மரணத்திற்கு பின் உள்ள மரணம்



மின் விசிறியில் சுழலும் நினைவுத் தூசிகள்
பகலின் வெக்கையில் நடக்கத் தொடங்கியதும் 
துளியும் விருப்பற்று ஏதோவொரு பாடலை கேட்டபடி 
குப்புறக் கிடக்கும் என்னில்
இருள் தின்னும் பூனையென
உயிர் பெற்று எழுகிறது இன்மை
மாய முகடெங்கும்
விரல்களின் கால்கள் பின் தொடர
கனவின் தசையில் சூன்யம் பூக்கிறது
இடையில் விடுபட்டுப் போன
மெல்லிய நாணம்
நிலவென வளர்ந்து
படுக்கையில் ஊர
சுவாலை மூண்ட தனிமையின் முகம்
கால்களற்றவனாய்
பாயினிலிருந்து கெந்திச் செல்ல
இன்னும்
சூன்யத்தின் கொலைக் களங்களில்
ஞாபகங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன.


-அகரமுதல்வன்
10.06.2014

புகைப்படம் -அய்யப்ப மாதவன் 

Comments

Popular posts from this blog

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்

கடந்தகாலங்களில் தான் வாழ்ந்திருக்கிறேன் - கவிஞர் யுகபாரதி

உள்ளுணர்வின் ஊடுருவலோடு கூடிய கவிதைகள் -கோவை ஞானி