காயங்கள் ஏந்திய துவக்குகள்





எப்போதும் போல் தீவொன்றின் விடியல் 
மரண நுரை தள்ளும் கரைகளில் 
காயத்தின் குரலோடு மோதிக்கொள்கிறது 

வீதி நெடுக நிர்வாணங்களாய் ஆக்கி 
எமை எரித்த துயரம் 
இரத்த ஓட்டத்தில் இன்னும் வெளிறாமல் 
என்னிடம் நெருங்கி வருகிறது 

துன்பத்தின் மேலிருக்கும் எனக்கான சொல் 
தோட்டாக்கள் வெடித்த
சத்தங்களிலிருந்து கட்டப்பட்டது
வீதியோரங்கள் வெட்டப்பட்ட
முத்தப்பனின் இறுதி மூச்சில் எழுதப்பட்டது

றபான் இசைத்து வைலா ஆட்டத்தோடு
குறிகள் துண்டித்த காமினிகளின்
எக்காளச் சிரிப்பில்

ஜூலை கறுப்பானது
ஜூலை வெறுப்பானது
ஜூலை கருவானது
ஜூலை களமானது

பிரகாசமான ஒரு காலத்தை
கையேந்திய கைகள்
நிலம் பிடுங்கும் சாத்தானை
குறி பார்க்கத் தொடங்கியது.

- அகரமுதல்வன்
23.07.2014

Comments

Popular posts from this blog

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்

கடந்தகாலங்களில் தான் வாழ்ந்திருக்கிறேன் - கவிஞர் யுகபாரதி

உள்ளுணர்வின் ஊடுருவலோடு கூடிய கவிதைகள் -கோவை ஞானி