வசந்த வேரின் பாடல்








கிளுவம் வேலிகளில் தாவும் அணில்கள்
தூக்கிச் சுமந்து சிலிர்த்த மாலையில் 
அரூபமாய்க் கரைகிறது கணுக்காலின் மச்சம்
எனக்குப் பிடித்த 
உன் பச்சை நிறப் பாவடையில் 
தண்ணீர் தெறிக்க பூக்கிறது 
உனக்குப் பிடித்த எல்லாப் பூவும் 
குசினிக் கூரை வழியே புகை எழும்ப 
ஊத்தி வரும் 
மாலை நேரத் தேத்தண்ணீர் 
கடலென சூழ்ந்து ருசியை சிருஸ்டிக்கிறது 
வண்ணங்கள் துளிர்த்து அறை நிறைக்க
முத்தங்கள் பச்சோந்தியென அசையும் 
மாயக்கணங்கள் தளும்பி நனைகிறது 
உன் கண் சிமிட்டும் 
அதிசயித்தின் போரை 
பித்து முற்றி தீண்டிப் பார்க்கும் 
முற்றத்து தூசியின் வேட்கை மர்மமானது 
நிலவைச் சரித்த வானத்தின் கரங்களில்
இறுகிய இந் நிமிடம் 
நீ நடந்து செல்வதைப் போல 
நடனமாடுவதைப் போல 
முறைச்சுப் பார்ப்பதைப் போல 
சிரிப்பதைப் போல 
எனைத்தவிர 
எவருக்கு வாய்க்கும் இவ்வுலகு 

- அகரமுதல்வன் 
06.08.2014

Comments

Popular posts from this blog

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்

கடந்தகாலங்களில் தான் வாழ்ந்திருக்கிறேன் - கவிஞர் யுகபாரதி

உள்ளுணர்வின் ஊடுருவலோடு கூடிய கவிதைகள் -கோவை ஞானி