சபையேறும் சத்தியம்
வலிமையிழந்து வரும் வலியின் களத்தில்
நெருப்பாற்றின் துளியாய் மாறுகிறது
உயரமான என்னுடல் சாம்பல்
இன்றிரவு பிறந்த புத்துயிர்ப்பின் அச்சில்
காலம் வியக்கும் சாட்சியாக
கவிதை இறங்கி மூச்சிழுக்கிறது
கம்பீரமாய் குரல் வீசி
துயரம் தாவி நிற்கும்
காற்றின் பெருவிரலில்
காயப்படுகிறது நெய்தல் பண்
இருளதிர்ந்து
நிழல் கனன்று
விழுங்கிச் செரிக்கும்
அவலத்தின் துரு
என்னை மூடிய புதைகுழியின்
மண்மேடு
முனை மழுங்கா ஊசிகளை
என் ஆணுறுப்பில் புதைக்க முனைந்த
பெரேராவின் கைகளில்
தாமரைப் பூக்கள் மலரத்தான் செய்கிறது
இப்போதெனது அவலமெல்லாம்
புத்தனுக்கு ஞானம் பிறந்ததை
கண்டவன் எவன் ?
-அகரமுதல்வன்
29.07.2014

Comments
Post a Comment