அகரமுதல்வன் எழுதியுள்ள கவிதை களத்தினது அரசியல் பின்னணி - தத்தர்


-    


வந்து எங்களுடன் ஒன்றுகலவுங்கள் என எம்மை அழைக்கிறீர்கள். ஆனால் நான் எப்படி வரமுடியும்? நான் நிர்வாணமாக்கப்பட்டுள்ளேன் மற்றும் அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டு தலைகுனிந்துள்ளேன். இதனால் நான் எப்படி உங்களிடம் கௌரவமாக வரமுடியும்? வெறுங்கையாக்கப்பட்டுள்ள என்னிடம் உனக்குத் தருவதற்கு அன்பளிப்புகளோ பரிசுப்பொருட்களோ இல்லை. நீ என்னை மதிப்பதற்கு எனது கலாச்சாரத்தில் என்னதான் எஞ்சியிருக்கிறது? என்னைப்பார்த்து வறிய கேவலமான மனிதன் என்றுதான் உன்னால் எண்ணமுடியும். அப்போதுää எல்லாம் வல்ல உன்னிடம் நான் கையேந்தும் ஒரு பிச்சைக்காரனாக அல்லவா வரவேண்டும்?


கனடா வாழ் செவ்விந்திய இனக்குழுத் தலைவரான டேன் ஜார்ஜ் வெள்ளையர்களை நோக்கி ‘I was born 1,000 years ago' ' என்ற தலைப்பில் எழுதிய பகிரங்கக் கடிதத்தில் உள்ள வரிகள் இவை.

இக்கடிதத்தில் உள்ள இச்சிறிய பத்தி மட்டுமே அமெரிக்க கண்டங்களிலுள்ள எக்ஸிமோஸ் மற்றும் செவ்விந்திய இனத்தவர்களை வெள்ளையர்கள் எப்படி ஒடுக்கினார்கள் என்பதையும் அது சார்ந்த மேற்படி மக்களின் மனஉணர்வுகள் இன்றுவரை எப்படி உள்ளன என்பதையும் மிகத்துள்ளியமாக வெளிப்படுத்துகின்றது. கொன்றொழிக்கப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டுள்ள செவ்விந்தியர்களின் இந்நிலை இன்று ஈழத்தமிழர்களுக்கும் பொருந்தும்.

கொன்றழிக்கப்பட்டு அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டு இராணுவ பலத்தால் சின்னாபின்னப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களைப் பார்த்து இலங்கைத் தீவில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்ற வேறுபாடு இல்லை. நாங்கள் அனைவரும் ஓரே மக்கள். எங்களுடன் ஐக்கியமாக ஒன்றுகலவுங்கள் என்று இலங்கை சனாதிபதி கூறும் அழைப்பும் மேற்படி செவ்விந்தியர்களைப் பார்த்து வெற்றி பெற்ற வெள்ளையர்கள் கூறியிருக்கும் ;வந்து எங்களுடன் ஒன்றுகலவுங்கள்’என்ற வார்த்தைகளும் ஒரேமாதிரியானவை தான்.

ஈழத்தமிழ் மக்களுக்கு இலங்கையில் உயிர்ப்பாதுகாப்பு இல்லை. அவர்களின் சொத்துக்களுக்கு பாதுகாப்பில்லை. அவர்களின் கலைää கலாச்சாரம்ää பண்பாட்டுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. அவர்களின் காணிகளுக்கும் பாதுகாப்பில்லைää அவர்கள் பண்பாட்டுடன் கூடி வாழ்வதற்கான பிரதேசத்திற்கும் பாதுகாப்பில்லை. தமிழ்தேசியம் கந்தத்துணியாய் சின்னாபின்னப் படுத்தப்பட்டுள்ளது.  அவர்களின் தனிமனித உரிமைக்கும் ((Individual Rights))பாதுகாப்பில்லை அவர்களின் தேசிய பண்பாட்டு வாழ்வுக்கான கூட்டுரிமைக்கும் ((Collective Rights) ) பாதுகாப்பில்லை.

ஈழத்தமிழர்களை விடுதலைப் புலிகளாலும் பாதுகாக்க முடியவில்லைää இந்திய அரசும் அவர்களை பாதுகாக்க வில்லை மற்றும் உலக நாடுகளும் பாதுகாக்கவில்லை. மொத்தத்தில் ஈழத்தமிழர்கள் பாதுகாப்பு அற்றவர்களாய் கொன்றொழிக்கபடுவதற்கான ஒரு இலகுவான இலக்காய் உள்ளனர். பாதுகாப்பு என்பது வெறுமனே உயிர் உடமைக்கு மட்டும் உரியதல்லää ஒட்டுமொத்தத்தில் பண்பாட்டு வாழ்வுரிமை பாதுகாப்பில்லை. தமிழீழ தேசியத் தன்மைக்கு பாதுகாப்பில்லை. உள்நாட்டு ரீதியாகவும்ää வெளிநாட்டு ரீதியாகவும் பாதுகாப்பற்றவர்களாக உள்ளாக்கப்பட்டுள்ள இத்தேசிய இன மக்கள் கேட்பாரின்றி அழித்தொழிக்கப்படும் பரிதாபகரமான நிலையில் உள்ளனர். உலகில் எங்காவது இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு என குரல் கொடுக்க 22 அரசு நாடுகளும் மேலும் 30 வரையிலான இஸ்லாமிய நாடுகளும் உள்ளன. ஆனால் ஈழத்தமிழர்களை பாதுகாக்க உலகில் ஓர் அரசும் இல்லை என்ற நிலையில் அவர்கள்  மீது கேட்பாரற்று இலகுவாகவே இனப்படுகொலை மேற்கொள்ளப்;பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இனப்படுகொலையை உலக நாடுகள் அனைத்தும் இந்து சமுத்திரத்தை தம்மிடையே பங்கு போடுவதற்கான தத்தம் நோக்கு நிலையில் இருந்து நோக்கினவே தவிர சனநாயகம் மனிதாபிமானம் மனிதகுல நாகரீகம் என்ற நோக்கு நிலையில் இருந்து நோக்கவில்லை. இவ்வாறு சர்வதேச அரங்கில் நிர்க்கதியாக ஈழத்தமிழர்கள் இருந்த நிலையில் சிங்கள அரசு ஒரு கொலை இயந்திரமாக செயல்பட்டு ஈழத்தமிழர்களை இலகுவாக கொன்றழிக்கும் தனது பணியை கனகச்சிதமாக அரங்கேற்றியுள்ளது. யாரிடம் போவது யார்க்கு எடுத்துரைப்பது என்ற நிலையில் ஈழத்தமிழர்கள் கதியற்றவர்களாயினர்.

முள்ளிவாய்க்கால் என்பது 21ஆம் நூற்றாண்டில் இனப்படுகொலையைக் குறிக்கும் ஒரு குறியீட்டுப் பதமாகும். முள்ளிவாய்க்கால் என்பது வெறுமனே ஓர் ஊர்ப் பெயரல்ல. அரசியல் அகராதியில் முள்ளிவாய்க்கால் என்றால் இனப்படுகொலை என்பதே அதன் பொருளாகும்.

ஈழத் தமிழர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் பிராணிகளாய் (Guinea pigs) ) அரசியல் இராணுவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட களம் அது. ஈழத்தமி;ழர்களின் வாழ்வில் முள்ளிவாய்க்கால் ஒரு யுகப்பிரளயத்தை குறித்து நிற்கிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவோடு ஈழத்தமிழர்கள் எதிரியின் காலடியில் விடப்பட்டவர்களாய் அந்நியர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களாய் துயருறும் ஓர் அத்தியாயம் அரங்கேறியது. இப்போது தமிழர்கள் பரந்த அரசியல் பாலைவனத்தில் வழியற்று துயருற்று கதிகலங்கி நிற்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் பிரளயமானது ஒரு யுகத்தின் முடிவாகவும் மற்றொரு யுகத்தின் தொடக்கமாகவும் அமைந்துள்ளது. இந்த வகையில் ஈழத்தமிழரை முள்ளிவாய்க்கால் ஒரு புதிய யுகத்திற்குள் இழுத்து விட்டிருக்கின்ற போதிலும்ääஈழத்தமிழரின் அரசியலோ நொய்ந்துபோன பழைய செட்டைகளோடு ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

இவ்வகையான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை ஒட்டியகால ஈழத்தமிழரின் துயரங்களை அகரமுதல்வன் எழுதிய அறம் வெல்லும் அஞ்சற்க என்ற கவிதை நூல் படம் பிடித்து காட்ட முற்படுகிறது.

ஈழத்தமிழர்கள் உள்நாட்டில் அடிமைகள்ää வெளிநாடுகளில் அகதிகள். தம் இனிய உறவுகளை பிரிந்தவர்களாய் குடும்பம் குலைந்தவர்களாய் வீடற்றவர்களாய் நாடற்றவர்களாய் உலகில் உள்ள எந்த அரசின் அரவணைப்பும் அற்றவர்களாய் கையேந்திகளாய் பாதுகாப்பற்றவர்களாய் சிறைக்கைதிகளாய் நடைப்பிணங்களாய் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டியவர்களாய் அவஸ்தையுறும் மக்களாய் உள்ளனர்.

இத்தகைய யதார்த்தத்தைத்தான் அகரமுதல்வனின் கவிதைகள் இலக்கிய படைப்பாய் பிரதிபலிக்கின்றன.

இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது ஏற்பட்ட இழப்புகளும்ää அழிவுகளும் துயரங்களும் உறவுப் பிரிவுகளும் ஈற்றைவரையான மேற்குலகத்தின் கலை இலக்கிய படைப்புக்களுக்கான ஊற்றாய் அமைந்துள்ளது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் துயரங்கள் மேற்குலகிற்கு மட்டுமின்றி பொதுவாக பரந்துபட்ட உலகளாவிய கலை இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை இன்றுவரை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றது.

இரண்டாம் உலக மகா யுத்தமானது குறிப்பாக ஐரோப்பியரின் கலை இலக்கியம் மற்றும் சிந்தனை போக்கு என்பனவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்தாக்கம் உலகளாவ விரிந்தது. திரைப்படம்ää நாடகம்ää ஓவியம்ää இசைää நாட்டியம்ää நடனம் மற்றும் கலை இலக்கியப்படைப்புக்கள் என்பனவற்றை இன்றுவரை நிர்ணயித்துச் செல்கின்றது.

இந்நிலையில் 21ஆம் நூற்றாண்டில் இனப்படுகொலைக்கு குறியீடாக விளங்கும் முள்ளிவாய்க்கால் துயரம் வரப்போகும் பல பத்தாண்டுகளுக்கு கலை இலக்கிய படைப்புக்களுக்கான ஊற்றுக்கண்ணாய் விளங்கும் என்பது உறுதி.

முள்ளிவாய்க்கால் துயர்பற்றி சேனல்-4 வெளியிட்ட ஸ்ரீலங்கா ஒரு கொலைக்களம் என்ற ஆவணப்படம் ஒரு வெற்றிகரமான கலைப்படைப்பாய் அமைந்துள்ளது. இதுவே பரந்த அளவில் உலகை எட்டியுள்ள முதலாவது கலைப்படைப்பாகும். அது உண்மையை செம்மையாகச் சொல்கிறதுää அது தொகுக்கப்பட்ட விதத்தால் ஒரு வெற்றிகரமான ஆவணக் கலைப்படமாக மாறியுள்ளது.

சேனல்-4 உண்மையை அப்படியே உண்மையாக தொகுத்த அந்த படைப்பானது நீதியின் குரலான ஒரு வெற்றிகரமான கலைப்படைப்பாய் வடிவம் பெற்றுள்ளது.

சேனல்-4யினது மேற்படி ஆவணப்படங்களைப்  பார்;க்கும் போது அவை எமது இரத்தத்தை உறையவைக்கின்றனää இதயத்தை ஆவியாக்குகின்றனää உணர்வுகளை வானளாவ உயர்த்துகின்றன.

ஒரு சிறந்த கலைஞனானவன் இத்தகைய துயரங்களை ஒரு காட்டாறாய் வீணாக வழிந்தோட விடாமல் ஒரு சக்தியாக உருமாற்றி அதன்மூலம் வரலாற்றை முன்னோக்கி பயணிக்க உதவுவான்.

மேற்படி சேனல்-4ன் ஆவணப்படத்திற்கு இப்படியோரு உயர்ந்த பாத்திரமுண்டு. அப்படங்களை பல்வேறு படப்பிடிப்பாளர்கள் ஆங்காங்கே நின்ற நிலையில் எழுமாத்திரத்திலும் தத்தம் நோக்குக்களுக்கு உள்ளாளும் பச்சையாய் படம் பிடித்துள்ளனர். அவை உண்மையாக உள்ளன என்பதால் அவை அனைத்தையும் மேற்படி படத்தின் தொகுப்பாளர் நீதியின் கோட்டில் நிறுத்தி உலகப் பொது உண்மைகளோடு இணைத்து இயற்கையோடு பொருத்தி தொகுத்ததன் மூலம் ஒரு புது உயிர்வீச்சைக் கொண்ட கலைப்படைப்பாக படைத்துள்ளார்.

உலகப் பொதுப் பரப்பைத் தழுவி முள்ளிவாய்க்காலின் முதல் ஊற்றாய் வெளியான இந்த ஆவணப்படத்தைத் தவிர வேறு திரைப்படங்களோ நாடகங்களோ இதுவரை வெளிவரவில்லை. ஆனால் கவிதைகள்தான் பெருமளவில் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஓவியங்கள் சிறிதளவு வெளிவந்துள்ளன. வருங்காலங்களில் பல்வேறு வகையாக கலைவடிவங்களும்ää இலக்கியப் படைப்புக்களும் பல பத்தாண்டுகளுக்கு தொடர்ந்து வெளிவரும் என்பதில் ஐயமில்லை. சங்க கால இலக்கியங்கள் இற்றைவரை ஈராயிரம் ஆண்டுகளாக படிக்கப்படுகின்றன. முள்ளிவாய்க்கால் கலை இலக்கிய படைப்புகள் பல சகாப்தங்களுக்கு தொடர்படைப்புகளாய் உருவாகி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் மக்களின் மனங்களிலும் கண்களிலும் நடமாடும்.

இந்த வகையில் அகரமுதல்வனின் இக்கவிதை நூல் வரலாற்றில் தனக்கென ஓர் இடம் பிடிக்கும்.

நிச்சலனமான அந்த அறையில்
தலைகீழாக தொங்கவிடப்பட்ட நான்
விடுதலை செய்யப்பட்டிருந்தேன்
சவக்குழி ஒன்றில்

என்ற அகரமுதல்வனின் கவிதை அடிகளில் உள்ள விடுதலை செய்யப்பட்டிருந்தேன் சவக்குழி ஒன்றில்…. என்ற இந்த கவிதை அடிகளில் மரணத்தை ‘விடுதலை’ என்று கூறியதன் மூலம் அது சிங்கள அரசின் சித்தரவதைகளையும்ää ஒடுக்குமுறையையும் கொடூரத்தையும் ஆயிரம் ஆண்டு காலத்திற்கான உணர்வுகளாய் வேர் பாய்ச்சுகின்றது.

உண்மை அழகாய் அமைய அந்த அழகு கலையாகிறது என்ற கலை பற்றிய கூற்று இங்கு கவனிக்கத்தக்கது. சேனல்-4 ஆவணப்படம் உண்மையாக இருக்கிறது ஆதலால் அது கலையாகியுள்ளது. அவ்வாறே அகரமுதல்வனின் கவிதையும் உண்மையாக இருக்கிறது.

கலை இலக்கியப்படைப்புக்களும் அரசியல்தான். அரசியல் இன்றி வாழ்வில் எதுவும் இல்லை. ஆதலால் நாம் எதனையும் அரசியலாக பார்க்கவேண்டும். அரசியல் கண்கொண்டு பார்க்கவேண்டும். அதுவும் அதனை வெறுமனே தோற்றப்பாட்டு அரசியலாக மட்டுமின்றி அதன் உள்ளடக்கத்தில் அதனை பார்க்க வேண்டும்.

சட்டிக்குள் மசியும் கீரைக்குள்ளும் அரசியல் உண்டு. கட்டிக் கொள்ளும் கோவணத்துணியிலும் அரசியல் உண்டு. கருத்தரிக்கும் முன்பே ஒருவனது வாழ்வில் அரசியல் புகுந்துவிடுகிறது. அதாவது கருத்தரிக்கும் முன்பான திருமணத்திலிருந்து கல்லறைக்குப் பின்பான தொடர்ச்சியும் நீட்சியின் வரை ஒருவனது வாழ்வில் அரசியல் பிரவேசித்துவிடுகிறது. இலகுவாக சொல்வதானால் கீரைக்குள்ளிருக்கும் வரியிலும்ää கோவணத்துணியில் இருக்கும் வரியிலும் அரசியலைக் காணலாம். திருமணத்திற்கான சட்டத்திலும் திட்டத்திலும் அரசியலைக் காணலாம். மரணத்திலும் அரசியல் சட்டம் செயற்படுவதைக் காணாம். மரணத்தின் பின்னான ஆவணத்திலும் அரசியலைக் காணலாம். ஆதலால் எதனையும் அரசியலாக பார்க்க வேண்டும்.

அரசியல் என்பது உள்ளடக்கத்தில் மனிதனது தலை விதியையும் வாழ்வையும் நிர்ணயிக்கும் ஆயுதம் தாங்கிய அதியுயர அதிகாரம் ஆகும்.

ஆதலால் மக்கள் கூட்டத்தின் தலைவிதியை அரசியல் அதிகாரத்திற்குள்ளால் தான் பார்வையிட வேண்டும். ஒரு கலைப்படைப்பையும் அரசியலுக்குள்ளால்தான் நாம் பார்வையிட வேண்டும். ஈழத்தமிழரின் தலைவிதி பரந்த உலகுடன் கூடிய இந்து சமுத்திர நலன் சார்ந்த வல்லரசுகளின் தேவைகளிலிருந்தும் சிங்கள அரசின் நோக்கு நிலையிலிருந்தும் நிர்ணயிக்கப்படுகிறது. இங்கு தர்மங்கள் நியாயங்கள் என்பனவற்றிற்கு அப்பால் அவர் அவர்களினது நிர்வாணமான நலங்களுக்காக   ஈழத்தமிழர்கள் காவுகொள்ளப்படுகின்றனர்.

ஈழத்தமிழர்களையும் அவர்களது தேசிய நலங்களையும் பாதுகாப்பதில் இதுவரை அனைத்து சக்திகளும் தோல்வியடைந்துவிட்டன. தமிழ்தலைவர்கள் மேற்கொண்ட அகிம்சை போராட்டத்தையும் சிங்கள அரசு ஏப்பமிட்டுவிட்டது. ஆயுதப் போராட்டத்தையும் அது ஏப்பமிட்டுவிட்டது. இந்தவகையில் சிங்கள அரசால் உள்நாட்டு சக்திகளைமட்டுமின்றி வெளிநாட்டு சக்திகளையும் தோற்கடித்துவிட்டது. இந்திய அரசால் மிராஜ் யுத்தவிமானங்களை இலங்கைத் தீவில் பறந்து காட்ட முடிந்திருந்தாலும் சிங்கள அரசால் தனது ஒரு துளி இரத்தத்தை சிந்தாமல் ஒரு துளி வேர்வையைக் கூடச் சிந்தாமல் இராஜதந்திர நுட்பத்தின் மூலம் இந்திய இராணுவத்ததையும் இந்திய அரசையும் பின்வாங்க வைக்க முடிந்துள்ளது.

இந்தளவுக்கு 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான இராஜதந்திர பாரம்பரியத்ததைக் கொண்ட சிங்கள அரசையும்  அவர்களது பௌத்த நிறுவனத்தையும் குறைத்து மதிப்பிட்டிட  முடியாது. அது அரசால் சிறியதேயாலும் இராஜதந்திர வடிவத்தால் அது பெரியது. அத்தகைய இராஜதந்திரங்களைப் பயன்படுத்தியே அது ஈழத்தமிழர்கள் சார்ந்த அனைத்து உள்நாட்டு சக்திகளையும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாய் தொடர்ந்து தோற்கடித்து வருகிறது. கூடவே தமிழ்மக்களோடு சம்பந்தப்படக்கூடிய வெளிநாட்டு சக்திகளை தோற்கடித்து வருகிறது.

கத்தி ஓங்கியவனையே அவனது கத்தியைக் கொண்டு அவன் கையாலேயே அவன் கழுத்தை கொய்யவல்லது சிங்கள இராஜதந்திரம் என்பதை அவர்களது அனைத்து அரசியல் நகர்வுகளிலும் காணலாம். 30 ஆண்டுகால அகிம்சை போராட்டத்தையும் கூடவே அடுத்த 30 ஆண்டுகால ஆயுதப்போராட்டத்தையும் அத்துடன் சம்பந்தப்பட்ட அயல்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் சக்திகளையும் சிங்கள அரசு இலகுவாய் ஏப்பமிட்டுள்ளது.

13வது திருத்தச்சட்டம் பிளஸ் (10) அரசியல் தீர்வு என்று சிங்கள அரசு உலகுக்கு கூறி முள்ளிவாய்க்கால் யுத்தத்தை நடாத்தியது . யுத்தம் முடிந்ததும் 13திருத்தச்சட்டம் 10 என்பதற்கு பதிலாக 13திருத்தச்சட்டதத்தையே நீக்கப் போவதாக சிங்கள ஆட்சியாளர்கள் ஆரவாரப்படுதினார்.

அச்  சட்டத்தை அப்படி நீக்க வேண்டாம் என குரல்கள் எழுந்தன இறுதியில் அச் சட்டம் நீக்கப்படுவது தம்மால் தடுக்கப்பட்டு விட்டதாக உலகம் கருதலாம். அனால் அதிகாரமற்ற 13 சட்டத்திற்கு மேல் தீர்வு காணப்போவதில்லை என்ற தமது இலக்கை மேற்படி ராஜதந்திர நாடகத்தின் மூலம் அடைவதில் சிங்கள் ஆட்சியாளர்கள் வெற்றி பெற்றனர்.

13 திருத்தச் சட்டத்தை நீக்க விடாமல் தடுத்ததல்ல வெற்றி பதிலாக 13 வது திருத்தச் சட்டத்திற்கு மேல் போகமால் பண்ணியது தான் வெற்றி.என்னே சிங்கள ராஜதந்திரம் !!!!

முள்ளிவாய்க்காலில் முதலையின் வாயில் அகப்பட்ட மான்போல ஈழத்தமிழர்கள் மரணச்சுழற்சிக்கு உள்ளாகினர். அதாவது முதலையின் வாயில் மான் அகப்பட்டதும் முதலை நீருக்குள் பலதடவை வேகமாக புரண்டு சுழலும். அந்த சுழற்சியில் திகைத்து கதியற்று மடியும்போது முதலை அதனை ஏப்பமிட்டுவிடுகிறது. முதலை மேற்கொள்ளும் இந்த சுழற்சியைத்தான் மரண சுழற்சி என்பர். அவ்வாறு விழுங்கப்படும் அந்த மிருகத்தின் கொம்பு முதல் கால் குழம்பு வரை அவற்றை ஜீரணிக்க வைக்கத்தக்க அடர்த்தியான அமிலம் முதலையின் வயிற்றில் உண்டு. இவ்வாறு எத்தகைய அரசியல் சக்திகளையும் ஜீரணிக்கச் செய்யவல்ல அரசியல் அமிலத்தை சிங்கள அரசு தன் வயிற்றில் கொண்டுள்ளது.

இதைப்புரிந்து கொள்ளலாமல் சிங்கள அரசியலின் உள்ளடக்கத்தைப் பற்றியோ மற்றும் கலை இலக்கியங்களைப் பற்றியோ நாம் பேச முடியாது. முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்கள் முதலையின் வாயில் அகப்பட்ட மான் போல மரணச்சுழற்சிக்கு உள்ளாகிய அந்தக் கொடுமையை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. அந்த மக்களை மரண உணர்வே ((Death Instinct) ) வழிநடத்தியது. ஜீவராசிகளை உயர்வாழ்வு உணர்வுதான் வழிநடத்துகிறது. ஆனால் இந்த அப்பாவி ஈழத்தமிழர்களை மரண உணர்வுதான் வழிநடத்தியது. அதாவது மரணம் அவர்களின் கண்முன்னால் நிச்சயக்கப்பட்டிருந்தது. அவர்களை சுழ்ந்து சுற்றும் முற்றும் மரணமே வாழ்நிலையாக இருந்தது. கண் முன் குற்றுயிராய் வீழ்ந்துகிடக்கும் தாயை கைவிட்டு ஓடவேண்டிய நிலை பிள்ளைகளுக்கு இருந்தது. கையில் இருக்கும் மற்றய பிள்ளைகளை பாதுகாப்பதற்காக காயமுற்ற கைக்குழந்தையைக் கூட கைவிட்டு விட்டு ஓட வேண்டிய நிலை தாயுக்கு இருந்தது. மரணமே வாழ்நிலையாய் மாறியிருந்த சு10ழலில் மரணத்தை ஏற்றுக் கொண்டதால்தான் மிச்சம் மீதியான மக்கள் நடமாட முடிந்தது. இதனைத்தான் மரண உணர்வால் வழிநடத்தப்பட்ட மக்கள் என்ற வார்த்தை குறிக்கிறது. இந்த யதார்த்தத்தை அகரமுதல்வனின் கவிதைகள் எப்படி கொண்டுவந்துள்ளன என்பதை வாசகர்களே பார்த்துக்கொள்ளுங்கள். இங்கு முள்ளிவாய்க்கால் களத்திற்கான அரசியல் பின்னணியை கூறுவதையே இக்கட்டுரை தன் முக்கிய இலக்காய் கொண்டுள்ளது.

இங்கு ஈழத்தமிழர்களின் அரசியல் தோல்வியைப் பற்றி பேச முற்படும் அகரமுதல்வனின் கவிதை ஒன்று அதனை சர்வதேச இராஜதந்திர கண்கொண்டு சித்திரப்பதை நாம் காணலாம்.

இராஜ தந்திரம் பற்றிய ஒரு தோல்வி என்ற கவிதையில்
தோல்வியை ஒப்புக்கொண்டு
வெற்றியின் அருகில் செல்ல
பிரபஞ்சத் தந்திரங்களை
கையாளும் வல்லமை வந்து சேர்
என்னிடத்தில்….

என்ற கவிதை அடிகளில் எதிர்காலத்தை நோக்கி விடுதலைப் போராட்டத்தை செப்பனிட வேண்டும் என்ற பகுதி செழிப்பாய் இலக்கிய மெருகு பெற்றிருக்கிறது.

இனப்படுகொலை பேரழிவின் பின்னான இத்தகைய அரசியல் அவலத்தைப் பற்றி நீண்ட தூரப் பார்வையுடன் அறிவியல் மற்றும் கலை இலக்கிய ஆக்கங்கள் பெரிதும் வெளிவர வேண்டியது அவசியமாகும்.

முள்ளிவாய்க்கால் பேரழிவு ஒரு யுகத்தை முடித்து இன்னொரு யுகத்துக்குள் எம்மை தள்ளியுள்ளது.

ஆதலால் அப்புதுயுகமானது விடுதலைக்கான ஒரு புதிய பாதையை புதிய அணுகுமுறையை வேண்டி நிற்கின்றது.

பழகிப்போன பழைய மனப்பாங்குக்கும் பழைய எண்ண ஓட்டங்களுக்கும் பழைய சிந்தனைப் போக்குக்கும் பழைய கருத்துலகத்துக்கும் பதிலாக இப்போது ஒரு புதிய சிந்தனை புதிய கருத்துலகம் புதிய மனப்பாங்கு என்பன இப்புதுயுகத்திற்கு அவசியமாக தேவைப்படுகிறது.

பாம்பு தனது பழைய செட்டைகளை கழற்றுவது போல பறவைகள் தமது பழைய இறக்கைகளை உதிர்த்தி புதிய இறக்கைகளை தோற்றுவிப்பதுபோல நாமும் எமக்கு பொருத்தமற்ற போக்கிலிருந்து விடுபட்டு புதிய பாதையில் பயணித்து விடுதலை அடையவேண்டும். எம்மை பீடித்திருக்கும் பொருத்தமற்ற பழைய பிடிகளிலிருந்து விடுபடாமல் எம்மால் எதிரியின் பிடியிலிருந்து விடுபட முடியாது. விடுதலைக்கான முதல் நிபந்தனையாக அமைவது முள்ளிவாய்;க்கால் போதித்துள்ள பொருத்தமற்ற பழைய போக்குக்களிலிருந்து விடுபட்டு விடுதலைக்கான ஒரு புதிய பாதையை உருவாக்கவேண்டும் என்பதே. முடிந்தது ஒரு யுகம் எனில் பிறக்க வேண்டியது இன்னொரு யுகம் என்பதால் அந்த யுகத்திற்கு உரிய புதிய சிந்தனை உருவாக்குவது கலை இலக்கிய படைப்பாளிகளினதும் மற்றும் அறிவியளாளர்களினதும் பணியாகும்.

பேரழிவுக்கு ஈழத்தமிழர் உள்ளாயினர் என்பது உண்மைதான். ஆனால் அந்த பேரழிவை சாணைக்கல்லாகக் கொண்டு விடுதலைப் பாதையை செழிமைப் படுத்தி புனிதப்படுத்துவற்கு ஏற்ற பக்கங்களை நாம் கண்டறிய இடமுண்டு. எதுவெல்லாம் பேரழிவுக்கு உள்ளாகின்றதோ அதுவெல்லாம் பேரெழிச்சிக்கு உள்ளாக முடியும் என்பதை வரலாற்றுச் சக்கரம் போதித்து சுழல்கிறது. ஆதலால் இப்பேரழிவிலிருந்து வீரியத்தைப் பெற்று எம்மை நாம் புதுப்பித்து எழத் தயாராகவேண்டும். இதில் கலை இலக்கியப்படைப்புக்களுக்கு ஒரு இடம் உண்டு. அவை ஆழமான பார்வையாளன்றி எழுமாத்திரமான படைப்புக்களால் உருவாக்கப்பட முடியாது.

அடுத்தபடியாக எம்மை நாம் செப்பனிடப்படுவதைப் பற்றிய விடயங்களை எமது துயர் தோய்ந்த அனுபவத்திலிருந்து வடித்தெடுக்க வேண்டும். துயரை வெளிப்படுத்துதல் முதல்படியாய் அமைய எம்மை நாம் செப்பனிட வேண்டியது அதன் அடுத்த படியாக அமைகிறது. இந்த செப்பனிடலானது எதிர்காலம் பற்றிய தீர்க்கதரிசனம் மிகுந்த புதிய பார்வைகளோடு வடிவம் பெற வேண்டும்.

அமரத்துவம் வாய்ந்த கலை இலக்கியப் படைப்புக்கள் இம்மூன்றையும் ஊடுருவி எழும் என்பதில் சந்தேகம் இல்லை. அகரமுதல்வன் இரத்தமும் சதையுமாய் களநிலை அனுபவம்  கொண்ட துயரங்களை அனுபவித்த ஒருவர். அவரிடம் இருந்து மேற்படி மூன்று படிமுறைகளோடு கூடிய விடுதலை வேட்கை கொண்ட மனித குலம் வளர்ச்சி தழுவிய இலக்கியப் படைப்புக்களை வரலாறு அவாவி நிற்கிறது.  அதற்கான ஆற்றலின் கீற்றுகள் அகரமுதல்வனின் இக்கவிதை நூலில் தெளிவாய் உள்ளன. அவ்வழியில் அகரமுதல்வனுக்கு எனது வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்

கடந்தகாலங்களில் தான் வாழ்ந்திருக்கிறேன் - கவிஞர் யுகபாரதி

உள்ளுணர்வின் ஊடுருவலோடு கூடிய கவிதைகள் -கோவை ஞானி