பேரழிவின் தொடக்க காலம்





நெடும் தூரத்தில் முடிவற்று திணறிய புள்ளியின்
வேரிலிருந்து முளைவிட்ட விருட்சம் 
தீயில் எரிந்து சிதைந்த நாள் முதலாய் 

தொலைந்து போய்விட்டன உங்களிடத்தேயிருந்த அம்புகள் 
அதற்குமப்பால் நீங்களுமென 
குரலெடுத்து வீழ்த்துகிறது நரகத்தின் நெருப்பு 

தோல்வியின் காப்புச் சுவர்களுக்குள்
சிறகின் பறத்தல் ஒடுங்கிப் போக
வலியெழுந்து கலவரப்படும்
பாய்தலின் எச்சம் உறுமிச் சோர்கிறது

சாத்தப்பட்ட வாயிலினூடே யாசகம் தேடிய
சூரியக் குதிரைகள்
வறண்ட நதியில் மூழ்கிக் கனைக்கிறது

மீண்டும்
இருள் விதானங்களில்
ஊதுகுழலோடும்
தாலிகளோடும்
இயங்கி ஓய்ந்த காலச் சுவடுகளில்
கோலமிடுகின்றனர் மாலதிகள்.


-அகரமுதல்வன் 
11.07.2014

Comments

Popular posts from this blog

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்

கடந்தகாலங்களில் தான் வாழ்ந்திருக்கிறேன் - கவிஞர் யுகபாரதி

உள்ளுணர்வின் ஊடுருவலோடு கூடிய கவிதைகள் -கோவை ஞானி