Posts

சந்தனம் மித்தினால் தடவுடா புடுக்கில

Image
தமிழீழ தாயகத்தில் நிகழ்ந்த இனவன்முறையினால்/ அல்லது அதனை கராணம் காட்டி ஐரோப்பிய நாடுகளிற்கும் பிற டாலர் தேசங்களிற்கும் புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய ஆதரவு என்பது மிக முக்கியமானது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசு நிகழ்ந்த காலத்தில் மிகப் பெரும் பொருளாதார பூவுலகை அந்த அரசுக்கு ஆதரவாக கட்டி அமைத்த முன்னுதாரண மக்களாக புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இந் மக்களுக்கு வரலாற்றில் பெரும் பங்குண்டு என்பது உறுதியானதென்றாலும் சில புலம்பெயர் மக்களிடம் காணப்படும் படோபடங்கள் அருவருக்கச் செய்கிறது என்பது தான் வருத்தமான உண்மை. இனப்படுகொலையின் பின் தமிழீழ தாயகத்தில் மக்கள் படுகின்ற அவலம் என்பது பட்டினிகள் சூழ தொடர்ந்து செல்கிறது மேலும் போரில் வீசப்பட்ட இராசயனக் குண்டுகளால் அந்த நிலம் நச்சுவளி கொண்ட காற்றைத் தான் வீசி வருகிறது ,பச்சை வயல்களென தலை அசைத்த ஊரின் அடையாளம் மழை அற்று வறண்டு போய்க் கிடக்கிறது. இனப்படுகொலை தமிழர்களின் உயிரை மட்டும் குறிவைத்து நிகழ்த்தப்பட்டதல்ல தமிழன் நெல் விதைக்கும் வயலிலிருந்து அவன் சுவாசிக்கும் காற்று வரை நீர் அருந...

பதுங்கலின் விவரணை

Image
கொடுங்கோலின் பனியில் உறைந்து வீழ்ந்தவன்  யுகத் தீயின் வாசலில் சாம்பலாகி தகித்தவன்  சிந்திய ரத்தத் துளிகளில் தாகம் தீர்த்தவன்  சிங்கத்தின் கர்ஜனையில் காய்ச்சலாய்க் கிடந்தவன்  துரோக ராஜ்யத்தில் வதையில் அதிர்ந்தவன்  புத்தனின் துவக்கால் மலவாசல் சிதைந்தவன்  சப்பாத்துக் குறிகளின் விந்தில் நனைந்தவன்  மின்பாயும் முட்கம்பிகளில் வீசப்படயிருந்தவன்  நகம் பிடுங்கும் ரணவறைக்கு கொண்டு செல்லப்பட்டவன்  மேலும் மேலும் இது போல நேர்ந்திருப்பதால்  நானொரு நாடற்றவனென அறிந்திருப்பீர்கள்  இதன் பின்னும் பின் தொடரும்  ஈரம் தோய்ந்த ஓலத்தின் வாசனையை  நீங்கள் விரும்பாத போதிலும்  பெரு மூச்சு விட்டு சற்று உங்களிடம் அனுமதியுங்கள் பெரும் காயத்தின் நிழலில் இளைப்பாறும் என்னுடலில்  பழிவாங்கல் துளிர்க்கிறது எல்லாவற்றுக்குமாய். -அகரமுதல்வன்  11.08.2014

மழையுடன் பேசும் மழை

Image
பகிர்வுத் தானியின் வலது கரையில் நனைந்தபடி  மழையின் முத்தங்களை சேகரிக்கும் எனதருகே விரல் சூப்பித் தூங்கும் ஒரு குழந்தை  தாயின் மடியைத் தடவுகிறது  பூத்துக்கொண்டிருக்கும் அதிசய நறுமணத்தின்  குடா முழுதும் வானிலையாய்  குழந்தையின் கால்கள் அசைய  இன்னுமின்னும் சூல் கொள்கிறது வானம்  ஆடைகள் ஒட்டிய மேனியில்  நீர் வழிந்தோட குளிர்ந்த படி  வண்ணப்பூச்சுகள் கரைந்த கவலையில்  வழியால் நடந்தவர்க்கு  சில்லறைகள் யாசிப்பவனுக்கு  குடை மறந்தவர்க்கு  தொழுநோயாளிக்கு  கோபமூட்டிய  தூக்கம் பறித்த  இந்த மழையே தான்  வஞ்சகமற்ற  அதிசயத்தின் கனவுக்குள்  கைபிடித்துச் செல்கிறது  பார்வையற்ற இக் குழந்தையை இதற்காயினும் வேண்டும் பெரும் மழை. -அகரமுதல்வன்  08.08.2014 

வசந்த வேரின் பாடல்

Image
கிளுவம் வேலிகளில் தாவும் அணில்கள் தூக்கிச் சுமந்து சிலிர்த்த மாலையில்  அரூபமாய்க் கரைகிறது கணுக்காலின் மச்சம் எனக்குப் பிடித்த  உன் பச்சை நிறப் பாவடையில்  தண்ணீர் தெறிக்க பூக்கிறது  உனக்குப் பிடித்த எல்லாப் பூவும்  குசினிக் கூரை வழியே புகை எழும்ப  ஊத்தி வரும்  மாலை நேரத் தேத்தண்ணீர்  கடலென சூழ்ந்து ருசியை சிருஸ்டிக்கிறது  வண்ணங்கள் துளிர்த்து அறை நிறைக்க முத்தங்கள் பச்சோந்தியென அசையும்  மாயக்கணங்கள் தளும்பி நனைகிறது  உன் கண் சிமிட்டும்  அதிசயித்தின் போரை  பித்து முற்றி தீண்டிப் பார்க்கும்  முற்றத்து தூசியின் வேட்கை மர்மமானது  நிலவைச் சரித்த வானத்தின் கரங்களில் இறுகிய இந் நிமிடம்  நீ நடந்து செல்வதைப் போல  நடனமாடுவதைப் போல  முறைச்சுப் பார்ப்பதைப் போல  சிரிப்பதைப் போல  எனைத்தவிர  எவருக்கு வாய்க்கும் இவ்வுலகு  - அகரமுதல்வன்  06.08.2014

சபையேறும் சத்தியம்

Image
வலிமையிழந்து வரும் வலியின் களத்தில்  நெருப்பாற்றின் துளியாய் மாறுகிறது  உயரமான என்னுடல் சாம்பல்  இன்றிரவு பிறந்த புத்துயிர்ப்பின் அச்சில்  காலம் வியக்கும் சாட்சியாக  கவிதை இறங்கி மூச்சிழுக்கிறது  கம்பீரமாய் குரல் வீசி  துயரம் தாவி நிற்கும்  காற்றின் பெருவிரலில்  காயப்படுகிறது நெய்தல் பண் இருளதிர்ந்து  நிழல் கனன்று  விழுங்கிச் செரிக்கும் அவலத்தின் துரு  என்னை மூடிய புதைகுழியின் மண்மேடு முனை மழுங்கா ஊசிகளை  என் ஆணுறுப்பில் புதைக்க முனைந்த  பெரேராவின் கைகளில்      தாமரைப் பூக்கள் மலரத்தான் செய்கிறது  இப்போதெனது அவலமெல்லாம்  புத்தனுக்கு ஞானம் பிறந்ததை  கண்டவன் எவன் ? -அகரமுதல்வன்  29.07.2014

நீ எரித்த வனம்

Image
உனக்கொரு  கடிதம் எழுதவேண்டுமெனக் கனக்கும்  இதயத்தின் கிழக்கு  தாமரைகளை மலரச் செய்வதில்  பிடிப்பற்று இருக்கிறது  காற்றெங்கும் வாள் வீசும்  உன் பிரியத்தின் மிஞ்சியிருக்கும் விழிகளை   உன்னிடமே திருப்பியனுப்பும்  வல்லமையின்னும் வாய்க்கவில்லை  கசியப்போகும் இருளின் நடுவில்  யாசகம் கேட்கும் மூச்சின் நாசிகளுக்கு  ஆற்றுக்கிடைக்கையில் காத்துக்கிடக்கும்  நீர்ப்பாம்பென கணங்கள் நெளிய  ஆயிரம் தலைகள் கொண்ட ஞாபக விடம் என்னை கொத்துகிறது  உனக்குத் தெரியுமா லோஜி  இதற்கு முன்னர்  எழுதிய கடிதங்களையெல்லாம்  எவரும் புகுந்து வரமுடியாத பெருவனத்தில்  என்னை நீ எரித்தது போல நானும் எரித்து விளையாடியது இனியேனும் வனங்களில்  புகை எழும்பாதபடிக்கு உனக்கொரு கடிதம் எழுதவேண்டும்  -அகரமுதல்வன்  28.07.2014

வழமை போல கண்களை மூடுங்கள்

Image
குழந்தைகளைத் தேடித் திரியும்  பயங்கர ஆயுதத்தின் காலமிது  வான் பிளக்கும் சத்தத்தோடு  பெரும் வெடிகுண்டை சந்திக்கும்  காசாவின் பள்ளத்தாக்கில்  இரத்தங் கசிகிறது  வெட்ட வெளியில் இரையும்  போர் விமானத்தின் கீழ்  பதற்றத்தோடு ஓடும்  சிறுமியின் காலடிச் சத்தத்தில்  ஒரு கனவு சாம்பலாகிறது  மாபெரும் கவிதைகள் காலமாகின்றன  பிணச் சகதியாய் பாலைமாறுகிறது குரூரமான விதி கலவரத்தோடு வழிகிறது  துயரத்தின் மூக்கு ருசித்த களைப்பில்  சுவரில் நிலைத்து நிற்கிறது  இனி சாவின்றி ஏதுமில்லை  ஷெல் துண்டுகளை குளம்புகளாக்கி  ஒப்பாரிகளில் நடக்கத் தொடங்குவோம்  அதற்கு மேல் ஒன்றும் இல்லை -அகரமுதல்வன்  01.08.2014