பதுங்கலின் விவரணை





கொடுங்கோலின் பனியில் உறைந்து வீழ்ந்தவன் 
யுகத் தீயின் வாசலில் சாம்பலாகி தகித்தவன் 
சிந்திய ரத்தத் துளிகளில் தாகம் தீர்த்தவன் 
சிங்கத்தின் கர்ஜனையில் காய்ச்சலாய்க் கிடந்தவன் 
துரோக ராஜ்யத்தில் வதையில் அதிர்ந்தவன் 
புத்தனின் துவக்கால் மலவாசல் சிதைந்தவன் 
சப்பாத்துக் குறிகளின் விந்தில் நனைந்தவன் 
மின்பாயும் முட்கம்பிகளில் வீசப்படயிருந்தவன் 
நகம் பிடுங்கும் ரணவறைக்கு கொண்டு செல்லப்பட்டவன் 
மேலும் மேலும் இது போல நேர்ந்திருப்பதால் 
நானொரு நாடற்றவனென அறிந்திருப்பீர்கள் 
இதன் பின்னும் பின் தொடரும் 
ஈரம் தோய்ந்த ஓலத்தின் வாசனையை 
நீங்கள் விரும்பாத போதிலும் 
பெரு மூச்சு விட்டு சற்று உங்களிடம் அனுமதியுங்கள்

பெரும் காயத்தின் நிழலில்
இளைப்பாறும் என்னுடலில் 
பழிவாங்கல் துளிர்க்கிறது எல்லாவற்றுக்குமாய்.

-அகரமுதல்வன் 
11.08.2014

Comments

Popular posts from this blog

'அறம் வெல்லும் அஞ்சற்க' கவிதை தொகுப்பை முன் வைத்து ஒரு வாசகப் பார்வை –நேசமித்ரன்

கடந்தகாலங்களில் தான் வாழ்ந்திருக்கிறேன் - கவிஞர் யுகபாரதி

உள்ளுணர்வின் ஊடுருவலோடு கூடிய கவிதைகள் -கோவை ஞானி