தமிழீழ இனப்படுகொலையும் நீதி நிலை நாட்டலும்
என்னைத் துன்புறுத்துகிறவன் எனக்குப் பலத்தைப் போதிக்கிறவன் -நைஜீரியப் பழமொழி
21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழீழத் தேசிய இனம் எதிர்கொண்ட இனப்படுகொலையின் வரலாறு இரத்தமும் சதையுமான கண்ணீரும் கதறலுமான சாவின் மணத்தோடு நிறைந்திருக்கிறது. பாரியதொரு இனப்படுகொலைக்கு உள்ளாகியிருக்கும் எமது அரசியலில் வெறுமை நிரம்பிக்கிடப்பதோடு பழைய வெற்றிகளையும் சாகாசங்களையும் மட்டுமே பேசிக் கொண்டிருப்பவர்களாக நாம் ஆகியிருக்கிறோம்.
நாம் சந்தித்திருப்பது இனப்படுகொலையை மட்டுமல்ல எதிர்பார்த்திராத தோல்வியையும் தான்.எந்தப் புள்ளியில் நிற்கிறோம் என்று தெரிந்தால் தான் நாம் சென்றடைய வேண்டிய புள்ளியை கண்டுகொள்ள முடியும் இல்லாது போனால் நாம் ஓடிக்கடந்த புள்ளிகளையும் மீண்டும் ஓடவேண்டிய சூழல் ஏற்பட்டு விடும். எங்களது எண்ணத்தில்,பார்வையில் இன்னும் முழுமைப்படுத்தப்பட்ட அவதானிப்பு நிகழவில்லை எனத் தோன்றுகிறது.
இன்று இனப்படுகொலையையும் எதிர்பாராத தோல்வியையும் சந்தித்து ஆறாண்டுகளாகியிருக்கிற சூழலில் சர்வதேச அளவில் தமிழீழர்களின் உரிமைப் போராட்டம் தொடர்பான பார்வை சிறிதளவு மாற்றமடைந்து இருக்கிறதென வைத்துக் கொண்டாலும் அந்த மாற்றத்தில் 90வீத நலன் அந்தந்த நாடுகளின் வர்த்தக நோக்கமே நிரம்பியிருக்கிறது. சிறிலங்காவை தனது வர்த்தக மற்றும் பிராந்திய சுரண்டல்களுக்காக பயன்படுத்த நினைக்கும் உலக நாடுகளின் இந்த மாற்றங்களையும் அறிக்கைகளையும் நாம் எமக்கு ஆதரவான நிலைப்பாடாக முழுமையாக நம்பிவிடக்கூடாது.
சிறிலங்காவில் நிகழ்ந்திருக்கும் ஆட்சி மாற்றம் சிங்களத்தின் பொய்மைவாத ராஜதந்திரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. அரச நிர்வாகத்தில் இராணுவ ஆதிக்கம் நிறைந்திருப்பதாக மகிந்தவை குற்றம் சாட்டிய மைத்திரி அரசு போர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்சல் கொடுத்து கவுரவித்திருப்பது இன்னுமொரு செய்தியை உணர்த்துகிறது.
இன்னொரு நாட்டின் இராணுவத்தோடு யுத்தமிட்டு அந்த நாட்டை கைப்பெற்றும் இராணுவத் தளபதிக்கே பீல்ட் மார்சல் என்கிற பட்டம் கொடுக்கப்படவேண்டும்.ஆக இந்த யுத்தம் இன்னொரு நாட்டு மக்கள் மீது நடத்தப்பட்டு அந்த நாட்டை வெற்றிகொண்டதாக புதிய அரசு பட்டத்தின் ஊடே தெரிவித்திருக்கிறது. மகிந்த தமிழீழர்களை இனப்படுகொலை செய்ததன் மூலம் தன்னை சிங்கள இனத்தின் மீட்பராக சிங்கள உளவியலில் பதியமிடச்செய்துள்ளதை இனி அவர் நினைத்தால் கூட படச் செய்ய முடியாது. இந்த இனப்படுகொலை சிங்கள இனத்திற்கு ஒரு மீட்பரையும் ஒரு பீல்ட் மார்சலையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அவர்கள் வெற்றி பெற்றவர்கள், வெற்றியை கொண்டாடுகிறார்கள்.
தமிழீழர்களாகிய நாமோ தோல்வியை தளுவியுள்ளோம்,தோல்வியை தான் நாம் ஆராயவேண்டும். இந்த நவீன காலத்தில் இனப்படுகொலைக்கு உள்ளான ஒரு இனத்தின் ஆராய்வு இப்படித் தான் அமையவேண்டும்.கடந்த காலங்களில் பெற்ற வெற்றிகளை எப்படிக் கொண்டாடி மகிழ்ந்தோமோ அதேயளவு தோல்வி குறித்து புதிய சிந்தனையோடும் எண்ணத்தோடும் ஆராயவேண்டும்.தோல்வியின் அருகே நாம் செல்ல மறுத்தோமானால் வெற்றி எங்களிடமிருந்து தொலைவுக்கு சென்று விடும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
நாம் இன்னும் போராடக்கற்றுக் கொள்ளவேண்டும்,நவீன காலத்துக்கும் அதன் சுழற்சிக்கும் ஏற்ப நமது கோரிக்கைகளை வடிவமைக்கவேண்டிய தேவை எமக்குள்ளது. புலம்பெயர்ந்து வாழும் தமிழீழர்கள் இதனை கையிலெடுக்க வேண்டும். அமைப்புகள் அமைப்புகளாக சிதறி உணர்வு அரசியலை முன் எடுக்கும் உக்கிப் போன அரசியற் செயற்பாடுகள் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழீழ மக்களுக்கு எந்தவொரு பயனையும் பெற்றுத் தந்துவிடாது.
தாயகத்தில் உள்ள மக்கள் ஒரு நேர சோற்றுக்கு படுகிறபாடும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதரமும் படுமோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த யுத்தம் மரணத்தை தந்திருந்ததை போல பிணங்களை தந்திருந்ததை போல யுத்தத்திற்கு பின்னான காலம் வாழ்வாதார அவலத்தை தந்திருக்கிறது என்பதை புலம்பெயர் அமைப்புக்கள் உணரவேண்டும்.
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசாங்கம் இனப்படுகொலை தொடர்பான விசாரணைகளுக்கும் அதில் தொடர்புபட்டவர்களுக்கும் மிகப் பெரும் பாதுகாப்பை வழங்கியுள்ளது.தாமொரு பல்லினத்தன்மை கொண்ட ஜனநாயக சூழலை நாட்டில் ஏற்படுத்தி விட்டதாக பல்வேறு பிம்பங்களை அது சர்வதேசத்திடம் கட்டி எழுப்பியுள்ளது.மே -18 நாளை யுத்தத்தில் இறந்தவர்களை அனுசரிப்பதற்கான நாளாக கடைப்பிடிப்பதற்கு அனுமதியளித்து கடந்த மகிந்த அரசை இந்த இடத்திலிருந்தும் அப்புறப்படுத்தியிருக்கிறது. இறந்து போன நமது உறவுகளை நினைவு கூறுவதற்கு அனுமதியளிக்கும் ஒரு சூழல் இன்றுவரைக்கும் நிலவுவதை மைத்திரி அரசு தனது அறிவிப்பின் ஊடே ஒத்துக்கொண்டுள்ளது.
போர் வெற்றி கொண்ட நாளாக அதனை கொண்டாடிக் களித்த மகிந்தவின் அணுகுமுறையை சொல்லளவில் மாற்றி பிரிவினைவாதத்தை ஒழித்த நாளாகக் கொண்டாட முடுக்கிவிடப்பட்டிருக்கும் புதிய அரசின் அறிவிப்புக்கு வரவேற்புத் தெரிவித்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழீழ மக்களின் அடையாள கட்சிக்கு தலைவராக இருப்பது எவ்வளவு அநியாயம் நிறைந்தது.கடந்த கால மிதவாத தமிழ் அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட மக்கள் மீண்டும் மிதவாத அரசியல் தலைமைகளின் கைகளில் சிக்கியிருப்பது இனப்படுகொலைக்கு பின்பான வரலாற்றில் கொடுமையான விதியாகவே எண்ணத் தோன்றுகிறது.
இனப்படுகொலையின் ஆறாவது ஆண்டில் வெறுமை நிறைந்த கூக்குரல் அரசியலோடு நிற்கிற எம்மிடம் இந்த நூற்றாண்டின் நீதியை நிலை நிறுத்துகிற பொறுப்பு இருக்கிறது.இது இனத்திற்கான நீதியும் விடுதலையும் மட்டுமல்ல மானுடதிற்கான நீதியும் விடுதலையும் கூட. சம்பந்தன் போன்ற கொழும்பின் அரசியல் செல்வந்தர்களை தமிழர்களின் குரலாக ஒலிப்பதை தவிர்கவேண்டுமெனில் முழுமைப்படுத்தப்பட்ட பார்வை தெரிந்த புதிய எண்ணத்தோடும் புதிய சிந்தனையோடும் அரசியலில் செயற்படவேண்டும்.
-அகரமுதல்வன்
15.05.2015
Comments
Post a Comment