நெய்தலின் புரட்சி முடிவற்றது






இனியெப்போதும் கலவரமின்றி வன்புணரப்படும் 
பாலியத்தம்மன்களின் அந்தரக்க குருதிகளில் 
நொச்சி மரங்களின் கண்ணீர் விசும்பலில் 

நுரைகள் தகிக்கும் முல்லைக் கடலில் 
பதுங்கி எழும் ஓயாத அலைகளில் 
தொன்மத்தின் வீரம் மிதக்கும் 

பீரங்கிகளை தகர்த்த கற்சிலை மடுவின் 
காலச்சுவடுகளில் 
பண்டாரவன்னியனின் சங்கொலியின்னும் முழங்க 
வன்னிக் கானகங்கள் மண்டியிட்டு விழுமோ ?

அம்மாக்களை பறிகொடுத்த விபூசிகாக்ககள் 
கணவர்கள் காணமல் போன அனந்திகள் 
அழுது கொண்டிருக்கும் நிலத்தில் 

மிஞ்சிய முலையை அறுத்தெறிய 
தகிக்கும் 
வற்றாப்பளை கண்ணகிக்கு 
கோபத்தில் எரிக்க சொந்தமாய் நாடில்லை 
மேலும் கண்ணகியும் ?

ஆனையிறவு வெளியில் படரும் 
நிலவின் முகத்தில் 
எழுச்சியுற்று சுழலும் வன்மம் 
இந் நிலத்தே 
தோன்றப் போகும் பிரளயத்தின் 
குணங்குறி .

-அகரமுதல்வன் 
11.07.2014

Comments

Popular posts from this blog

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்

கடந்தகாலங்களில் தான் வாழ்ந்திருக்கிறேன் - கவிஞர் யுகபாரதி

உள்ளுணர்வின் ஊடுருவலோடு கூடிய கவிதைகள் -கோவை ஞானி