ஓவியமாய் வரையத்தான் முடியாது என்பதாக இக் கவிதை இயக்கம் கொள்கிறது.
“ஒரு புள்ளியிலிருந்து
என்னை வரையத் தொடங்கும் தூரிகைகள்
துயர ரேகைகளில் மிரண்டு நசுங்குகிறது
புருவ விழிப்புக்களையும்
பெரு நிலக் களம் நடந்த கால்களையும்
துப்பாக்கியின் "டிகர்"படிந்த விரல்களின்
ஜீவ ரசத்தையும்
வர்ணங்கள் விழுங்கி மறைத்துக் கொண்டன”
(கவிதை எண் 10)
உண்மைதான் போராளியைப் பற்றி ஓவியம் வரையும் போது தூரிகைகள் நடுங்கும்.போராளியின் வீரியத்தை வண்ணங்கள் வெளிப்படுத்தத்தான் முடியுமா? போராளியின் வீரியத்தை வண்ணங்கள் மறைப்பதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்? கவிதையில் தான் எழுதி வைக்க இயலுமா? அகரமுதல்வன் எழுதிக்காட்டுகிறார்.
அகரமுதல்வனின் அற்புதமான சொல்லோவியங்கள் இத்தொகுப்பில் எந்தக் கவிதைக்குள்ளிருந்தும் எடுக்கலாம் தொகுப்பின் இறுதிக் கவிதையில் இப்படி ஒரு காட்சி. இக்காட்சி நமக்கு எவ்வளவோ சொல்லுகிறது. கவிதைக்கு இது ஒரு அழகு மட்டும் தானா ? கவிதையின் உள் இயக்கம் வேறு எப்படி இருக்க முடியும்.
“கபிலன் மிகச் சிறிய கரங்களால்
தீபங்கள் ஏற்றும் போது
படத்திலிருக்கும் தன் அம்மாவிற்கு
அழகிய கண்களால் முத்தங்களையோ
அல்லாது போனால் சோற்றுப் பருக்கையொன்றையோ
தன்னிடமிருந்து கடத்தியிருப்பான்
தன்னைத் தாண்டி தேசத்தைச் சுமந்த
தாயின் இடுப்பில் கைத்துப்பாக்கியை தடவியிருப்பான்”
(கவிதை எண் 40)
அகரமுதல்வனின் கவித்துவம் எத்தனை பேரழகோடு இயங்குகிறது என்பதற்கு மட்டுமல்லாமல் ஈழத்தமிழ்க் குடும்பத்தின் சோகக் கதைகளையும் எத்துணைத் துல்லியமாக இவர் சொல்லுகிறார் என்பதற்கும் கவிதையின் இந்தப் பகுதி ஒரு சான்று. இப்படி நூல் முழுதும் எத்தனையோ சாட்சிகளை நாம் காணமுடியும்.
கபிலன் ஒருவன் தானா? அவன் தாயும் தான் ஒருத்தி மட்டுமா ? இப்படி எத்தனை ஈழத்துக் குடும்பங்கள் உயிரைத் தந்து அற்புதமான ஓவியமாயிருக்கின்றனர்.
அகரமுதல்வன் தன் கவிதைத் தொகுப்பில் எத்தனையோ பெருங்காட்சிகளை வடித்திருக்கிறார் அவற்றில் ஒன்று .
எந்த மண்ணும் சொந்தமானதாயில்லை
சொந்தமான மண் என்னிடமில்லை
படுகொலைக் களத்தில்
பூர்வகுடிகளை ஆயுதங்கள் அடிமையாக்க
அட்டூழியமான பிரபஞ்சம் ஏவறை விடுகிறது
புலப்படாத மலை அட்டையென
ரகசியமாய் ஊர்ந்து
இரத்தம் பருகுகிறது இரக்கமற்ற காலம்
(கவிதை எண் 5)
நாடற்று நான்கு திசைகளிலும் சொந்தங்கள் தேடி அலைந்து எங்கும் எவராலும் ஏற்கப்படாத நிலையில் இன்றைய உலகில் இருப்பவர்கள் ஆதிகுடிகள் தமிழ்க்குடிகள் இந்த மாபெரும் பிரபஞ்சம் இவர்களுக்கு இடம் தரவில்லை,மலை அட்டையென ஊர்ந்து செல்லும் காலமும் இவர்களிடம் கருணை கொள்ளவில்லை.
அகரமுதல்வனுக்குள் திரண்டிருப்பது பெரும் சோகம் தன் இனத்தின் சோகத்தை இவர் பிரபஞ்சம் அளவிற்கு மாபெரும் காலத்திரையில் வைத்துச் சொல்லுகிறார்.
ஆதிகுடிகளின் சோகம் பிரபஞ்சத்தை நிறைந்திருக்கிறது.காலத்திற்குள் நீக்கமற கலந்திருக்கிறது. கவிதையில் வீரியம் கொள்கிற போது கவிஞன் காண்பது பெருங்காட்சி.கடந்த 50 ஆண்டுகளுக்கிடையில் ஈழத் தமிழருக்கு நேர்ந்த சோகங்களைச் சொல்லி முடியாது அச் சோகத்தில் ஒரு துளி சொந்த நாட்டிலிருந்து உயிர்தப்பிக் கடலில் செல்லும் அகதிகளின் சோகம் பற்றிய ஒரு கவிதையில் சில வரிகள்
இந் நூற்றாண்டை நிரப்பிய துயரம் அவர்களுடையதே
மேலும் மேலும் பிரபஞ்ச வெளியெங்கும்
புதைத்துக் கொள்ள போதுமானவரை
அவர்களிடம் சவங்கள்
(கவிதை எண் 13)
கடல் மடியில் உயிரிழப்போர் நூற்றுக்கணக்கில். எங்களின் சவங்கள் இந்த நூற்றாண்டை நிரப்பும். பிரபஞ்சத்தையே நிறைக்கும் அளவுக்கு இருக்கின்றன அவரது சடலங்கள் அதீதமான கலைக்கா ? சோகத்தை வேறு எப்படி சொல்ல?
இந்தக் கவிதையில் இன்னொரு பகுதி
“எழுந்து ஆர்ப்பரிக்கும் அலைகளிடம்
கண்ணீர் விசும்பிக் கேட்கிறது
இந்தக் கொடிய பயணம்
எப்போது முடியுமென ஒரு குழந்தை
ஏதுமறியா இக்குழந்தை எப்படியறியும்
தன்னை இரக்கப்பட இங்கு யாருமில்லையென
முன்னர் படகொன்றில்
புகலிடம் தேடி காணாமல்போனவர்களின்
குருதிகள் அலை அலையாய் எழுவதாய் தோன்றும்
கடல்வெளியில் சவக்குழி மணம் எங்கும் நீந்த
அவலப் பாடலை தேம்பி தேம்பி பாடுகிறார்கள்
ஆதி மொழியில்
நிச்சயம் இவர்களும் ஈழத் தமிழரே.”
அகரமுதல்வன் காதலித்தாரா! என்றாலும் அவரது கவிதைக்குள் காதல் இடம்பெறுகிறது இவ்வாறு கவிஞனுக்குள்ளும் ஒரு காதல் இருக்கத் தான் செய்யும். காதல் என்பது ஒரு பெண்ணிடம் இருக்கலாம், தேசத்தின் மீது இருக்கலாம். அகரமுதல்வன் இவ்விரு கருத்துக்களையும் உள்ளடக்கித் தான் கவிதைகள் எழுதுவது போல் தெரிகிறது.இவர் கவிதைக்கு இதுவும் ஓர் அழகு .
“உனக்கென ஒரு நதியைப் பிரசவிப்பதில்
உனக்கென ஒரு பூவை மலர்த்துவதில்
வலிமையற்று
தனிமையை இசைப்பது
காதலின் துன்பியல் காலம்
உலகத்தின் எத்திசை நோக்கியும் பயணிக்கும்
நாடற்றவனின் படகொன்றில்
குழந்தைகள் அழுவதைப் போன்றது
எங்கள் இருவரின் பேரன்பும்
பெரும் காதலும்”
(கவிதை எண் 36)
இந்தக் கவிதைத் தொகுப்பில் இந்தக் கவிதை மட்டுமல்லாமல் இன்னும் எத்தனையோ அசலான கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஈழத் தமிழ் கவிஞனை நாம் எந்த அளவுக்கு பாராட்ட முடியும். போர்க்களத்தில் அடிபட்டு நொந்து இதன் காரணமாகவே உரம் பெற்று மீண்டும் ஒரு வெற்றிக்காக உயிர் தரும் உரத்தோடு வாழ்பவர்களை நாம் கொண்டாடத்தான் வேண்டும். இப்படிக் கொண்டாடுவதன் மூலமும் நம் கலங்கத்தை துடைத்துக் கொள்வோம்.
அகரமுதல்வன் கவிதைகளில் எத்தனையோ கதைகளும் இடம்பெறுகின்றன. கீழே ஒரு கதைக் கவிதை
கடவுளை துணைக்கு அழைத்தவர்களின் தோல்வி என்னும் தலைப்பில் ஒரு குழந்தையின் சோகமயமான இறப்பைப் பற்றிச் சொல்லுகிறார்.மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது குழந்தை .உயிர்ப்பிச்சை தருகின்ற தேவதையான தாதி சில மாத்திரைகளைத் தருகிறாள்.
மரணம் காத்திருப்பது குழந்தைக்கு தெரியாது.கடவுளின் சூட்சுமங்கள் பற்றித் தெரியாத அவனின் இரு சகோதரிகள் தேவனை நோக்கி மன்றாடினர்.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன் இதயத்தை பகிர்ந்து கொள்ளவில்லை.அம்மா மண்டியிட்டு செபித்தபடியிருந்தார் சிலுவையில் இருந்தபடியே வேடிக்கையாக இயேசு பார்த்துக்கொண்டிருந்தார்.மரணப்பாம்பு குழந்தையின் மேனியில் தன் விசப்பற்களை தீண்டியது. இவ்வாறு கையாலாகத கடவுளிடம் தோற்றுப் போனால் தாய்.
இப்படி ஓர் உண்மைக்கதையை கவிதையாக வடித்திருக்கிறார் அகரமுதல்வன்.ஈழத் தமிழருக்கு துரோகம் செய்த கடவுள் இந்தக் குழந்தையை எப்படிக் காப்பாற்றுவார்.கதைக் கவிதை என்ற முறையில் இது ஒரு அழகிய சோகக் கவிதை .
ஈழத் தமிழர்களுக்காக இங்கு தமிழகத்தில் நாமும் தான் போராடுகிறோம் நம்முடைய போராட்டம் பற்றி அகரமுதல்வன் தரும் சித்திரம்
“ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடுவோம்
அவர்கள் எமது தொப்பூள் கொடிகளென
சுயநலங்களோடு ஒலிவாங்கியில் நடக்கும் புரட்சி
இரவைக் கிழித்து எனது இருள்மைக்குள் வீழ்கிறது
அதிகாரப் பிரிவுகள் எங்களை நோகடித்து
பயங்கரவாதிகளென வன்மம் தீர்க்கிறார்கள்
பதாதைகளில் தொங்கும் எமக்கான தேசபிதாவை
கொள்வனவு அரசியலில் விளம்பரப் பொருளாக்கி
நாடற்ற மக்களின் துயர் பாடி
வீடு வாங்கி கொண்டிருக்கின்றனர் பதாதை புரட்சியாளர்கள்
மானுடத்தை கொலை செய்த ஆசிய கிட்லரை பார்க்கிலும்
இவர்கள் அருவருக்கத்தக்கவர்கள்”
(கவிதை எண் 33)
நம்மை பற்றி அகரமுதல்வன் தீட்டும் சித்திரம் நமக்கு உவப்பாக இருக்க இயலாது என்றாலும் இதுதான் உண்மை என்பதை மறுப்பதற்கில்லை.ஆசிய கிட்லரை விட நம்மை அருவருக்கத்தக்கவர் என்கிறார் .கடுமையான சாடல் மறுக்கவும் தான் முடியாது.
ஈழ விடுதலைக்கானப் போர் இன்னும் முற்றுப்பெறவில்லை இன்னும் ஒரு முறை இறுதிப்போர் வெடிக்கும் உயிரோடு தலைவர் மீண்டும் வந்து தலைமை ஏற்பார் இத்தகைய மாயக்கனவில் வாழ்பவர் பலர்.இத்தகைய மாயக்கனவை எழுப்பி அரசியல் செய்பவரும் பலர். அகரமுதல்வன் இப்படி ஒரு மாயக்கனவில் தான் வாழவில்லை என்கிறார். எதார்த்தம் என்ன என்பதை இவர் தேடிச் செல்லவே விரும்புகிறார்.இவர் கவிஞர் தான் என்றாலும் மாயக் கற்பனைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர்.கவிஞர் எழுதுகிறார்.
“துயரவாழ்வின் உட்புறத்தில் நுழையும்
கானல் அலையில் கால்களை நனைத்து
மாயையின் கயிற்றில் தொங்கிட
ஒரு போதும் விருப்பில்லையெனக்கு.”
மாயக் கனவுகளை உதறிக் கொண்ட கவிஞர் தான் இறுதியில் அறம் வெல்லும் அஞ்சற்க என்று எழுதுகிறார்.இதுவும் ஒரு மாயக் கனவு தானா ? இல்லையா ?
இறுதியில் என்பது எத்தனை காலம் கழித்து.
இந்திய தமிழர் மத்தியில் மட்டுமல்லாமல் ஈழத் தமிழரும் மாயைகளுக்கு உட்பட்டவர் தாம் என்ற முறையில் ஒரு கவிதை. தலைவன் என்பவனும் தசைகளின் கூட்டுருவே எனும் கவிதையில் தலைவனின் மரணம் பற்றி எழுதுகிறார்.
“உயிர்த்தெழ முடியாதபடிக்கு
உடல்துளைத்துக் கிழிபட்டு
சிலுவையொன்றில் அறையப்பட்டான்
எமக்கான இயேசு
நாங்கள் என்றுமே காணாதவாறு
அவனது உடலின் ரகசியங்கள்
போதி மரங்களின் புத்தர்களால் பேசப்படுகின்றன
அவனது மரித்தலின் ஆழத்தை நீந்துகிற போது
பொறுத்தலுக்கு அப்பாற்பட்டு
கடலின் ஜீவன் எழுச்சியாகிக்கொண்டிருக்கிறது
கனா சிதைந்த சீடர்களின் உயிர்கள்
சரணடைந்தது போக
தப்பித்தது போக
சதையில் புகுந்த தோட்டாக்களோடு
கடலின் உப்பார்ந்த திவலையால் அரிக்கப்பட்டிருக்கலாம்
மரித்தலின் பிறகான முதல் நாளிலிருந்து
அவலங்களை மட்டுமே பேசியபடிக்கே
குருதியின் அனாதைகளன
சிறைகளில் வாழ்கிறோம்”
(கவிதை எண் 35)
வெற்று நம்பிக்கைகள் வாழ்வின் உண்மைக்கு வலிமை தராது என்பது கவிஞரின் புரிதல்.
அகரமுதல்வன் கவிதைகளில் எத்தனையோ சோகச் சித்திரங்கள் இங்கு ஒன்றைக் காண்போம்.
இசைப்பிரியாவின் இறுதி அவலம் குறித்து நாம் எல்லோரும் அறிவோம்.இப்படி பேரவலத்துக்கு உள்ளான இசைப்பிரியா போல இன்னும் எத்தனை ஆயிரம் பேர் சீரழிவுக்கும் சித்திரவதைக்கும் உள்ளானார் என்பது பற்றி நாம் ஓரளவுக்கேனும் அறிவோம். இன்னும் போராடும் இசைப்பிரியா என்னும் தலைப்பில் ஒரு கவிதை.
“பற்றியெரிந்த சதுப்பு நிலத்தில் ஊற்றெடுத்த
யுகத்தின் துயரப் பாடலை
நியாயப் பிரமாணங்களுக்கு வெகு தூரமாய்
குருதிப்பிரியர்களால் துயிலுரியப்பட்டவள்
அவயங்களைக் கீறிய மிருகங்களின் முகத்தில்
காறி உமிழ்ந்து மரணத்தை அழைத்திருப்பாள்
அநியாயத்தின் குரூரப் பற்கள்
மானுடத்தின் தசைகளைத் சப்பித் திளைத்து
மொழியற்ற துயர்களின் சொற்களைக் கூட்டுகிறது
நிறமிழந்து காயம்பட்ட பெரும் நிலத்தின்
விடியலில் விலங்கிட்டால்
இளைத்துப் போகுமா சுதந்திர வேட்கை”
சித்திரவதைகளுக்கு உள்ளாகி செத்துப்போன இசைப்பிரியாக்கள் பற்றிய நினைவு தமக்குள் உள்ளவரை ஈழத் தமிழரை ஒடுக்கத்தான் முடியாது.
Comments
Post a Comment